உப்புமா 16
செருப்பு
தேய்வதற்கே பிறந்தாயோ?
வளர்பிறையும் உனக்கில்லையோ?
பாதங்களுக்கு நீ அணி ஆனாய்
அணியாத நேரமெல்லாம்
வாசலே கதியானாய்
நவீன உலகில்
வீட்டுக்குள்ளும் உனக்கு இடமுண்டு..
வீட்டுக்குள் வந்துவிட்டால்
வீடே உனக்கு சிறையாகும்..
அணிபவரின் மறதியே
கொஞ்ச நேர
விடுதலைக்கு வழியாகும்
உனக்கும் கல்யாணம் காட்சி உண்டு
வலது இடது என பிறந்து
ஒரு பெட்டிக்குள் இணைந்து
செருப்புக்கடையின் பளீர் விளக்குகளில் பலரும் காணும்
ரிசப்ஷனும் உண்டு
இணைப்பிரியா ஜோடி நீவிர்..
அணிபவர் பிரிக்கிறார் என்று புதிதில் கடிப்பீர் நீவிர்..
பழகப்பழக பிரிவும் பழகும்..
சேர்ந்து பிரிவதே வாடிக்கையாகும் ..
கோயில் வாசலில் திருடர்கள் ஜாக்கிரதை..
அணிபவரிடம் சொல்லலாமா
ஒன்றாக விட வேண்டாம் ஒரு ஜதை?!!!
காணாத நேரத்தில் மட்டுமே மதிக்கப்படுவீர்!
ஜோடியாய் இருந்தால்
மிதிக்கப்படுவீர்!
இணையைப் பிரிந்தாலோ
தனித்தனியே தொலைக்கப்படுவீர்..
இணைந்திருப்பது முக்கியமா?
காலால் மிதி வாங்காமல் இருப்பது முக்கியமா?
முடிவு உங்கள் கையில்!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment