~~~~~~~~
உயிர்ப் பன்வகைமை தினம்
Bio-diversity day
~~~~~~~~
உலகின் அதிசயம்
உயிர்ப் பன்வகைமை
உன்மத்த மனிதனோ
உணரவில்லை இவ்வுண்மை
உயிர்களை வதைத்து
உலகினைச் சிதைத்து
உயர்வான இயற்கையை
உணராது அழித்து
உயிர்மையின் சீற்றத்தை
பூகம்பமாய் சுனாமியாய்
எரித்தழிக்கும் எரிமலையாய்
சுழன்றடிக்கும் சூறாவளியாய்
காட்டுத் தீயாய் பெருமழையாய்
உணரும் போது உளறுவானே -
"கடவுளுக்கு கண்ணில்லை"
மனிதா..
உன்பிழை உணர்
உயிர்ப் பன்வகைமை
உலகின் பொதுவிதி
உணராத நீயோ
உயிர் வன்-பகைமை
கொள்கிறாய்
உணராது பிழைபல
செய்கிறாய்.
திருந்தடா மனிதா..
திருந்தாவிடில்
இயற்கைச் சீற்றத்தால்
வருந்தடா மனிதா..
ஸ்ரீவி
*****************
உலகின் உயிர்நாடி
பல்வகைமை அன்றோ?
ஏழு வண்ணங்கள்
வேண்டும் வானவில்லுக்கு
மரங்கள் மட்டுமா காடு?
புழு பூச்சி புள் விலங்கு
நீராதாரம் என
பல்வகைமை அன்றோ?
பட்டாம்பூச்சியின் சிறகசைவு
சூறாவளியின் தொடக்கமாகலாம்
உயிர்ச்சங்கிலியால்
பிணைக்கப்பட்டதன்றோ
உலகம்?
உலகின் பிணைப்பு
பல்வகைமை அன்றோ?
பரந்து விரிந்தது இவ்வுலகம்
நில அமைப்பில்
வானிலையில்
நீர் பரப்பில்
புல்லினங்களில்
புள்ளினங்களில்
விலங்குகளில்
கலாச்சாரத்தில்
மொழிகளில்
உருவங்களில்
பல்வகைமை தானே அடையாளம்?
உலகின் எழில்
பல்வகைமை அன்றோ?
ஆறறிவற்ற உயிர்கள்
உயிரில்லா உருக்கள்கூட
பல்வகைமை போற்றி
இயற்கையோடு இயைந்து
உலகமதை செழுமை செய்யும்
உலகின் உயிர்ப்பு
பல்வகைமை அன்றோ?
ஆறறிவு மனிதன் அவன்
பகுத்தறிவை திரித்து
பல்வகைமையை
பாகுபாடு என்றான்
வேற்றுமை ஊன்றினான்
இயற்கையின் மொழியை
மாற்றினால்
வீழ்ச்சி மனிதனுக்கே!!!
உலகின் மொழி
பல்வகைமை அன்றோ?
பல்வகைமை அரவணைப்போம்
இயற்கையோடு இயைவோம்
புது உலகம் காணுவோம்!!!
- அமுதவல்லி
***********************
கதம்ப சாம்பார் போல
பீட்சா டாப்பிங் போல
பல்வகைமை நம் உடலை
வளர்க்கும் குடலிலும் உண்டு கேளீர்!
நாம் சிரிக்க வேண்டுமா
அழ வேண்டுமா..
முடிவு செய்கிறதாம் இந்தப் பல்வகைமை!
நம் நரம்பு மண்டலத்தையும்
ஆட்சி செய்கிறதாம் இந்தப்
பல்வகைமை!
நோயெதிர்ப்பும் இதன் தொழிலாம்!
இன்னும் பல நன்மைகளும்!
நம் குடலே இவற்றின்
அன்னச் சத்திரம்!
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாமல்
உப்பிட்டவருக்கு உள்ளிருந்து உதவிடுதாம்!
எதற்கெடுத்தாலும்
ஆன்டிபயாடிக் போட்டு வயிற்றுப் பேருலகில் வாழும் நுண்ணுயிர்களின்
பல்வகைமையில் கை வைத்தால் ஆட்டம் கண்டுவிடும் நம் உயிர்மெய்!
தயிர் மோர் குடித்து
குடலின் பல்வகைமை பேணி நம்மைக் காத்துக் கொள்வோம் வாரீர்!
- சாய்கழல் சங்கீதா
****************
No comments:
Post a Comment