Friday, May 30, 2025

நிர்வாகக் குழு கூடுகை (2) விவரணம் - 2025

 __________________________

நிர்வாகக் குழு கூடுகை (2) விவரணம்

------------------------------------------


நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் இரண்டாம் நிர்வாக குழு கூடுகை அவசர கூடுகையாக 30.5.2025 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு 

சி-19 106 இல்லத்தில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தகவல் கொடுத்தோர்: மலர்விழி,

சுல்தானா, ராஜேஸ்வரி, சிவகாமி, அமுதவல்லி,

அனிதா, 

காமாட்சி,

செங்கதிர் செல்வன் ஆகியோர்.


கூடுகையில் கலந்து கொள்ளாதோர் 

சுபாஷினி மற்றும் கே எஸ் சுந்தரம். 


கூடுகை தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது.


சென்ற கூடுகையில் நாம் முடிவு எடுத்தபடி எம்ஜிஆர் ஜானகி பள்ளியில் இருக்கக்கூடிய டைரக்டர் கே. சுப்பிரமணியம் ஹால் என்கின்ற அரங்கத்தை நமது இரண்டாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்காக புக் செய்து விட்டோம். இங்கிருந்து நமது உறுப்பினர்களை அழைத்துச் செல்ல இரண்டு குளிர் சாதன வசதி உள்ள வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பொறுப்பு மைதிலி, மல்லிகா மற்றும் ரமணி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. ஒரு வேனில் 25 நபர்களும் இன்னொன்றில் 15 நபர்களும் செல்ல இயலும். நபர் ஒன்றுக்கு 250 ரூபாய் பயண கட்டணமாக வசூலிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இந்த வண்டி வசதியை பயன்படுத்த விளைவோரை விருப்பத்தை கேட்டு நமது குழுவில் பதிவேற்ற வேண்டும் என்று முடிவானது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலே 40 உறுப்பினர்கள் இங்கிருந்து பயணிக்க அந்த வண்டி வசதி ஏற்பாடு செய்யப்படும். முன்கூட்டியே பணத்தை அவர்கள் சங்கத்தின் வங்கி கணக்குக்கு செலுத்திட வேண்டும் என்கின்ற முடிவும் எடுக்கப் பட்டது.


அதைப்போலவே தங்களது சொந்த பகிர்ந்து வண்டியில்  வருவோர் அவர்களுடன் மேலும் இருவரை அவருடைய காரில் அழைத்து வருவது Car pooling என்கின்ற அடிப்படையிலே உதவிகரமாக இருக்கும்.


மதிய உணவைப் பொறுத்த அளவிலே ஆனந்தாஸ் நிறுவனர் அதனை செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றார். அதற்கான தொகையை சங்கம் அவருக்கு கொடுத்து விடும். மேலும், அவர் நமது தமிழ்ச்சங்க உறுப்பினராகவும் ஆகி இருக்கிறார், திரு ரமணி அவர்களின் முன் முயற்சியால். 


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் திரு எஸ். பி. முத்துராமன், அபஸ்வரம் ராம்ஜி,  காத்தாடி ராமமூர்த்தி மற்றும் சிபாட்காஸ்ட் கதை சொல்லி' திருமதி தீபிகா அருண் ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள்.


நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி சிறுவர்களுக்கான நாடகத்தை நடத்துவதில் இருக்கக்கூடிய பொருளாதார மற்றும் கட்டமைப்பு நடைமுறை சிக்கல்களை திரு சாய்ராம் அவர்கள் விளக்கினார்கள். இப்பொழுது ஒரு பரிக்ஷார்த்த அடிப்படையில் மிக அதிக பொருட்செலவில் அந்த நாடகத்தை நடத்துவதை விட, அந்த நாடகத்தை இப்போது ஆகக்கூடிய செலவைவிட குறைவாக, ஒரு ஸ்டூடியோவில் டெலிஃபிலிமாக படம் எடுத்து அதனை சிறுவர்களுக்கான பிரத்தியேகமான நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்புவது சாலச் சிறந்தது என்று அவர் ஓர் ஆலோசனையை முன் வைத்தார். அதனை நிர்வாக குழு ஆழ்ந்த பரிசீலனைக்கு பின் ஏற்றுக் கொண்டது. 


இங்கிருந்து உறுப்பினர் அல்லாதவர் வருபவர்களை அந்த வேனில் அழைத்துச் செல்லலாமா? என்கின்ற ஒரு பொருள் விவாதிக்கப்பட்டது அவர்களுக்கும் அதே 250 ரூபாய் பயண கட்டணம் பெற்றுக் கொள்வது என்றும் அரங்கத்தில் அனுமதி கட்டணமாக உறுப்பினர் அல்லாதவர் நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நிர்வாக குழு முடிவு எடுத்தது. 


நமது சங்க சட்ட விதிகளின் பிரகாரம் ஒரு குடும்பத்திற்கு ஒரு சந்தா என்ற நாம் முடிவு எடுத்திருக்கிறோம் குடும்பம் என்பது ஒரே கதவு இலக்கத்தில் வசிக்கக்கூடிய குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் என்கின்ற பொருளை பலமுறை நிர்வாகக் குழு கூட்டத்திலே பொதுக் குழு கூட்டத்திலே நாம் விளக்கி இருப்பதை நினைவு படுத்தப் பட்டது. ஒரே வீட்டில் வசிக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக நான்கு பேர் கலந்து கொள்ளலாம் என்கின்ற முடிவும் நிர்வாக குழுவால் எடுக்கப்பட்டது. அதற்கு மேல் வரக்கூடிய எந்த ஒரு உறுப்பினராக இருந்தாலும் அவரும் அனுமதி கட்டணம் 200 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் முடிவானது.

Monday, May 26, 2025

தனக்கு வந்தால் தான்...

 தனக்கு வந்தால் தான்... 


கிளியை வளர்த்து பூனையிடமா தருகிறார்? 

   கேவிக் கேவி ஏனாம் மாமனார் அழுகிறார்? 


எளிய கிராமம் தான் என்னுடைய பின்புலம்

   எல்லாம் அறிந்தே பண்ணி வைத்தார் எம்மணம்


புளிய மரம் கொல்லையில் மூன்று உண்டாம்

   போதும் என்றாலும் காய்க்கும் முருங்கையாம்


குளிக்க வாய்க்காலாம், அழகிய கிணறுமாம்

   கோயிலாம், ஏரியாம்,...வேறென்ன வேணுமாம்


உளி வடித்த சிற்பம் தான் அவரின் பெண்ணாம்

   ஊரெலாம் மெச்ச நடந்த என் திருமணமாம்


குளிர் நிலவாய் காலம் உருண்டோடியது

   குழந்தைகள் இருவரில் மகளும் உண்டு


வளர்ந்தாள் அவளுக்கு திருமணமாம் இன்று

   வாழ்த்த வந்தார்க்கு " ஞானாம்பிகா " விருந்து


தெளிந்தேன் மாமனார் ஏன் அழுதார் அன்று

   தேனாம் என் மகள் பிரிகிறாள் இதோ இன்று. 


__  குத்தனூர் சேஷுதாஸ் 26/5/2025

Saturday, May 24, 2025

நெடுஞ்சாலைப் பயணம்

 நெடுஞ்சாலைப் பயணம்...


நெடுஞ்சாலைப் பயணம்

வாகனப் புலிகள் நான்கு கால்களில் பாயும் வேகம்..

வேகமெடுத்த கால்களைப்

பிடித்து நிறுத்தும் 

சுங்கச் சாவடிகள்..

அரிதாம் மழைத்துளிகளை மாயமாக்கும் வாகனத் துடைப்பான்கள்..

குடைகளை விரித்து வரவேற்கும் உணவகங்கள்.. 

இரண்டு கால் வாகனங்கள் 

பொந்துகளுக்குள் புகுந்து  முந்தி மறையும்..

எங்கெங்கோ பிறந்தவர்களை 

ஒன்றினைக்கும் பேருந்து..

யாருக்கோ பொருட்களை 

சுமந்து செல்லும் ட்ரக்குகள்..

காற்றுடன் நட்பு பாராட்டும்

நயவஞ்சகப் புகை ..  

பற்களைக் காட்டி

இளிக்கும்  அறிவிப்புப் பலகைகள்..

வாகனங்களின் புறக் கண்ணாடியிலேயே

காட்சி தந்துவிடும் சாமிகள்..

இல்லத்தருகே  இல்லா

மரம் செடிககளின் பின்னோக்கிய பயணம்..

தொடர்ந்து வந்து உறவைத் 

துண்டித்துக் கொள்ளும் மேகங்கள்...

வேகமான சாலையில் மெல்ல நகரும் ஆடுகளை  ஓரமாய் மேய்த்துச் செல்லும் 

கொடுத்து வைத்த தாத்தா.. 


- சாய்கழல் சங்கீதா

Thursday, May 22, 2025

உயிர்ப் பன்வகைமை தினம்

 ~~~~~~~~

உயிர்ப் பன்வகைமை தினம்

Bio-diversity day

~~~~~~~~


உலகின் அதிசயம்

உயிர்ப் பன்வகைமை

உன்மத்த மனிதனோ

உணரவில்லை இவ்வுண்மை

உயிர்களை வதைத்து

உலகினைச் சிதைத்து

உயர்வான இயற்கையை

உணராது அழித்து

உயிர்மையின் சீற்றத்தை

பூகம்பமாய் சுனாமியாய்

எரித்தழிக்கும் எரிமலையாய்

சுழன்றடிக்கும் சூறாவளியாய்

காட்டுத் தீயாய் பெருமழையாய்

உணரும் போது உளறுவானே -

"கடவுளுக்கு கண்ணில்லை"


மனிதா.. 

உன்பிழை உணர்

உயிர்ப் பன்வகைமை

உலகின் பொதுவிதி

உணராத நீயோ

உயிர் வன்-பகைமை

கொள்கிறாய்

உணராது பிழைபல

செய்கிறாய்.


திருந்தடா மனிதா..

திருந்தாவிடில்

இயற்கைச் சீற்றத்தால்

வருந்தடா மனிதா..


ஸ்ரீவி


*****************

உலகின் உயிர்நாடி

பல்வகைமை அன்றோ?


ஏழு வண்ணங்கள்

வேண்டும் வானவில்லுக்கு 


மரங்கள் மட்டுமா காடு?

புழு பூச்சி புள் விலங்கு

நீராதாரம் என

பல்வகைமை அன்றோ?


பட்டாம்பூச்சியின் சிறகசைவு

சூறாவளியின் தொடக்கமாகலாம்

உயிர்ச்சங்கிலியால்

பிணைக்கப்பட்டதன்றோ

உலகம்? 

 

உலகின் பிணைப்பு 

பல்வகைமை அன்றோ?


 பரந்து விரிந்தது இவ்வுலகம் 

நில அமைப்பில்

வானிலையில்

நீர் பரப்பில்

புல்லினங்களில்

புள்ளினங்களில்

விலங்குகளில்

கலாச்சாரத்தில்

மொழிகளில்

உருவங்களில் 

பல்வகைமை தானே அடையாளம்?



உலகின் எழில்

பல்வகைமை அன்றோ?


ஆறறிவற்ற உயிர்கள் 

உயிரில்லா உருக்கள்கூட

பல்வகைமை போற்றி

இயற்கையோடு இயைந்து

உலகமதை செழுமை செய்யும்


உலகின் உயிர்ப்பு

பல்வகைமை அன்றோ?



ஆறறிவு மனிதன் அவன்

பகுத்தறிவை திரித்து

பல்வகைமையை

 பாகுபாடு என்றான்

வேற்றுமை ஊன்றினான்

இயற்கையின் மொழியை

மாற்றினால்

வீழ்ச்சி மனிதனுக்கே!!!


உலகின் மொழி

பல்வகைமை அன்றோ?



பல்வகைமை அரவணைப்போம்

இயற்கையோடு இயைவோம்

புது உலகம் காணுவோம்!!!


- அமுதவல்லி

***********************

கதம்ப சாம்பார் போல

பீட்சா டாப்பிங் போல

பல்வகைமை நம் உடலை

வளர்க்கும் குடலிலும் உண்டு கேளீர்!

 

நாம் சிரிக்க வேண்டுமா

அழ வேண்டுமா..

முடிவு செய்கிறதாம் இந்தப் பல்வகைமை!

நம் நரம்பு மண்டலத்தையும்

ஆட்சி செய்கிறதாம் இந்தப் 

பல்வகைமை!

நோயெதிர்ப்பும் இதன் தொழிலாம்!

இன்னும் பல நன்மைகளும்!

நம் குடலே இவற்றின்

அன்னச் சத்திரம்!

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாமல்

உப்பிட்டவருக்கு உள்ளிருந்து உதவிடுதாம்!



எதற்கெடுத்தாலும்

ஆன்டிபயாடிக் போட்டு வயிற்றுப் பேருலகில் வாழும் நுண்ணுயிர்களின் 

பல்வகைமையில் கை வைத்தால் ஆட்டம் கண்டுவிடும் நம் உயிர்மெய்!

தயிர் மோர் குடித்து 

குடலின் பல்வகைமை பேணி நம்மைக் காத்துக் கொள்வோம் வாரீர்!


- சாய்கழல் சங்கீதா

****************




டீ கடை நினைவு....

 வடை என்பது பருப்பு வீரர்கள் ஒன்றிணைந்த படை! 

வடை கடையில்

ஒரு வடைக்கு இருவடை எடுக்கும் மாவீரர்கள்

இரண்டு பருப்புப் படைகளைத் திருவோட்டில் ஏந்தி 

தெருவெல்லாம் 

பருப்புப் படை வீரர்களைத் தம் பற்களெனும் ஆயுதங்களால் வீழ்த்திக்( கடித்துக் ) கொண்டே பயில்வர் நடை!

பருப்புப் படையின் அரசனான கடைக்கு அதிபதியின் கதியோ அதோ கதி 🙄


- சாய்கழல் சங்கீதா

*******************

டீ கடை நினைவு....


இனிய மாலைப் பொழுதினிலே...

டீக்கடையில் ,

டீயுடன் நாவில் இணைய -

சுடச்சுட சுட்டவடை காத்திருக்க..

சுட்டதைச் சுட்டேன் ஆசையில்..

ஆனால்..

என்விழிகள் நிலைத்தன அவன்மீசையில்...

மனம் சுட்ட மனக்கள்ளனே...

(சுட்ட - செய்த, களவாடிய)


உறங்காது கனவில் பேசும்,

ஓய்வில்லாது தனியே தவிக்கும்..


இன்பம் துன்பம் என்றில்லை,

அனைத்து நிகழ்வும் இதனுள்ளே..


முகத்தில் தோன்றும் அபிநயமும்,

இதன் மாற்றந்தரும் நவரசமே..


வாழ்வின் வரலாற்று பெட்டகமிது,

விழி காணா பொக்கிஷமிது..


புதைந்து கிடக்கும் அதனுள்ளே,

நுழைந்தது எப்படி நானறியேன்..


முன்பதிந்தது அனைத்தும் களவாடி,

பதித்தான் காதலின் கண்ணாடி..


இப்போது அதனுள் ,

முன்னாடி பின்னாடி கண்ணாடி..

கனவிலும் நினைவிலும் ,

கள்வா, உன்னுருவமே ஆடுதுபாடி...

என்மனம் சுட்ட மனக்கள்ளனே...


நான் இனி,

சுட்டவடைச்சுட வருவேனிங்கு நித்தம்..

மனம் சுட்ட,

கள்வன் உன்மீது உன்மத்தம்..


உன்மத்தம் - பைத்தியம்..


- இலாவண்யா


*************

[மெட்டு: ஓன் மேல ஆசை தான்]


👨ஓன் மேல ஆசை தான் !

👭கர கர மொறு மொறு கடிச்சு சுவைதிடு !

👨இது உணவின் ராசா தான் !

👭தொண்டைக்குழி நனைய டீயும்  பணிந்திடும் !


👨காத்தாகி  போகும் வயிறும் கூத்தாடுமே !

கண் நாடி ரெண்டும் இப்போ சேர்தாடுமே !


காபி ☕️ரைட்ஸ் மன்னிக்கவும்!   


 _தேவி அருண்_ 

*******************

Monday, May 19, 2025

*வெயிலுக்குப் பிறகு…*

 *வெயிலுக்குப் பிறகு…*


நேற்றுவரை வேகவைத்த வெயில்,

வெந்த நிலத்தில் நம் நிழல்கூடக் கருகியது,

இன்று காலை ஒன்பதிலே,

கருணைமழை கொண்டு வந்த இருள் மையல்!


கிழக்கே உதிக்க வேண்டிய சூரியன்,

மேகச்சட்டை போர்த்திக் கொண்டான்,

நள்ளிரவென வானம் நிமிர்ந்தது,

காலை சாயலில் இரவு வந்தது!


வெயிலின் கோபத்தை ஏசி ஓட்டி,

“சூரியனே போதும்!” என்று சபித்தோம்,

மழை பெய்ததும் — ஆஹா! சுவாசம் சொரிந்தோம்,

ஆனால் சில மணி நேரத்தில்… ஏன் இந்த அலுப்பு?


மழையின் இசை இனிமை இல்லை,

மனதின் ஓசை மங்கியது,

சுறுசுறுப்பு தொலைந்து சோம்பல் சுரண்ட,

“மழை மழை போய்விடு” என்றோம் நாமே!


வெயிலும் சோதனை, மழையும் சோதனை,

மனதின் மையம் எங்கே போனதோ?

இயற்கை ஆட்டம் தொடரும் நம் மேலே,

அதில் நாமும் ஒரு இசைதான் — தேடும் ஓர் சுருதி!

Friday, May 16, 2025

முதல் நிர்வாகக் குழு கூடுகையின் விவரணம் - 2025

 __________________

முதல் நிர்வாகக் குழு கூடுகையின் விவரணம் 

--------------------


17 மே 2025,  சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு  நமது நிதிச் செயலர் திரு. சாய்ராம் ஐயா அவர்கள் இல்லத்தில் (சி3 45) நமது முதல் நிர்வாகக் குழு கூடுகை கூடியது.


முதலில் தமிழ் பெண் இசைக்கப்பட்டது.


பின்னர் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக இருந்த நடந்து முடிந்த பொதுக்குழு பற்றிய பரிசீலனை நடந்தது. தேர்தல் நடந்த பொழுது, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற நமது சங்கத்தின் எண்ணம் பல உறுப்பினர்களால் முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொள்ளாமல் அவரவருக்கு தோன்றியவாறு நடந்தது நகைப்புக்கு இடம் தருமாறு இருந்தது என்ற கருத்து அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப் பட்டது. வருங்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் அங்கு வலியுறுத்தப்பட்டது. 


பின்னர் அடுத்த நிரலாக, வருகின்ற ஜூலை மாதம் நமது சங்கம் இரண்டாவது ஆண்டு நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாம் ஆண்டு விழாவினை ஜூலை மாத மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் வார இறுதி நாள் ஒன்றில் சிறப்புடன் நடத்திட விவாதிக்கப் பட்டது. 


பல்வேறு கருத்துகள், ஆலோசனைகள் வந்த பின்னணியில் இறுதியாக கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன:


1) சாய்ராம் ஐயா அவர்கள் கூறியபடி அடையாறில் பழைய சத்யா ஸ்டுடியோஸ் இருந்திட்ட இடத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் நமது ஆண்டு விழாவை நடத்திட ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


2) வயதானவர் மற்றும் கார் வசதி இல்லாத மூத்தோர் நலனுக்காக நமது பூர்வ குடியிருப்பில் இருந்து, அந்த மண்டபத்திற்கு செல்ல ஒரு வேன் ஏற்பாடு செய்தல் பரிசீலிக்கப்பட வேண்டும். அதற்கான செலவினை சங்கம் முழுமையாக ஏற்பதோ அல்லது தேவை எனில் ஒரு கட்டணத்தை வருபவர்கள் இடமிருந்து வசூலிப்பதோ  வேண்டும். வேன் வசதி ஏற்பாடு செய்யும் பொழுது அதில் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

வேன் ஏற்பாடு செய்கின்ற பொறுப்பினை ரமணி அவர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.


3) தொலைதூரம் இருக்கின்ற ஒரு இடத்தில் ஆண்டு விழா நடக்கின்ற படியால், காலை வேளையிலே அந்த நிகழ்ச்சி நடத்தி முடித்தல் வேண்டும். 


4) காலை 11 மணி அளவில் பிஸ்கட் - டீ வழங்குவதோடு, நிகழ்ச்சி முடிந்த பிறகு மதிய உணவு நமது உறுப்பினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான செலவு ஒரு நபருக்கு 100 ரூபாய் வரையில் இருந்திடல் நலம். 


5) ஆண்டு விழாவில் நிகழ்ச்சிகளாக பட்டிமன்றம், சிறுவர்கள் பங்கேற்கும் நாடகம், கவியரங்கம், நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் என 5 நிகழ்ச்சிகள் திட்டமிடப் படுகின்றன. இதில் பங்கேற்க விழைவோர், இந்த மாதம் இறுதி நாள் அதாவது 31 மே-க்கு உள்ளாக தங்களுடைய விழைவினை சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். சங்கக் குழுவிலே அவர்கள் அதை பதிவிடலாம். ஜூன் மாத துவக்கத்திலே அவர்களுக்கான ஆடிஷன் வைக்கப்படும் அதிலே தேர்வு பெறுவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். ஒருவர் ஒரு நிகழ்ச்சியை மட்டும் தான் பங்கேற்க வேண்டும்.  பங்கேற்பாளர்களாக இருப்பதற்கு உறுப்பினர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு. நிகழ்ச்சிகளில் முதன் முறையாக மேடை ஏறுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்படி எவரேனும் இல்லை என்று சொன்னால் ஏற்கனவே மேடை ஏறியவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.


6) கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்த ஆண், பெண் மற்றும் 

குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவிற்காகவும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'பாரதி விருது' வழங்கிட வேண்டும். 


7) ஆண்டு விழாவில் குறைந்தது ஐந்து நூல்களையாவது வெளியிட வேண்டும். நம் உறுப்பினர்கள் அமுதவல்லி, சங்கீதா, குத்தனூர் சேசுதாஸ் அவர்களோடு ஸ்ரீவி அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட திட்டம் உள்ளது. இந்த நூல்களோடு, நமது உறுப்பினர்கள் பங்கேற்ற ழகரக் கவியரங்க கவிதைகளும், நமது குழுவில் பல்வேறு உறுப்பினர்கள் எழுதிய ஐந்திணைக் 

கவிதைகளும் தொகுக்கப்பட்டு நமது சங்கத்தால் வெளியிடப்பட்ட நூலையும் வெளியிட திட்டம் உள்ளது.


8) நமது நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா வெங்கடேஸ்வரன் அவர்கள் பாட்காஸ்ட் (podcost) ஒன்றை நமது சங்கத்திற்காக துவக்க இருக்கின்றார்கள். அதனுடைய துவக்க நிகழ்ச்சியும் அந்த ஆண்டு விழாவில் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்ரீவித்யா அவர்களுடைய ஆசிரியை அவர்களை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேற்போம்.


9) நமது இரண்டாவது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் நகைச்சுவைத் திலகம் *'காத்தாடி ராமமூர்த்தி'* அவர்களை சிறப்பு விருந்தினராக வரவழைக்க சாய்ராம் ஐயா அவர்கள் முயற்சி எடுப்பார்கள்.


10) சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை பொறுத்த அளவிலே புதிதாக 15 பேர் சேர்ந்து இருந்தாலும் கூட, ஏற்கனவே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இருந்து 17 பேர் சந்தா செலுத்தாமல் இருப்பதால் அவர்களை சங்கத்திலிருந்து நீக்குவதற்காக நிர்வாக குழு தலைவரை அனுமதிக்கிறது. சந்தா செலுத்தாதோரின் பெயரை நிதிச் செயலர் அவர்கள் வாசித்த பின், அவர்களில் எவரையாவது உறுப்பினராக நீட்டிக்க முயற்சி எடுக்க முடிந்தால் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முயல வேண்டும் என்று என்கின்ற முடிவும் எடுக்கப்பட்டது. அதோடு நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தங்களுக்கு தெரிந்த தமிழில் ஆர்வம் இருக்கக்கூடிய நண்பர்களை, உறவினர்களை பூர்வா குடியிருப்புக்கு வெளியே இருந்தாலும், உறுப்பினராக சேர்ப்பதற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஏனைய தமிழ்ச் சங்க உறுப்பினர்களும்  முயல வேண்டும் என்கின்ற முடிவும் எடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையிலே நமது திட்டப்படி *ஈச் ஒன் - ரீச் ஒன் அண்ட் கேட்ச் ஒன்* என்கின்ற அந்த வழிகாட்டுதலை அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் முழு மூச்சோடு முயல வேண்டும்.


நிறைவாக தேசியப் பண் இசைக்கப்பட்டு கூடுகை இனிதே முடிந்தது.


அன்புடன்,

ஸ்ரீவி, 

தலைவர், 

நிர்வாக குழுவிற்காக.

Wednesday, May 14, 2025

எல்லைச்சாமி!!!

 எல்லைச்சாமி!!!



நாங்கள் வீட்டிலேயே இருந்தால் "போர்" அடிக்குது..என்கிறோம்.. 

நீங்களோ  வீட்டிற்கே செல்ல முடியாமல்

போர் முனையில்..


உங்களால் நிம்மதியாய்

உறங்குகிறோம்..

கல்யாணம் கச்சேரி

செல்கிறோம்..


கல்லூரி விடுதிக்கு

பிள்ளையை அனுப்பவே

பரிதவிப்போம் நாங்கள்..

உங்களை அனுப்பிவிட்டு உம் குடும்பத்தார்

சிந்தும் கண்ணீரை ..

உம் குழந்தைகளின் ஏக்கத்தை..

அவர்களைப் பிரிந்து

நீங்கள் படும்பாட்டை ..

விவரிக்க வார்த்தைகள் உண்டோ?

 


எமக்கோ சிறு அடி பட்டாலும் 

ஆறுதல் சொல்ல 

உறவுகள் அருகே..

குண்டடி பட்டாலும் 

எட்ட முடியா தூரத்தில்

நீங்கள் அங்கே!

உண்டீர்களா? உறங்கினீர்களா?

தெரியவில்லை உம்

உறவுக்கும்..


ஊருக்கு எல்லையில்

எங்களுக்குக் காவலாய் 

எல்லைச்சாமி!

உம் இன்னுயிர் கொடுத்தும்

எம்மைக் காக்கும் நீங்கள்

நம் நாட்டிற்கே 

எல்லைச்சாமிகள்!!!



- சாய்கழல் சங்கீதா


**************************

👍👍


எல்லைச்சாமி!

கும்பிடுதேன்!


நம் காலம் முடியாமல்

காக்கும் இவர்களைப் போற்ற , பாராட்ட காலம் ஒரு வரையறு அன்று.


நாட்டுக்கு உழைத்து, இமைப்பொழுதும் சோராது இருக்கும்

இவர்கள் மூச்சே தேசம் காக்கும் பராணவாயு.


உடல் நாட்டுக்கே , உயிர் நம்மைக் காக்கவே என்று 

அர்ப்பணித்த இவர்களுக்கு பனி, , மழை , குளிர் ஒரு பொருட்டா?

அல்ல, அல்ல.


தேசப்பற்று எனும் வெம்மை இவர்களைக்காக்கிறது; கோடானு கோடி மக்களின் உதடுகள் உச்சரிக்கும் பிரார்த்தனைகளும் தான்.


நமக்கோ சில உறவுகள.

இவர்களுக்கு நாடே உறவு அன்றோ!


கூலிப்படைகளை ஓலமிட்டுப் புறமுதுகு காட்டச்செய்யும்

இப்படை தோற்கின்

எப்படை வெல்லும்?!


நம் மகளிரின் சிந்தூரமே இவர்களைக் காக்கும் காப்பு.


இவர்கள் காப்பது எல்லை;

நம் உள்ளங்களில் இவர்களுக்கு நாம் வைத்திருக்கும் அன்புக்கும், மதிப்புக்கும் இல்லை எல்லை.


இவர்தம் இல்லக்கிழத்தியரும்

இங்கு நம்மைக் காக்கும் காவல் தெய்வங்கள்; இந்தக்

காக்கும் குடும்பங்களைப் போற்றுவோம்🙏🙏


- மோகன்







 










Tuesday, May 13, 2025

குறுங்கவிதைகள் - சங்கீதா

 பட்டுப் பூச்சிகளுக்கும் 

தேனீக்களுக்கும் 

தெரிவதில்லை...

அவற்றின் உயிரை விட

விலை உயர்ந்த பொருள் அவற்றிடம் உள்ளதென...


- சாய்கழல் சங்கீதா


கத்திரிக் கதிரவனுக்கும் கொஞ்சம் கருணையுண்டு...

விடியற்காலையிலும் 

விடைபெறும் வேளையிலும்...


- சாய்கழல் சங்கீதா


Sunday, May 11, 2025

உணர்வுகள் ஒருசேர...

முதலில் மகவைத் தாய் ஸ்பரிசித்த உணர்வு

   முன் அறியாளை மணநாள் தொட்ட அவ்வுணர்வு


புதையல் என் தோட்டத்தில் கண்டெடுத்த உணர்வு

   புல்வெளியில் புல்லாங்குழலில் பூரித்த உணர்வு

   

துதிக்கும் தமிழன்னை தோன்றிய இன்னுணர்வு

   துள்ளி வரும் கடல் அலை கால் வாரும் உணர்வு


பதியம் போட்ட கிளையது துளிர் விட்ட உணர்வு

    பள்ளி இறுதித் தேர்வில் முதல் வந்த உணர்வு


அதியமான் தர நெல்லிக்கனி  ஔவையின் உணர்வு

   ஆற்றில் மீனாய் அடித்துச் செல்லும் உணர்வு


புது வானில் சிறு பறவை சிறகடித்த உணர்வு

   பூஞ்சோலையில் நானும் ஒரு பூவான உணர்வு


இது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்த ஓர் உணர்வு

   என் கவிதைகள் நூல் வடிவில், இல்லை இது கனவு


உதவியது நம் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்

   உண்மை இதை மறக்குமோ என்றும் நெஞ்சம்? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

அன்னையர் தின வாழ்த்துகள்!

 தாயின் மனதில் நிரந்நரமாய் ஒட்டியது..

உதடுகள் ஒட்டாமல் தன் மழலை சொன்ன முதல்

"அம்மா"..


அம்மா!

நமக்காகவே படைக்கப்பட்ட பிரத்யேக சொந்தம்..

நித்தம் தொடரும் 

இந்தப் புனித பந்தம்! 


அன்னையர் தின வாழ்த்துகள்!💐


- சாய்கழல் சங்கீதா


*******************

தரணி போற்றும் உன்னத உறவு : தாய்


அரணாய் நின்று காக்கும் உறவு:

தாய்


உரமாய் மாறி வளர்க்கும் உறவு:

தாய்


குழுவில் உள்ள அன்னையருக்கு


அன்னையர் தின நல் வாழ்த்துகள்


ஸ்ரீவி


***********************

௮ன்னையர் தின வாழ்த்துக்களை 

ஆண்டவனுக்கே ௮னுப்பி வைத்தேன்.

௮ங்கேயி௫ந்து வந்தது ஒ௫ return message 

 ---    "understood  not"   ௭ன்று.

ஆம்.   முதலும் இன்றி முடிவும் இல்லாத ஆண்டவனுக்கு ௭ங்கே கிடைத்தி௫க்கும் ௮ம்மாவின் ௮ரவணைப்பின் சுகம்?

அதை ௮வன் ௨ணர்ந்தி௫ந்தால் 

௮ம்மா ௭ன்ற ௮ரிய ஜன்மத்திற்காவது

(நபர்) 500 வ௫டங்கள் ஆக்கியி௫ப்பான் ஆயுளை.


மனித வர்க்கத்தின் 

முதல் மரியாதையே ௮ன்னையர்க்குத்

தான்.🌹


ரவி

***********************

அன்னையால் மட்டுமே


கல்லாம் என் அப்பனைக் கண்களால் கரைத்தாய் 

   கழனி, களத்துமேட்டில் காதலை வளர்த்தாய் 


எல்லார் முன் மணநாள் ஏன் தலை குனிந்தாய் ? 

   எல்லாம் புதிதுபோல் ஏமாற்றத் துணிந்தாய்


நல்வினை செய்தேன் உன் கருவறை புகுந்தேன்

   நன்கு கொழுகொழுவென உன்னால் வளர்ந்தேன்

   

பல்லால் நான் கடித்தும் பால் தர மறுக்கவில்லை 

   " படவா பயலே " என கொஞ்சாத நாளில்லை 


கொல்லவில்லை நெல் தந்து என் தங்கையை

   கொடும் பாவம் அதைச் செய்யவும் இல்லை


வெல்லமாய் உன் மருமகள் எனக்கு இனித்தாள் 

   வேப்பங்காயாய் ஏனோ உனக்கவள் கசந்தாள் ! 


தொல்லை தருபவனை எல்லா உறவும் துரத்தும் 

   தோட்டம் வரச் சொல்லி தாயுறவு சோறு போடும் 


மல்லிகை மணப்பது கொல்லையில் மட்டுமே

   மாவுலகில் உயிர்கள் எல்லாம் உன்னால் மட்டுமே. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


*****************

உயிர் ஒன்று

கருவறையில் துளிர்க்க

குருதியை அமுதாக்கி

கருவிற்கு உரு தந்தாய்


அழுத குழவிக்கு அமுதூட்டி

மடியில் அணைத்து

காலடி வைக்கும் வரை

அன்பால் அரவணைத்தாய்


புது உலகில் கிள்ளை வாழ

ஓயாது எண்ணினாய்

ஊனும் உயிரும்

பிள்ளைக்கு அர்ப்பணித்தாய்


உலகம் அது 

கைவசம் ஆனவுடன்

விரலை விட்டு 

தன் வானம் பறக்க செய்தாய்


பெற்றால் தான் பிள்ளையா என

தாய்மை அன்புடன் 

வாழ்ந்திடுவோர் பலர்


விரலை விட இயலா பிள்ளையை

அணைத்து இணைத்து 

அன்பை பொழியும் 

தாய்மார்கள் பலர் 


தாயின்றி யாருமில்லை 

தாய்மையின்றி உலக மில்லை

ஒருநாள் போதாது தாயைக் கொண்டாட


அன்னையை

தினம் கொண்டாடுவோர்

இன்றும் கொண்டாடுங்கள் 

கொண்டாட மறந்தோர்

இன்று முதல் கொண்டாடுங்கள் 


அன்னையர் தின வாழ்த்துகள் !!!


- அமுதவல்லி

Tuesday, May 6, 2025

கைநிறைய கூட்டாஞ் சோறு

 ●०●०●०●०●०●०●०●०●०●०●०●०

கைநிறைய கூட்டாஞ் சோறு

வாய்மணக்க தின்னோம் பாரு

●०●०●०●०●०●०●०●०●०●०●०●०


பெரிசான தொரு மண்சட்டில

பெரியாத்தா அன்பொழுக

கூட்டாஞ்சோறை பெசைஞ்சுகிட்டு

தரையில ஒக்காருவா.

அக்கா, அண்ணந் தம்பி எல்லாம்

சந்தாஷமா கூவிகிட்டு 

அவள சுத்தி ஒக்காருவோம்.


மணமணக்கும் கூட்டாஞ்சோறை

கைநிறைய அள்ளிக்கிட்டு

உருண்டையாக உருட்டி அவ

கையிலதான் கொடுத்திடுவா.

கையெல்லாம் நெய்யொழுகும் 

வாயில் போட்டு திங்கையிலே

வாயெல்லாம் கமகமக்கும்

நினைவதுவோ கிறுகிறுக்கும்.


நான் முந்தி நீ முந்தி-ன்னு

போட்டியுந்தான் நடந்திடுமே

தேன் போல சோறுந்தான்

தொண்டையிலே நழுவிடுமே

ஏன் எதுக்குன்னு கேட்டிட

ஓர் ஆளில்ல அந்நாளில்

வயிறு முட்ட தின்ன பின்பு

கைகழுவி டவுசரில தொடச்சபடி

கூவிகிட்டே ஓடிடுவோம்.


இக்கால பிள்ளைகளுக்கு

இந்த சொகம் தெரிஞ்சிடுமா

இன்பமான அந்நாளோட

அருமையுந்தான் புரிஞ்சிடுமா?

ஸ்விக்கியும் ஜொமோட்டோவும்

கொண்டு வரும் பிஸ்ஸாவும்

சேந்து வரும் பர்கருந்தான்

சுவையரும்பை எழுப்பிடுமா!

சந்தோசந்தான் தந்திடுமா?

அந்த நாளும் வந்திடுமா?


இழந்தது நாம் அதிகந்தான்

இழந்ததை எல்லாம் அசைபோட

வந்திடுமே இன்பந்தான்


உங்கள்_தோழன்_ஸ்ரீவி


******************

கூட்டாஞ்சோறு 


வீட்டிலன்று பத்து தலைகள் இருந்தன 

   விடியல் முதல் இரவு வரை கலகலத்தன


தோட்டம் துரவு கிணறு துணையாகச் சூழும் 

   துள்ளும் கன்றுகள், பசுக்கள், காளைகள் வாழும் 


பாட்டி, தாத்தா உறவும் கூடவே இருக்கும் 

   பானையில் பழைய சோறும் ஊறும் 


கூட்டாஞ்சோறு பிசைந்து பெருசு அது கூப்பிடும் 

   குடுகுடுவென சிறுசுகள் எதிரே வந்து அமரும் 


நீட்டிய கைகளில் சோறுருண்டை வரும் 

   நிலாவும் ஒளிக்கதிர் நீட்டும், கேட்கும் 


போட்டி போட்டுக் கொண்டு வாய்கள் திறக்கும் 

   போதும் என்ற சொல்லே இல்லாது போகும் 


சீட்டுக் கட்டாய் இன்று எல்லாம் சரிந்ததேனோ?

   சிறு குடும்பம் எனச் சிதறிய நெல்லிக்காய்களோ?


மீட்டு இப் பொற்காலம் மேதினியில் தான் வருமோ?

    மெய் எலாம் ஒவ்வொன்றாய் பொய்யாய்ப் போகுமோ?


__. குத்தனூர் சேஷுதாஸ்


**************

பாட்டி கையால கூட்டாஞ்சோறு உருண்டை வாங்கி ' " லபக் லபக்" என்று விழுங்கிய நினைவு.


பாட்டி எமகாதகி!


வரிசை கிரமம் தப்பாமல் தருவாள். முண்டி அடித்தால் முட்டியில் சின்ன செல்ல தட்டு; ஆனால உருண்டைக்குத் தட்டுப்பாடு இல்லை.


"சின்னச் சோறாக்கல்"

" கூடி இருந்து குளிர்தல்" என இலக்கியங்களில்

கூட்டாஞ்சோறு பேசப்படுகிறது.அன்று வாழ்வு முறையும் இலக்கியமும் பின்னிப்பிணைந்த காலம்


" கூட்டாஞ்சோறு அப்பிக்கிட்டு, கும்மாளம்தான் போட்டுக்கிட்டு" என்ற திரைப்படப்பாடல்

நினவுக்கு வருகிறது.


"அப்பிக்கிட்டு-" அவசரம்! ஒரு சுற்று முடிந்து தன்

முறை வருவதற்குள் விழுங்கும் அவசரம்.


பழங்காலக்குடும்பங்களும்கூட்டு; உணவும் கூட்டு.


உறவுகளை ஊட்டி வளர்த்த கூட்டு.


இன்றைய கூட்டணிகளுக்கு முன்னோடி.


அன்று ஆவலும் அவசரமும் கலந்து உண்ட உணவை இன்று , சாய்ந்து அமர்ந்து அரைக்கண்மூடி அசை போட வைத்தது படம்.


படம் காட்டிய ஶ்ரீவீ ஐயாஅவர்களுக்கு நன்றி.

- மோகன்

அறிந்தும் அறியாமலும்

 தெரிந்த இலக்கு

தெரியாத தூரம்


அறிந்த மனிதன்

அறியாத உறவு


பிரிந்த சொந்தம்

பிரியாத நினைவு


கரைந்த இரவு

கரை சேரா கனவு


முடிந்த நாவல்

முடியாத கதை


அறிந்த விடயம்

அறியாத உண்மை


தெளிந்த சிந்தனை

தெளியாத புதிர்


நினைத்த வினா

நினைக்காத பதில்


வரைந்த ஓவியம்

வரையாத எண்ணம்


மலர்ந்த மலர்

மலராத மணம்


தேடும் மனம்

தேடாத கண்கள்


எழுதிய கவிதை

எழுத முடியா கற்பனை




- சாய்கழல் சங்கீதா

இளமையும் முதுமையும்

 - *இளமையும் முதுமையும்*- 


இளைஞனாய் இருந்தேன்

கவலைப்பட்டேன் பருக்களுக்கு;

முதியவன் ஆனேன் 

கவலைப்படுகிறேன் சுருக்கங்களுக்கு;


இளைஞனாய் இருந்தேன் 

காத்திருந்தேன் அவள் கைப்பிடிக்க;

முதியவன் ஆனேன் காத்திருக்கிறேன்

யாராவது என் கைப்பிடிக்க 


இளைஞனாய் இருந்தேன் ஆசைப்பட்டேன் தனித்திருக்க; முதியவன் ஆனேன்

ஆசை பயமாகியது தனித்திருக்க;


இளைஞனாய் இருந்தேன் 

ஆலோசனைகளை எதிர்த்தேன்;

முதியவன் ஆனேன் 

பேசிட யாரையாவது எதிர்பார்க்கிறேன்;


இளைஞனாய் இருந்தேன்

ஆராதித்தேன் அழகினை;

முதியவன் ஆனேன் 

ரசிக்கிறேன் அழகினை;


இளைஞனாய் இருந்தேன் 

நிரந்தரமென எண்ணினேன்; 

முதியவன் ஆனேன் 

எதிர்பார்க்கிறேன் என்முறையை; 


இளைஞனாய் இருந்தேன் 

ரசித்தேன் நடப்பவைகளை;

முதியவன் ஆனேன் 

ரசிக்கிறேன் நடந்தவைகளை;


இளைஞனாய் இருந்தேன் 

சிரமப்பட்டேன் துயிலெழ;

முதியவன் ஆனேன் 

சிரமப்படுகிறேன் துயில்கொள்ள;


இளமையோ முதுமையோ தேவை, 

வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதும்,

அன்பை பகிர்ந்து பார்ப்பதும்,

அன்புள்ளவர்களுடன் வாழ்ந்து பார்ப்பதுமே!


தியாகராஜன்

Sunday, May 4, 2025

சட்டென்று மாறியது வானிலை

 சட்டென்று மாறியது வானிலை

கூடவே மாறியது மனநிலை!

சில்லென்ற காற்று வீசுதம்மா...

மனமெல்லாம் வசந்தமாகிப் 

போனதம்மா..

அக்னியாய் கோபத்தில் தகிக்காமல் 

வானத் தாயவள் வாஞ்சையோடு

மண் குழந்தைக்கு ஊட்டிய  மழையமுது கண்டு

எம் நெஞ்சமெல்லாம் குளிர்ந்ததம்மா..

இது போதும் எமக்கு

இவ்வளவே போதும்!!!

கடுங்காற்று, இடியோடு

மரங்கள் விழுந்தது என

எந்த ஊடகமும்

மூச்சுப் பிடிக்க

செய்திகளைப வாசிக்க வேண்டாம்..

இது போதும் எமக்கு!

இவ்வளவே போதும்!!! 


- சாய்கழல் சங்கீதா

எச்சரிக்கை! இக் கோடையில்...



உச்சத்தில் கோடையின் கோரத் தாண்டவம் 

   உமக்கும், எமக்கும் இது நன்றாய்த் தெரியும் 


தச்சி மம்மு (தயிர் சாதம்) இளக்கி சிறார்க்குத் தருவோம் 

   தளிராம் அவர் குடலைக் குளிரச் செய்வோம் 


மிச்சமாம் சோறு அதில் நீரைச் சேர்ப்போம் 

   மிகச் சிறந்த அதை அடுத்த நாள் உண்போம் 


பச்சை மிளகாய் பயன்பாடு பாதியாய்க் குறைப்போம் 

   பானகம் (வெல்ல நீர்), இளநீர், நீர் மோர் அதிகம் குடிப்போம் 


மொச்சை, கடலை எனத் தவிர்த்தல் நன்றாம்

   முகத்தை பூவையர்கள் மூடுதலும் நன்றாம்


பிச்சைமணி ஐயா போன்றோர் போக வேண்டாம் வெளியே 

   பெரிய மர நிழல்கள் உள்ளனவே உள்ளே


இச்சையாக எங்கும் சுற்றுதல் அது கேடாம் 

   " இலவசப் புத்தகம் பெறப் போதல் " வேறாம்


அச்சமில்லை திராவிடன் என்பது அறியாமை 

   அக்னி நட்சத்திரம் இன்று முதல் எச்சரிக்கை ‌.


__. குத்தனூர் சேஷுதாஸ்

Friday, May 2, 2025

உழைப்பாளர் தினம்

உழைப்பாளர் தினம்!


நீங்கள் தட்டத்  தட்ட

தேய்க்கத் தேய்க்க  செருப்பாய்த் தேய்கிறோம்!


நீங்கள் 

டேட்டாவை(Data) ஏற்ற ஏற்ற

டேட் (Date)காண்பித்தபடி

உழைக்கிறோம்! 


உங்களுக்குப் பின் உறங்கி( சிலர் எதையாவது கேட்டுக் கொண்டே தூங்குவர்)

உங்களுக்கு முன் எழுந்து

உங்களையும் எழுப்பி விடுகிறோம்!


நாட்காட்டியின் வேலையும்

எங்கள் மேல் திணிக்கப்பட்டு...


பாடச் சொல்லி..

சத்தமில்லாமல் ஆடச் சொல்லி( vibrate)..😢

உங்கள் குழந்தைகளுக்கு 

சோறூட்ட விளையாட்டு காண்பித்து..


எங்கோ யாரோ உங்களை எம் நண்பர்களின் உள்ளே

நம்பர்கள்களாய் (number) 

வைத்து 

நினைக்கும் போதெல்லாம் தேடித் தட்ட

நாங்கள் உங்கள் முன் 

நீங்கள் விரும்பிய 

ஓசையில் சிணுங்கி...


நீங்கள் நினைத்ததைப்

படம் பிடித்து..

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உங்கள் முகங்களையும்

படம்பிடித்து(selfie)...


அப்பப்பா...


எங்களுக்குள் பல

ஆப்( app) களை இறக்கி

ஆப்பு வைத்ததாலும் 

உங்களுக்காக

மாடாய் உழைக்கிறோம்!



இன்று மே  1

உழைப்பாளர் தினம்

இன்றாவது எங்களுக்கு  உண்டா விடுமுறை?


- சாய்கழல் சங்கீதா

மாமரமும் சென்னை மெட்ரோவும்!

 மாமரமும் சென்னை மெட்ரோவும்!

--------

என்ன ஐயா இது?


"மொட்டைத் தலைக்கும்ம்

 முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் போல"


தொடர்பு உள்ளது சாமி


ஆம்


பாட்டன்  மாங்கன்றுகளை நடுகிறார்.

பேராண்டி தாத்தாவிடம்

இது வளர்ந்து மரமாக, கனி தர வருடம் பல ஆகுமே, உனக்கு வயதாகி விட்டதே என்று கேட்கிறான்.


உனக்கும் உன் சந்ததிக்கும் கனிகள் கிடைக்கட்டுமே என்றுதான் நட்டேன் என்றார்.


சென்னை மெட்ரோ பணிகள் 2009 ல் ஆரம்பித்து, இன்று  வரை, எதிர்காலத்தில்

பல ஆண்டுகள் வரை தொடரும் போல.


எத்தனை அடைப்புகள், எவ்வளவு சுற்றுவழிகள்.

கூகுளையே " வெச்சு செய்யும்" மாற்றுப்பாதைகள்

ஒரு இடம் செல்ல!


கயிலையே மயிலை என்பர். இன்று கயிலை செல்வது சுலபமாக இருக்கும்.


தி்நகர், திணற வைக்கும் நகர்! ஆம் .

போய் வருவதற்குள்

ஒரு மாமாங்கம் கழிந்த உணர்வு.


அப்போதெல்லாம் நினைப்பேன், இன்று நான் சிரம ப்பட்டாலும்

நாளைய சந்ததிகள் நன்கு பயணம் செய்ய

முடியுமே என்று.


பட்ட சிரமங்கள் சூரியனைக் கண்ட பனி போல மறையும்.


அன்று பாட்டன்

இன்று நான்

நானும் பாட்டனதானே!


-மோகன்

Thursday, May 1, 2025

ஒற்றைச் செருப்பு

 ஒற்றைச்செருப்பின்

தனிமொழி:


ஜோடிப்பொருத்தம்

 சரியே எனப் பாராட்டு பெற்றவர் நானும் எனது ஜோடியும்.


பிரிந்தபின் ஒற்றைச்செருப்பு "நடை"முறைக்கு ஒத்து வருமா?


தூக்கி எறியப்பட்டேன்.


எங்கள் ஒற்றைச்செருப்பு நண்பர்களை,கோவில் வாசலிலோ, அரசியல் கூட்டங்களிலோ பார்க்கலாம்.


சில மனிதர்கள் எங்களைப்பிரித்து வைப்பர்; தொலையாமல் பாதுகாக்கவாம்!


நாங்கள் மனிதர்களைப் போல்இல்லை, ஜோடி பிரிந்தாலும் வாழ்வதற்கு!


ஜதை பிரிந்தால்

ஜதி பிறழும்!

- மோகன்


***********************

ஜாதகப் பொருத்தம் பார்க்காமல்

'மாங்கல்யம் தந்துனானே' பாடாமல்,

திருமாங்கல்யம் கட்டாமல்


மாதா கோவில் மணி அடிக்காமல்

மோதிரம் மாற்றாமல்

பங்குத் தந்தை பங்கில்லாமல்


நிக்காஹ் செய்து பிரியாணி போடாமல்

மௌலானா குர்ரான் ஓதாமல்


ஒன்றிணைந்த பந்தம் இது

ஒருவரை ஒருவர் பிரிந்திடா

உத்தமமான சொந்தம் இது


காலணி என்பார் பலர்

கழல் என்பார் இலக்கிய ஆர்வலர்


எங்களின் சொந்தக்காரர்

கோயில் செல்கையில்

டோக்கன் போட்டு பத்திரப் படுத்துவார்.


டோக்கனுக்கு காசு கொடுக்க மனமில்லா பலரோ

கோயில் உள்ளே இறையைத் தொழாது

மனதெல்லாம் 

எங்கள் நினைவாக பதைபதைப்போடு இருந்திடுவோர்.


முன்பெல்லாம்

கல்யாண மண்டபங்களில் எங்களைத் தொலைத்தோர் அநேகம்.


ஒருவரை ஒருவர் நாங்கள் பிரியோம்

பிரிந்திடின் ஒருவராய் உயிர் தரியோம்


இருவராய் என்றென்றும் இணைபிரியாது இருந்திடுவோம்.


ஊரெல்லாம் 

உலகெல்லாம் 

மனிதர்களை 

சுமந்து செல்லும் 

எங்களுக்காக

மனிதர்கள் 

கொடுத்த இடம்


வீட்டின் வெளியே

வாயிலின் ஓரம்.


வாழிய

மனிதரின்

செய்நன்றி!


- ஸ்ரீவி


**********************



மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...