*எங்கே... எங்கே...*
எங்கே அந்தப் பாட்டி..?
எங்கே அந்த ஆயா..!
ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும்
கோணி ஒன்றை விரித்து
செக்கச் சிவந்த
எலந்தப் பழமும்
ஸ்ப்ரிங் போல்
சுருண்டிருக்கும்
பச்சை நிற கொடுக்காப்புளியும்
அழகழகாய் வெட்டி வைத்த
மாங்காய் கீத்தும் (சென்னையில் மாங்கா பத்தை)
பிஞ்சு பிஞ்சாய் வெள்ளரிக் காயும்
மாங்காய்க் கீத்துக்கும், வெள்ளரி காய்க்கும்
தொட்டுக்கொள்ள மிளகாய்ப் பொடி
தூவிய உப்பும்
கூறு கூறாய் அடுக்கி வைத்து
கடை பரப்பி,
கையில் காசு இல்லாத ஏழைச் சிறுவர்களுக்கும்
ஆசையாய் பதார்த்தம் கொடுத்து
பள்ளிச் சிறுவர்களின்
வாழ்க்கையோடு
ஒன்றிப்போன
பாட்டிமார்கள்
இப்போது எங்கே?
காற்றில் கரைந்து போனார்களோ!
மாயமாய் மறைந்து போனார்களோ!!
அவர்கள் விற்ற கமர்கட்டுக்கும்
தேன் மிட்டாய்க்கும் முன்னே இப்போது பால் பாசந்தியும்
பாதாம் அல்வாவும்
நிற்கத்தான் முடியுமா!
நின்று தான் ஜெயிக்குமா!!
காலச் சுழற்சியில்
காணாமல் போன
சாலையோரக் கடைகளின்
பாட்டிகளும் ஆயாக்களும்
எங்கேதான் உள்ளனரோ!
விண்ணை முட்டும் சூப்பர் மார்க்கெட்டுகளும்,
பளபளக்கும் மால்களும்
உருவாக்கிய சுனாமியில்
அடித்துச் செல்லப் பட்டனரோ..!?
எங்கே.. எங்கே...?
பள்ளிகளின் வாசலிலே
கடை போட்ட பாட்டிகள் எங்கே.. எங்கே..!?
- ஸ்ரீவி
No comments:
Post a Comment