Wednesday, December 31, 2025

 இனிக்கும் 2026 ம் ஆண்டு.             

 வருகிற 2026 இல் இருந்து அனைவரின் அகம், ஆணவம்,   இறுமாப்பு,             ஈரம் இல்லாமை, உதவிடாமை, 


ஊதாரித்தனம்,             

 எகத்தாளம்,

 ஏமாற்றுதல்,      ஐயம் நோக்குதல்,

 ஒழுக்கமின்மை,

 ஓநாய் குணம்,

 ஓள வியம் பேசுதல் (புர ளி)

 ஆகியன தவிர்த்து,


     அன்பு,         ஆற்றல், இறைப்பற்று,      ஈகை குணம், உண்மை, 

 ஊடல்,

 எளிமை,

 ஏற்றமான எண்ணங்கள்,

 ஐம்புலன் அடக்கம்,

 ஒற்றுமை,

 ஓய்வுடன் 

  உழைத்தல்,

 ஓள டதம் தவிர்த்தல்,

 ஆகியவை  கடை பிடித்து 

 நம் பாரத தேசம் மட்டும் இன்றி,

 உலக மக்கள் யாவரும் இன்பமாக வாழ,             இப்புயின் இயற்கை சக்தியே இறை சக்தி என       எல்லோராலும் கருதும் சக்தியினை நம் தலைசிறந்த 

 தாய் மொழியான தமிழின் உயிர் எழுத்துக்கள் கொண்டு வாழ்த்தி வரவேற்போம்

 புத்தாண்டே

 வருக வருக

 உலகம் உய்ய உன் ஆசி யிநை அள்ளி அள்ளி அருள்க அருள்க.

- சிசு


======================

•••••••••••••••••••••••••••••••••••••••••

புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

•••••••••••••••••••••••••••••••••••••••••


புத்தாண்டு பிறக்கிறது. 

புதிய கனவுகள் மலர்கின்றன. 

ஒவ்வொருவருக்கும் 

ஒவ்வொரு கனவு உண்டு. 

அடியேனுக்கும் ஒரு கனவு உண்டு.


உலக அரங்கில் பாரதம் உச்சத்தைத் தொட வேண்டும் 

கலகம் செய் தீயோருக்கு அச்சத்தைத்

தர வேண்டும்


பாரத அன்னையின் நெ(வெ)ற்றித் திலகமாய் தமிழகம் திகழ வேண்டும்.

பூவுலகே வியந்தோதி சீர்மிகு 

தமிழகத்தைப் புகழ வேண்டும்


எட்டுத்திக்கும் தமிழ் மொழி 

ஓங்கி ஒலிக்க வேண்டும்.

அடியேனின் இக் கனவும் 

அப்படியே பலிக்க வேண்டும்


நம் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் வேர்களை பலமாய் ஊன்றி, 

கிளை பல பரப்பி செழித்து தழைத்தோங்க வேண்டும்.


எங்கும் தமிழ் 

எதிலும் தமிழ் 

எனும் முழக்கம் கேட்க வேண்டும்.

இன்பத் தேன் வந்து 

நம் செவிகளில் பாய வேண்டும்


உலக மக்கள் 

எல்லோருக்கும் எல்லாமும் 

கிடைக்க வேண்டும். 

புதியதோர் உலகம் 

நாமும் படைக்க வேண்டும்


அனைவருக்கும் 

எல்லா வளமும் 

உடல் நலமும் 

பெருக வேண்டும்.

மனிதமும் நேயமும் 

மலர வேண்டும்.


*அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!*


*ஸ்ரீவி*

================

ஆங்கிலப் புத்தாண்டு 2026


வருஷம் 2026 புதுசு!

நாமெல்லாம் ரொம்ப பழசு

ஆங்கிலப் புத்தாண்டுக்கே

உலகெங்கும் மவுசு

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"

இது தான் நம்ம மனசு..


நீங்கள் எல்லோரும் ரொம்ப நல்லா இருக்கணும்னு நினைச்சு

சந்தனம் பன்னீர் தெளிச்சு

மனதார வாழ்த்துகிறேன்....


உங்கள் வாழ்க்கையில்

மகிழ்ச்சி தங்கோனும் நிலைச்சு!

நல்லா முன்னேறுங்க உழைச்சு!

உங்க குடும்பம் ஓங்கட்டும் தழைச்சு!

எனக்கு நன்றி சொல்லுவீங்க

என் புத்தாண்டு ஆரூடம் பலிச்சு! 


புத்தாண்டு முதல் நாளே உப்புமா  தான் கிண்ட தோணுச்சு!

உப்புமா பிடித்திருந்தால மகிழ்ச்சி!


- சாய்கழல் சங்கீதா


----------

விரும்பிய 2026 இதோ


சுடச்சுட உப்புமாவும் கிண்டியாச்சு

   சூரியனோ வரவில்லை நேரமாச்சு 


படபடக்க பட்டாம்பூச்சி ஆயத்தமாச்சு

   பாயசம், வடை என... ஆக்கியாச்சு


குடம் குடமாய் குழியில் நீர் தேங்கியாச்சு

   கூத்தாட அக்ரி ராஜா துவங்கியாச்சு


விடைபெற்று 2025 போயே போச்சு 

   விரும்பிய 2026 இதோ வந்தாச்சு.


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/1/2026

Sunday, December 28, 2025

அடக்கம்

 *அடக்கம்*

வேர்களை சுருட்டி

வைத்துக் கொண்டபடி

எப்போதும் புறப்படத் தயாராக

இருக்கின்றன புலம் பெயரும்

அபாயத்தில் இருப்பதை

 நன்கறிந்த 

 தொட்டிச் செடிகள்!


- தியாகராஜன்

திட்டு!!!

 நின்றபின் வரவேண்டியதானே

எனத் திட்டுகிறார்

*அப்பா*

குடையை எடுத்துச் செல்லாதது

ஏன் எனக்கேட்டு

திட்டுகிறார்

*அண்ணன்*

சொல் பேச்சு எதையும் 

கேட்பதில்லை என்று

சொல்லி திட்டுகிறார்

*அக்கா*

முந்தானையில் மகன்

தலையை துடைத்தபடி 

பெய்யும் *மழையைத் திட்டுகிறாள்*

*அம்மா!*


- தியாகராஜன்

Tuesday, December 23, 2025

எனக்குள் ஒருத்தி....

 நற்சுனை 27



எனக்குள் ஒருத்தி....


தனக்கொரு நீதி 

பிறர்க்கொரு நீதி

"அ" கரம் ஒட்டிக் கொண்ட நீதி

சமுதாயம் ஏற்றுப் பழகிய விதி

தராசுத் தட்டு இறங்கிப் போன கதி

நியதி மறந்துவிட்ட மதி

யாரைப்பற்றி இந்த சேதி?


பரிதிக்கு புழுதி போர்த்திவிடுபவளாய்

பசுமைக்கு கருமை பூசிவிடுபவளாய்

சுட்ட பின்னும் வெண்மை தராத சங்காய்

நான் இழைக்கும் அநீதியை 

நியாயப்படுத்தும் வாதாளராய்

எனக்குள்ளேயே ஒருத்தி ...

மனசாட்சியின் குரல்வளையை

வெடித்துப் பறந்த பருத்தி...

.


- சாய்கழல் சங்கீதா

*வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு (ஏழாம் அமர்வு) விவரணம்*

 *வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு (ஏழாம் அமர்வு) விவரணம்*


நமது தமிழ்ச்சங்கம் நடத்தும் வாசிப்பு வட்டம் 20.12.25 சனி மாலை 5 மணிக்கு கார்ட்ஸ் அறையில் துவங்கியது.


முதலில் சிறார்களுக்கான வாசிப்பு வட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட சிறார்கள்: 


ஜனனி, 

ஆராதனா, 

வர்ஷா, 

வருண், 

இளமாறன், 

கௌசலேஸ், 

ஸ்ரீராம், 

அவினாஷ், 

லக்ஷித், 

சாம், 

ரித்விக், 

சாய் பிரணவ் 


கலந்து கொண்ட சிறார்களை இரு குழுக்களாகப் பிரித்து, ஒரு புதிய செயல் திட்டத்தை தேவி அருண் அவர்களும் மகாலட்சுமி அவர்களும் நடத்தினார்கள். இரு அணியில் இருந்தும் ஒருவர் வந்து சீட்டுகளை இரண்டு கட்டுகளிலிருந்து எடுத்து அதில் காணப்படும் பெயர்ச்சொல் மற்றும் வினைச் சொற்களை வைத்து குழுவாக அமர்ந்து ஒரு கதையை எழுத வேண்டும் என்பதே அந்த செயல் திட்டம். 


குழந்தைகளுக்கான வாசிப்பு வட்டம் :

அணி 1 : *அடேங்கப்பா ஆறு பேரு*

பங்கேற்ற குழந்தைகள் :

ஸ்ரீநிகேதன் 

சாம்

லக்ஷித்

வருண் 

ஸ்ரீராம் 

ருத்விக் 

கதை : *சிறுவன் ஒருவன்*


அணி 2: (jolly Friends) *மகிழ் தரு நண்பர்கள்*

பங்கேற்ற குழந்தைகள்:

கௌசலேஷ்

ஜனனி.அ

வர்ஷா 

இளமாறன்

சாய் பிரணாவ். 

செ சு. வ. அவினாஷ் 

கதை : *அப்பா பிள்ளை பாசம்*


ஒவ்வொரு அமர்விலும் ஒவ்வொரு புதிய புதிய செயல் திட்டத்துடன் வரும் அமைப்பாளர்களை நிச்சயமாக பாராட்ட வேண்டும். நீங்கள் எந்தவிதமான செயல் திட்டங்கள் கொடுத்தாலும் அதனை மிகச் சிறப்பாக செய்து நாங்கள் கதைகளை எழுதி வாசிப்போம் என்று சவால் விடும் சிறார்களும் அமர்வினை மிளிரச் செய்கிறார்கள். 

இந்த *சவாலே சமாளி* போட்டி மிக விறுவிறுப்பாக ஒவ்வொரு அமர்விலும் நடப்பது தமிழ்ச் சங்கத்தை பெருமை கொள்ள வைக்கிறது. 


அதன் பின் பெரியோர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு துவங்கியது. அதில் கலந்து கொண்டோர்: 


ஸ்ரீவி, 

மகாலட்சுமி, 

காமாட்சி, தியாகராஜன், அமுதவல்லி, 

தேவி அருண், முகமது சுலைமான், மலர்விழி மற்றும் சண்முகசுந்தரம்.


இந்த அமர்வில் *சுஜாதா எழுதிய கதை தொகுப்பான கம்ப்யூட்டர் கதை சொல்கிறது* என்ற நூலில் இருந்து *ஒரு கதையில் இரு கதைகள்* எனும் கதையை நல்ல குரல் வளத்தோடு ஏற்ற இறக்கங்களோடு மிகச் சிறப்பாக தேவி அருண் வாசித்தார்.  அதனை ஒட்டி சுஜாதா பற்றியும் அந்த கதை பற்றியும் அமர்வில் இருந்த உறுப்பினர்கள் தத்தம் கருத்துகளை பதிவு செய்தார்கள். நேரம் போவது தெரியாமல் அவர்களின் உரையாடல் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற்றது. கதையை மிக நன்றாக வாசித்த தேவி அருணுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.


நேரமின்மை காரணமாகவும், குறைந்த உறுப்பினர்களே இருந்த காரணத்தாலும் இலக்கண வகுப்பு ஆசிரியருக்கு நியாயம் கிடைக்காது என்கின்ற அடிப்படையில் இந்த முறை அனைவரின் கருத்துக்களின் அடிப்படையில் வகுப்பு எடுக்கப்படவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. திரு. சண்முகசுந்தரம் அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்து மிகச் சிறப்பாக தயாரித்து வகுப்புகளுக்கு வருகிறார். அவரது உழைப்புக்கேற்ற அங்கீகாரம் நமது பெருவாரியான உறுப்பினர்களின் தொடர் வருகை மட்டுமே கொடுத்திட இயலும். இதனை நாம் அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது.

Sunday, December 21, 2025

நிலா!!

 நிலாவுக்கு 

ஒரு வாய் தர

வானத்துக்கு நீளும் 

அம்மாவின் கை, மீண்டும்

குழந்தையின் வாய்க்குள்

திரும்பும் கணத்தில்

யாருக்கும் தெரியாமல்

வெறும் வாயைத் 

துடைத்துக் கொள்கிறது

நிலா!


- தியாகராஜன்,

வாசிப்போம்!!

 உயிரைக் காக்க சுவாசிப்போம்! 

உலகைக் காக்க வாசிப்போம்!!


*ஶ்ரீவி*


==================

சுவாசிப்பது 

வாசிப்பதற்கே.....


வாசிப்பது 

சுவாசிப்பதற்கே


.‌.‌😊சாயி😊

==================

நல்லதையே வாசி

நல்ல காற்றையே(!?) சுவாசி!

வாசி வாசி என்று வாசிக்க வைக்கும் தமிழ் பூர்வா மகாகவி பாரதி சங்கத்தினருக்கு!


- மோகன்

===================




Saturday, December 20, 2025

குண்டும் குழியும்!

 குண்டும் குழியும்!

------------------------------ 

மழைக்கால சென்னை சாலைகள் தத்துவம்

புகட்டும் போதி மர புத்தர்கள்!


வாழ்வின் மேடு பள்ளங்களை 

" அசால்டாக" " ஆஸ்பால்ட்டில் " காட்டும் சமத்துவர்கள்!

இரு சக்கரம், பல சக்கரம்

என்ற வேறுபாடே கிடையாது.


பல குண்டுகளையும்,  மிகமிகப்பல

குழிகளையும் உடைய,

கூட்டுக் குடும்பம், நம் சாலைகள்!

ஒரு சமயம் ஏற்றம், பல சமயங்களில் இறக்கம்.


வேகத் தடைகள் திண்டுக்கல்லில்

உருவாக்கப்படுகின்றனவோ?


பல சாலைக்குழிகளில் கை விட்டால்(!) வைரமும் கிடைக்கலாம்; காக்கைக்கு,

கற்கள்போடமலேயே அருந்த நீர்!


"குண்டு கண் அகழி"*யும்

அணுகுண்டுகளும். எதற்கு ?

எதிரிகளை நம்சாலைகளில் பயணிக்க விட்டால், முழங்கால்கள் பிடரியில்பட ஓட்டம்பிடிப்பரே!


குழி என்பது நில அளவையாம்.

1 காணி என்பது மூன்று குழியாம்.

பாரதி கேட்ட காணி் இதுதானோ!!

நம்நில வௌவ்வும் பேராசைக்

கண்ணர்களுக்குத் தெரிந்தால் சாலைகளும் ஆக்ரமிக்கப்படும்.


சாலை போடும் ஒப்பந்த தார ருக்கு ஹடயோகம் தெரியமோ?! தாம் போடும் சாலைகளில் யோகநிலையில் பயணிப்பாரோ?!


குண்டு என்பது அக்காலத்தில் விறகுத்தொட்டிகளில் ஓர் அளவை.இப்போதும் அகராதியில் காணலாம்.


வீட்டுக்கு வந்தேன். எதிரில் வந்தாள்ஓர் அழகுச்சிறுமி.

குறுநகை புரிந்தாள்; கன்னத்தில் குழி ! அழகோ அழகு!!

இறைவனைப்போற்றினேன்.


குண்டு கண் அகழி- பதிற்றுப்பத்து- ஆறாம் பத்துப்பாடல் 53


மோகன்

Thursday, December 18, 2025

* சிலம்பின் செய்தி*

 *{9} சிலம்பின் செய்தி*


கடல் கடந்து வணிகம் செய்த

மாநாய்கன் மகளாம் கண்ணகியை 

மானுடப் பிறப்பெடுத்த  பெண்ணை 

விண்ணுலகம் ஏக வைத்து தெய்வமாக்கி 


மக்கள் காவியம் படைத்திட்ட 

இளங்கோ அடிகளும் காப்பியத்தின் நிறைவாக 

வாழ்த்துப்பா இயற்றினாரே!


முழுமையான இவ்வாழ்த்துப் பாவே 

சிலம்பின் செய்தியாக 

அடிகளும் படைத்து அருளினாரே! 


அந்த பாடல் இதோ:


"தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி

தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!-

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்

பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;


செய்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;

பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;

பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;

பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;


அற மனை காமின்; அல்லவை கடிமின்;

கள்ளும், களவும், காமமும், பொய்யும்

வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்

இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா

உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;


செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-

மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு"


இதன் பதவுரையாவது: 


"

நான் பாடக் கேட்ட நலம் சான்ற பெருந்தகையோரே! 


கவலையிலிருந்தும், துன்பத்திலிருந்தும் பாங்காக விடுபடுங்கள். 

தெய்வம் இன்னதெனத் தெளிவு பெறுங்கள். 

இத்தகைய தெளிவு பெற்றவர்களைப் போற்றிக் கொண்டு வாழுங்கள். 

பொய் சொல்வதற்கு அஞ்சுங்கள். 

பிறர்மேல் பழி சுமத்தாதீர்கள். 

புலால் உண்ணாதீர்கள். 

உயிரைக் கொலை செய்யும் தொழிலை விட்டுவிடுங்கள். 

தானம் செய்யுங்கள். 

தவ நெறியை மேற்கொள்ளுங்கள். 


பிறர்  செய்த உதவியை அழித்து விடாதீர்கள். 

தீயவரோடு நட்பு கொள்வதை இகழ்ச்சியாக எண்ணுங்கள். 

பொய் சாட்சி சொல்லாதீர்கள். 

உண்மை கூறும் வாக்கை விட்டு நீங்காதீர்கள். 

அறநெறியாளர் அவையை விட்டு நீங்காமல் அணுக்கமாக இருங்கள். 

அயலான் மனைவியைக் கண்டால் அஞ்சுங்கள். 

தப்பிப் பிழைத்து வாழும் உயிரினத்தைக் காப்பாற்றுங்கள். 


அறம் செய்யும் இல்லறத்தைக் காப்பாற்றுங்கள். 

அறம் அல்லாத செயல்களை விலக்கிவிடுங்கள். 

கள்ளுண்ணல், களவு செய்தல், காமமுறுதல், பொய் சொல்லுதல், பயனற்ற சொற்களைப் பேசுதல் ஆகியவற்றைத்  கை விடுங்கள். 

இளமை, செல்வம், உடம்பு ஆகியவை நிலை இல்லாதவை. 

அதனால் 


இருக்கும்வரையில் 

செல்லுமிடமெல்லாம் பிறருக்குத் துணையாக இருந்து, அவர்களின் துணையைத் தேடிக் கொள்ளுங்கள்

இப்படி, வளம் மிக்க இந்த உலகத்தில் வாழ்வீர்களாக.


அறத்தை பற்றி 

மானுடம் வாழ மனிதன் செய்ய வேண்டியதை பற்றி 

தெள்ளத் தெளிவாய் 

வெள்ளிடை மலையாய் 

வாழ்த்திய அடிகளை போற்றி மகிழ்வோம்! 


*ஶ்ரீவி*

Tuesday, December 16, 2025

"மரம் வளர்ப்போம் “

 "மரம் வளர்ப்போம் “


ஓர் ஆதங்க விழிப்புணர்வு ..

நுண்ணுணர்வு கொள்ளச்செய்தல்…


“கவிப்பேர்ரசு வைரமுத்து அவர்களின் வைரவரிகள் ….


“பிறந்தோம் -

தொட்டில் மரத்தின் உபயம்!


நடந்தோம் -

நடைவண்டி மரத்தின் உபயம்!


எழுதினோம் -

பென்சில், பலகை - மரத்தின் உபயம்!


மணந்தோம் - 

மாலை, சந்தனம்-மரத்தின் உபயம்!


உண்டோம் -

உணவு, மருந்து மரத்தின் உபயம்!


துயின்றோம் தலையணை, கட்டில் - மரத்தின் உபயம்!


நடந்தோம் -

பாதுகை,ரப்பர் மரத்தின் உபயம்!


இறந்தோம் - சவப்பெட்டி, பாடை - மரத்தின் உபயம்!


எரிந்தோம் - சுடலை விறகு மரத்தின் உபயம்!"


"மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்! 

மறந்தான் மறந்தான் 

மனிதன் மறந்தான்!"

Monday, December 15, 2025

*இரவில் நகர் உலா*

 ••••••••••••••••••••••••••••

*இரவில் நகர் உலா*

•••••••••••••••••••••••••••••


பால் போல வெண்ணிலா 

பவனி வருது வானிலே 

பகல் போல தன்னொளியை

பரப்புது பார் 

ஊரிலே 


வெண்ணிலவின் ஒளியினிலே 

அமைதி நிலவும் வீதியிலே

தம்பி தங்கையரின் கரம் பிடித்து 

தென்னங்கீற்று சலசலக்க

வீசும் தென்றலை இரசித்த படி 

காலாற நடத்தல் பேரானந்தமே.


அனுபவித்தோர் 

ஆம் என்பர் 

மற்றோரெல்லாம் யோசிப்பர்.


குளிர் நிலவை ரசித்தபடி 

நகர் உலா போவோமா நாம்!


*ஶ்ரீவி*

Sunday, December 14, 2025

*டிசம்பர் 13 மகாகவி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரணம்*

 *டிசம்பர் 13 மகாகவி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிகள் விவரணம்*


*மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்*


சரியாக ஐந்து நாற்பத்தைந்து மணி அளவில் நமது மகாகவி  பாரதியின் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பண்ணிசைக்கப் பட்டது. சிறப்பானதொரு வரவேற்புரையை திரு என் கணேசன் வழங்கினார். 


பின்னர் தொகுப்பாளர் காமாட்சி அவர்கள் உரையாடலாம் வாங்க நிகழ்ச்சியை நடத்த நெறியாளர் திரு சண்முகசுந்தரம் அவர்களை அழைத்தார். முதலில் அக்கினி குஞ்சுகள் அணி மேடை ஏறியது. 


அந்த அணியில் இடம் பெற்றோர்: 

மலர்விழி, 

லக்ஷித், 

கிருத்திகா, 

திரு விக்ரம் 

மற்றும் தேவி அருண்.


பங்கேற்பாளர்களின் சுய அறிமுகத்தோடு துவங்கிய அணியின் பங்களிப்பு சண்முகசுந்தரம் ஐயா கேட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒரு நல்ல கலந்துரையாடலாக அமைந்திருந்தது. 


பாரதி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது, பாரதிக்கு தேசியக் கவி பட்டம் வழங்க வேண்டும் என கருதுகிறீர்களா, பாரதியின் புதிய ஆத்திசூடி பற்றி ஏதேனும் ஒரு தலைப்பில் கூறவும் 

என ஒன்றன்பின் ஒன்றாக சண்முகசுந்தரம் ஐயா வினவ பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மிக அருமையாக பதில் அளித்த விதம் அரங்கை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல புதிய தகவல்களை எடுத்தியம்பியது. தேசிய அளவிலான அங்கீகாரம் பாரதிக்கு கிடைக்க வேண்டும் என்கின்ற அவா வெளிப்பட்டது. 


இரண்டாவது அணியாக புதுமைப் பெண்கள் அணி மேடை ஏறியது. இதன் பங்கேற்பாளர்கள்: 


ஸ்ரீவித்யா, 

லலிதா கிருஷ்ணன், மல்லிகாமணி, சாதனா ஸ்ரீ,

மற்றும் அனிதா பாரதி.


இவர்களிடம் நெறியாளர் பாரதியின் பாடல்களில் உங்கள் மனதிற்கு நெருக்கமான பாடல் எது, பாரதியின் பாடல்கள் பல பிரபலமாவதற்கு திரைப்படங்கள் முக்கிய காரணமா, பாரதியின் பாடல்களைப் போல அவரது வசன கவிதை பிரபலமாகவில்லையே ஏன் எனும் கேள்விகளோடு புதிய ஆத்திசூடி பற்றியும் வினவினார். 


இந்த அணியில் அனைவரும் பெண்களாக இருந்தது புதுமைப் பெண்கள் என்கின்ற பெயருக்கு பொருத்தமாக இருந்தது. அனைத்து பெண்களும் மிகச் சிறப்பாக தத்தம் பதில்களை கூறினர் நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர்களும் வலு சேர்த்தனர். 


இந்நிகழ்ச்சியின் நிறைவாக மூன்றாவது அணி பாரதியின் செல்லம்மாக்கள் மேடைக்கு வந்தனர். 


இந்த அணியில் பங்கு பெற்றவர்கள்: 

அர்மான், 

சுல்தானா, 

அர்ஃபா, 

அமுதவல்லி, மோகன் ஐயா.


இவர்களுக்கு பாரதியின் பாடல்களில் அவர்களுக்கு பிடித்த பாடல் எது, அடுத்த தலைமுறைக்கு பாரதியை எடுத்துச் செல்ல தமிழ் சமூகம் தவறி இருக்கிறதா அல்லது வெற்றி பெற்றிருக்கிறதா, புதிய ஆத்திசூடி பாரதி புகழ்ந்து பாடிய திருவள்ளுவர் கம்பன் இளங்கோ வரிசையில் பாரதியும் இடம்பெறுவாரா ஆகிய வினாக்கள் முன்வைக்கப்பட்டன. 


பிற இரண்டு அணிகளைப் போலவே இவர்களும் தங்களது சிறந்த பதில்களை அவை என் முன் வைத்தனர் மிக நிறைவான பதில்களாக அவையெல்லாம் அமைந்திருந்தன. 


உரையாடலாம் வாங்க நிகழ்ச்சியில் பகிரப்பட்ட புதிய ஆத்திசூடி வரிகள் அணி வாரியாக:


*அக்னிக் குஞ்சுகள் அணி*


1. கிருத்திகா - தையலை உயர்வு செய் 

2. திரு விக்ரம்  - ஊண்மிக விரும்பு.

3. லக்ஷித் - ஈகை திறன் 

4. மலர்விழி - நேர் பட பேசு 

5. தேவி - வானநூற் பயிற்சிகொள்


*புதுமைப் பெண்கள் அணி*:


1. ஸ்ரீவித்யா: ஞாயிறு போற்று

2. சாதனா ஸ்ரீ: தேசத்தைக் காத்தல் செய் 

3. அனிதா பாரதி: உடலினை உறுதி செய்                 

    4. மல்லிகாமணி: மேழி போற்று 


    5. லலிதா கிருஷ்ணன்: ஒற்றுமை உயர்வு


*பாரதியின் செல்லம்மாக்கள்:*


1. அர்ஃபா:  விதையினைத் தெரிந்திடு 

2. மோகன்: வௌவுதல் நீக்கு

3. அமுதவல்லி: புதியன விரும்பு

4. அர்மான்: நூலினை பகுத்துணர் 

5. சுல்தானா:லீலை இவ்வுலகு


பெண் தலைவர் ஸ்ரீவி அவர்களும் உதவித்தலைவர் தியாகராஜன் அவர்களும் பாரதி தின சிறப்பு நிகழ்ச்சி திட்டமிடல் பற்றியும் ஆயத்தப் பணிகள் பற்றியும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.


நிதிச் செயலர் சாய்ராம் அவர்கள் எங்கெங்கு காணினம் பாரதி எனும் குறும்படம் தயாரிப்பு பற்றி எழுத்தாக்கம் செய்த சுல்தானா இயக்கி ஒளிப்பதிவு செய்த தேவி அருண் ஆகியோரைப் பற்றியும் நடித்த சிறார்கள் பற்றியும் குறும்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றியும் உரை நிகழ்த்தினார். 


பின்னர் குறும்படம் திரையிடப்பட்டது அரங்கமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாரதியின் வாழ்க்கை பற்றிய புகைப்படங்களுடன் துவங்கிய குறும்படம் பாரதியின் பெருமையை பறைசாற்றிய விதமாக அமைந்தது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அனைவரின் பாராட்டையும் பெற்றது. 


பிறகு பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 


சிறப்பானதொரு நன்றி உரையை திருமதி மல்லிகா அவர்கள் நிகழ்த்த பின் நாட்டுப்பண் இசைக்கப்பட்டு பாரதி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 


இந்நிகழ்ச்சியின் வெற்றியாக அமைந்த நிகழ்வுகள்: புதியதொரு சிந்தனையை, இதுவரையில் பொது வெளியில் பேசப்படாத தேசியக்கவி அவரின் வசன கவிதைகள் வள்ளுவன் கம்பன் இளங்கோ வரிசையில் பாரதி போன்ற பல அரிய தகவல் பரிமாற்றங்களோடு பாரதியின் புகழ் பாடிய நிகழ்வாக *உரையாடலாம் வாங்க* அமைந்ததும்,


இதுவரையில் மேடை ஏறாத சிலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பாக உரையாடியதும், 


நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பதாகையை எதிர்காலத்திலும் உயர்த்தி பிடித்து செல்லக்கூடிய அளவிலே இளஞ்சிட்டுக்கள் பேசியும் குறும்படத்தில் நடித்தும் கலக்கிய விதம் பெரிய நம்பிக்கையை மூத்தவர்களுக்கு உருவாக்கியதும் 


அறிவாற்றல் கொண்ட திறமைசாலி ஒருவர் நிகழ்ச்சியை வழிநடத்தியதும்,


புதிய புதிய பேச்சாளர்கள் திறமைசாலிகள் தொடர்ந்து மேடையேறும் நல்ல நிகழ்வுகளும் 


போன்ற பற்பல மகிழ்ச்சி தரும் விடயங்கள் இன்றைய பாரதி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் ஆகும்.


*நன்றி நவிலல்*


இந்த நிகழ்ச்சியை திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய கரத்தாலும் ஒத்துழைத்த அனைத்து நல் இதயங்களுக்கும் தமிழ் சங்கம் நன்றி பாராட்டுகிறது. 


உரையாடலாம் வாங்க என நாம் முன்னெடுத்த ஒரு புதிய முயற்சி மாபெரும் வெற்றி பெற உழைத்திட்ட பங்கேற்பாளர்களுக்கும் மிகச் சிறப்பாக வழி நடத்திய சண்முகசுந்தரம் ஐயா அவர்களுக்கும் உளம் நிறை நன்றிகள். 


குறும்பட தயாரிப்பில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சாய்ராம் அவர்கள் வழிகாட்டுதல் செயல்பட்ட இயக்குனர் ஒளிப்பதிவாளர் தேவி அருண் கதை வசனம் எழுதிய சுல்தானா உதவி இயக்குனர்களாக பணியாற்றிய மலர்விழி அமுதவல்லி ஸ்ரீவித்யா உள்ளடக்கிய படப்பிடிப்பு குழுவினருக்கும் பங்கேற்ற கலைஞர்களுக்கும் சிறப்பு நன்றிகள். 


நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி காமாட்சி அவர்களுக்கும் நமது நன்றிகள். 


கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நமது குடியிருப்பில் கொண்டாடப்பட்ட போதும் பெருமளவில் நமது அரங்கமே நிரம்பி வழிகிற அளவிற்கு கலந்து கொண்டு உற்சாகம் தந்த தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பூர்வா குடி வாசிகள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Thursday, December 11, 2025

சிலம்பொடு ஒரு பயணம்

 சிலம்பொடு ஒரு பயணம்


*{8} சிலம்பின் முத்தாய்ப்பான வாழ்த்துப்பா*


நாம் முன்னர் பார்த்தது போல் 

மூன்று காசிண்டங்களில் 

30 காதைகளில் 

கண்ணகியின் கதை சொன்ன 

அடிகள் முத்தாய்ப்பாக 

அருமையான வாழ்த்துப்பா 

பாடி நிறைவு செய்தார்.


இன்றளவும் கவியரங்க நிகழ்வுகளில் 

நிறைவுப் பகுதியில் 

வாழ்த்துப்பா இசைப்பது மரபே! 


இந்த மரபின் முன்னோடி சிலப்பதிகாரம் எனும் இக்காவியமே! 


தேவந்தி எனும் பெண் கண்ணகிடம் உரைப்பதாக வடிவமைக்கப் பட்ட

அந்த வாழ்த்துப் பாடலை சற்றே நாமும் பார்ப்போம்! 


*"பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்"* (தேவையற்ற அன்பும் இரக்கமும், அதனால் வரும் துன்பமும் நீங்குக)


*"தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்"* (கடவுளை நம்புக, தெளிந்தவர்களின் சொற்களைக் கேளுங்கள்)


*"பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்"* (பொய் சொல்ல பயப்படுங்கள் – (இது எவ்வளவு பெரிய அறிவுரை), புறம் பேச வேண்டாம்)


*"ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்"* 

(ஊன் (இறைச்சி) உணவைத் துறக்கவும், உயிர்க்கொலை செய்ய வேண்டாம்)


*"தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்"* 

(தானம் செய்யுங்கள், பல தவம் செய்யுங்கள்)


*"செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்"* (உதவி செய்தவரை மறவாதிருங்கள், தீய நட்பை வெறுங்கள்)


*"பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்"* (பொய்சாட்சி சொல்லாதீர்கள் (தன் காப்பியத்தில் வந்த பொற்கொல்லாரை நினைத்து சொன்னாரோ இதை) பொய்மொழியை விட்டுவிடுங்கள்)


*"அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்"* 

(அறம் பேசுவோரின் சபைக்குச் செல்லுங்கள்)


*"பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்"* 

(அறம் பேசாத சபையில் தங்க வேண்டாம்)


*"பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்"*

(பிறர் மனைவியைக் கூடாதிருக்கவும், உயிர்களைக் காக்கவும்)


*"அறமனை காமின் அல்லவை கடிமின்"* 

(அறம் நிறைந்த இல்லத்தைப் பேணுக, தீய செயல்களைத் தவிர்த்திடுக)


*"கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்"* 

(கள், களவு, காமம், பொய், வெள்ளைக் கோட்டி (பேய் வழிபாடு) ஆகியவற்றைத் 

தவிர்த்திடுக)


*"இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா"*

 (இளமை, செல்வம், உடல் நிலையற்றவை). 


என எண்ணற்ற தத்துவங்களை 

அள்ளி அள்ளித் தெளித்து இருக்கிறார். 

படிப்போர் மனங்களில் தெளிவை உண்டாக்கி இருக்கிறார். 


படித்திடுவோம்! 

தெளிவுறுவோம்!

கடைப் பிடிப்போம்!

களிப்புற வாழ்வோம்!!


(முழு கவிதை அடுத்த பதிவில்)


- ஸ்ரீவி

Wednesday, December 10, 2025

அடங்க மறுத்தவன்!!!

 நற்சுனை 26


அடங்க மறுத்தவன்!!!


பாரதியார்!!!

பாரதி நீ யார்?


தீந்தமிழ் ஊற்றும் அமுதக் குடமா?

அடிமைப் படுத்திய மாற்றான் ஆட்சிக்கு முடிவுரை எழுதக் கொட்டப்பட்ட "மை" யா?

பெண்மையை  மென்மையெனும் மாயச் சிறையிலிருந்து விடுவித்து

" சக்தியடி நீ ! " என்றுணர்த்திய

சக்திதாசனா?

உலக அரசியலை உள்வாங்கி எதிரொலித்த அலைக்கம்பமா? ஆன்மீகக் கடலில் முளைத்து மின்னிய நல்முத்தா?

வலிக்காமல் குழந்தைகளை வடித்தெடுக்கும் உளியா?

தேசத்தின் மூலைகளையெல்லாம்

சேர்த்துக் கட்டிய தாம்புக் கயிரா? 

தீக்குள் புகவும் துணிந்த விரலா? 

காக்கை குருவிகளுக்குக் கனி ஊட்டிய மரமா?

பாஞ்சாலியால் விரித்துவிடப்பட்ட கூந்தலா?

கண்ணம்மாவின் உச்சித் திலகமா? 


முண்டாசு கட்டிய மீசைக்காரனே!காட்டில் வெந்து தணிந்துவிட்டாலும்

எங்கள் உள்ளங்களில் இன்னமும் அடங்க மறுக்கும் அக்கினிக் குஞ்சு நீ!

தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!  


உம் பிறப்பால் தான் எட்டயபுரம் 

புகழை எட்டியது...

உன் இருப்பாலன்றோ

எம் தமிழ்ச்சங்கம் இவ்வுலகத்தார்க்குக்

கிட்டியது !


- சாய்கழல் சங்கீதா

Tuesday, December 9, 2025

“மரங்கள் நடுவோம்”

 “மரங்கள் நடுவோம்”

மரங்கள் நடுவோம் !

மனது மகிழ்வோம்!!


விலையில்லா காற்று,

தடையில்லாமல் வந்து

உயிர்தனை காக்கிறது!!

இது மௌனமாய் நிகழ்கிறதன்றோ😀


இருக்கும் போதும் அளவின்றி

தருகிறது 👍

இறந்த பின்பும்

தருகிறது 

மரக்கட்டையாய்,

மரக்கூழாய்…


ஆதலால் 

மரங்கள் நடுவோம்!

மழை பெறுவோம்!!

மனது மகிழ்வோம்!!!


- ராஜா முஹம்மது

Sunday, December 7, 2025

எது தோல்வி?

 *புத்தருக்கு போதி மரம்…*

*எனக்கு சென்னை உயர் நீதி மன்றம்!* 


எது தோல்வி?

 (விடை தெரியாத வினா)


முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வோம். இந்த பிரபஞ்சத்தில் ‘தோல்வி’ என்ற வார்த்தையே கிடையாது. அது மனிதன் தன் ஈகோவைக் காப்பாற்றிக்கொள்ளக் கண்டுபிடித்த ஒரு தவறான சொல்.


ஒரு சிங்கம் மானைத் துரத்துகிறது. மான் தப்பித்துவிடுகிறது. அந்தச் சிங்கம் உடனே ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, "சே! நான் ஒரு லூஸர் (Loser). நான் வாழ்வதற்கே தகுதியில்லை. நான் ஏன் பிறந்தேன்?" என்று மன அழுத்ததிற்கு (டிப்ரஷனில்) போகுமா?

என்ன செய்யும்? அடுத்த வேட்டைக்குத் தன் வேகத்தை எப்படி அட்ஜஸ்ட் செய்வது, காற்றின் திசை எப்படி இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை Data) மட்டும் எடுத்துக்கொள்ளும். மிருகங்களுக்குத் தெரியும், இது ‘தோல்வி’ இல்லை, இது ஒரு ‘நிகழ்வு’ (Event). அவ்வளவுதான். நாம் மட்டும்தான் அந்த நிகழ்வுக்கு ‘தோல்வி’ என்று பெயர் சூட்டி, அதற்கு ஒரு பின்னணி இசையையும் போட்டுக்கொண்டு அழுகிறோம்.

ஒரு விஞ்ஞானிக்கு 'தோல்வி' என்று ஒன்று கிடையாது. ஒரு எக்ஸ்பெரிமெண்ட் (Experiment) செய்கிறார். எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றால், அது தோல்வி இல்லை; "இப்படிச் செய்தால் இந்த ரிசல்ட் வராது" என்று தெரிந்து கொண்ட அனுபவம் (Data). அவ்வளவுதான். வாழ்க்கை என்பதும் ஒரு நீண்ட பரிசோதனைதான்.


நடக்கப் பழகும் குழந்தை 50 முறை கீழே விழுகிறது. அது தோல்வியா? அது புவி ஈர்ப்பு விசைக்கும் , தன் கால்களுக்கும் உள்ள சமன்பாட்டை சரி செய்கிறது. "ஐயோ, நான் 10 முறை விழுந்துவிட்டேன், இனி நடக்கவே மாட்டேன்" என்று எந்தக் குழந்தையும் மூலையில் உட்கார்ந்து அழுவதில்லை. 


இளமைக்காலம் முழுவதும் சிக்கனம், கஞ்சத்தனம், முகத்தில் ஒரு இருக்கம். எதற்கு? 60 வயதில் ஓய்வுபெற்ற பிறகு ராஜாவாக வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை. இது ஒரு மோசமான சூதாட்டம்.


60 வயதில் கையில் கோடிக்கணக்கில் பணம் வரலாம் (வராமலும் போகலாம்). அப்படியே வந்தாலும், அதை அனுபவிக்க நமக்கு என்ன மிச்சம் இருக்கும்? அல்சரும், சுகரும், மூட்டு வலியும் வைத்துக்கொண்டு ஸ்விட்சர்லாந்து போனால் என்ன, வடக்குப்பட்டு டிராஃபிக்கில் நின்றால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.


வாழ்க்கை என்பது ஒரு ‘டெஸ்டினேஷன்’ (Destination) அல்ல. அது ஒரு பயணம். ரயிலில் ஜன்னலோர சீட் கிடைத்தும், "நான் இறங்கப்போகும் ஸ்டேஷன் வந்த பிறகுதான் கண்ணைத் திறந்து பார்ப்பேன்" என்று அடம் பிடிப்பது எவ்வளவு முட்டாள்தனம்? பயணம் முழுக்கத் தூங்கிவிட்டு, கடைசியில் எழுந்து "ஐயோ பயணம் முடிந்துவிட்டதே" என்று பதறுவதில் என்ன லாஜிக்?


வெற்றியின் விகிதம் (Probability of Success) எல்லோரும் பிரதமராகிவிட முடியாது. 100 பேர் ஓடும் பந்தயத்தில் ஒருவர்தான் முதலிடம் வர முடியும். மீதி 99 பேரும் தோல்வியடைந்தவர்களா?

வெற்றி என்பது அடுத்தவனை முந்திக்கொண்டு ஓடுவதில் இல்லை. ஓடுகிற ஒவ்வொரு அடியையும் ரசிப்பதில் இருக்கிறது. 100 கோடி சம்பாதித்து,  மன அழுத்தத்தில் இறப்பதை விட, அன்றாடம் உழைத்து, சாயங்காலம் நிம்மதியாகக் கால் நீட்டித் தூங்குபவன் பயாலஜிக்கலாக (Biologically) வெற்றியாளன். அவனது என்டார்ஃபின் (Endorphin) அளவுகள் அதிகம்.


அறிவியலின் படி பார்த்தால், தோல்வி என்பதே கிடையாது. நீங்கள் ஒரு விஷயத்தைச் செய்கிறீர்கள். எதிர்பார்த்த முடிவு வந்தால் = வெற்றி . எதிர்பார்த்த முடிவு வராவிட்டால் = பாடம் .


தாமஸ் ஆல்வா எடிசன் பல்பைக் கண்டுபிடிக்கும் முன் 1000 முறை தோற்கவில்லையாம். "பல்ப் எரியாத 1000 வழிகளைக் கண்டுபிடித்தேன்" என்றாராம். இதுதான் ஆட்டிட்யூட். (Attitude)


நீங்கள் ஒரு பிசினஸ் தொடங்கி நஷ்டமடைந்தால், பணத்தை இழந்திருக்கலாம். ஆனால் அந்த அனுபவம்? அது உங்கள் மூளையில் நியூரான்களாகப் பதிவாகி இருக்கிறது. அதுதான் சொத்து. அடுத்த முறை அந்தத் தவறைச் செய்ய மாட்டீர்கள். அப்படியென்றால் அந்த நஷ்டம் என்பது, நீங்கள் புத்திசாலியாவதற்குக் கட்டிய கல்விக் கட்டணம் (Tuition Fee).


வாழ்க்கை என்பது பரீட்சை ஹால் இல்லை, எல்லாவற்றிலும் 100 மார்க் வாங்க. இது ஒரு டிராயிங் கிளாஸ் . கிறுக்கலாம், கலர் அடிக்கலாம், தப்பானால் அழிக்கலாம், அல்லது அந்தத் தப்பையே ஒரு டிசைனாக மாற்றலாம்.


இன்றே வாழுங்கள். இப்போதே சிரியுங்கள். நாளைக்குக் கிடைக்கப்போகும் 100 ரூபாயை விட, இன்று கையில் இருக்கும் 10 ரூபாய் முக்கியம்.


முடிவில் நாம் கொண்டு செல்லப்போவது பேங்க் பாஸ்புக்கை அல்ல; "வாழ்ந்தேன்டா நிம்மதியா!" என்கிற அந்தத் திருப்தியை மட்டும்தான்.

*எதிர்பார்த்தது நடந்தால் வெற்றி. எதிர்பார்த்தது நடக்காவிட்டால் அனுபவம்.* இரண்டுமே லாபம்தான்!


- தியாகராஜன்

Saturday, December 6, 2025

வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு ஆறாம் அமர்வு விவரணம்

 *வாசிப்பு வட்டம் மற்றும் இலக்கண வகுப்பு ஆறாம் அமர்வு விவரணம்*


6 12 25 மாலை 5 மணிக்கு கார்ட்ஸ் அறையில் ஆறாம் அமர்வு நடைபெற்றது. 


ஐந்து மணிக்கு குழந்தைகளுக்கான வாசிப்பு வட்டம் துவங்கியது. அதில் கலந்து கொண்ட சிறார்கள்: 


ஆராதனா, 

ஹர்ஷிதா, 

சாய் பிரணவ், ருத்விக், 

ஜனனி, 

அவினாஷ்,

லக்ஷித், 

ஸ்ரீராம், 

அர்ஃபா, 

அர்மான், 

ஸ்ரீ நிகேதன், 

நித்தின், 

உத்ரா செல்வி, 

ஆயிஷா.


இந்த அமர்வில் பொறுப்பாளர் மகாலட்சுமி வந்திருந்த குழந்தைகளை மூன்று அணிகளாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கதையை கொடுத்தார். அந்தந்த குழுவில் இருந்த குழந்தைகள் அதை படித்து அதை வைத்து சித்திரம் வரைந்ததோடு அக்குழுவில் இருந்து ஒருவர் அந்தக் கதையை பிறருக்கு சொன்னார். இதன்மூலம் குழந்தைகள் படிக்கும் ஆர்வத்துடன் அதை உள்வாங்கி பிறருக்கு செல்ல திறமை உணர்வதுடன் அந்தக் கதையை ஒட்டி தங்கள் கற்பனையை விரித்து சித்திரம் வரைய வைத்தது ஒரு நல்ல முயற்சி. கலந்து கொண்ட குழந்தைகள் அனைவரும் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதும், நல்ல சித்திரத்தை வரைந்ததும், நல்ல முறையில் அந்த கதையைச் சொன்னதும் மன மகிழ்வைத் தந்தது.


நிறைவாக அந்தக் கதைகளை எழுதியது நமது பூர்வாவிலுள்ள ஒருவரே என ஒரு ஆச்சரியத்தை கொடுத்து அந்த எழுத்தாளரையும் அறிமுகப்படுத்தினார் அவர் நமது நிர்வாக குழு உறுப்பினர் அமுதவல்லி அவர்கள். 


கதாசிரியர் அமுதவல்லி பின்னர் குழந்தைகளுக்கு கதை எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் சில வழிமுறைகளைக் கூறினார். பல குழந்தைகள் கதை எழுத விருப்பம் தெரிவித்தது வியப்பைத் தந்ததோடு, நமது தமிழ் மொழியின் எதிர்காலம் இக்குழந்தைகள் கையிலே ஒளிர்விடும் என்ற நம்பிக்கையைத் தந்தது.


அந்தக் குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் இங்கே நமது உறுப்பினர்கள் கவனத்திற்காக பகிரப்படுகின்றன. 


அதன் பின்னர் பெரியவர்களுக்கான வாசிப்பு வட்ட அமர்வு துவங்கியது. அதில் கலந்து கொண்டோம்: 


ஸ்ரீ வெங்கடேஷ், மகாலட்சுமி, 

தேவி அருண், கணேசன், 

இமான் சுல்தானா, அமுதவல்லி, சுகன்யா, தியாகராஜன், சங்கீதா, 

ரஷீதா, 

சுப்ரமணியன், லட்சுமி, மல்லிகாமணி.


இந்த அமர்விலும் ஜெயமோகன் எழுதிய அறம் நாவலின் ஒரு கதையான *சோற்றுக் கணக்கு* எனும் கதை வாசிக்கப் பட்டது. இந்தக் கதையும் கேட்போர் மனங்களை பாரமாக்கியது, கண்களை ஈரம் ஆகியது.  வறுமையின் கொடுமையை பற்றி விவரித்த ஒவ்வொரு வரியும் கேட்போர் மனதை உருக்கியது. வாசித்த திருமதி. சங்கீதா ஏற்ற இறக்கங்களுடன், நல்ல குரல் வளத்துடன், கேட்போர் கதையுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு மிகச் சிறப்பாக வாசித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் அவருக்கு புத்தகம் கொடுத்து உதவிய லக்ஷ்மி நாராயணன் அவர்களுக்கும் நன்றிகள். 


அதன் பின்,  சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் இலக்கண வகுப்பு எடுத்தார்கள். ஏற்கனவே நடத்திய பகுதியை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தியதோடு, புதிதாக இன்று ஆசிரியப்பா விதிகளைப் பற்றி விளக்கினார். இலக்கணம் என்றாலே கசப்பு மருந்து என இருப்போர் மத்தியில் இலக்கணத்தை நன்கு படித்து, உள்வாங்கி, அதனை மிக எளிமையாக பிறருக்கு புரியும் வண்ணம் வகுப்பு எடுக்கும் ஐயாவின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. அவருக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு, அதிக அளவில் இந்த வகுப்பில் கலந்து கொள்வதும், அந்தப் பாடங்களை உள்வாங்குவதும் மட்டுமே. 


மீண்டும் ஏழாம் அமர்வில் சந்திப்போம் 


*ஶ்ரீவி*

தலைவர்.

Wednesday, December 3, 2025

பாச மழை

 "டிட்வா மழை" ஓய்ந்த பின்

பாச மழைக்கு ஒரு பதிவு.


தவிட்டிற்கு 

வாங்கப்பட்டவர்கள்:


ஐந்து சகோதர, 

சகோதரிகளுடன் 

தம்பியாய்ப் பிறப்பதற்கு 

மாதவம் செய்திடல் 

வேண்டும்.


ஐவரும் 

அம்மா, அப்பா போல் 

சிவப்பாக இருக்க 

நான் மட்டும் 

என் தாத்தா போல்

மாநிறம்.


சிறுவயதில் 

என் தந்தை 

கிண்டலாகச் 

சொல்வார்:


"உடன்பிறந்தோர் 

அனைவரையும் 

தவிட்டிற்கு 

வாங்கினேன். 

ஆனால் 

உன்னை மட்டும் 

அடுப்புக்கரிக்கு

வாங்கினேன்."


என்று.


அடுப்புக்கரிக்கு 

வாங்கப்பட்டாலும் 

வீட்டில் அன்புக்கும் 

பாசத்திற்கும்

பஞ்சமில்லை.


கலங்கரை விளக்குப்

போல வழிகாட்ட

அண்ணன்.


அன்னையை விட, 

பாசத்தை அள்ளிக் 

கொட்டும் அக்காக்கள்.


தங்கையாய் பிறந்தாலும் 

"டேய் தம்பி" என்று 

வாஞ்சையுடன் அழைக்கும் 

தங்கை.


குறும்பு செய்து 

அப்பாவிடம் அடி 

வாங்கும் தருணம்,

அரண் போல் 

தமக்கைகள்.


காலச் சக்கரம் சுழன்று 

ஆளுக்கொரு மூலையாய் 

பிரிந்தாலும் இன்றும் 

குறையாத அரவணைப்பு.


உண்மையில் நான் 

இறைவனால் 

ஆசீர்வதிக்கப்பட்ட 

"அடுப்புக்கரிக்கு

வாங்கப் பட்டவன்".



Monday, December 1, 2025

 *{7} தன் சிந்தனையில் உதித்த காப்பிய வடிவத்தை இளங்கோ அடிகள் உரைத்தல்*


*முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது, அடிகள்! நீரே அருளுக’* – என சாத்தனார் வேண்டியதும், 


அதனை ஏற்ற

அடிகளும்

மனமகிழ்வோடு

சொல்லலுற்றார்: 



"மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்


மனையறம் படுத்த காதையும், நடம் நவில்


மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,



அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,


இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,


கடல் ஆடு காதையும், 


மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென


மாதவி இரங்கிய காதையும், தீது உடைக்



கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து


நாடு காண் காதையும், காடு காண் காதையும்,


வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு


புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை


ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை


அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,


ஆய்ச்சியர் குரவையும், தீத் திறம் கேட்ட 


துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய


ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு


வழக்கு உரை காதையும், வஞ்சின மாலையும்


அழல் படு காதையும், அரும் தெய்வம் 

தோன்றிக்


கட்டுரை காதையும், மட்டு அலர் கோதையர்


குன்றக் குரவையும்-என்று, இவை அனைத்துடன்


காட்சி, கால்கோள்

நீர்ப்படை, நடுகல்,

வாழ்த்து, வரம் தரு காதையொடு"


படைத்தளிப்பேன் என்று உறுதி சொன்னார். 


அதாவது,


1. மங்கல வாழ்த்துப் பாடலும், 

2. குரவர் மனையறம் படுத்த காதையும், 

3. நடம் நவில் மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,

4. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும், 

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதையும், 

6. கடல் ஆடு காதையும், 

7. மடல் அவிழ் கானல் வரியும், 

8. வேனில் வந்து இறுத்தென மாதவி இரங்கிய காதையும், 

9. தீது உடைக் கனாத் திறம் உரைத்த காதையும், 

10. வினாத் திறத்து நாடு காண் காதையும், 

11. காடு காண் காதையும், 

12. வேட்டுவ வரியும், 

13. தோட்டு அலர் கோதையொடு புறஞ்சேரி இறுத்த காதையும், 

14. கறங்கு இசை ஊர் காண் காதையும், 

15. சீர்சால் நங்கை அடைக்கலக் காதையும், 

16. கொலைக்களக் காதையும், 

17. ஆய்ச்சியர் குரவையும், 

18. தீத் திறம் கேட்ட  துன்ப மாலையும், 

19. நண்பகல் நடுங்கிய ஊர் சூழ் வரியும், 

20. சீர்சால் வேந்தனொடு வழக்கு உரை காதையும், 

21. வஞ்சின மாலையும்

22. அழல் படு காதையும், 

23. அரும் தெய்வம் தோன்றிக் கட்டுரை காதையும், 

24. மட்டு அலர் கோதையர் குன்றக் குரவையும்-என்று, இவை அனைத்துடன்

25. காட்சி, 

26. கால்கோள், 

27. நீர்ப்படை, 

28. நடுகல், 

29. வாழ்த்து, 

30. வரம் தரு காதையொடு

இப்படி 30 காதைகளாக 


இளங்கோவடிகள் வகுத்துக் கொண்டதாக உரைத்தார்.


30 காதைகளும் 

புகார் காண்டம், 

மதுரை காண்டம், 

வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களில் அடங்கவும் 

முடிவு எடுத்தார். 


தன் தோழர் கேட்டதற்கு இணங்க 

காப்பியம் படைக்க ஒத்துக்கொண்ட அடிகளும் 

அதனை உறுதியாகக் கூறுகையில் 

தனது காப்பியம் 

மூன்று காண்டங்களோடும் 

30 காதைகளோடும் வரும் எனக் கூறியது விந்தையிலும் விந்தை அன்றோ.


அத்துனை தெளிவாக 

அவரது சிந்தனை இருந்ததும் வியப்பன்றோ!


இப்படி  நூலின் பகுப்பு முறையை கூறும் பதிக மரபு என்பர்.


இப்படியாக சிலம்பு ஒலிக்க அன்று 

வித்தொன்று விழுந்தது 

நல் முத்தொன்று விளைந்தது.

திட்வா (Ditwah) என்றால்...

 திட்வா (Ditwah) என்றால்...


குட்டி போட்ட பூனையாய்ச் சுற்றி வருகிறாய் 

   கொண்டலென்ற பெயரும் கொண்டிருக்கிறாய் 


வட்டிக்கு வாங்கியவன் தலைமறைவா?

   வட்டமிட்டு அவனைத் தேடுகிறாயா?


சொட்டிச் சொட்டி சென்னையைக் குளிர்வித்தாய்

   சுடச்சுட வாய் கேட்கத் தூண்டியும் விட்டாய்


முட்டி வலிக்கிறது காலார நடக்காமல் 

   மூத்த குட்டிகளும் (Senior kids) முடங்கியது வாராமல் 


பட்டாம்பூச்சிகளைப் பார்க்க முடியவில்லை 

   பந்தாடும் சிறார் எங்கும் தென்படவில்லை 


"திட்வா" என்றால் தீவா? மலரா? சொல்லேன்

   திரும்பிப் போகும் திசை அதையும் சொல்லேன் 


கொட்டித் தீர்த்து பின் ஓய்வாய் எப்போது? 

   குழந்தைகள் சேற்றில் எப்போ களிப்பது?


கட்டிக் கொண்டு கையை சும்மா அமர்ந்தும் 

   கவிதைகள் உதயமிங்கு பல சுகப் பிரசவம்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 1/12/2025

மழை

 

மாதம் மும்மாரி பெய்து

மண்மணக்கச் செய்துவந்தாய்

சூது வாது தானறியா 

சுற்றங்கள் ஒன்று கூடி 

நீ வரும் வழியெல்லாம்

மலர்தூவி வணங்கி நிற்பர்

சேதம் ஏதும் வாராமல்

செழிக்கச்செய் மாரியென்று 

நீயும் 

பசி நீங்கி உயிர்கள் வாழ

பருவம் பார்த்து வந்து

பயிர் செழிக்க வழிசெய்தாய் 

இன்று

தோன்றும் பொழுதெல்லாம்

தொல்லுலகில் பொழிகின்றாய்

மேக வெடிப்பென்று 

மேருவையே வீழ்த்தும்படி 

ஆவேசமாய் வந்து

அழிவு பல செய்கின்றாய்

மாமழையே!

ஏனிந்த மாற்றம் உன்னுள்

எம் பிழைதான் காரணமா

பிழை பொறுத்து அருள்வாயே

இப் பெருந்துயரைத் தவிர்ப்பாயே .

===================================

மழை நாளில்,  

மண் பாதையில் 

நீ நடந்து வரும்போது

சேற்றில் முளைக்கும் 

செந்தாமரை 

உன் பாதங்கள்!!!



- தியாகராஜன்


----------------------------------

மழையும் முதியோரும் ஒன்று.......

இருக்கும் பொது கொண்டாடுவதில்லை.........

இல்லாத போது ஏங்கி திண்டாடுவோம்



.....😞சாயி😞



---------------

மழை ஓய்ந்துவிட்டது 

பேச்சு ஓயவில்லை


காற்று ஓய்ந்துவிட்டது 

கதைகள் ஓயவில்லை 


கண் ஓய்ந்துவிட்டது

கனவுகள் ஓயவில்லை 


கை ஓய்ந்துவிட்டது 

வேலைகள் ஓயவில்லை 


கால் ஓய்ந்துவிட்டது 

பயணங்கள் ஓயவில்லை 


மனம் ஓய்ந்துவிட்டது 

எண்ணங்கள் ஓயவில்லை


எது ஓய்ந்தாலும்

பூமியும் வாழ்வும் ஓய்வதில்லை...


- அமுதவல்லி,

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...