சிலம்பொடு ஒரு பயணம்
*{8} சிலம்பின் முத்தாய்ப்பான வாழ்த்துப்பா*
நாம் முன்னர் பார்த்தது போல்
மூன்று காசிண்டங்களில்
30 காதைகளில்
கண்ணகியின் கதை சொன்ன
அடிகள் முத்தாய்ப்பாக
அருமையான வாழ்த்துப்பா
பாடி நிறைவு செய்தார்.
இன்றளவும் கவியரங்க நிகழ்வுகளில்
நிறைவுப் பகுதியில்
வாழ்த்துப்பா இசைப்பது மரபே!
இந்த மரபின் முன்னோடி சிலப்பதிகாரம் எனும் இக்காவியமே!
தேவந்தி எனும் பெண் கண்ணகிடம் உரைப்பதாக வடிவமைக்கப் பட்ட
அந்த வாழ்த்துப் பாடலை சற்றே நாமும் பார்ப்போம்!
*"பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்"* (தேவையற்ற அன்பும் இரக்கமும், அதனால் வரும் துன்பமும் நீங்குக)
*"தெய்வந் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்"* (கடவுளை நம்புக, தெளிந்தவர்களின் சொற்களைக் கேளுங்கள்)
*"பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்"* (பொய் சொல்ல பயப்படுங்கள் – (இது எவ்வளவு பெரிய அறிவுரை), புறம் பேச வேண்டாம்)
*"ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்"*
(ஊன் (இறைச்சி) உணவைத் துறக்கவும், உயிர்க்கொலை செய்ய வேண்டாம்)
*"தானஞ் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்"*
(தானம் செய்யுங்கள், பல தவம் செய்யுங்கள்)
*"செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட் பிகழ்மின்"* (உதவி செய்தவரை மறவாதிருங்கள், தீய நட்பை வெறுங்கள்)
*"பொய்க்கரி போகன்மின்; பொருண்மொழி நீங்கன்மின்"* (பொய்சாட்சி சொல்லாதீர்கள் (தன் காப்பியத்தில் வந்த பொற்கொல்லாரை நினைத்து சொன்னாரோ இதை) பொய்மொழியை விட்டுவிடுங்கள்)
*"அறவோ ரவைக்களம் அகலா தணுகுமின்"*
(அறம் பேசுவோரின் சபைக்குச் செல்லுங்கள்)
*"பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்"*
(அறம் பேசாத சபையில் தங்க வேண்டாம்)
*"பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்"*
(பிறர் மனைவியைக் கூடாதிருக்கவும், உயிர்களைக் காக்கவும்)
*"அறமனை காமின் அல்லவை கடிமின்"*
(அறம் நிறைந்த இல்லத்தைப் பேணுக, தீய செயல்களைத் தவிர்த்திடுக)
*"கள்ளுங் களவுங் காமமும் பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்"*
(கள், களவு, காமம், பொய், வெள்ளைக் கோட்டி (பேய் வழிபாடு) ஆகியவற்றைத்
தவிர்த்திடுக)
*"இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா"*
(இளமை, செல்வம், உடல் நிலையற்றவை).
என எண்ணற்ற தத்துவங்களை
அள்ளி அள்ளித் தெளித்து இருக்கிறார்.
படிப்போர் மனங்களில் தெளிவை உண்டாக்கி இருக்கிறார்.
படித்திடுவோம்!
தெளிவுறுவோம்!
கடைப் பிடிப்போம்!
களிப்புற வாழ்வோம்!!
(முழு கவிதை அடுத்த பதிவில்)
- ஸ்ரீவி
No comments:
Post a Comment