தீபாவளி
------
தீய சக்திகளை ஒழித்து
நற்சக்திகள் வெற்றிபெற்ற நாள்.
இந்த நிகழ்வை அவரவர் பார்வைக்கு ஏற்ப புராண அல்லது ஆன்மீக நிகழ்வாகவும் உருவகிக்கலாம்.
எது எப்படி இருந்தாலும், ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டம்தான்.
நம் பண்டிகைகள் இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தவை.
மண்அகல், பசுமை வித்துக்களின் எண்ணெய் மற்றும் பஞ்சுத்திரிகள் என இயற்கைப் பொருள்களின் கூட்டணியில் உருவாகும் ஒளிக்கூட்டம்.
வெல்லத்தில் செய்த இனிப்புகள். செரிக்க தீபாவளி இலேகியம்.
இவை யாவும் நம் பாரம்பரியங்கள்.
வெள்ளையன் வெள்ளை சர்க்கரையை அறிமுகப்படுத்தி நம்மவர் ஆரோக்கியத்தை அடித்தான் கொள்ளை.
இன்று வண்ண வண்ண இனிப்புகள்; உடலை சர்க்கரைக்கிடங்காக மாற்றி, உடனிருந்தே கொல்லும் நோய்களாக உருவெடுத்து விட்டன.
பருத்திப் புத்தாடைகளை விட நவீன இழைகளில உருவான பகட்டு ஆடைகளுக்கு மவுசு.
இந்த நாளில் நம்வீட்டு குழாய் நீரிலேயே அன்னை கங்கை இருப்பாளாம். ஆனால் மிகவும் விடியற்காலையில் குளித்தால் மட்டுமே " கங்கா ஸ்னானம். மற்றபடி சென்னை" காக்காய் குளியல்தான்!"
வட நாட்டவர் போல் நம்தமிழர்களும் இப்போதெல்லாம் மாலையில் கொண்டாடுகிறார்கள். பட்டாசு சத்தமே சாட்சி.
இந்த மகிழ்வுக் கோலகலத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.
ஒரு பக்கம் கடன் அட்டையைத் தேய்த்து, தேய்த்து பொருள்களை வாங்கிக்குவிக்கும் கொண்டாட்டங்கள்.
மறு பக்கம் பெரிய அங்காடிகளின் வாசலில் பசியால் மங்கிய பார் வை கொண்ட கூட்டங்கள்.
வருடம் முழுவதும் பெரியோர் சிறார்கள் என உழைத்து உருவான பட்டாசுகளை விற்கும் சமயத்தில் போடப்படும் தடைகள்,
அவர்கள் வாழ்வாதாரத்துக்கே வெடி வைக்காதா?!
பசுமைப்பட்டாசு தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்க உதவலாமே!
இனிப்புகளை ,
நமக்காக உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், வண்டியோட்டிகள் எனப்பலரும் இனிமை காண பகிரலாம்.நம்மால் முடிந்தது.
75-80 களில் தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை வரும் ஒளியும் ஒலியும் மிகப்பிரசித்தம். இன்று ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகள் பலப்பல. பார்க் க , கூட ஆர்வமில்லை.
ஆனால் வருடத்துக்கு ஒரு முறை வரும் இந்த ஒளியும் ஒலியும் பண்டிகையின் கவர்ச்சி சிறிதும் குறையவில்லை. பெரியவர்களையும் குழந்தைகளாக்கும் விழா.
கூட்டுக்குடும்பம் இல்லை எனில் என்ன, நமது நுழைவாயில் சமூகமே ஒரு கூட்டுக்குடும்பம்தான்;
வாழ்த்துகள், இனிப்புகள் எனப்பலப்பல பரிமாற்றங்கள், இந்த நாளில்.
நல்ல சக்தியின் வெற்றி கொண்டாடத்தான் படுகிறது!
- மோகன்
No comments:
Post a Comment