*மார்ச் 1 - 2025 நடந்த மகளிர்தின விழா மாபெரும் வெற்றி*
மகாகவியின் வைரவரிகளான *பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் செய்ய வந்த* புரட்சிப் பெண்களின் வழித்தோன்றல்களான நம் மகளிர் குழு பூர்வாவில் சரித்திரம் படைத்தது. விழாவின் மொத்த பளுவையும் மகளிரால் தோளில் சுமக்கவியலாது என்ற தவறான கருத்தியலை உடைத்தது. முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக, பெண்களே நடத்திய விழா கோலாகலமாக நடந்தேறியது.
பிற்பகல் 3.15 மணிக்குத் துவங்கிய பாரம்பரிய உணவுப் போட்டியில் 25-க்கும் அதிகமானோர் மிக சுவையான உணவு வகைகளை சுடச்சுட சமைத்ததோடு அதனது சமையல் குறிப்பு/பயன்கள்/பயன்படுத்திய பொருட்கள் பற்றிய குறிப்பு அட்டைகளோடு கண்ணைக் கவரும் வகையில் காட்சிப் படுத்தியிருந்தனர். அதனை சுவைத்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வந்திருந்த சிறப்பு விருந்தினர் வாலுவர் திரு. சிவநாத் அவர்கள் மிகப் பொறுமையாக ஒவ்வொரு பதார்த்தமாக சுவைத்து தேவையான குறிப்புகளையும் கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் அவர் கொணர்ந்த சமையல் குறிப்புகளையும் கொடுத்தார். போட்டியின் முடிவுகளை தனது சிறப்புரையில் சொன்னதோடு சிறப்புரையையும் ஆற்றினார். இப்போட்டிகளின் பொறுப்பாளர்களாக *இருந்து திறம்பட வழி நடத்திய நமது நிர்வாக/மகளிர் குழு உறுப்பினர்கள் மஞ்சுளா மற்றும் மல்லிகா இருவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்*
அடுத்ததாக துவங்கியது விளையாட்டுப் போட்டிகள். ஆர்வமுடன் நம் மகளிர் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு விளையாட்டிலும் கலக்கினார்கள். விளையாட்டு அமைப்பாளர்கள் காட்டிய உற்சாகத்தை இருமடங்காக்கி பங்கேற்பாளர்கள் விளையாட்டு அரங்கத்தை கலகலப்பாக்கினார்கள். போட்டிகளை கண்டு களித்தோரும் மகிழ்வின் உச்சம் சென்றார்கள். மொத்தத்தில் நம் மகளிர் தங்கள் ஆர்வமிகு பங்கேற்பால் பார்ப்போர் மனங்களை வென்றார்கள்.
*இந்தப் போட்டிகளின் பொறுப்பாளர்களாக இருந்து திறம்பட வழி நடத்திய நமது நிர்வாக/மகளிர் குழு உறுப்பினர்கள் மகாலக்ஷ்மி, வித்யா, மலர்விழி ஆகியோருக்கு வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்*
விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்த கையோடு *ஒரு சூறைக் காத்து ஊரைப் பாத்து வீசியது* அந்தக் காற்றின் சுழலில் சிக்காதோரே அரங்கில் இல்லை. உற்சாகமும் ஆரவாரமும் பெருக்கெடுத்து ஓடியது. ஆம். நம் பூர்வாவின் பெண்மணிகள் தங்கள் வயதினை மறந்து ஜீன்ஸ், டி-ஷர்ட், ஓவர் கோட், கறுப்புக் கண்ணாடி சகிதம் நடனமாடி தாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்.
*இந்தப் போட்டிகளின் பொறுப்பாளராக இருந்து திறம்பட வழி நடத்திய நமது நிர்வாக/மகளிர் குழு உறுப்பினர் பிரபு குமாரி அவர்களுக்கும் நம் அழைப்பை ஏற்று பயிற்சி கொடுத்த நடன ஆசிரியர் உமேஷ் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்*
போட்டிகளெல்லாம் முடிந்து *கலை நிகழ்ச்சிகள்* துவங்கின.
குத்து விளக்கினை
*திருமதிகள். மைத்ரேயி மோகன், ஹேமா வெங்கட்ராமன், விஜயா ராவ் இவர்களோடு சாதனை மாணவி பிரதிக்ஷா மற்றும் வாலுவர் சிவநாத்* ஆகியோர் ஏற்றினர்.
தமிழ்த்தாய் வாழ்த்தோடு இனிது கலை நிகழ்ச்சிகள் துவங்கின. வரவேற்புரையை *சிறுமி ஆராதனா ரகுராமன்* சிறப்புற நிகழ்த்தினார்.
முதலில் *பேச்சரங்கம் மலர்விழி தலைமையில் துவங்கியது* ஏற்கனவே மேடையேறிய *மகாலக்ஷ்மி, மல்லிகா மணி, மஞ்சுளா, சங்கீதா, அமுதவல்லி* ஆகியோரோடு முதன் முறையாக மேடையேறிய *தேவி அருண், சுல்தானா, ஸ்ரீவித்யா* ஆகியோர் சூறைக்காத்துதான் அரங்கத்தைச் சூழுமா .. சுனாமி அலையாய் எழும்பிவரும் சொல்லரங்கம் அதற்கு சிறிதும் சளைக்காது என நிரூபித்தார்கள். அரங்கைக் கலகலப்பாக்கினார்கள். கரவொலியால் அரங்கத்தை அதிரச் செய்யும் அளவு களமாடினார்கள். சாதனைப் பெண்களைப் பற்றிப் பேசி சாதனை செய்தார்கள்.
*சிறுமி ஆர்ஃபா இனிய குரலில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை* தெள்ளத் தெளிவாகக் கூறி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றார். அவரின் சொல்சுத்தம் அனைவரையும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து, 74 அகவையும், தன்னை பாதித்த புற்றுநோயும் ஒரு தடையே அல்ல என்பதை *திருமதி. ஹேமா வெங்கட்ராமன் மிகச் சீரிய முறையில் யோகா செய்து* அரங்கத்தையே மெய் சிலிர்க்க வைத்தார்.
நடன மணிகளுக்கும் உரை வீச்சாளர்களுக்கும் சற்றும் நாங்கள் சளைத்தவர்களில்லை என்பதைக் காட்ட நாடக மேடையில் நடிப்புத் திலகங்கள் களம் இறங்கினார்கள். மகாகவியே நேரில் வந்து நாடக மேடையேறி நம்மையெல்லாம் மகிழ்வித்தார். கதாபாத்திரங்களாகவே மாறிய நம் மகளிர் 20 நிமிடங்களுக்கு பார்வையாளர்களை வசியம் செய்தது குறிப்பிடத் தக்கது. நல்லதொரு சமூக செய்தியோடு நாடகம் நிறைவுற்றது.
பிறகு, நம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மேல்களவாய்ப் பள்ளி மாணவி *செல்வி. பிரதிக்ஷாவினை கௌரவித்து தலைவர் ஸ்ரீவி புத்தகங்கங்கள் வழங்கிட, திருமதி மைத்ரேயி ௹.50,000/- (ஐம்பதாயிரம் மட்டும்) பணமுடிப்பினை கொடுத்திட திரு. சாய்ராம் இளம் சாதனையாளர் நற்சான்றிதழ் வழங்கினார்.* அச்சிறுமி நன்றி நவின்றார்.
அதனைப் போலவே தர்மபுரி அரூர் வட்ட நரியம்பட்டி பள்ளி மாணவி விஜயலக்ஷ்மிக்கு ௹.10,000/- (பத்தாயிரம் மட்டும்) அவரது தந்தைக்கு ஜிபேயில் அனுப்பப் பட்டது. அதற்கான ஒப்புகை கடிதம் பெறப் பட்டு நிதிச் செயலரால் இன்று குழுவில் பகிரப் பட்டது.
அதன்பின், *திருமதி விஜயாராவ் அவர்களுக்கு திரு. தியாகராஜன் (உ.தலைவர்) அவர்கள் சாதனையாளர் நற்சான்றிதழ் வழங்கிட அன்புப் பரிசாக நூல்களை ஸ்ரீவி வழங்கினார்*
மிகச் சிறந்த சிறப்புரை ஒன்றை அவர் வழங்கி மெருகேற்றினார்.
போட்டியாளர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களுக்கும் நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளை விவேகானந்தாப் பயிலக தாளாளர் ஜவஹர், தலைவர் ஸ்ரீவி, நிதிச் செயலர் சாய்ராம், உ.தலைவர் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர். பின், திரு. ஜவஹர் வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக செல்வி. ஆதிரா நன்றியுரை நவில நாட்டுப் பண்ணுடன் இசைக்கப்பட்ட பின் சுவையான இரவு உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.
கலைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய சிவகாமி முதன்முறையாக அப்பணியை செய்த போதிலும், சிறப்பாக தொகுத்து வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
கடந்த ஒரு மாதமாக அயராது உழைத்து மகளிர் குழு நவ ரத்தினங்களுக்கும் வழிகாட்டியதோடு பயிற்சி கொடுத்து வைரங்களைப் பட்டை தீட்டிய *திருவாளர்கள் சாய்ராம் (நாடக இயக்குனர்) தலைவர் ஸ்ரீவெங்கடேஷ், உதவித் தலைவர் தியாகராஜன் (பேச்சரங்கம்) திரு. உமேஷ் (நடன ஆசிரியர்)* ஆகியோருக்கு நம் நெஞ்சுநிறை நன்றிகள்.
நாடகாசிரியர் *திருமதி. லாவண்யா, நடன பொறுப்பாளர் திருமதி. பிரபு குமாரி பின்னணி இசைத் தொகுப்பில் உதவிய துர்கா சாய்ராம் மற்றும் காமாட்சி* ஆகியோருக்கு நமது சிறப்பு நன்றிகள்.
விளையாட்டுப் போட்டிகளை வடிவமைத்து நடத்திய, கலை நிகழ்ச்சிகளில் ஒளிர கடுமையாக பயிற்சி மேற் கொண்ட, விழா சிறந்திட கடுமையாக உழைத்திட்ட அனைத்து மகளிருக்கும் ஆயிரமாயிரம் நன்றிகள்.
ஐந்து மணி நேரம் நடந்த விழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி விழாவை இரசித்து மகிழ்ந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் பற்பல நன்றிகள்.
2025-ம் ஆண்டு மகளிர்தின விழா மற்றுமொரு வைரக்கல்லாக நமது தமிழ்ச்சங்க மகுடத்தில் ஒளிர்கிறது. கரத்தாலும் கருத்தாலும் உழைத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்🙏
*ஸ்ரீவி*
*தலைவர்*
(நிர்வாகக் குழுவிற்காக)
(போட்டிகளில் வெற்றி பெஎற்றோர் பட்டியல் தனியே பகிரப் படும்)
விளையாட்டுப்போட்டி பரிசுகள் விவரணம்
தமிழோடு விளையாடு
1. லக்ஷ்மி ( முதல் பரிசு)
2. அபிராமி பாஸ்கர் (இரண்டாம் பரிசு)
மௌனம் பேசியதே
1. தேவி அருண் (முதல் பரிசு)
2. முருகேஸ்வரி(இரண்டாம் பரிசு)
கேளிக்கை விளையாட்டு( குழுவாக)
1. சு. கண்மணி
2. தேவி அருண்
3. ராதா
4. லலிதா
5. மைதிலி
6. முருகேஸ்வரி
No comments:
Post a Comment