Friday, May 16, 2025

முதல் நிர்வாகக் குழு கூடுகையின் விவரணம் - 2025

 __________________

முதல் நிர்வாகக் குழு கூடுகையின் விவரணம் 

--------------------


17 மே 2025,  சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு  நமது நிதிச் செயலர் திரு. சாய்ராம் ஐயா அவர்கள் இல்லத்தில் (சி3 45) நமது முதல் நிர்வாகக் குழு கூடுகை கூடியது.


முதலில் தமிழ் பெண் இசைக்கப்பட்டது.


பின்னர் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக இருந்த நடந்து முடிந்த பொதுக்குழு பற்றிய பரிசீலனை நடந்தது. தேர்தல் நடந்த பொழுது, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற நமது சங்கத்தின் எண்ணம் பல உறுப்பினர்களால் முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொள்ளாமல் அவரவருக்கு தோன்றியவாறு நடந்தது நகைப்புக்கு இடம் தருமாறு இருந்தது என்ற கருத்து அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப் பட்டது. வருங்காலத்தில் இது தவிர்க்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் அங்கு வலியுறுத்தப்பட்டது. 


பின்னர் அடுத்த நிரலாக, வருகின்ற ஜூலை மாதம் நமது சங்கம் இரண்டாவது ஆண்டு நிறைவு செய்வதை ஒட்டி இரண்டாம் ஆண்டு விழாவினை ஜூலை மாத மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் வார இறுதி நாள் ஒன்றில் சிறப்புடன் நடத்திட விவாதிக்கப் பட்டது. 


பல்வேறு கருத்துகள், ஆலோசனைகள் வந்த பின்னணியில் இறுதியாக கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன:


1) சாய்ராம் ஐயா அவர்கள் கூறியபடி அடையாறில் பழைய சத்யா ஸ்டுடியோஸ் இருந்திட்ட இடத்தில் இருக்கும் ஒரு மண்டபத்தில் நமது ஆண்டு விழாவை நடத்திட ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


2) வயதானவர் மற்றும் கார் வசதி இல்லாத மூத்தோர் நலனுக்காக நமது பூர்வ குடியிருப்பில் இருந்து, அந்த மண்டபத்திற்கு செல்ல ஒரு வேன் ஏற்பாடு செய்தல் பரிசீலிக்கப்பட வேண்டும். அதற்கான செலவினை சங்கம் முழுமையாக ஏற்பதோ அல்லது தேவை எனில் ஒரு கட்டணத்தை வருபவர்கள் இடமிருந்து வசூலிப்பதோ  வேண்டும். வேன் வசதி ஏற்பாடு செய்யும் பொழுது அதில் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

வேன் ஏற்பாடு செய்கின்ற பொறுப்பினை ரமணி அவர்கள் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.


3) தொலைதூரம் இருக்கின்ற ஒரு இடத்தில் ஆண்டு விழா நடக்கின்ற படியால், காலை வேளையிலே அந்த நிகழ்ச்சி நடத்தி முடித்தல் வேண்டும். 


4) காலை 11 மணி அளவில் பிஸ்கட் - டீ வழங்குவதோடு, நிகழ்ச்சி முடிந்த பிறகு மதிய உணவு நமது உறுப்பினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான செலவு ஒரு நபருக்கு 100 ரூபாய் வரையில் இருந்திடல் நலம். 


5) ஆண்டு விழாவில் நிகழ்ச்சிகளாக பட்டிமன்றம், சிறுவர்கள் பங்கேற்கும் நாடகம், கவியரங்கம், நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் என 5 நிகழ்ச்சிகள் திட்டமிடப் படுகின்றன. இதில் பங்கேற்க விழைவோர், இந்த மாதம் இறுதி நாள் அதாவது 31 மே-க்கு உள்ளாக தங்களுடைய விழைவினை சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். சங்கக் குழுவிலே அவர்கள் அதை பதிவிடலாம். ஜூன் மாத துவக்கத்திலே அவர்களுக்கான ஆடிஷன் வைக்கப்படும் அதிலே தேர்வு பெறுவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். ஒருவர் ஒரு நிகழ்ச்சியை மட்டும் தான் பங்கேற்க வேண்டும்.  பங்கேற்பாளர்களாக இருப்பதற்கு உறுப்பினர்களுக்கு மட்டுமே தகுதி உண்டு. நிகழ்ச்சிகளில் முதன் முறையாக மேடை ஏறுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்படி எவரேனும் இல்லை என்று சொன்னால் ஏற்கனவே மேடை ஏறியவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.


6) கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக பங்களித்த ஆண், பெண் மற்றும் 

குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவிற்காகவும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'பாரதி விருது' வழங்கிட வேண்டும். 


7) ஆண்டு விழாவில் குறைந்தது ஐந்து நூல்களையாவது வெளியிட வேண்டும். நம் உறுப்பினர்கள் அமுதவல்லி, சங்கீதா, குத்தனூர் சேசுதாஸ் அவர்களோடு ஸ்ரீவி அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட திட்டம் உள்ளது. இந்த நூல்களோடு, நமது உறுப்பினர்கள் பங்கேற்ற ழகரக் கவியரங்க கவிதைகளும், நமது குழுவில் பல்வேறு உறுப்பினர்கள் எழுதிய ஐந்திணைக் 

கவிதைகளும் தொகுக்கப்பட்டு நமது சங்கத்தால் வெளியிடப்பட்ட நூலையும் வெளியிட திட்டம் உள்ளது.


8) நமது நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா வெங்கடேஸ்வரன் அவர்கள் பாட்காஸ்ட் (podcost) ஒன்றை நமது சங்கத்திற்காக துவக்க இருக்கின்றார்கள். அதனுடைய துவக்க நிகழ்ச்சியும் அந்த ஆண்டு விழாவில் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்ரீவித்யா அவர்களுடைய ஆசிரியை அவர்களை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேற்போம்.


9) நமது இரண்டாவது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் நகைச்சுவைத் திலகம் *'காத்தாடி ராமமூர்த்தி'* அவர்களை சிறப்பு விருந்தினராக வரவழைக்க சாய்ராம் ஐயா அவர்கள் முயற்சி எடுப்பார்கள்.


10) சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை பொறுத்த அளவிலே புதிதாக 15 பேர் சேர்ந்து இருந்தாலும் கூட, ஏற்கனவே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இருந்து 17 பேர் சந்தா செலுத்தாமல் இருப்பதால் அவர்களை சங்கத்திலிருந்து நீக்குவதற்காக நிர்வாக குழு தலைவரை அனுமதிக்கிறது. சந்தா செலுத்தாதோரின் பெயரை நிதிச் செயலர் அவர்கள் வாசித்த பின், அவர்களில் எவரையாவது உறுப்பினராக நீட்டிக்க முயற்சி எடுக்க முடிந்தால் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் முயல வேண்டும் என்று என்கின்ற முடிவும் எடுக்கப்பட்டது. அதோடு நடந்து முடிந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், தங்களுக்கு தெரிந்த தமிழில் ஆர்வம் இருக்கக்கூடிய நண்பர்களை, உறவினர்களை பூர்வா குடியிருப்புக்கு வெளியே இருந்தாலும், உறுப்பினராக சேர்ப்பதற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஏனைய தமிழ்ச் சங்க உறுப்பினர்களும்  முயல வேண்டும் என்கின்ற முடிவும் எடுக்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கையிலே நமது திட்டப்படி *ஈச் ஒன் - ரீச் ஒன் அண்ட் கேட்ச் ஒன்* என்கின்ற அந்த வழிகாட்டுதலை அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் முழு மூச்சோடு முயல வேண்டும்.


நிறைவாக தேசியப் பண் இசைக்கப்பட்டு கூடுகை இனிதே முடிந்தது.


அன்புடன்,

ஸ்ரீவி, 

தலைவர், 

நிர்வாக குழுவிற்காக.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...