●०●०●०●०●०●०●०●०●०●०●०●०
கைநிறைய கூட்டாஞ் சோறு
வாய்மணக்க தின்னோம் பாரு
●०●०●०●०●०●०●०●०●०●०●०●०
பெரிசான தொரு மண்சட்டில
பெரியாத்தா அன்பொழுக
கூட்டாஞ்சோறை பெசைஞ்சுகிட்டு
தரையில ஒக்காருவா.
அக்கா, அண்ணந் தம்பி எல்லாம்
சந்தாஷமா கூவிகிட்டு
அவள சுத்தி ஒக்காருவோம்.
மணமணக்கும் கூட்டாஞ்சோறை
கைநிறைய அள்ளிக்கிட்டு
உருண்டையாக உருட்டி அவ
கையிலதான் கொடுத்திடுவா.
கையெல்லாம் நெய்யொழுகும்
வாயில் போட்டு திங்கையிலே
வாயெல்லாம் கமகமக்கும்
நினைவதுவோ கிறுகிறுக்கும்.
நான் முந்தி நீ முந்தி-ன்னு
போட்டியுந்தான் நடந்திடுமே
தேன் போல சோறுந்தான்
தொண்டையிலே நழுவிடுமே
ஏன் எதுக்குன்னு கேட்டிட
ஓர் ஆளில்ல அந்நாளில்
வயிறு முட்ட தின்ன பின்பு
கைகழுவி டவுசரில தொடச்சபடி
கூவிகிட்டே ஓடிடுவோம்.
இக்கால பிள்ளைகளுக்கு
இந்த சொகம் தெரிஞ்சிடுமா
இன்பமான அந்நாளோட
அருமையுந்தான் புரிஞ்சிடுமா?
ஸ்விக்கியும் ஜொமோட்டோவும்
கொண்டு வரும் பிஸ்ஸாவும்
சேந்து வரும் பர்கருந்தான்
சுவையரும்பை எழுப்பிடுமா!
சந்தோசந்தான் தந்திடுமா?
அந்த நாளும் வந்திடுமா?
இழந்தது நாம் அதிகந்தான்
இழந்ததை எல்லாம் அசைபோட
வந்திடுமே இன்பந்தான்
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
******************
கூட்டாஞ்சோறு
வீட்டிலன்று பத்து தலைகள் இருந்தன
விடியல் முதல் இரவு வரை கலகலத்தன
தோட்டம் துரவு கிணறு துணையாகச் சூழும்
துள்ளும் கன்றுகள், பசுக்கள், காளைகள் வாழும்
பாட்டி, தாத்தா உறவும் கூடவே இருக்கும்
பானையில் பழைய சோறும் ஊறும்
கூட்டாஞ்சோறு பிசைந்து பெருசு அது கூப்பிடும்
குடுகுடுவென சிறுசுகள் எதிரே வந்து அமரும்
நீட்டிய கைகளில் சோறுருண்டை வரும்
நிலாவும் ஒளிக்கதிர் நீட்டும், கேட்கும்
போட்டி போட்டுக் கொண்டு வாய்கள் திறக்கும்
போதும் என்ற சொல்லே இல்லாது போகும்
சீட்டுக் கட்டாய் இன்று எல்லாம் சரிந்ததேனோ?
சிறு குடும்பம் எனச் சிதறிய நெல்லிக்காய்களோ?
மீட்டு இப் பொற்காலம் மேதினியில் தான் வருமோ?
மெய் எலாம் ஒவ்வொன்றாய் பொய்யாய்ப் போகுமோ?
__. குத்தனூர் சேஷுதாஸ்
**************
பாட்டி கையால கூட்டாஞ்சோறு உருண்டை வாங்கி ' " லபக் லபக்" என்று விழுங்கிய நினைவு.
பாட்டி எமகாதகி!
வரிசை கிரமம் தப்பாமல் தருவாள். முண்டி அடித்தால் முட்டியில் சின்ன செல்ல தட்டு; ஆனால உருண்டைக்குத் தட்டுப்பாடு இல்லை.
"சின்னச் சோறாக்கல்"
" கூடி இருந்து குளிர்தல்" என இலக்கியங்களில்
கூட்டாஞ்சோறு பேசப்படுகிறது.அன்று வாழ்வு முறையும் இலக்கியமும் பின்னிப்பிணைந்த காலம்
" கூட்டாஞ்சோறு அப்பிக்கிட்டு, கும்மாளம்தான் போட்டுக்கிட்டு" என்ற திரைப்படப்பாடல்
நினவுக்கு வருகிறது.
"அப்பிக்கிட்டு-" அவசரம்! ஒரு சுற்று முடிந்து தன்
முறை வருவதற்குள் விழுங்கும் அவசரம்.
பழங்காலக்குடும்பங்களும்கூட்டு; உணவும் கூட்டு.
உறவுகளை ஊட்டி வளர்த்த கூட்டு.
இன்றைய கூட்டணிகளுக்கு முன்னோடி.
அன்று ஆவலும் அவசரமும் கலந்து உண்ட உணவை இன்று , சாய்ந்து அமர்ந்து அரைக்கண்மூடி அசை போட வைத்தது படம்.
படம் காட்டிய ஶ்ரீவீ ஐயாஅவர்களுக்கு நன்றி.
- மோகன்
No comments:
Post a Comment