Thursday, March 27, 2025

பகையாய்ப் பார்க்கிறீரே!

 பகையாய்ப் பார்க்கிறீரே! 


காதோரம் தான் மெல்ல நானும் பாடுவேன்

   காதலியாய் ஆனால் உயிரெடுக்க மாட்டேன்


சாது நானும் தான் எதிர்நீச்சல் மாது போலே

   சாட்டை (bat) சுழற்றுறீரே எங்க வீட்டுப் பிள்ளையே! 


ஆதவன் வந்த உடன் ஓடோடி ஒளிவேன்

   அளவாக ஒரு சொட்டே குருதி குடிப்பேன்


பாதுகாக்கும் இரவுக் காவலரைத் தூங்க விடேன்

   பகையாய் " கொசு "எனைப் பார்க்கிறீரே! ஏன்? 


__  குத்தனூர் சேஷுதாஸ்



----------------

மனிதர்களே...கொசு பேசுகிறேன்.. நான் நோய்களைப் பரப்புவதாகத் திட்டுகின்றீர்..


நான் நோய்களைப் பரப்புவதற்கு நீங்கள் தானே காரணம்..


மானிடா..

உன் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வை!

அழுக்கு ஆடைகளை 

தினமும் செய் சலவை!

குறைத்துக் கொள் உன்

மருத்துவ செலவை!!


ஐயகோ!..உனக்கு அறிவுரை செய்து 

என் தலை மீது நானே வைத்துக் கொண்டேனே கை!!! 

இப்படியெல்லாம் நீ செய்தால்

எங்கே தேடுவேன்

என் உணவை???

என்னால் தாங்க முடியாது உன் பிரிவை..

என்றும் வளர்ப்போம்

நம் உறவை!

புரிந்துகொள் என்

பசி உணர்வை.. 

சற்று பொறுத்துக் கொள் என் கடியை

ஒரே தடவை..

தினமும் எதிர்ப்பார்த்திரு என் வரவை!


நான் தேடியது என்

உணவை மட்டுமே..

நோய்க்கிருமியை

வைத்துக் கொண்டிருப்பது நீங்களே..

உணவு தேடி வந்தவனுக்கு

கிருமியை இலவசமாகக் கொடுப்பதும் நீங்களே..

நீங்களெல்லாம் 

பல உணவு விடுதிகளுக்குச் சென்று விதவிதமாய் உண்ணும் போது

எனக்கும் ஆசை இருக்காதா?

அது மட்டுமா? 

பணம் தரமாட்டேன் என்று  உணவு அருந்தும் போதே விரட்டியும் விடுகின்றீர்..

உணவு தேடி 

பக்கத்தில் உள்ள

உணவு விடுதிக்கு சென்று உணவருந்தும் போது

பணம் கொடுக்கவில்லை என்றால் விரட்டப்படுவேனோ

என்றெண்ணி போனால் போகட்டுமென்று இலவசமாக நீங்கள் கொடுத்த கிருமிகளை

வேறு வழியில்லாமல் அங்கே கொடுத்து விடுகிறேன்..

இரண்டு அகத்தில்

உணவை உண்டால்

உண்ட வீடுகளுக்கு

ரெண்டகம் செய்தேன்

என்று பழி போடுகின்றீர்!


நான் இல்லாவிட்டால்

மருத்துவமனைகளில் பணியாற்றுவோரின்

குழந்தைகளுக்கு எப்படி உணவு கிடைக்கும்?

நோய் குணமாக வேண்டுதல் வைத்து நீங்கள் ஆலயங்களில் ஏற்றும் அகல் விளக்குகளைச் செய்யும் குயவன் வீட்டுக் குழந்தைக்கு

இரண்டு வேளையாவது நல்ல உணவு கிடைக்க வேண்டாமா?


இப்போது சொல்லுங்கள்..

நான் நல்லவனா?

கெட்டவனா?


- சாய்கழல் சங்கீதா


-----------------------------------------------------

ஒரு கொசுவின் பிரலாபம்

----

குட்டை , குட்டையாக

அழுக்கு நீர்

கூளம் கூளமாக , குப்பைகள்

 மூச்சு முட்ட முட்ட முடை நாற்றமெடுக்கும்

சாக்கடைகள் என

எமக்கு வாழ்வாதாரத்தைப்

பெருக்கியதே மனிதன்தான்.


குச்சு வீடுகளைச்சுற்றிப்

பாடிப்பறந்த எம்மை

பல அடுக்கு மச்சு வீடுகளின் உயரத்துக்குப்

பறக்க ஊக்கமூட்டியதும் அவன்தான்!


ஆனால் நாங்கள் உயர உயரப் பறந்தாலும், ஊர்க்கோழி ஆவதில்லை!


நாங்கள்எடுக்கும்  மனிதனின் ஒரு துளி இரத்தத்துக்கு கொடுக்கும் விலை

எமது இன்னுயிர்.


சுருள் வத்தி, மருந்து 

தெளிப்பான்கள்(இயந்திரம், மனிதன் இரண்டையும் குறிக்கும), மின்சார

மட்டை கள்," நல்ல இரவு"

குப்பிகள்( ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்) என எமக்கு எதிராக மல்லுக்கு நிற்கும் ஆயுதப் படைகள்- எம்மால்

எத்தனை மனிதப்

படைகளுக்கு

வாழ்வாதாரங்கள்! 


அச்சச்சோ!


 நாதியற்ற எங்களுக்கு நீதி மன்றங்கள்

 தேவையில்லை- எங்கள வாழ்வும் வளமும் நொடியில்

முடியும் என்பதால்.


இறுதி மூச்சு அடங்குமுன்

மனிதனுக்கு ஒரு 

வேண்டுகோள்:

உன் சுற்றுச் சூழலை

சுத்தமாக வைத்துக்கொள், எம் சுற்றம் உன்னைச் சுற்றுவது குறையும்.


----- மோகன்


----------------------------------

"கூவமோ கங்கையோ ..

மண்குடிசையோ மாளிகையோ..

ராயபுரமோ மைலாபூரோ  ..

இல்லையேதும் வெறுப்பு ..

இரத்தம்னா சிவப்பு ..

அடிவாங்கியாவது  குடிக்கணுமுங்க ..

ஆபத்தானது என்பொழப்புங்க.." 


நித்தம் உயிர்விட்டு , ஏற்றத்தாழ்வினைச் சாடும் உயரிய உயிரினம் கொசுவிற்கு நோபல் என்று கிட்டுமோ!!!


கொசுவை அடிக்கும் கரங்கள், அதன் கொள்கை உணர்ந்து , தன்தவறுணர்ந்து தலையில் கொ(கு)ட்டிக் கொள்ளுமோ...


-- இலாவண்யா


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...