இரவின் நிழல்.. நினைவுகளின் சுழல்...
விழி மூடியும் மறையாத காட்சிகள்..
அதில் சிக்கித் தவிப்பது சுகமே...
பனி முத்தமிட்டுக், கதிரவன் விழிக்க..
அலைபேசி சத்தமிட்டு ,நான் விழிக்க.. ..
நட்புறவுகளின் வாழ்த்து படிப்பது சுகமே..
அதிகாலை நேரம் தங்கமாய் ஜொலிக்கும்,
அலைகள் ஓடிவர , வைரமாய் மின்னும்,
கடலன்னை அழகை
ரசிப்பது சுகமே..
பச்சை பசுமைகளோடு
ஒட்டி உறவாடி,
பறவைகளின் கீச்சொலியின் பொருள் தேடி,
தென்றலின் தீண்டலில் மெய்மறப்பது சுகமே..
நித்தம் புதுமொழி பேசி மயக்கி,
அகவை மறந்து விளையாடத் தூண்டும்,
மழலைகளை அணைத்துக் கொஞ்சுவது சுகமே..
விழிகள் மூடி அகம் திறந்து,
இருள் நீக்கி அறிவொளி நிரப்பும்,
ஆலய மணியோசைக் கேட்பது சுகமே..
நாளை என்பது நிச்சயம் இல்லை..
உயிரைப் பூட்டவும் பெட்டகம் இல்லை..
அறிந்தும், கனவு காண்பது சுகமே..
மாரியும் கதிரும் தீட்டிய வண்ணக்கலவை,
உணர்வுகள் பலவும் குழைத்த எண்ணக்கலவை,
ரசித்திட வானம்போல் மனமிருந்தால் சுகமே..
சுகமான சுகங்களை இதமாய்
பகர்ந்திட,
ஊக்கம் அளித்து ,ஆக்கம் கூட்டும்,
நட்புறவுகள் இருப்பது, தனி சுகமே..
No comments:
Post a Comment