Saturday, March 15, 2025

கொத்துக் கொத்தாய் செம்பூக்கள்

 நம் குடியிருப்பில் தான்


கொத்துக் கொத்தாய் இதோ செம்பூக்கள் குலுங்குதாம்

   கூடைப் பூ சூடிக் கொள்ளும் கூந்தலைத் தேடுதாம்


சத்தமுடன் தேன் குடிக்கும் வண்டுகள் ஓய்ந்ததாம்

   " சாமி விடுங்க ஆளை " கைகள் தூக்குதாம்


புத்தம் புதுத் தென்றல் வந்து மெல்ல உரசுதாம்

   பூக்கள் மணமகனாய் மேலும் சிவக்குதாம்


குத்தனூரில் இல்லை நம் குடியிருப்பில் தானாம்

   குழந்தையோடு சேர்ந்து காண குதூகலமே ஆம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------------------------------

நம் குடியிருப்பில் பூக்கள் செடிகளுக்கே

சொந்தம்; கொண்டாட

இல்லை பந்தம்.

கட்டளை இடும் 

குடியுரிமை நல சங்கத்தின் நிர்ப்பந்தம்.


பார்த்து இரசிக்க, உரிமை உண்டு; பறித்து சூட அல்ல.


" பூவே பூச் சூட வா" என்றழைத்தாலும் வாராது.


குத்தனூரில் பூக்களை

முகம் சிவக்க சிவக்கப்

பறிக்கலாம் போலும்!


- மோகன்

----------------------------------

பறித்து சூடிக் கொள்ள மணமகள்கள் வருவார்கள் என்று வெட்கத்தில்😀 சிவந்தனரோ இட்லிப்பூ மாப்பிள்ளைகள்?

அல்லது திருமண விருந்தில் 

இட்லிகள் பூ போல இல்லை என்று கோபத்தில் உள்ளனரோ சிவந்த 

சம்பந்திகள்?


எது எப்படியோ அபூர்வமாய்

பூர்வாவில் பூ பூத்துக் 

குலுங்கினாலும் 

குத்தனூர் புலவரின் 

ஊர்ப் பாசத்தை அவர் கவிதை வரிகளில்

சொல்லாமல் விடுவாரா?


ஒரு வேளை குத்தனூர் தோட்டத்தை

பூர்வா குத்தகை எடுத்து

மண் பெயர்த்து பூர்வாவில் செடிகள் நட்டு விட்டதோ?🤔

--சங்கீதா


------------------------------

வெட்கத்தில் சிவக்க வில்லை 

கோபத்தில் சிவக்கவில்லை 

வெப்பத்தில் சிவக்கவில்லை 

இயற்கையாக சிவந்து பூத்தன

வேனிலில் பளிச்சென சிரித்தன


உண்ட மயக்கத்தில் மகிழ்ந்தோர்

இட்ட பெயரோ இட்லி பூ?

வெட்சி குல்லை செச்சை, செங்கொடுவேரி சேதாரம்

பெயர் எதுவென்றாலும்


மஞ்சள் வெயிலின் கடுமையில்

பச்சை இலைகளுடன் போட்டியிட்டன

மேலும் சிவந்து மிளிர்ந்தன

கண்களுக்கு குளிர்ச்சி தந்தன

மனதிற்கு மகிழ்ச்சி தந்தன


- அமுதவல்லி


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...