Thursday, May 1, 2025

ஒற்றைச் செருப்பு

 ஒற்றைச்செருப்பின்

தனிமொழி:


ஜோடிப்பொருத்தம்

 சரியே எனப் பாராட்டு பெற்றவர் நானும் எனது ஜோடியும்.


பிரிந்தபின் ஒற்றைச்செருப்பு "நடை"முறைக்கு ஒத்து வருமா?


தூக்கி எறியப்பட்டேன்.


எங்கள் ஒற்றைச்செருப்பு நண்பர்களை,கோவில் வாசலிலோ, அரசியல் கூட்டங்களிலோ பார்க்கலாம்.


சில மனிதர்கள் எங்களைப்பிரித்து வைப்பர்; தொலையாமல் பாதுகாக்கவாம்!


நாங்கள் மனிதர்களைப் போல்இல்லை, ஜோடி பிரிந்தாலும் வாழ்வதற்கு!


ஜதை பிரிந்தால்

ஜதி பிறழும்!

- மோகன்


***********************

ஜாதகப் பொருத்தம் பார்க்காமல்

'மாங்கல்யம் தந்துனானே' பாடாமல்,

திருமாங்கல்யம் கட்டாமல்


மாதா கோவில் மணி அடிக்காமல்

மோதிரம் மாற்றாமல்

பங்குத் தந்தை பங்கில்லாமல்


நிக்காஹ் செய்து பிரியாணி போடாமல்

மௌலானா குர்ரான் ஓதாமல்


ஒன்றிணைந்த பந்தம் இது

ஒருவரை ஒருவர் பிரிந்திடா

உத்தமமான சொந்தம் இது


காலணி என்பார் பலர்

கழல் என்பார் இலக்கிய ஆர்வலர்


எங்களின் சொந்தக்காரர்

கோயில் செல்கையில்

டோக்கன் போட்டு பத்திரப் படுத்துவார்.


டோக்கனுக்கு காசு கொடுக்க மனமில்லா பலரோ

கோயில் உள்ளே இறையைத் தொழாது

மனதெல்லாம் 

எங்கள் நினைவாக பதைபதைப்போடு இருந்திடுவோர்.


முன்பெல்லாம்

கல்யாண மண்டபங்களில் எங்களைத் தொலைத்தோர் அநேகம்.


ஒருவரை ஒருவர் நாங்கள் பிரியோம்

பிரிந்திடின் ஒருவராய் உயிர் தரியோம்


இருவராய் என்றென்றும் இணைபிரியாது இருந்திடுவோம்.


ஊரெல்லாம் 

உலகெல்லாம் 

மனிதர்களை 

சுமந்து செல்லும் 

எங்களுக்காக

மனிதர்கள் 

கொடுத்த இடம்


வீட்டின் வெளியே

வாயிலின் ஓரம்.


வாழிய

மனிதரின்

செய்நன்றி!


- ஸ்ரீவி


**********************



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...