Sunday, March 30, 2025

வேம்பின் வினா

 வேம்பின் வினா


வேப்ப மரம் நம்மிடையே பூத்துக் குலுங்குதாம்

   வெல்லப் பச்சடி பண்ணி உண்ணச் சொல்லுதாம்


தோப்பாய் இருந்ததாம், துடைத்து விட்டோமாம்

   தொற்றுநோய்கள் வரத் தாழ் திறந்தோமாம்


கூப்பாடு போடுது குயில் "குந்துவேன் எங்கே? " என்று

   " குளுகுளுவென எவ்வாறு வீசுவேன்? " இது காற்று


" காப்பார் மனித குலம் இனி யார்? " தரு கேட்குது

   கவலை இலா நம் குலம் கவிதை ஏதோ எழுதுது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Saturday, March 29, 2025

*குழந்தைத் தொழிலாளி*

 *குழந்தைத் தொழிலாளி*


நகக் கணுக்களில் பட்டாசுகளின் கந்தகத் துகள்கள்


உணவகங்களிலோ உள்ளங்கைகளின் அழுக்குக் கறைகள்


வீட்டின் வருமானம்

முதுகில் 

சுமையாய்.


பொறுப்புகளே பள்ளிப் பைக்குப் பதிலாய்...😞


--உங்கள்_தோழன்_ஸ்ரீவி

*****************************************

குழந்தைகள் பாரீர் ! 


கிழிந்த உடை  இனியும் கிழிய இடமில்லை

   கிள்ளை ஒன்று விற்கிறதாம் கூடையில் கீரை


அழிந்த பொட்டுக்காரி ஆத்தாவுக்குத் துணையாம்

   அப்பனைச் சாராய வெள்ளம் அடித்துப் போனதாம்


வழியும் வியர்வையதை துடைத்தபடி ஒரு குழந்தை

   வாடுதாம் தொடுத்து பல வண்ணப் பூமாலை

   

கழைக் கூத்தில் ஒரு கருங்குயிலும் உண்டாம்

   கயிற்றுமிசை நடந்து கைதட்டல் பெறுதாம்


அழுக்கே மெய் எங்கும் கவசம் போல் ஆனதாம்

   அக்குழந்தை, அம்மா பட்டாசுப் பணியிலாம்


குழிந்த விழிகள், குடியிருப்பது வீதியில்

   குழந்தையைச் சுற்றிலும் தீய சக்திகள்

   

குழைத்துப் பிசைந்த பாற்சோறு இந்தப் புறம்

   கொடுக்கக் கைபேசி பின்னரே வாய் திறக்கும்


அழைக்கப் பள்ளிப் பேரூந்து இக் குழந்தை ஓடுதாம்

   அமெரிக்காவிலது மாடாய் உழைக்கப் போகுதாம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


****************************

ஏழைத் தொழிலாளி

------------------

வருடம் முழுவதும் பட்டாசு செய்வான்.

தீபாவளி அன்று தெரு

வாண வேடிக்கை இவனுக்குவாடிக்கை

பட்டாசு விலைகள

 ராக்கெட்டை நினைவூட்டுமே!


இவன் போராடுவது

கந்தகத்தோடு

கண்டும் காணாமல்

இருக்கும் அரசும்

தொழில் அதிபர்களும்

அந்தகரோ!


சிறார் தொழில் புரிவது

குற்றம் என்கிறது சட்டம்

ஆயினும்  அதைத் திட்டம் போட்டு தகர்க்கும் கூட்டங்கள்

ஏராளம், ஏராளம்.


மற்றவரை மகிழ்விக்க

வியர்வை சிந்தும்

இவன் கண்கள்

நீர் சிந்துவது என்று நிற்கும்?


- மோகன்


செல்ஃபோன்_டவர்

 இலையுதிர் கால

    பழுத்த இலையாய்

சின்னஞ் சிறிய

    சிட்டுக் குருவியினம்

புவியின் மீதினிலே

    பட்டுப் போகுது

பூவுலகில் இருந்து

    விட்டுப் போகுது.


செல்ஃபோன்_டவர்


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

*கொசுக்களின் குமுறல்*

 *கொசுக்களின் குமுறல்*


மீட்டருக்குமேல் துட்டுவாங்கும் ஆட்டோகாரன் சொல்கிறான் போலீஸ்காரர்கள் ஒழுங்கில்லை என்று.

.

புகாரை வாங்குவதற்கே வடை டீ கேட்கும் போலீஸ்காரன் சொல்கிறான் டாக்டர்கள் ஒழுங்கில்லை என்று.

.

தேவையில்லாத பரிசோதனைகளை மேற்கொள்ளும் டாக்டர்கள் சொல்கிறார்கள் பத்திரப் பதிவுத்துறை ஒழுக்கமில்லை என்று.

.

நிலமதிப்பில் ஒரு சதவிகிதத்தைக் கையூட்டாகக் கேட்கும் பத்திரப் பதிவு அலுவலக ஊழியன் சொல்கிறான் தாசில்தார் ஆபீசில் ஒழுக்கமில்லை என்று.

.

ஒரு சான்றிதழ் கொடுக்கப் பலநூறு ரூபாய் லஞ்சம் கேட்கும் தாசில்தார் ஆபீஸ் ஊழியன் சொல்கிறான் பள்ளிக்கூட வாத்தியார்கள் ஒழுங்கில்லை என்று.

.

பள்ளியில் நடத்த வேண்டிய பாடத்தை டியூஷன் என்ற பெயரில் நடத்திக் காசு பார்க்கும் வாத்தியார் சொல்கிறார் வாகன ஆய்வாளர் சரியில்லை என்று.

.

ஓட்டுனர் உரிமம் தர காசு கேட்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ்காரன் சொல்கிறார் நீதிபதிகள் ஒழுங்கில்லை என்று.

.

தீர்ப்புக்கு காசு வாங்கும் நீதிபதி சொல்கிறார் அரசியல்வாதிகள் ஒழுங்கில்லை என்று.

.

கமிஷன் வாங்காமல் காரியம் பார்க்காத அரசியல்வாதி சொல்கிறார் கோயில் குருக்கள்கள் ஒழுங்கில்லை என்று.

.

கோயில் குருக்களோ லோகமே ஒழுங்கில்லை என்கிறார்.


*இங்கு கொசுவாகிய நான் உயிர் வாழ ஒரு சொட்டு இரத்தம் எடுப்பதை எதிர்த்து என்னை கொல்லத்துனிவது எப்படி ஒழுங்கானதாக இருக்க முடியும்.*


அது சரி, மற்றவர் பார்வையில் யார்தான் ஒழுங்காக இருக்கிறார்கள்? தான் ஒழுங்கீனமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்கள் இங்கு இருக்கிறார்களா? தன்னைத் திருத்திக்கொள்ளாமல் அடுத்தவரைக் குறைகூறிக் கடந்து செல்வதே வாடிக்கையாகிவிட்ட இந்த சமுதாயம் உருப்படுமா?

.

*இங்கு யாருக்கும் அடுத்தவரைக் குறைசொல்லும் தகுதி இல்லை.*


இப்படிக்கு

கொசு


---தியாகராஜன்


Thursday, March 27, 2025

பகையாய்ப் பார்க்கிறீரே!

 பகையாய்ப் பார்க்கிறீரே! 


காதோரம் தான் மெல்ல நானும் பாடுவேன்

   காதலியாய் ஆனால் உயிரெடுக்க மாட்டேன்


சாது நானும் தான் எதிர்நீச்சல் மாது போலே

   சாட்டை (bat) சுழற்றுறீரே எங்க வீட்டுப் பிள்ளையே! 


ஆதவன் வந்த உடன் ஓடோடி ஒளிவேன்

   அளவாக ஒரு சொட்டே குருதி குடிப்பேன்


பாதுகாக்கும் இரவுக் காவலரைத் தூங்க விடேன்

   பகையாய் " கொசு "எனைப் பார்க்கிறீரே! ஏன்? 


__  குத்தனூர் சேஷுதாஸ்



----------------

மனிதர்களே...கொசு பேசுகிறேன்.. நான் நோய்களைப் பரப்புவதாகத் திட்டுகின்றீர்..


நான் நோய்களைப் பரப்புவதற்கு நீங்கள் தானே காரணம்..


மானிடா..

உன் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வை!

அழுக்கு ஆடைகளை 

தினமும் செய் சலவை!

குறைத்துக் கொள் உன்

மருத்துவ செலவை!!


ஐயகோ!..உனக்கு அறிவுரை செய்து 

என் தலை மீது நானே வைத்துக் கொண்டேனே கை!!! 

இப்படியெல்லாம் நீ செய்தால்

எங்கே தேடுவேன்

என் உணவை???

என்னால் தாங்க முடியாது உன் பிரிவை..

என்றும் வளர்ப்போம்

நம் உறவை!

புரிந்துகொள் என்

பசி உணர்வை.. 

சற்று பொறுத்துக் கொள் என் கடியை

ஒரே தடவை..

தினமும் எதிர்ப்பார்த்திரு என் வரவை!


நான் தேடியது என்

உணவை மட்டுமே..

நோய்க்கிருமியை

வைத்துக் கொண்டிருப்பது நீங்களே..

உணவு தேடி வந்தவனுக்கு

கிருமியை இலவசமாகக் கொடுப்பதும் நீங்களே..

நீங்களெல்லாம் 

பல உணவு விடுதிகளுக்குச் சென்று விதவிதமாய் உண்ணும் போது

எனக்கும் ஆசை இருக்காதா?

அது மட்டுமா? 

பணம் தரமாட்டேன் என்று  உணவு அருந்தும் போதே விரட்டியும் விடுகின்றீர்..

உணவு தேடி 

பக்கத்தில் உள்ள

உணவு விடுதிக்கு சென்று உணவருந்தும் போது

பணம் கொடுக்கவில்லை என்றால் விரட்டப்படுவேனோ

என்றெண்ணி போனால் போகட்டுமென்று இலவசமாக நீங்கள் கொடுத்த கிருமிகளை

வேறு வழியில்லாமல் அங்கே கொடுத்து விடுகிறேன்..

இரண்டு அகத்தில்

உணவை உண்டால்

உண்ட வீடுகளுக்கு

ரெண்டகம் செய்தேன்

என்று பழி போடுகின்றீர்!


நான் இல்லாவிட்டால்

மருத்துவமனைகளில் பணியாற்றுவோரின்

குழந்தைகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்?

நோய் குணமாக வேண்டுதல் வைத்து நீங்கள் ஆலயங்களில் ஏற்றும் அகல் விளக்குகளைச் செய்யும் குயவன் வீட்டுக் குழந்தைக்கு

இரண்டு வேளையாவது நல்ல உணவு கிடைக்க வேண்டாமா?


இப்போது சொல்லுங்கள்..

நான் நல்லவனா?

கெட்டவனா?


- சாய்கழல் சங்கீதா


-----------------------------------------------------

ஒரு கொசுவின் பிரலாபம்

----

குட்டை , குட்டையாக

அழுக்கு நீர்

கூளம் கூளமாக , குப்பைகள்

 மூச்சு முட்ட முட்ட முடை நாற்றமெடுக்கும்

சாக்கடைகள் என

எமக்கு வாழ்வாதாரத்தைப்

பெருக்கியதே மனிதன்தான்.


குச்சு வீடுகளைச்சுற்றிப்

பாடிப்பறந்த எம்மை

பல அடுக்கு மச்சு வீடுகளின் உயரத்துக்குப்

பறக்க ஊக்கமூட்டியதும் அவன்தான்!


ஆனால் நாங்கள் உயர உயரப் பறந்தாலும், ஊர்க்கோழி ஆவதில்லை!


நாங்கள்எடுக்கும்  மனிதனின் ஒரு துளி இரத்தத்துக்கு கொடுக்கும் விலை

எமது இன்னுயிர்.


சுருள் வத்தி, மருந்து 

தெளிப்பான்கள்(இயந்திரம், மனிதன் இரண்டையும் குறிக்கும), மின்சார

மட்டை கள்," நல்ல இரவு"

குப்பிகள்( ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்) என எமக்கு எதிராக மல்லுக்கு நிற்கும் ஆயுதப் படைகள்- எம்மால்

எத்தனை மனிதப்

படைகளுக்கு

வாழ்வாதாரங்கள்! 


அச்சச்சோ!


 நாதியற்ற எங்களுக்கு நீதி மன்றங்கள்

 தேவையில்லை- எங்கள வாழ்வும் வளமும் நொடியில்

முடியும் என்பதால்.


இறுதி மூச்சு அடங்குமுன்

மனிதனுக்கு ஒரு 

வேண்டுகோள்:

உன் சுற்றுச் சூழலை

சுத்தமாக வைத்துக்கொள், எம் சுற்றம் உன்னைச் சுற்றுவது குறையும்.


----- மோகன்


----------------------------------

"கூவமோ கங்கையோ ..

மண்குடிசையோ மாளிகையோ..

ராயபுரமோ மைலாபூரோ  ..

இல்லையேதும் வெறுப்பு ..

இரத்தம்னா சிவப்பு ..

அடிவாங்கியாவது  குடிக்கணுமுங்க ..

ஆபத்தானது என்பொழப்புங்க.." 


நித்தம் உயிர்விட்டு , ஏற்றத்தாழ்வினைச் சாடும் உயரிய உயிரினம் கொசுவிற்கு நோபல் என்று கிட்டுமோ!!!


கொசுவை அடிக்கும் கரங்கள், அதன் கொள்கை உணர்ந்து , தன்தவறுணர்ந்து தலையில் கொ(கு)ட்டிக் கொள்ளுமோ...


-- இலாவண்யா


Monday, March 24, 2025

கொல்லையிலிருந்து ஒரு குரல்

 தெருவிலிருந்து ஒரு குரல்


இரும்பு அது என்னிடம் ஏராளம் ஏராளம்

   எவர்க்கு வேணும் மலிவாய்? வாரும் வாரும்


துரும்பாக இளைத்தார்க்கு அருமருந்து நானே

   தோள் வலிமை காட்டத் தூண்டுவேன் பின்னே


உருக்க வெண்ணெயதை நெய்யும் வரும்

   உடன் எனைச் சேர்க்க ஊரே மணக்கும்


கரும்பாய் இல்லறம் கட்டாயம் இனிக்கும்

   கருத்தரிப்பு மையம் காணாமல் போகும்


பருப்போடு புளி சேர்த்து என்னைக் கடைந்தால்

   பாய்ந்து உண்ணத் தோன்றும் பத்து விரல்களால்


கரு கருவெனக் கூந்தல் அது நீண்டு வளரும்

   காசுக்குக் குறைக்கும் குடும்பம் (அழகு நிலையம்) பிழைக்கும்


மருத்துவர் (திரு) செல்வனும் மறுக்க மாட்டார்

   மாறாக என்னைப் பரிந்தும் உரைப்பார்


முருங்கை தான் பேசுகிறேன் கொல்லையிலிருந்து

   மோட்சம் தவிரத் தருவேன் உமக்கு நல்விருந்து. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Friday, March 21, 2025

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி:

 youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம்


காணொளிகளின் சுட்டி :

மார்ச் 1, 2025 - மகளிர் தின விழா - யோகா & நாடகம்

மார்ச் 1, 2025 - மகளிர் தின விழா - பேச்சரங்கம்

மார்ச் 1, 2025 - மகளிர் தின விழா- விளையாட்டுப் போட்டிகள் & நடனம்

மார்ச் 1, 2025 -மகளிர் தின விழா - பாரம்பரிய சமையல் போட்டி

மார்ச் 1,2025 - மகளிர் தின விழா - தமிழ்த் தாய் வாழ்த்து - குத்துவிளக்கு ஏற்றுதல் - வரவேற்புரை

பக்தி பாடல்கள் - பூர்வா இன்னிசை குயில்கள் (2025)

பாரதியும் கண்ணதாசனும் திரு பத்ரி - இயக்குநர்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய "இசை நிகழ்ச்சி"

மெல்லிசை நிகழ்ச்சியில் தலைவர் ஸ்ரீவி உரை

புதிய ஆத்திசூடிக் கதைகள் நூல் வெளியீடு நூலாசிரியர் ஸ்ரீவி

ழகரக் கவியரங்கம்

பொங்கல் சிறப்பு பட்டி மன்றம் (2024)

ஆண்டு விழா நிகழ்ச்சிகள்(2024)

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் (2024)

எட்டிலிருந்து எண்பது வரை - மெல்லிசை நிகழ்ச்சி

மயக்கும் வீணை இசை மற்றும் பொங்கல் கவிதைகள் அரங்கேற்றம்















இன்று கவிதைகள் தினமாம்

 இன்று கவிதைகள் தினமாம் 

கவிதை பாடக் கட்டளையிட்டார் 

குத்தனுரார். 

நானும் மண்டப வாசலில்

"கவி" போல முக்கண்ணாருக்குக்

காத்திருக்கிறேன்.

உமையவளுடன் ஊடலாம்.

சிவனும் வரவில்லை 

சிறந்த கவிதையும் வரவில்லை.

அதற்குள் அரண்மனை வாசலில்

கவிதையுடன் ஆயிரம் பேர்.

நிதிச் செயலருக்கு 

ஒரு வேண்டுகோள்.

நான் வரும் வரை

பொற்கிழியைக் கொஞ்சம்

நிறுத்தி வையுங்கள்.


------------------

நான் எழுதி கிழித்த கவிதைக்கு(?)

பொற்கிழி கிடைக்காவிட்டாலும்..

நக்கீரன் போல் யாரேனும் குற்றம் கண்டுபிடித்து

கேள்விக் கணைகளால் 

என்னைக் கிழி கிழி என்று கிழிக்காமல் விட்டாலே போதும்🙏

படித்து விட்டு

யாரேனும் நெற்றிக் கண்ணைத் திறந்தால்...

பொற்றாமரைகள் மலராத

பூர்வா நீச்சல் குளம் இருப்பினும்

நீந்தத் தெரியாது ஐயா..


- முகம்மது சுலைமான்


உலக கவிதை நாளில்...

 உலக கவிதை நாளில்... 


" கவிதை தினம் இன்று கலக்கு போ " என்றது

   காலை நாள்காட்டியின் கட்டளையாம் அது


புவியில் பலவாம் புருவங்கள் உயர்த்துவது

   புலவர்கள் இதுவரை புகலாதது இங்கேது?


சுவையாக இருக்க வேண்டும் சொல்ல முனைவது

   சுருக்கமாய் உரைத்தலே கவிதைக்கு அழகு


எவை எழுத எல்லோரையும் படிக்க வைக்கும்

   ஏற்காடு குளிர்ச்சி இங்கேயே மனம் உணரும்


அவியல் தான் உடனே நினைவுக்கு வந்தது

   அத்தனை காய்கள் சேர்ந்த அமுத கூட்டணியது


துவையலும் சுவையில் சோடை போகாது

   துணையாக சுட்ட அப்பளம் சொர்க்கமே அது


உவகை அது மனதுக்கு அவசியம் வேண்டும்

   உப்புச் சப்பில்லா வாழ்வு உட்கார வைக்கும்

   

அவையடக்கம் தடுக்க தவிர்த்தேன் பல இங்கு

   அகவை அறுபது கடந்த எனக்கு ஏன் வம்பு? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

கவிதை என்று இதைச் சொல்வேன்

 கவிதை என்று இதைச் சொல்வேன்...


கவிதை என்பது சிலருக்கு 

நகைப்பாகலாம்

மேலும் சிலர்

ஏகடியம் பேசலாம்.


மனதைத் தொட்டதெல்லாம்

சொற்களின் தொகுப்பால்

ஒளிர்கையில்


கவிதை என்று அதைச் சொல்வேன்.


இதுவா கவிதை என

சிரிப்போர்

சிந்தனைகளைக் 

கவிதையாய் வடிப்பரோ?

சுழலும் சொல்லாடல்களால்

படிப்போர் மனங்களைக் கவர்வரோ..?


நகைப்போர் நகைக்கட்டும்

திகைப்போர் திகைக்கட்டும்

சிந்தனைச் சிதறல்களை

கோத்தெடுத்து

அழகிய பாமாலையாய்த்

தொடுத்திடுவோம்.

படிப்போர் மனம் மகிழ கவிதையாய்க் கொடுத்திடுவோம்.


கவிதை அதுவே என்று 

களிப்புடனே கூறிடுவோம்.


தமிழன்னை ஆசி தருவாள்.

மகாகவி கைபிடித்து அழைத்துச் செல்வான்


ஆதலால் கவிதை எழுதுவீரே...

உலகத்தீரே..


- ஸ்ரீவி

Thursday, March 20, 2025

கவிதை என்று எதைச் சொல்வேன்...

 கவிதை என்று எதைச் சொல்வேன்...

இலக்கணத்துள் அடக்கினர்  சிலர்

இலக்கணத்தை மீறினர் சிலர் 


கவிதை என்று எதைச் சொல்வேன்..


மனதைத் தொட்ட வடிவெல்லாம்

எனக்கு கவிதையானது

உனக்கு நகைப்பானது


கவிதை என்று எதைச் சொல்வேன்...


மழலையை இரசித்தேன்...அன்பென்றனர்

மலரை இரசித்தேன்... அழகென்றனர்

தோட்டத்தில் மழலையை மலரென்றேன்

கவிதை என்றனர்

மழலையும் மலருமே கவிதை என்றனர்


கவிதை என்று எதைச் சொல்வேன்...


- அமுதவல்லி

யதார்த்தம்

 நீரூற்று ரசிக்க ஆசை  என்றேன்-  நீர்க்குமிழி ரசிக்கப் பழகு என்கிறாய்!

சூரிய ஒளி சிறந்தது என்றேன்- மின்மினி ஒளி பற்றி பேசுகிறாய்!  கண்டு மகிழ  நிழற்படம் வேண்டுமென்றேன்  -

நிஜத்தை விழியில்

பதிவுசெய் என்கிறாய்!

நினைவுகளை கல்வெட்டில் பொறிக்க முயல்கிறேன் -

முதலில் கண்ணாடியில் எழுது என்கிறாய்!

யுகம் வாழ வழிதேடி ஓடுகிறேன் - 

நொடி மகிழ்ந்து நடந்து செல்லென்கிறாய்!

நிலையான உன்னன்பின் பொருள் உணர்ந்தேன்..

நிலையில்லா உலகைப்

புரிந்து  வாழ்வேன்..


--------------------------------

மேகங்கள் வடிவம் பெறலாம்..

வடிவான முகங்கள், 

மேகமாய் புதிராக நகரலாம்..


கயிறும் பாம்பு ஆகலாம்..

நித்தம் மிதிபடும்,

மண்ணும் பொன் ஆகலாம்..


நிழல்கள் நிஜமாய் மலரலாம்..

அடித்தளமாய் இருந்த, 

நிஜங்களின் நிழல்கள் சுட்டெரிக்கலாம்..


தொடர்புகள் உறவாக ஒலிக்கலாம்..

உடன்தொடர்ந்த  உறவுகள்,

 தொலைதூரத் தொடர்பாக மாறலாம்.. ..


தூரமறியா வாழ்க்கைப்  பயணத்தில்,


வேகம் குறைந்து..

பாதை கூட மாறலாம் ...

   

கற்பனைகள்..கனவுகள் , யூகங்களென, 

மனம் பன்மொழியில்  பேசலாம் ..

ஆனால், காலம் செய்யுமிதன்  மொழிபெயர்ப்போ, யதார்த்தம் ...


---------------------


கவிதைகள் தினம்!

 கவிதைகள் தினம்!

கவிதைகள் எழுத வேண்டுமே தினம் தினம்!

எனினும்...

கவிதை எழுதியே ஆக வேண்டும் இன்றைய தினம்!

க..ற்பனை என்னும்

வி..தை தூவி

தை..ரியமாய்

ஒரு கவிதை படைத்திடலாம்

என கனவில் மூழ்கினேன்.. 

விதைகள் முளைத்து 

பயிர் விளைந்து

அறுவடையாய் ஒரு நல்ல

கவிதை கிடைக்கும் என்றெண்ணி..

கனவு களைந்து கண்

விழித்துப் பார்த்தால்

கண்முன் பல கவிதைகள்!

மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் புலனக் குழுவில்...

தமிழ் உறவுகளின் நிலங்களில்

விதைகளெல்லாம் 

பயிராகி அறுவடையும் 

ஆகிவிட்டது..

நான் தூவிய விதைகள் முளைப்பது எப்போது?????

--------------------

அறுவடையில் கிடைத்தது ஒரே நெல்!

கவிதையா இது???

பரவாயில்லை...

நான் என்ன 

"கவிதைக் கொம்பன்"

கம்பனா?


கவிதைகளைக் கட்டவிழ்த்த கம்பன் வீட்டுக்

கட்டுத் தறியும்

கவி பாடுமே..


கம்பன் வீட்டுக்

கம்பஞ் சோறு 

எனக்கும் கிடைத்தால்

"கவிதை" எழுத 

நான் ஏறிய

கற்பனைக் குதிரை

தறிகெட்டு ஓடுமே!


கிடைக்குமா கம்பஞ் சோறு?

----------------------------

காற்று வாங்கப் போனால்

கவிதை வாங்கி வரலாமாம்!

மிதி வண்டி ஏறி

காற்று வாங்கப் போனேன்..

சக்கரத்தில் காற்று

இறங்கி விட்டது🙁


- சாய்கழல் சங்கீதா


Wednesday, March 19, 2025

எங்கே காணோம்?

 எங்கே காணோம்? 


விட்டுப் பிரிந்த தலைவன் வீடு திரும்பவில்லை

   வேதனை இதைச் சொல்ல தோழியும் இல்லை


சிட்டுக்குருவி! அன்று பறந்தாய், திரிந்தாய்

   சேதி சொல உன்னிடம் துயரம் குறைத்தாய்


வட்டக் கிணறு ஒன்று வீடுதோறும் இருந்தது

   வளைந்த ஓடுகள் அடுக்கிய கூரை இருந்தது


எட்டா இடங்களில் முட்டைகள் இடுவாய்

   எத்தனை பொறுப்புடன் அடைகாப்பாய்! 


குட்டியாய் குஞ்சுகள் வெளிவந்தும் கேட்கும்

   கொண்டு வந்து சிறு புழுக்கள் வாயில் ஊட்டுவாய்


அட்டிகை வேண்டாய், அரிசி நொய்யே போதும்

   அதுவும் இல்லையா ஆண்டவன் ஏதோ தரும் 


துட்டு துட்டு என தொடர்ந்து நாங்கள் ஓடுவோம்

   தொலைத்து இன்பம் பல பின்னர் வாடுவோம்


சிட்டுக்குருவியே!  இந்நாள் எங்கே நீ காணோம்? 

   " செல் "லரிக்கும் டவர்கள் துரத்தியதோ உன்னையும்? 


__  குத்தனூர் சேஷுதாஸ்


------------------------------------------------

சிட்டுக்குருவி என்

" பெட்" குருவிநீ.


உருவில் சிறிய 

உன்னைக்காணும் போது எல்லாம்

எம்உள்ளத்தில் எழுப்பிய மகிழ்ச்சி

மிகப்பெரியது.


எம்இளமைப்பருவம்

உன்னோடு ஒட்டி

வளர்ந்தது.


காலையில் எழுந்தவுடன் வீட்டு

சாளர விளிம்பில்

உனைக்கண்டால்தான்

அன்று விடியும்.


மனிதனின் ஆரவாரக்கூச்சலில்

உன்னுடைய  மெல்லிய

குரல் அமுங்கி விட்டது.


இத்தனைக்கும் நீ

உழவனின் நண்பன்.


ஆனால் பூச்சி கொல்லி மருந்துகளும், அலைபேசிக் கோபுரங்களும்

உனக்கு ஹிட்லராக

அமைந்தன போலும்!


வீட்டுக்கு வீடு உன்னைக்கண்டு

மன அழுத்தங்கள்

போன நாட்கள

கடந்து இன்று மிருக காட்சி சாலையில்

காசு கொடுத்து

காணும் காட்சிப்

பொருளனாய்.


இன்று கள்ளக்கடத்தல்

செய்பவருக்கு, " குருவிகள" என்று பெயர். என்ன கொடுமை இது?!


 நீ செய்த கடத்தல்எல்லாம்

எங்கள் துயரங்களைக்

கடத்தியதுதான்!

 


 ஒரு சிறு ஆறுதல்-

பூர்வாவில் எங்கள்

சாளர விளிம்பில்

உன்னையும் உன்துணையையும்

காண முடிகிறது, அவ்வப்போது.


ஆனால் என்று கூடு கட்டுவாய் என்ற எதிர்

பார்ப்புடன் என் நேரங்கள் கழிகின்றன.

= மோகன்

------------------------------------------


Sunday, March 16, 2025

தமிழே அமிழ்து

 ०●०●०●०●०●०●०●

தமிழே அமிழ்து

●०●०●०●०●०●०●०●


முற்றும் உணர்ந்த ஞானியரே 

ஆயினும்

பூவுலகந் தனில்


நற்றமிழ் எனும் அமிழ்தளித்த

பெருமைமிகு

தமிழ்த்தாயின்


நற்றாள் தொழாஅர் எனின் 

இப்பூவுலகில்

பயனென்கொல்


குற்றமறு தமிழகமே

நல்விடை

ஒன்று நீயும் சொல்


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

Saturday, March 15, 2025

கொத்துக் கொத்தாய் செம்பூக்கள்

 நம் குடியிருப்பில் தான்


கொத்துக் கொத்தாய் இதோ செம்பூக்கள் குலுங்குதாம்

   கூடைப் பூ சூடிக் கொள்ளும் கூந்தலைத் தேடுதாம்


சத்தமுடன் தேன் குடிக்கும் வண்டுகள் ஓய்ந்ததாம்

   " சாமி விடுங்க ஆளை " கைகள் தூக்குதாம்


புத்தம் புதுத் தென்றல் வந்து மெல்ல உரசுதாம்

   பூக்கள் மணமகனாய் மேலும் சிவக்குதாம்


குத்தனூரில் இல்லை நம் குடியிருப்பில் தானாம்

   குழந்தையோடு சேர்ந்து காண குதூகலமே ஆம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------------------------------

நம் குடியிருப்பில் பூக்கள் செடிகளுக்கே

சொந்தம்; கொண்டாட

இல்லை பந்தம்.

கட்டளை இடும் 

குடியுரிமை நல சங்கத்தின் நிர்ப்பந்தம்.


பார்த்து இரசிக்க, உரிமை உண்டு; பறித்து சூட அல்ல.


" பூவே பூச் சூட வா" என்றழைத்தாலும் வாராது.


குத்தனூரில் பூக்களை

முகம் சிவக்க சிவக்கப்

பறிக்கலாம் போலும்!


- மோகன்

----------------------------------

பறித்து சூடிக் கொள்ள மணமகள்கள் வருவார்கள் என்று வெட்கத்தில்😀 சிவந்தனரோ இட்லிப்பூ மாப்பிள்ளைகள்?

அல்லது திருமண விருந்தில் 

இட்லிகள் பூ போல இல்லை என்று கோபத்தில் உள்ளனரோ சிவந்த 

சம்பந்திகள்?


எது எப்படியோ அபூர்வமாய்

பூர்வாவில் பூ பூத்துக் 

குலுங்கினாலும் 

குத்தனூர் புலவரின் 

ஊர்ப் பாசத்தை அவர் கவிதை வரிகளில்

சொல்லாமல் விடுவாரா?


ஒரு வேளை குத்தனூர் தோட்டத்தை

பூர்வா குத்தகை எடுத்து

மண் பெயர்த்து பூர்வாவில் செடிகள் நட்டு விட்டதோ?🤔

--சங்கீதா


------------------------------

வெட்கத்தில் சிவக்க வில்லை 

கோபத்தில் சிவக்கவில்லை 

வெப்பத்தில் சிவக்கவில்லை 

இயற்கையாக சிவந்து பூத்தன

வேனிலில் பளிச்சென சிரித்தன


உண்ட மயக்கத்தில் மகிழ்ந்தோர்

இட்ட பெயரோ இட்லி பூ?

வெட்சி குல்லை செச்சை, செங்கொடுவேரி சேதாரம்

பெயர் எதுவென்றாலும்


மஞ்சள் வெயிலின் கடுமையில்

பச்சை இலைகளுடன் போட்டியிட்டன

மேலும் சிவந்து மிளிர்ந்தன

கண்களுக்கு குளிர்ச்சி தந்தன

மனதிற்கு மகிழ்ச்சி தந்தன


- அமுதவல்லி


Friday, March 14, 2025

ஹோலி

 ஹோலி


தீயவை எரியும்

நல்லவை புரியும்


வண்ணங்களைத் தூவி

மகிழ்ந்தாலும்

உள்ளங்கள் வெள்ளைதான்


ஏழை பணக்காரன்என

சமூக மேம்பூச்சுகள்

பல இருப்பினும்

இன்று வண்ணப்பொடிகள்

வேறுபாடுகளைத்

தவிடு பொடி ஆக்கும்


வண்ணப் பண்டிகை

கொண்டாடும்

நம் இந்திய மக்களுக்கு

வானவில் வாழ்த்துகள்


பின்குறிப்பு:

ஹோலி - ஜாலி

வட இந்தியப் பண்டிகை எனபதால்

மொழிக்கலப்பு வந்தது

போலும்; மன்னிக்கப்படும்.

- மோகன்

--------------------------------------------------



சுகமே...

 இரவின் நிழல்.. நினைவுகளின் சுழல்...

விழி மூடியும் மறையாத காட்சிகள்..

அதில் சிக்கித் தவிப்பது சுகமே...


பனி முத்தமிட்டுக், கதிரவன் விழிக்க..

அலைபேசி சத்தமிட்டு ,நான் விழிக்க.. ..

நட்புறவுகளின் வாழ்த்து படிப்பது சுகமே..


அதிகாலை நேரம் தங்கமாய் ஜொலிக்கும்,

அலைகள் ஓடிவர , வைரமாய் மின்னும்,

கடலன்னை அழகை 

ரசிப்பது சுகமே..


பச்சை பசுமைகளோடு

ஒட்டி  உறவாடி,

பறவைகளின் கீச்சொலியின்  பொருள் தேடி,

தென்றலின் தீண்டலில் மெய்மறப்பது  சுகமே..


நித்தம் புதுமொழி பேசி மயக்கி,

அகவை மறந்து விளையாடத் தூண்டும்,

மழலைகளை அணைத்துக் கொஞ்சுவது சுகமே..


விழிகள் மூடி அகம் திறந்து,

இருள் நீக்கி அறிவொளி நிரப்பும்,

ஆலய மணியோசைக் கேட்பது சுகமே..


நாளை என்பது நிச்சயம் இல்லை..

உயிரைப் பூட்டவும் பெட்டகம் இல்லை..

அறிந்தும், கனவு காண்பது சுகமே..


மாரியும் கதிரும் தீட்டிய வண்ணக்கலவை,

உணர்வுகள் பலவும் குழைத்த எண்ணக்கலவை,

ரசித்திட வானம்போல் மனமிருந்தால் சுகமே..


சுகமான சுகங்களை இதமாய் 

 பகர்ந்திட,

ஊக்கம் அளித்து ,ஆக்கம் கூட்டும்,

நட்புறவுகள் இருப்பது, தனி சுகமே..

Monday, March 10, 2025

புயலாய்க் காற்று...

 புயலாய்க் காற்று... 


வெயில் இன்று விடிந்த பின்னும் வரவேயில்லை

   விசேடமோ பரிதி வீட்டில் தெரியவில்லை

 

குயிலும் தன் தொண்டை வற்றக் கூவவில்லை

   கோலமயிலும் கூத்தாட ஆயத்தம் இல்லை

   

புயலாய்க் காற்று அது பொங்கியது, வீசியது

   பொலபொலவென மரங்களின் தோடுகள் உதிர்ந்தது


பயல்கள் எண்ணினர் பள்ளி விடுமுறை என்று

   பாவம் அவர் விருப்பம் புஸ்வாணம் ஆனது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Saturday, March 8, 2025

மகளிர் தினம்

 மகளிர் தினம் இன்று


மங்கலம் நல்கும் மகளிரை வாழ்த்தி தலை வணங்கும்நாள்.


உலகிற்கு ஒரு நாள்

நம்தமிழர்க்கு தினமுமே "மகளிரைப்

போற்றுக" தினமும்தான்.


ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும்

பறக்க ஆடிக்காற்று 

தேவையில்லை; புதுமைப்பெண்கள்

இவர்களே போதும்!


இன்று இயந்திரங்கள் உதவி செய்தாலும்

உண்டிக்கு அறுசுவை

சேர்ப்பது இவர்தம்

வளைக்கரங்கள்தாமே!


"பூ"வினும் 

மென்மையானவர் எனினும்" நிலத்தில் யார்க்கும் அஞ்சாத

நெறிகளும்"" திமிர்ந்த ஞானச்செருக்கும் "கொண்டு "பு" துமைப் பெண்களாக, நம்மை இறும்"பூ" து எய்தச் செய்வர்.


மேன்மேலும் " பட்டங்கள் ஆளவும்,சட்டங்கள் செய்யவும் " சாதங்கள் மட்டுமின்றி பலப் பல பது வேதங்களயும் படைக்கவும் வாழ்த்துவோம்.


நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை,

நம் பூர்வா மகளிரின்

நிர்வாகத்திறமையைக்

கண்டதால்.


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

- மோகன்


--------------------------------------------------

பூ போல மென்னமையானவள்... இவளால் இயலுமா?

என்று எண்ணி முடிப்பதற்குள்

" பூ" என்று ஊதித் தள்ளிவிடுவாள்

அலட்சியங்களுக்கு அஞ்சாத

"முடியாது" என்ற துரு பிடிக்காத இரும்புப் பெண்!

பெண்மை மென்மையல்ல

பேராண்மை!


பேராண்மைமிக்க மகளிர்க்கு

இனிய மகளிர் தின வாழ்த்துகள்💐

வாழ்த்தும் அனைவருக்கும்

உளமார்ந்த நன்றிகள்🙏

- சங்கீதா

----------------------------------------------

தானுருகி தன்னையழித்துப்

    பிறர்க்கு ஒளிதரும் மெழுகு!


ஊனுருகி உயிர்தரும்

    அன்னையரைப் போற்றுதல் அழகு!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

------------------------

ஆட்டுக்கல்லு அம்மிக்கல்லு அந்தக்காலம் ..

மிக்ஸ்ர் கிரைண்டர் இந்தக்காலம் ..

குதிரைவண்டி ரிக்ஷாவண்டி அந்தக்காலம்..

கார் பைக் இந்தக்காலம் ..


சாப்பாடு கட்டிக் கொடுத்து, 

வாசல் வந்து, 

டாட்டா சொன்னது அந்தக்காலம் ..

சாப்பாடும் கட்டிக் கொடுத்து,

டாட்டா கார் ஓட்டிச்சென்று,

அவரவரை அவரிடத்தில் விட்டு, 

 டாட்டா சொல்லி ,

தானும் பணிக்குச் செல்வது 

இந்தக்காலம்  ...


ஆட்டுக்கல் டு ஆடிகார் ,

அமிஞ்சிக்கரை டு அமெரிக்கா ..

எது மாறினாலும் ..

பெண்ணுக்கு டாட்டா சொல்ல ..

வாக்கெடுத்தால் "நோட்டா" வெல்ல ,

மாறியது என்னவென்று சிந்தித்தால்..

இயந்திரங்களின் பரிணாம வளர்ச்சி ..

வீட்டுவேலை நேரம் குறைத்து ,

வெளிவேலையும் மேலும் சேர்த்து,

அவளோய்வுக்கு டாட்டா சொன்னதே தவிர ..அவள் முழுமையாய் சிறகடித்துப் பறக்க அல்ல ...

- இலாவண்யா

-------------------------

ஒரு கை பார்க்க... 


அம்மிக்கல், ஆட்டுக்கல் அன்னையோடு போனது

   Audi, ஆகாய விமானம் பெண்ணினம் ஓட்டுது


தம்பி, * தமக்கை என்ற போட்டியும் இல்லையாம்

   தடை எனத் தகர்க்க வேறேதும் இல்லையாம்

   

சிம்மக் குகை எலாம் மயில்கள் வசம் இந்நாளாம்

   சிறந்த சான்று நம் குடியரசுத் தலைவியாம்


எம்மாத்திரம் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்துவது

   இதையும் ஒரு கை பார்க்க இக் குலம் தயங்காது. 


வாழ்த்துகள் முன் கூட்டியே 💐💐


* தமக்கை -- அக்காள்


__  குத்தனூர் சேஷுதாஸ்




Friday, March 7, 2025

மஞ்சள் தேவதை(II)

 பாவம் தோழி அறியாது


ஆவாரம்பூ கையசைத்து " போய் வா " என்கிறது

   அதன் தோழி நகரம் நோக்கி புலம் பெயர்கிறது


கூவும் குயில் குரல் நாளும் கேட்க முடியாது

   கொய்யா கடிக்கும் வேளை கூட அணில் இராது

   

பூவரசு இலையின் " பீப்பீ " இனி கிடைக்காது

   புளியம்பழம் ஓடுடைத்து  சுவைக்க முடியாது


தாவணி, பாவாடைகள் எங்கும் காண முடியாது

   தண்ணீர் கொண்டு வர தாமரைக் குளம் இராது


தூவானம் அப்போது தும்பிகளும் மிதக்காது

   துவரைக் காய் பறித்துச் சுவைக்க முடியாது


கேவரகுக் களி, புளித்த மோரும் கிடைக்காது

   கிட்டிபுள் விளையாட்டு கண்டு களிக்க இயலாது


காவலின்றி கால்நடையாய் பள்ளி செல முடியாது

   காதில், கையில் பொன்னோ கூடவே கூடாது


ஆவலாக நகரம் செலும் தோழி " பாவம் " அறியாது

   அடுத்த முறை சந்தித்தால் புலம்பத் தவறாது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------------------------------

மஞ்சள் உடையில் ஒரு பூக்குவியல்.


இந்த மஞ்சள் தேவதையின்

கையசைப்பு

மகிழ்ச்சியின்

வெளிப்பாடு.


அத்தை, மாமா , அவர்தம் , தன்வயதை ஒத்த  சிறார்கள்  விடுமுறையை களிப்புடன் கொண்டாடி தம் தம்

ஊர் திரும்பும் நேரம்.


வண்டி கிளம்பி விட்டது

மெதுவாக.


கூட வந்த பெற்றோர்

பின் நிற்க, இச்சிறுமி

வண்டி முழுவதும்

செல்லும் வரை கையசைக்கிறாள்.


     பிரியா விடை!


உறவினர்

ஊர் சென்றாலும்

மகிழ்வுடன் களித்த

நினைவுகள் அடுத்த ஒரு வருடத்தை எதிர்பார்ப்புடன்

கழிக்க உதவும்.


வாழ்க்கையே நல்ல நினைவுகள்,எதிர்பார்ப்புகளை ஒட்டியே நகர்கிறது அல்லவா!


பள்ளி திறந்தவுடன்

தன் விடுமுறைக் கொண்டாட்டத்தை

நட்புக்குழாத்திடம்

தம்பட்டம் அடிக்க வேண்டும். 


ம் ம்..  வரும் நாட்கள் இவள்

ரொம்ப பிசி!

- மோகன்

-----------------------------

புன்னகை தவழ

யாரை அழைக்க வந்தாய்?

துள்ளி ஓடி

அணைக்கும் முன்

உன் இருப்பை

கைகாட்டி சொல்கிறாய்...

யாரை நோக்குகிறாய்?

அள்ளி அணைத்திட அம்மா?

தோளில் தூக்கிட அப்பா?

சிங்காரித்து கொஞ்சிட சித்தி?

முதுகில் சுமந்திட சித்தப்பா?

தூக்கிப்போட்டு விளையாட மாமா?

மெத்தென மடியில் சாய அத்தை?

கதைகள் சொல்ல பாட்டி?

கடைக்கு செல்ல தாத்தா?

கைகோத்து விளையாட தோழி?


யாராக இருந்தாலும் 

உன் பூரிப்பால் 

அழகானது இவ்வுலகம் !!!


 👆உறவுகளை விவரிக்கும் சிறுவர் பாடலொன்றின் நினைவில் எழுதியது. பாடல் மறந்து விட்டது.‌ சிங்காரமாய் அழகு செய்வாள் சித்தி..பட்டணத்து சேலையோடு வருவார் மாமா என்பது போல் வரும்.

- அமுதவல்லி



மஞ்சள் தேவதை(I)

 இரயில் பெட்டி ஏற வந்தாளோ இந்த மஞ்சள் பூ?

இவள் வாயில் விரிந்த

புன்னகைப் பூ

சொல்லும் கதை அறிவீரோ?

புது உலகம் காணப்

புறப்பட்டாளோ?

அல்லது 

தாத்தா பாட்டி மடியில்

உறங்கி உறவுப் பிள்ளைகளோடு

உறவாடி விளையாடலாம் என முகத்தில்

மலர் வில்லை 

ஏந்தினாளோ?

இவள் பள்ளி இன்று பூட்டிக் கொண்டு வழி விட்டதோ? 

இவளின் பிஞ்சு வெண்டை விரல்கள் "டா டா" சொல்லி

ஐந்து நாள்கள் விடுமுறை 

என சூசகமாய் யாருக்கு அறிவிப்பு செய்கின்றன?


- சாய்கழல் சங்கீதா

------------------------------------------

வீட்டுப் பாட தொல்லைகள் இல்லை..

பாட்டி வீட்டுக்குப் போகின்றேன்..


காலை எழுந்து பரபரப்பாய்க் கிளம்பி

பள்ளிக்கு ஓட வேண்டாம்

தாத்தாவிடம் நான் போகின்றேன்.


அம்மா ஆஃபிஸில் இருந்து வரும்வரை

காத்திருக்க வேண்டாம்.

ஆசையான தாத்தா பாட்டி எப்போதும்

இருப்பார்கள்.


எக்ஸாம், வீக்லி டெஸ்ட், அசைன்மென்ட் தொந்தரவு ஏதுமின்றி

ஜாலியாய் இருக்கலாம்.


தோட்டத்தில் பறித்து இளநீர் குடிக்கலாம்

சுழன்றோடும் ஆற்றில் ஆனந்தமாய்க் குளிக்கலாம்

ஆத்தங்கரையில் மணல்வீடும் கட்டலாம்

கூவும் குயிலோடு சேர்ந்து நானும் கூவலாம்


ஆனந்தமான ஒருவாரம்

உல்லாசம் நோக்கிப் பயணம்

போய் வருகிறேன்

டாட்டா... பைபை..


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

-------------------------------------------

ஒரு *ராணுவ வீரன்*  *தந்தையின்* குரல்


 தொடரும் வாழ்க்கைப் பயணத்தில்

 இந்தத் தொடரியின் பயணம்

 இதயத்தில் கணக்கிறது

 *மஞ்சள் தேவதையே* 

 பை(bye) பா  என்று நீ கூறும் போது

 பயப்படாதே பா 

 நான் உனக்காக வேண்டிக்கொள்கிறேன்

 என்பது போல் உள்ளது

 யுத்த பூமியை நோக்கிச் செல்லும்  என் உடல்

 ஏனோ உயிரை இங்கே விட்டு விட்டுச்  செல்கிறது

 ரத்தமும் ரணமும் உடலுக்குத்தான்  உன் உயிர்

 பத்திரமாக என்னிடம் உள்ளது போய் வா என்று நீ சொல்வது போல் தோன்றுகிறது

 *மஞ்சள் நிலாவே* மகளே

 மனக்கோட்டைகள்

 பல கட்டியுள்ளேன்

 பல மேடைகளில்  நீ   மெச்சப்படுவாய்

 கஷ்டங்களை துச்சமாக  எண்ணி கடந்து விடுவாய்

 என்றெல்லாம்


 கைகாட்டி விட்டு  தொடரியில் உட்கார்ந்த எண்   எண்ண ஓட்டம் தொடர்கிறது

 *மஞ்சள் மலரே*  நீ மலர்ந்து மங்கையான பின்

 மனம் விரும்பிய கணவனுக்கு உன் கரம் பிடித்துக் கொடுப்பேனோ

 நினைக்கும் பொழுதே

 நெஞ்சிலே சுகம்

 கொஞ்சம் பொறுமகளே

 அடுத்த விடுமுறையில் வந்து விடுவேன் வேகம்

- ஸ்ரீவித்யா வெங்கடேச்வரன்

-----------------------------------------------------

பள்ளி விடுமுறைக்கு வந்து

தன்னுடன் விளையாடி மகிழ்ந்த

அத்தை/மாமன் மகள்/மகன்களுக்கு

மகிழ்ச்சியுடன் வழியனுப்போ?

- முகம்மது சுலைமான்

இரயில் பெட்டி ஏற வந்தாளோ (I)

இரயில் பெட்டி ஏற வந்தாளோ இந்த மஞ்சள் பூ?

இவள் வாயில் விரிந்த

புன்னகைப் பூ

சொல்லும் கதை அறிவீரோ?

புது உலகம் காணப்

புறப்பட்டாளோ?

அல்லது 

தாத்தா பாட்டி மடியில்

உறங்கி உறவுப் பிள்ளைகளோடு

உறவாடி விளையாடலாம் என முகத்தில்

மலர் வில்லை 

ஏந்தினாளோ?

இவள் பள்ளி இன்று பூட்டிக் கொண்டு வழி விட்டதோ? 

இவளின் பிஞ்சு வெண்டை விரல்கள் "டா டா" சொல்லி

ஐந்து நாள்கள் விடுமுறை 

என சூசகமாய் யாருக்கு அறிவிப்பு செய்கின்றன?


- சாய்கழல் சங்கீதா

-------------------------------

வீட்டுப் பாட தொல்லைகள் இல்லை..

பாட்டி வீட்டுக்குப் போகின்றேன்..


காலை எழுந்து பரபரப்பாய்க் கிளம்பி

பள்ளிக்கு ஓட வேண்டாம்

தாத்தாவிடம் நான் போகின்றேன்.


அம்மா ஆஃபிஸில் இருந்து வரும்வரை

காத்திருக்க வேண்டாம்.

ஆசையான தாத்தா பாட்டி எப்போதும்

இருப்பார்கள்.


எக்ஸாம், வீக்லி டெஸ்ட், அசைன்மென்ட் தொந்தரவு ஏதுமின்றி

ஜாலியாய் இருக்கலாம்.


தோட்டத்தில் பறித்து இளநீர் குடிக்கலாம்

சுழன்றோடும் ஆற்றில் ஆனந்தமாய்க் குளிக்கலாம்

ஆத்தங்கரையில் மணல்வீடும் கட்டலாம்

கூவும் குயிலோடு சேர்ந்து நானும் கூவலாம்


ஆனந்தமான ஒருவாரம்

உல்லாசம் நோக்கிப் பயணம்

போய் வருகிறேன்

டாட்டா... பைபை..


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

--------------------------------------------

ஒரு *ராணுவ வீரன்*  *தந்தையின்* குரல்


 தொடரும் வாழ்க்கைப் பயணத்தில்

 இந்தத் தொடரியின் பயணம்

 இதயத்தில் கணக்கிறது

 *மஞ்சள் தேவதையே* 

 பை(bye) பா  என்று நீ கூறும் போது

 பயப்படாதே பா 

 நான் உனக்காக வேண்டிக்கொள்கிறேன்

 என்பது போல் உள்ளது

 யுத்த பூமியை நோக்கிச் செல்லும்  என் உடல்

 ஏனோ உயிரை இங்கே விட்டு விட்டுச்  செல்கிறது

 ரத்தமும் ரணமும் உடலுக்குத்தான்  உன் உயிர்

 பத்திரமாக என்னிடம் உள்ளது போய் வா என்று நீ சொல்வது போல் தோன்றுகிறது

 *மஞ்சள் நிலாவே* மகளே

 மனக்கோட்டைகள்

 பல கட்டியுள்ளேன்

 பல மேடைகளில்  நீ   மெச்சப்படுவாய்

 கஷ்டங்களை துச்சமாக  எண்ணி கடந்து விடுவாய்

 என்றெல்லாம்


 கைகாட்டி விட்டு  தொடரியில் உட்கார்ந்த எண்   எண்ண ஓட்டம் தொடர்கிறது

 *மஞ்சள் மலரே*  நீ மலர்ந்து மங்கையான பின்

 மனம் விரும்பிய கணவனுக்கு உன் கரம் பிடித்துக் கொடுப்பேனோ

 நினைக்கும் பொழுதே

 நெஞ்சிலே சுகம்

 கொஞ்சம் பொறுமகளே

 அடுத்த விடுமுறையில் வந்து விடுவேன் வேகம்

- ஸ்ரீவித்யா வெங்கடேச்வரன்

----------------------------------

பாவம் தோழி அறியாது


ஆவாரம்பூ கையசைத்து " போய் வா " என்கிறது

   அதன் தோழி நகரம் நோக்கி புலம் பெயர்கிறது


கூவும் குயில் குரல் நாளும் கேட்க முடியாது

   கொய்யா கடிக்கும் வேளை கூட அணில் இராது

   

பூவரசு இலையின் " பீப்பீ " இனி கிடைக்காது

   புளியம்பழம் ஓடுடைத்து  சுவைக்க முடியாது


தாவணி, பாவாடைகள் எங்கும் காண முடியாது

   தண்ணீர் கொண்டு வர தாமரைக் குளம் இராது


தூவானம் அப்போது தும்பிகளும் மிதக்காது

   துவரைக் காய் பறித்துச் சுவைக்க முடியாது


கேவரகுக் களி, புளித்த மோரும் கிடைக்காது

   கிட்டிபுள் விளையாட்டு கண்டு களிக்க இயலாது


காவலின்றி கால்நடையாய் பள்ளி செல முடியாது

   காதில், கையில் பொன்னோ கூடவே கூடாது


ஆவலாக நகரம் செலும் தோழி " பாவம் " அறியாது

   அடுத்த முறை சந்தித்தால் புலம்பத் தவறாது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

----------------------------------------



Tuesday, March 4, 2025

புதிய ஆத்திசூடி கதைகள் - பாகம் 1




நூல் : புதிய ஆத்திசூடி கதைகள் - பாகம் 1

ஆசிரியர்:  ஸ்ரீவி


 அலுவலகத்தில் ஆரோக்கியம் குறித்த சவால் ஒன்று... 4 மணிநேரம் மின்னணுப் பொருட்கள் பயன்படுத்தாது இருக்க வேண்டும். இன்று சவாலை ஏற்க முடிவு செய்தேன்...இரு காரணங்கள் துணைபுரியும் என்ற நம்பிக்கை... நெடுஞ்சாலை பயணம், ‌ஸ்ரீவி ஐயாவின் புதிய ஆத்திசூடிக் கதைகள் -பாகம் இரண்டு... பாகம் ஒன்று ஆண்டு துவக்கத்தில் முனைப்புடன் வாசித்து  அனுபவிக்கப்பட்டது...


படிப்பதற்கு எளிமையான நடையில் அச்சந் தவிர் என துவங்கி வௌவுதல் நீக்கு என்று முடியும் 110 முத்தான சத்தான கதைகள். வரலாறு, புனைவு, நிகழ்வு, புராணம், இலக்கியம் என பல்வேறு கதைக்களம். பக்கங்கள் புரள புரள கதை சொல்லும் பாங்கில் நல்ல தேர்ச்சி. கதை என்று ஒன்றை சுவைபட கூறுவதே தனித்திறமை. பாரதியின் ஆத்திசூடியைக் கருப்பொருளாகக் கொண்டு கதைக் களமாக அமைத்து சுவையாக சொல்வது எத்தனை பெரிய சவால்? ஆசிரியர் அதில் வெற்றி வாகை சூடி  உள்ளார். 

சோதிடம் தனை இகழ் என முதல் பாகத்தில் சொன்னவர்... ரேகையில் கனிகொள் எனும்போது பாரதியின் கருப்பொருளில் உறுதியாக இருப்பது பாரதியுடன் ஆசிரியர் கொண்டுள்ள மனநெருக்கத்தை உணர்த்துகிறது. பிணத்தினைப் போற்றேல் என்றால்...என குழம்பும் மனதைத் தெளிவு செய்கிறது ஆசிரியரின் தெளிவான எழுத்து. பல சுதந்திரப்போராட்ட வீரர்களின் கதையே பாரதியின் ஆத்திசூடி விளக்கமானது மிகப் பொருத்தமன்றோ? "பீழைக்கு இடங்கொடேல்" என நம் சாய் ஐயாவின்‌ அனுபவமொன்றை ராதா பாண்டேயின் கதையாக படிக்கும் பொழுது உணர்வோம்... பூமி புனிதமாக இருப்பது இது போன்ற மனிதர்களால் என...வேதம் புதிது செய்த தமிழ்த் தாத்தாவின் தமிழன்னைக்கான முயற்சிகள் மெய் சிலிர்க்க வைத்தன.  அறிந்துகொள்ள பல செய்திகள் கற்றுக் கொள்ள பல தமிழ் சொற்கள் என இனிய வாசிப்பு அனுபவம்  இந்நூல்கள்.


- அமுதவல்லி


*****************************************************

இன்று படித்தது:


ஸ்ரீவி ஐயாவின் புதிய ஆத்திசூடிக் கதைகள்


பகுதி 1


பக்கம்  265 - 270


மகாகவியின் புதிய ஆத்திசூடி 55


நாளெல்லாம் வினை செய்


எடுத்துக் கொண்ட நேரம்: சுமார் 15  நிமிடங்கள்.


வாசகியின் குரல்:


சாமிக்குப் பொங்கல் வைப்போம். 

தேனி மக்கள் ஏன்

ஜான் பென்னிகுயிக் அவர்களுக்குப் பொங்கல் வைக்கின்றனர்?


குழந்தைகளுக்குத் தாத்தா பாட்டி பெயரை வைப்பது வழக்கம். தேனி மக்கள் ஏன் 

ஜான் பென்னிகுயிக்கின் பெயரை தம் கண்மணிகளுக்கு வைக்கின்றனர்?

தெரிந்து கொள்ள ஆவலா?

கூகுள் செய்யாதீர்கள்.

புத்தகம் படித்து அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் 

ஆசிரியரின் கதை நடை போல் சிறப்பாக கூகுள் ஆசான் சொல்லமாட்டார். மொத்த வரலாற்றையும்  கூடுதல் செய்திகளையும் ஒரே கதையில் அடக்கமாட்டார். தேடி ஓய்வதை விட புத்தகத்தின் பக்கங்களைத் தேடி படியுங்கள்! யான் பெற்ற அறிவுச் செல்வம் பெறுக இந்த வையகத்தில் சிறந்து விளங்கும் நம் தமிழ் குழு!!! 


- சாய்கழல் சங்கீதா


***************************************************

Saturday, March 1, 2025

மார்ச் 1 - 2025 மகளிர்தின விழா

 *மார்ச் 1 - 2025 நடந்த மகளிர்தின விழா மாபெரும் வெற்றி*


மகாகவியின் வைரவரிகளான *பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் செய்ய வந்த* புரட்சிப் பெண்களின் வழித்தோன்றல்களான நம் மகளிர் குழு பூர்வாவில் சரித்திரம் படைத்தது. விழாவின் மொத்த பளுவையும் மகளிரால் தோளில் சுமக்கவியலாது என்ற தவறான கருத்தியலை உடைத்தது. முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக, பெண்களே நடத்திய விழா கோலாகலமாக நடந்தேறியது. 


பிற்பகல் 3.15 மணிக்குத் துவங்கிய பாரம்பரிய உணவுப் போட்டியில் 25-க்கும் அதிகமானோர் மிக சுவையான உணவு வகைகளை சுடச்சுட சமைத்ததோடு அதனது சமையல் குறிப்பு/பயன்கள்/பயன்படுத்திய பொருட்கள் பற்றிய குறிப்பு அட்டைகளோடு கண்ணைக் கவரும் வகையில் காட்சிப் படுத்தியிருந்தனர். அதனை சுவைத்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வந்திருந்த சிறப்பு விருந்தினர் வாலுவர் திரு. சிவநாத் அவர்கள் மிகப் பொறுமையாக ஒவ்வொரு பதார்த்தமாக சுவைத்து தேவையான குறிப்புகளையும் கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் அவர் கொணர்ந்த சமையல் குறிப்புகளையும் கொடுத்தார். போட்டியின் முடிவுகளை தனது சிறப்புரையில் சொன்னதோடு சிறப்புரையையும் ஆற்றினார். இப்போட்டிகளின் பொறுப்பாளர்களாக *இருந்து திறம்பட வழி நடத்திய நமது நிர்வாக/மகளிர் குழு உறுப்பினர்கள் மஞ்சுளா மற்றும் மல்லிகா இருவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்*


அடுத்ததாக துவங்கியது விளையாட்டுப் போட்டிகள். ஆர்வமுடன் நம் மகளிர் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் கலக்கினார்கள். விளையாட்டு அமைப்பாளர்கள் காட்டிய உற்சாகத்தை இருமடங்காக்கி பங்கேற்பாளர்கள் விளையாட்டு அரங்கத்தை கலகலப்பாக்கினார்கள். போட்டிகளை கண்டு களித்தோரும் மகிழ்வின் உச்சம் சென்றார்கள். மொத்தத்தில் நம் மகளிர் தங்கள் ஆர்வமிகு பங்கேற்பால் பார்ப்போர் மனங்களை வென்றார்கள். 

*இந்தப் போட்டிகளின் பொறுப்பாளர்களாக இருந்து திறம்பட வழி நடத்திய நமது நிர்வாக/மகளிர் குழு உறுப்பினர்கள் மகாலக்ஷ்மி, வித்யா, மலர்விழி ஆகியோருக்கு வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்*


விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்த கையோடு *ஒரு சூறைக் காத்து ஊரைப் பாத்து வீசியது* அந்தக் காற்றின் சுழலில் சிக்காதோரே  அரங்கில் இல்லை. உற்சாகமும் ஆரவாரமும் பெருக்கெடுத்து ஓடியது. ஆம். நம் பூர்வாவின் பெண்மணிகள் தங்கள் வயதினை மறந்து ஜீன்ஸ், டி-ஷர்ட், ஓவர் கோட், கறுப்புக் கண்ணாடி சகிதம் நடனமாடி தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். 

*இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்து திறம்பட வழி நடத்திய நமது நிர்வாக/மகளிர் குழு உறுப்பினர் பிரபு குமாரி அவர்களுக்கும் நம் அழைப்பை ஏற்று பயிற்சி கொடுத்த நடன ஆசிரியர் உமேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்*


போட்டிகளெல்லாம் முடிந்து *கலை நிகழ்ச்சிகள்* துவங்கின. 


குத்து விளக்கினை 

*திருமதிகள். மைத்ரேயி மோகன், ஹேமா வெங்கட்ராமன், விஜயா ராவ் இவர்களோடு சாதனை மாணவி பிரதிக்ஷா மற்றும் வாலுவர் சிவநாத்* ஆகியோர் ஏற்றினர். 


தமிழ்த்தாய் வாழ்த்தோடு இனிது கலை நிகழ்ச்சிகள் துவங்கின. வரவேற்புரையை *சிறுமி ஆராதனா ரகுராமன்* சிறப்புற நிகழ்த்தினார்.


முதலில் *பேச்சரங்கம் மலர்விழி தலைமையில் துவங்கியது* ஏற்கனவே மேடையேறிய *மகாலக்ஷ்மி, மல்லிகா மணி, மஞ்சுளா, சங்கீதா, அமுதவல்லி* ஆகியோரோடு முதன் முறையாக மேடையேறிய *தேவி அருண், சுல்தானா, ஸ்ரீவித்யா* ஆகியோர் சூறைக்காத்துதான் அரங்கத்தைச் சூழுமா .. சுனாமி அலையாய் எழும்பிவரும் சொல்லரங்கம் அதற்கு சிறிதும் சளைக்காது என நிரூபித்தார்கள். அரங்கைக் கலகலப்பாக்கினார்கள். கரவொலியால் அரங்கத்தை அதிரச் செய்யும் அளவு களமாடினார்கள். சாதனைப் பெண்களைப் பற்றிப் பேசி சாதனை செய்தார்கள்.


*சிறுமி ஆர்ஃபா இனிய குரலில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை* தெள்ளத் தெளிவாகக் கூறி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றார். அவரின் சொல்சுத்தம் அனைவரையும் கவர்ந்தது.


அதனைத் தொடர்ந்து, 74 அகவையும், தன்னை பாதித்த புற்றுநோயும் ஒரு தடையே அல்ல என்பதை *திருமதி. ஹேமா வெங்கட்ராமன் மிகச் சீரிய முறையில் யோகா செய்து* அரங்கத்தையே மெய் சிலிர்க்க வைத்தார்.


நடன மணிகளுக்கும் உரை வீச்சாளர்களுக்கும் சற்றும் நாங்கள் சளைத்தவர்களில்லை என்பதைக் காட்ட நாடக மேடையில் நடிப்புத் திலகங்கள் களம் இறங்கினார்கள். மகாகவியே நேரில் வந்து நாடக மேடையேறி நம்மையெல்லாம் மகிழ்வித்தார். கதாபாத்திரங்களாகவே மாறிய நம் மகளிர் 20 நிமிடங்களுக்கு பார்வையாளர்களை வசியம் செய்தது குறிப்பிடத் தக்கது. நல்லதொரு சமூக செய்தியோடு நாடகம் நிறைவுற்றது.


பிறகு, நம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மேல்களவாய்ப் பள்ளி மாணவி *செல்வி. பிரதிக்ஷாவினை கௌரவித்து தலைவர் ஸ்ரீவி புத்தகங்கங்கள் வழங்கிட, திருமதி மைத்ரேயி ௹.50,000/- (ஐம்பதாயிரம் மட்டும்) பணமுடிப்பினை கொடுத்திட திரு. சாய்ராம் இளம் சாதனையாளர் நற்சான்றிதழ் வழங்கினார்.* அச்சிறுமி நன்றி நவின்றார்.

அதனைப் போலவே தர்மபுரி அரூர் வட்ட நரியம்பட்டி பள்ளி மாணவி விஜயலக்ஷ்மிக்கு ௹.10,000/- (பத்தாயிரம் மட்டும்) அவரது தந்தைக்கு ஜிபேயில் அனுப்பப் பட்டது. அதற்கான ஒப்புகை கடிதம் பெறப் பட்டு நிதிச் செயலரால் இன்று குழுவில் பகிரப் பட்டது.


அதன்பின், *திருமதி விஜயாராவ் அவர்களுக்கு திரு. தியாகராஜன் (உ.தலைவர்) அவர்கள் சாதனையாளர் நற்சான்றிதழ் வழங்கிட அன்புப் பரிசாக நூல்களை ஸ்ரீவி வழங்கினார்*

மிகச் சிறந்த சிறப்புரை ஒன்றை அவர் வழங்கி மெருகேற்றினார்.


போட்டியாளர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளை விவேகானந்தாப் பயிலக தாளாளர் ஜவஹர், தலைவர் ஸ்ரீவி, நிதிச் செயலர் சாய்ராம், உ.தலைவர் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர். பின், திரு. ஜவஹர் வாழ்த்துரை வழங்கினார்.


நிறைவாக செல்வி. ஆதிரா நன்றியுரை நவில நாட்டுப் பண்ணுடன் இசைக்கப்பட்ட பின் சுவையான இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.


கலைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சிவகாமி முதன்முறையாக அப்பணியை செய்த போதிலும், சிறப்பாக தொகுத்து வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.


கடந்த ஒரு மாதமாக அயராது உழைத்து மகளிர் குழு நவ ரத்தினங்களுக்கும் வழிகாட்டியதோடு பயிற்சி கொடுத்து வைரங்களைப் பட்டை தீட்டிய *திருவாளர்கள் சாய்ராம் (நாடக இயக்குனர்) தலைவர் ஸ்ரீவெங்கடேஷ், உதவித் தலைவர் தியாகராஜன் (பேச்சரங்கம்) திரு. உமேஷ் (நடன ஆசிரியர்)* ஆகியோருக்கு நம் நெஞ்சுநிறை நன்றிகள். 


நாடகாசிரியர் *திருமதி. லாவண்யா, நடன பொறுப்பாளர் திருமதி. பிரபு குமாரி பின்னணி இசைத் தொகுப்பில் உதவிய துர்கா சாய்ராம் மற்றும் காமாட்சி* ஆகியோருக்கு நமது சிறப்பு நன்றிகள்.


விளையாட்டுப் போட்டிகளை வடிவமைத்து நடத்திய, கலை நிகழ்ச்சிகளில் ஒளிர கடுமையாக பயிற்சி மேற் கொண்ட, விழா சிறந்திட கடுமையாக உழைத்திட்ட அனைத்து மகளிருக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.


ஐந்து மணி நேரம் நடந்த விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி விழாவை இரசித்து மகிழ்ந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் பற்பல நன்றிகள்.


2025-ம் ஆண்டு மகளிர்தின விழா மற்றுமொரு வைரக்கல்லாக நமது தமிழ்ச்சங்க மகுடத்தில் ஒளிர்கிறது. கரத்தாலும் கருத்தாலும் உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்🙏


*ஸ்ரீவி*

*தலைவர்*

(நிர்வாகக் குழுவிற்காக)


(போட்டிகளில் வெற்றி பெஎற்றோர் பட்டியல் தனியே பகிரப் படும்)

விளையாட்டுப்போட்டி பரிசுகள் விவரணம் 

 

 தமிழோடு விளையாடு

1. லக்ஷ்மி ( முதல் பரிசு)

2. அபிராமி பாஸ்கர் (இரண்டாம் பரிசு)


மௌனம் பேசியதே 

     1. தேவி அருண் (முதல் பரிசு)

      2. முருகேஸ்வரி(இரண்டாம் பரிசு) 


கேளிக்கை விளையாட்டு( குழுவாக)

     1. சு. கண்மணி 

      2. தேவி அருண்

       3. ராதா 

       4. லலிதா 

        5. மைதிலி

        6. முருகேஸ்வரி



இது தான் தங்கம்

 இது தான் தங்கம்


நாட்டின் நிதிநிலை தங்கக் கட்டிகள் கையிருப்பில் 

   நம்மூர் தலைவர்கள் வீடே நாடென நினைப்பில்


மேட்டுக்குடி அதற்குத் தங்கம் மேல் மோகம்

   மேலும் மேலும் அதை வாங்கிக் குவிக்கும்


பூட்டி அதை சிறை வைத்து மறந்தே போவார்

   போன கொள்ளை என்று? அதுவும் அறியார்


காட்டுப் புலி தானென  * இடை வர்க்கம் நினைக்கும்

   கரண்டியால் உடலில் சூடு போட்டுக் கொள்ளும்


ஆடிப் போகும் புதிதாய் அடுத்தவரிடம் கண்டேதும்

   அட்சய திருதியை அன்றோ பேயாட்டம் ஆடும்


கூட்டத்தில் அணிந்து கொள முடியாமல் போகும்

   குடக்கூலி வங்கிகளில் ஆயிரங்கள் ஆகும்


மாட்டை, ஆட்டை நம்பி மக்களின் பெருங் கூட்டம்

   மஞ்சள் தங்கம் தீர்க்கும் அன்னார் பசி, தாகம்


சேட்டுக் கடை, வீடு இடையே ஷட்டிலாய் ஓடும்

   செல்ல இல்லாள் கழுத்தில் சில நாளே ஆடும். 

        " இது தான் தங்கம் "

* நடுத்தர வர்க்கம்


__  குத்தனூர் சேஷுதாஸ்

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...