Friday, October 17, 2025

பறவை நேயம்

 பறவை நேயம்

சிட்டுக்குருவிகளைக் காப்போம்

-----------

குருவி நயம் பற்றிய பதிவுகள் என் சிந்தனையைத் தூண்டி விட்டன....


என்னுடைய இளமைக்காலத்தில்-   ம்ம்ம்ம்- போன நூற்றாண்டில், (!) சென்னை எக்மோரிலும், கீழ்ப்பாக்கத்திலும், பெரிய தோட்ட வீடுகளில் வசித்த நாட்களில், நிறைய சிட்டுக்குருவிகளைப் பார்த்ததுண்டு. , கூட்டம் கூட்டமாகப் பறக்கையில், மகிழ்ச்சிக் கூச்சலிட்டுக்கொண்டு, செல்கையில்.


பின்பு....


சென்னை  மாநகரம்( நரகம்?) வானுயர் கட்டிடங்களின் கானகமாக மாறி வர, சிட்டுக்குருவிகள் மூச்சு விட 

சிரம ப்பட்டதோ என்னவோ,அதிகம் காணக்கிடைக்கவில்லை.  


பூர்வாவில் குடி வந்த பின் சாளர விளிம்புகளில் வந்து நம்மை அழைக்கும் குருவிகளைக் காண முடிகிறது. "ஊர்க குருவியே" இங்கதானே வசிக்கிறது!


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்( ( மிச்சம் மீதி உள்ளதில்) அபூர்வ பறவைக்கூட்டங்கள் காணப்படுவதாக, பறவையியல் அறிஞர்கள் கூறுவதும் ஒரு நம்பிக்கையை ஊட்டுகிறது, பறவை இனங்களோடு உள்ள மானுடத்தொடர்பு முழுவதும் அறுபடாது என்று.


நம்பிக்கை- ஆம் நம் கையில்!


ஆனால் ஒரு பறவை இனமே முழுவதும் அழிந்த வரலாறும் உண்டு.


இந்து மா கடலில் மொரிஷஸ் தீவு உள்ளது.

இங்கு முதல் மனித நடமாட்டமே 1498ல் டச்சுக்காரர்கள் வந்த பின்பே,ஆரம்பித்தது. அங்கு டோடோ என்ற பறவை இருந்தது. மனித வரவுக்கு முன் அமைதியான தீவாக இருந்தது. டோடோவுக்கு, பகைவர்கள்கிடையாது. நன்கு உண்டு கொழுத்து " பறக்க முடியாத" ( flightless)பறவையாக மாறியது.வந்த மனிதர்களுக்கு, கொழுத்த உணவாக மாறியது. ஆனால்  அதற்குப் பெரிய எதிரிகள், டச்சுக்கப்பல்களில்  வந்த எலிகளும், பன்றிகளும்தான். 

அது தவிர மனிதர்கள் கொணர்ந்த நோய்கள், வேறு. அக்கால " கோவிட்" கள்!


விளைவு?


இந்த பறவை இனம் முழுவதுமாக உலகை விட்டு மறைந்தது.


இயற்கைச்சுற்றுச்சூழலை மானிட மாசு தடுமாறச்செய்த நிகழ்வு 1498லிருந்தே ஆரம்பித்து விட்டது; இன்றும் தொடர்கிறது; இதில் தலைமுறை இடைவெளி என்பதே கிடையாது!


இந்தப் பறவை  லூயிஸ் கரோலின் "ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்"  ஆங்கிலப் புதினத்தில், ஒரு முட்டாளாக சித்தரிக்கப்படுகிறது. 


மனித இயல்பைப் பாருங்கள். இது முழுவதுமாகஅழிக்கப்பட்டது பற்றி பேசப்படுவதில்லை.ஆனால் முட்டாளைக் குறிக்கும் அறிகுறியாக மொரிஷியஸில் பயன் படுத்தப்படுகிறது!


இன்று உலகில் சில அருங்காட்சி அகங்களில் பாடம் செய்யப்பட்ட  பறவையாக  காணப்படுகிறது. 

மனிதனுக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதே என்ற பாடத்தைக்

கற்பிக்கிறதோ!


மகாகவி பாரதி, பாப்பா பாட்டில்

"சின்னஞ் சிறுகுருவி போலே - நீ

திரிந்து பறந்துவா பாப்பா!

வண்ணப்பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! "

என்று பாடினார். 


இயற்கையையும் அதன்பரிவாரங்களையும் பாதுகாப்பதில் மனிதன் இன்னும்" பாப்பா" ஆகவே உள்ளான்; இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்று சூசகமாக, குறிப்பிடுகிறாரோ!

- மோகன்



Thursday, October 16, 2025

குடி

 பெண் பறவை: 


பாழாப்போன  மனுஷன் 

பண்ணி வச்ச விஷத்த

குடிச்சு புட்டு நேத்து எல்லாம் 

மதி மயங்கி கிடந்தீங்க 

மயக்கமா ஆனீங்க..


காலைல எழுந்ததும் 

தலைவலின்னு சொன்னீங்க 

மனுஷன் பாஷையில 

ஹாங் ஓவர் ஆனதுங்க..


கொஞ்சம் தெளிஞ்சதுமே 

பானை பக்கம் வந்தீக.

இந்த விஷத்த குடிக்காதீக..

மீண்டும் கஷ்டப் படாதீக..


மூள கெட்ட மனசன் மட்டும் 

குடிச்சு குடிச்சு சாகட்டும் 

நமக்கு இந்த எழவெல்லாம் 

வேண்டாம் வேண்டாம் விட்டுடுங்க..


ஆண் பறவை: !?


•ஶ்ரீவி•

Wednesday, October 15, 2025

ஏமாளி தம்பிகள்:

ஏமாளி தம்பிகள்:


"தம்பி உடையான் 

படைக்கஞ்சான்"

என இறுமாப்புடன் 

அண்ணன்கள்.


தம்பிகள் பாடோ 

என்றும் பரிதாபம்.


முதல் பிள்ளை 

என வீட்டில்

அண்ணன்களுக்கே 

என்றும்

பட்டாபிஷேகங்கள்.


தான் ........யில்லை

என நிரூபித்த 

முதல் மகன்தான் 

அன்னைக்கு 

செல்லப்பிள்ளை.


தந்தைக்கோ 

தலைச்சன்

ஆண் பிள்ளை 

என வரட்டு 

கவுரவம்.


நல்ல 

உடையிலிருந்து 

புது சைக்கிள் 

வரை 

அண்ணனுக்கே 

முன்னுரிமை.


அண்ணன் 

கேட்டால் 

உடன் கிட்டும் 

எப்பொருளும்.


தம்பிக்கோ 

அண்ணன் 

பாவித்த அனைத்துப் 

பொருட்களும் 

இரண்டாம் தரமாக.


ஆனாலும் ஓர் ஆறுதல்.

உடன் பிறந்த 

சகோதரிகள் இருந்தால், 

அவர்களெல்லாம்

அன்பு மழை பொழியும்

இளவரசர்கள் 

இந்தத் தம்பிகள்தான்.


பின்குறிப்பு:

நானும் என் வீட்டில் 

தம்பிதான்.

ஆனால் முன்னால் 

மூன்று அக்காக்களும் 

பின்னால் ஒரு தங்கையும்

கிடைக்கப் பெற்ற 

"இளவரசன்".


- முகம்மது சுலைமான்,

Tuesday, October 14, 2025

12 அக்டோபர் 25 அன்று நடந்த வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்

 *12 அக்டோபர் 25 அன்று நடந்த வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்*


கலந்து கொண்டவர்கள்: 


ஸ்ரீவி, 

லட்சுமி நாராயணன், 

அமுதவல்லி, 

முகமது சுலைமான், 

தேவி அருண், 

லதா, 

இரா. சண்முக சுந்தரம்,

இரா. பிச்சை மணி,

வெ. நாகராஜன்,

சி . ஹரிஷ்,

இரா. சுப்பிரமணியம்,

லட்சுமி, 

அ. சுல்தானா, 

சங்கீதா, 

மலர்விழி, 

காமாட்சி, 

கோ, தியாகராஜன், 

விஜயலட்சுமி பாலாஜி, 

ஆர். வைத்தியநாதன், 


சிறார்கள்: 

கௌசலேஸ், 

அவினாஷ், 

ஸ்ரீ நிகேதன்,

ஆதிரா சரவணன், 

அர்ஃபா,

அர்மான்,

கௌசிகா, 

ஜனனி. 


நேற்றைய வாசிப்பு வட்டத்தில் நமது சங்க உறுப்பினர் திரு முஹம்மது சுலைமான் அவர்கள் *சாயல்* எனும் கதை தொகுப்பிலிருந்து ஒற்றைச் செருப்பு எனும் கதையை வாசித்தார்கள். கதாசிரியர் பெயர் நிஷாந்தன். இயற்பெயர் மு. மு. அஷ்ரஃப் அலி. கதாசிரியர் நமது சுலைமான் ஐயாவிற்கு உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.


தேனூர் எனும் சிறுநகரம் எப்படி மத நல்லிணக்கத்தோடு இருந்து வருகிறது என துவங்கும் கதை, சமய சந்தர்ப்ப வசத்தால் - வதந்திகள் பரவிய காரணத்தினால் - ஏற்பட்ட சமூக பதற்றத்தின் காரணமாக எப்படி கலவரம் உருவானது என விவரிக்கிறது. கதையின் நிறைவுப் பகுதியில் எப்படி இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதோடு மீண்டும்  தேனூருக்கு அமைதியும், மத நல்லிணக்கமும் திரும்ப, ஒளி தெரிகிறது என நிறைவுறுகிறது. 


இந்தக் கதை வாசித்தலுக்காக மூன்று நான்கு முறை தனது இல்லத்தில் வாசித்து வாசித்து பழகியதையும், மூச்சு வாங்குதல் இருக்கும் எனக் கூறி அதனை பொறுத்தருளுமாறும் கேட்டுக் கொண்டு முகமது சுலைமான் அவர்கள் வாசிக்க துவங்கினார். அவருக்கு மூச்சிரைக்கவும் இல்லை.  பிறர் மூச்சு விடவும் இல்லை. ஆம் மூச்சு விட மறந்து ஆர்வத்தோடு கதையைக் கேட்டார்கள். 


அதன் பின் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நாங்கள் சந்தித்த சமூகப் பதற்ற சூழல் பற்றிக் கூறினார்கள். அனைவரின் ஏகோபித்த பாராட்டையும் திரு. நிஷாந்தன் அவர்களும் கதையை வாசித்த முகமது சுலைமான் ஐயா அவர்களும் பெற்றார்கள். முகமது சுலைமான் ஐயா அவர்களுக்கு நன்றி.


கதை வாசிப்பு முடிந்ததும் இலக்கண வகுப்பு தொடர்ந்தது. இலக்கண ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் யாப்பிலக்கணம் வகுப்பு எடுத்தார். சென்ற வகுப்பின் தொடர்ச்சியாக, இந்த வகுப்பும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நேர், நிரை எனத் துவங்கி,

சீர்கள் பற்றி கூறி, அதாவது 

ஓரசைச் சீர், 

ஈரசைச் சீர்,

மூவசைச் சீர்,

நான்கு அசைச் சீர்

எனத் தொடர்ந்து, 

முத்தாய்ப்பாக சில திருக்குறளில் சிறப்புகளையும் தொட்டுக் காட்டி

வகுப்பு சிறப்பாக நடந்தது. 


கரும்பலகையில் ஆசிரியர் எழுதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நமது உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் பதில் சொன்னதும் மிக மிக ஆர்வமாக வகுப்பை கவனித்ததும் மன நிறைவாக இருந்தது.


வகுப்பில் சொல்லப்பட்ட சிறப்புமிகு திருக்குறள் நான்கை பற்றி தனியே பதிவிடப் படும்.


அதன் பின்னர் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் இனிதே துவங்கியது. பொறுப்பாளர் மகாலட்சுமி அவர்கள் வந்திருந்த குழந்தைகளுக்கு தனித்தனியே கதைகளை கொடுத்ததோடு ஒரு சுவாரசியமான முன்னெடுப்பையும் செய்தார். அதாவது கதையை வாசித்த பிறகு அந்த சிறுவர்கள் கதையின் முடிவை தங்கள் கற்பனைக்கேற்றவாறு மாற்றி கூற வேண்டும் என்பதே அந்த முன்னெடுப்பு. சிறுவர்களுக்கு அது கடினமான ஒரு விஷயமாக இருக்கும் என்று பலர் நினைத்தாலும், அவர்களைப் பொறுத்த அளவிலே அது மிக எளிதான ஒரு விளையாட்டு போல இருந்திருக்கிறது போல. தாங்கள் படித்த கதையை கூறியவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கதையின் முடிவை மாற்றி புதிய ஒரு முடிவை கூறியது எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது பெருமைப் பட வைத்தது. கதையைச் சொன்ன குழந்தைகளில் அனேகர் தூய தமிழில் கூறியது எல்லாரையும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

கலந்து கொண்ட சிறுவர்களுக்கும் பொறுப்பாளர் மகாலட்சுமிக்கு நமது நன்றிகளும் வாழ்த்துகளும்.


அடுத்த அமர்வு பற்றிய விவரம் விரைவில் பகிரப்படும். 


*ஸ்ரீவி*

தலைவர்.

பசியது வருத்த...

 பசியது வருத்த...


உசுரா வளர்த்த பிள்ளைகள் ஓடிப் போனார்

   உடன் வருவேன் என்றாள் உடைந்து போனாள் 


அசதியின்றி அந்நாள் உழைத்த உடலிது 

   "ஆளை விடு" என கையை உயர்த்தியது


பசியது வருத்த படுத்திருக்க முடியாது 

   பாழும் வயிறோ நாளை வரை பொறாது


நசுங்கிய பாத்திரம் பெற்று தருகிறார் நல்லது 

   நாள் ஒவ்வொன்றையும் நகர்த்துவார் இவ்வாறு.


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/10/2025

Saturday, October 11, 2025

அப்பா டக்கரா?

 அப்பா டக்கரா?

அப்புடீன்னா இன்னா?


இது ( வட) சென்னைத்தமிழ் சொல்லாடல்.

பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் சந்தானம் பேசிய நீ என்ன அவ்ளோ அப்பாடக்கரா என்ற வசனம் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. 


எப்போதும் யாரோடும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அவர் ஒரு அறிவாளியாக இருந்தால், அவர் பெரிய அப்பாடக்கர் என்று அவரைப் பற்றி கூறுவது வழக்கம். இது நகைச்சுவைக்காக சொல்லும் வார்த்தை அல்ல .


உண்மையில் அப்படி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் அமிர்தலல் விதல்தாஸ் தக்கர். அவர் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதி. 


குஜராத்தில் பிறந்தவர். பழங்குடி இன மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வந்தவர்.


மகான் தக்கர்பாபா சென்னையில் சில காலம் இருந்தபோது, சென்னை மாகாணத்தில் பல போராட்டங்களை நடத்தி உள்ளார்.சென்னை வாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து வந்தனர்.குஜராத்திமொழியில் பாபா என்றால் அப்பா என்பது பொருள்.


வேதங்களிலும், ஞானங்களிலும் கரை கண்ட அவர் சிறந்த அறிவாளி.அவரிடம் எந்தத் துறைத் தொடர்பாக, எந்த கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதே போல ஒருவர் அறிவில் சிறந்தவராக இருந்தால், அவர் பெரிய அப்பா தக்கர் என்று சொல்லப்பட்டார். பிறகு சென்னை உச்சரிப்பில் இது அப்பாடக்கர் ஆகிவிட்டது.



1969 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்காக தபால் தலையை வெளியிட்டது.


தக்கர் பாபா வித்யாலயா என்று சென்னை தி.நகரில் ஒரு பள்ளி உள்ளது.


அப்பாடக்கருக்கு பொருள் புரியாமலேயே நாம், அமிர்தலல் விதல்தாஸ் தக்கருக்கு பெருமைசேர்த்துவருகிறோம்.

Friday, October 10, 2025

மறதி

 நற்சுனை 19


மறதி


கடந்து போன நாள்களெல்லாம்

கைக்கொட்டிச் சிரித்தன

என் கைகளில்.. 


சிரிப்பு,அழுகை

சிந்தனை வாதம்

வெற்றி தோல்வி 

வழிபாடு பயணம்

கொண்டாட்டம் துக்கம் 

பிறப்பு இறப்பு

தொலைந்துவிட்ட நட்பு

புதிதாய் அலர்ந்த ரோஜா

ஜன்னலோர மழை  

நடைபயிற்சியில் பகிர்ந்த புன்சிரிப்பு

பண்டிகைப் பலகாரம்


என அனைத்தையும் 

சரித்திரமாக்கிவிட்ட வெற்றுக் காகிதங்களாய்...


தினசரி நாள்காட்டியில் கிழிக்க மறந்த தேதிகளை கிழித்த பின்..


- சாய்கழல் சங்கீதா

Tuesday, October 7, 2025

மாய யோகி

 நற்சுனை 18 


மாய யோகி


யாருக்காகவும் புன்னகைக்க மறப்பதில்லை

யாருக்காகவோ அழுவதில்லை


யாருக்கும் அடிப் பணிவதில்லை

யாரையும் வெறுப்பதுமில்லை


கள்ளம் கபடமில்லை

கண் அயர்ந்து தியானிப்பதில் கடினமில்லை


எதிலும் பொய்மையில்லை

தூய்மையில் களங்கமில்லை 


படைத்தவள் அரவணைப்பைத் தாண்டி 

பற்றுதல் வேறு இல்லை


பசியைத் தாண்டி புசிப்பதில்லை

உடை துறந்தாலும் கூச்சமில்லை


தன் இருப்பில் சுற்றமெல்லாம் 

அன்பு மயமாய்

மாற்றுமே மாயமாய்...

அகந்தை இல்லா குழந்தையே

மாய யோகியாய்!


- சாய்கழல் சங்கீதா

Friday, October 3, 2025

நம்பிக்கை

 நற்சுனை 17


நம்பிக்கை


எப்படியும் வேண்டாம் என்று 

சொல்லிவிடுவாள் 

பெரும் நம்பிக்கையோடு

அக்கறையாய் கேட்டான்

"மூக்குக் கண்ணாடியை மாற்றிக் கொள்கிறாயா அம்மா?"

மாதக் கடைசியில் வெறும்

கையைப் பிசைந்துக் கொண்டிருந்த மகன்..


- சாய்கழல் சங்கீதா

Wednesday, October 1, 2025

27.9.25 சனிக்கிழமை மாலை நடந்த வாசிப்பு வட்ட அமர்வுகள் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்

 *27.9.25 சனிக்கிழமை மாலை நடந்த வாசிப்பு வட்ட அமர்வுகள் மற்றும் இலக்கண வகுப்பு விவரணம்:*


27 செப்டம்பர் அன்று மாலை 5 மணிக்கு பெரியோருக்கான *வாசிப்பு வட்ட அமர்வு* துவங்கியது.

அமர்வில் கலந்து கொண்டோர்:

 

1. சாய் ராம் 

2. தியாகராஜன்

3. ஶ்ரீவி 

4. அமுதவல்லி 

5. லக்ஷ்மி நாராயணன் 

6. ஹரிஷ்

7. முஹம்மது சுலைமான்

8. சரஸ்வதி 

9. ராம மூர்த்தி 

10. லக்ஷ்மி 

11. ஶ்ரீவித்யா 

12. கணேசன்

13. வே. நாகராஜன் 

14. சண்முக சுந்தரம் 

15. சுப்பிரமணியன் 

16. நாகராஜன் (அமுதவல்லி)

17. சுல்தானா 

18. காமாட்சி


திரு. லட்சுமி நாராயணன் அவர்கள் *கி. ராஜ் நாராயணன் அவர்களின் கதவு* என்கின்ற சிறுகதையை வாசித்தார். சென்ற அமர்வில் *சுஜாதாவின் பேப்பரில் பேர்* என்னும் கதை வாசிக்கப்பட்ட போது, அரங்கத்தில் மகிழ்ச்சி இருந்ததைக் கண்டோம். கேட்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் என்பதோடு, உற்சாகமாகவும் அதன் மீது விவாதம் நடத்தினர். இந்த முறை வாசிக்கப்பட்ட அந்தக் கதை கேட்போர் அனைவரின் மனங்களையும் உருக்கியது என்று சொன்னால் மிகையாகாது.  பலரின் கண்கள் கசிந்தன. சோகம் அனைவரையும் ஆட்கொண்டது. சாதாரண அஃறினை பொருளான கதவினைக் கதாநாயகனாக்கி விளிம்பு நிலை குடும்பங்கள் வறுமையில் தத்தளிக்கும் நிலையையும், கரிசல் மண்ணின் பல்வேறு விஷயங்களையும் லாவகமாக திரு. கி. ரா. அவர்கள் தனது எழுத்தாற்றலால் வடித்திருக்கிறார். அனேகர் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை பார்க்க முடிந்தது. மிக அருமையான ஒரு கதை வாசிப்பு அது. திரு. லட்சுமி நாராயணனுக்கு நன்றி.


கதை வாசிப்பு முடிந்ததும் *திரு சண்முகசுந்தரம் ஐயா*  *இலக்கண வகுப்பினை* நடத்தினார். *யாப்பிலக்கணம்*  துவங்கப் பட்டது. கணித முறையிலான யாப்பிலக்கணத்தில் *அசை* பற்றி அவர் விளக்கியது எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவிலே மிகச் சிறப்பாக இருந்தது. வகுப்பில் விளக்கிய கையோடு சில உதாரணங்களை கரும்பலகையில் எழுதி அதனை நம்மை அசை பிரிக்க சொன்ன விதம் அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. இலக்கணம் என்றாலே ஒவ்வாமை என்ற நிலையை மாற்றக்கூடிய அளவில் அனைவரும் ஆர்வத்துடன் பதில் அளித்த விதம் குறிப்பிடத் தகுந்தது. *நேர் அசை – நிரை அசை* இரண்டும் அனைவரின் மனங்களையும் ஆக்கிரமித்தன. ஒரு கடினமான பணியை இலகுவாக மாற்றி அனைவருக்கும் இலக்கணத்தின் மீது பிடிப்பு வரச் செய்த திரு சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கு நன்றி.


அதன் பின்னர்  சிறார்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு–2 சரியாக 6.30 மணிக்கு துவங்கியது.

பங்கேற்றவர்கள் விவரம்

1. செல்வன். ஸ்ரீநிகிதன்,

2. செல்வி. ஜனனி,

3. செல்வன். சாய்பிரணவ்,

4. செல்வன். அர்மான்,

5. செல்வி. அர்ஃபா,

6. செல்வன். ஆதவ்,

7. செல்வன். அவினாஷ்,

8. செல்வன். மதுசந்த்,

9. திரு. சாய்ராம்

10. திருமதி. மகாலட்சுமி

11. திரு. ஸ்ரீவெங்கடேஷ்

12. திருமதி. ராஜேஸ்வரி

13. திருமதி. ஷியாமளா

14. திருமதி. சுல்தானா


இம்முறை சிறுவர்களுக்கு சிறிய பட அட்டைக் கதைகள் வாசிக்க கொடுக்கப்பட்டன, வாசிப்பின் இறுதியில் நிகழ்ந்த வினாடி வினாவில், அனைவரும் சரியான விடையைக் கூறி, கரவொலி பெற்றனர். பின் *செல்வி ஜனனி,*  தான் படித்த *கிச்சா பச்சா* கதையைத் தன் பாணியில் சுவைபட பகிர்ந்து கொண்டது, இந்த வாசிப்பு வட்டத்தின் குறிக்கோளை எட்டும் முதல் படியாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் சிறுவர்களுக்கான *தேன் சிட்டு மற்றும் ஊஞ்சல் நாளிதழ்களையும்,* சில கதைப் புத்தகங்களையும் பகிர்ந்து கொண்டார். குழந்தைகள் தாங்கள் செல்லும் போது, தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை வாசிக்க எடுத்து சென்றது மகிழ்வான தருணமாக அமைந்து.

அடுத்த அமர்வு வருகின்ற அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை 6.30மணிக்கு இன்னும் சில புதிய விஷயங்களுடன் அரங்கேறவுள்ளது. தொடர் வாசிப்பே சிறந்த கற்றலுக்கான வழி, குழந்தைகள் தொடர்ந்து இந்த முயற்சியில் பங்குகொள்ள பெற்றொர்களின் துணை நின்று உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். 


திறம்பட இந்த அமர்வினை வழி நடத்திய திருமதி. மகாலட்சுமி அவர்களுக்கு நம் நன்றி.


இந்த வாசிப்பு வட்ட அமர்வும் இலக்கண வகுப்பு 2 மணி நேர மகிழ்வு தரும் அனுபவத்தை அள்ளிக் கொடுத்தன. கலந்து கொண்ட பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து சென்றது உற்சாகம் தருவதாக இருந்தது. ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் நெஞ்சு நிறை நன்றிகள். 


பொழுது போக்க மட்டுமல்ல நமது பார்வையை விசாலமாக்க அறிவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள நடக்கின்ற இந்த அமர்வுகளில் மேலும் பலர் கலந்து கொள்ள வேண்டும் என நமது சங்கம் விழைகிறது.

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...