Friday, March 7, 2025

மஞ்சள் தேவதை(II)

 பாவம் தோழி அறியாது


ஆவாரம்பூ கையசைத்து " போய் வா " என்கிறது

   அதன் தோழி நகரம் நோக்கி புலம் பெயர்கிறது


கூவும் குயில் குரல் நாளும் கேட்க முடியாது

   கொய்யா கடிக்கும் வேளை கூட அணில் இராது

   

பூவரசு இலையின் " பீப்பீ " இனி கிடைக்காது

   புளியம்பழம் ஓடுடைத்து  சுவைக்க முடியாது


தாவணி, பாவாடைகள் எங்கும் காண முடியாது

   தண்ணீர் கொண்டு வர தாமரைக் குளம் இராது


தூவானம் அப்போது தும்பிகளும் மிதக்காது

   துவரைக் காய் பறித்துச் சுவைக்க முடியாது


கேவரகுக் களி, புளித்த மோரும் கிடைக்காது

   கிட்டிபுள் விளையாட்டு கண்டு களிக்க இயலாது


காவலின்றி கால்நடையாய் பள்ளி செல முடியாது

   காதில், கையில் பொன்னோ கூடவே கூடாது


ஆவலாக நகரம் செலும் தோழி " பாவம் " அறியாது

   அடுத்த முறை சந்தித்தால் புலம்பத் தவறாது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------------------------------

மஞ்சள் உடையில் ஒரு பூக்குவியல்.


இந்த மஞ்சள் தேவதையின்

கையசைப்பு

மகிழ்ச்சியின்

வெளிப்பாடு.


அத்தை, மாமா , அவர்தம் , தன்வயதை ஒத்த  சிறார்கள்  விடுமுறையை களிப்புடன் கொண்டாடி தம் தம்

ஊர் திரும்பும் நேரம்.


வண்டி கிளம்பி விட்டது

மெதுவாக.


கூட வந்த பெற்றோர்

பின் நிற்க, இச்சிறுமி

வண்டி முழுவதும்

செல்லும் வரை கையசைக்கிறாள்.


     பிரியா விடை!


உறவினர்

ஊர் சென்றாலும்

மகிழ்வுடன் களித்த

நினைவுகள் அடுத்த ஒரு வருடத்தை எதிர்பார்ப்புடன்

கழிக்க உதவும்.


வாழ்க்கையே நல்ல நினைவுகள்,எதிர்பார்ப்புகளை ஒட்டியே நகர்கிறது அல்லவா!


பள்ளி திறந்தவுடன்

தன் விடுமுறைக் கொண்டாட்டத்தை

நட்புக்குழாத்திடம்

தம்பட்டம் அடிக்க வேண்டும். 


ம் ம்..  வரும் நாட்கள் இவள்

ரொம்ப பிசி!

- மோகன்

-----------------------------

புன்னகை தவழ

யாரை அழைக்க வந்தாய்?

துள்ளி ஓடி

அணைக்கும் முன்

உன் இருப்பை

கைகாட்டி சொல்கிறாய்...

யாரை நோக்குகிறாய்?

அள்ளி அணைத்திட அம்மா?

தோளில் தூக்கிட அப்பா?

சிங்காரித்து கொஞ்சிட சித்தி?

முதுகில் சுமந்திட சித்தப்பா?

தூக்கிப்போட்டு விளையாட மாமா?

மெத்தென மடியில் சாய அத்தை?

கதைகள் சொல்ல பாட்டி?

கடைக்கு செல்ல தாத்தா?

கைகோத்து விளையாட தோழி?


யாராக இருந்தாலும் 

உன் பூரிப்பால் 

அழகானது இவ்வுலகம் !!!


 👆உறவுகளை விவரிக்கும் சிறுவர் பாடலொன்றின் நினைவில் எழுதியது. பாடல் மறந்து விட்டது.‌ சிங்காரமாய் அழகு செய்வாள் சித்தி..பட்டணத்து சேலையோடு வருவார் மாமா என்பது போல் வரும்.

- அமுதவல்லி



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...