நற்சுனை 26
அடங்க மறுத்தவன்!!!
பாரதியார்!!!
பாரதி நீ யார்?
தீந்தமிழ் ஊற்றும் அமுதக் குடமா?
அடிமைப் படுத்திய மாற்றான் ஆட்சிக்கு முடிவுரை எழுதக் கொட்டப்பட்ட "மை" யா?
பெண்மையை மென்மையெனும் மாயச் சிறையிலிருந்து விடுவித்து
" சக்தியடி நீ ! " என்றுணர்த்திய
சக்திதாசனா?
உலக அரசியலை உள்வாங்கி எதிரொலித்த அலைக்கம்பமா? ஆன்மீகக் கடலில் முளைத்து மின்னிய நல்முத்தா?
வலிக்காமல் குழந்தைகளை வடித்தெடுக்கும் உளியா?
தேசத்தின் மூலைகளையெல்லாம்
சேர்த்துக் கட்டிய தாம்புக் கயிரா?
தீக்குள் புகவும் துணிந்த விரலா?
காக்கை குருவிகளுக்குக் கனி ஊட்டிய மரமா?
பாஞ்சாலியால் விரித்துவிடப்பட்ட கூந்தலா?
கண்ணம்மாவின் உச்சித் திலகமா?
முண்டாசு கட்டிய மீசைக்காரனே!காட்டில் வெந்து தணிந்துவிட்டாலும்
எங்கள் உள்ளங்களில் இன்னமும் அடங்க மறுக்கும் அக்கினிக் குஞ்சு நீ!
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!
உம் பிறப்பால் தான் எட்டயபுரம்
புகழை எட்டியது...
உன் இருப்பாலன்றோ
எம் தமிழ்ச்சங்கம் இவ்வுலகத்தார்க்குக்
கிட்டியது !
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment