Thursday, December 18, 2025

* சிலம்பின் செய்தி*

 *{9} சிலம்பின் செய்தி*


கடல் கடந்து வணிகம் செய்த

மாநாய்கன் மகளாம் கண்ணகியை 

மானுடப் பிறப்பெடுத்த  பெண்ணை 

விண்ணுலகம் ஏக வைத்து தெய்வமாக்கி 


மக்கள் காவியம் படைத்திட்ட 

இளங்கோ அடிகளும் காப்பியத்தின் நிறைவாக 

வாழ்த்துப்பா இயற்றினாரே!


முழுமையான இவ்வாழ்த்துப் பாவே 

சிலம்பின் செய்தியாக 

அடிகளும் படைத்து அருளினாரே! 


அந்த பாடல் இதோ:


"தன் திறம் உரைத்த தகைசால் நல் மொழி

தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!-

பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்

பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;


செய்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;

பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;

அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;

பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;

பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;


அற மனை காமின்; அல்லவை கடிமின்;

கள்ளும், களவும், காமமும், பொய்யும்

வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்

இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா

உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;


செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-

மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு"


இதன் பதவுரையாவது: 


"

நான் பாடக் கேட்ட நலம் சான்ற பெருந்தகையோரே! 


கவலையிலிருந்தும், துன்பத்திலிருந்தும் பாங்காக விடுபடுங்கள். 

தெய்வம் இன்னதெனத் தெளிவு பெறுங்கள். 

இத்தகைய தெளிவு பெற்றவர்களைப் போற்றிக் கொண்டு வாழுங்கள். 

பொய் சொல்வதற்கு அஞ்சுங்கள். 

பிறர்மேல் பழி சுமத்தாதீர்கள். 

புலால் உண்ணாதீர்கள். 

உயிரைக் கொலை செய்யும் தொழிலை விட்டுவிடுங்கள். 

தானம் செய்யுங்கள். 

தவ நெறியை மேற்கொள்ளுங்கள். 


பிறர்  செய்த உதவியை அழித்து விடாதீர்கள். 

தீயவரோடு நட்பு கொள்வதை இகழ்ச்சியாக எண்ணுங்கள். 

பொய் சாட்சி சொல்லாதீர்கள். 

உண்மை கூறும் வாக்கை விட்டு நீங்காதீர்கள். 

அறநெறியாளர் அவையை விட்டு நீங்காமல் அணுக்கமாக இருங்கள். 

அயலான் மனைவியைக் கண்டால் அஞ்சுங்கள். 

தப்பிப் பிழைத்து வாழும் உயிரினத்தைக் காப்பாற்றுங்கள். 


அறம் செய்யும் இல்லறத்தைக் காப்பாற்றுங்கள். 

அறம் அல்லாத செயல்களை விலக்கிவிடுங்கள். 

கள்ளுண்ணல், களவு செய்தல், காமமுறுதல், பொய் சொல்லுதல், பயனற்ற சொற்களைப் பேசுதல் ஆகியவற்றைத்  கை விடுங்கள். 

இளமை, செல்வம், உடம்பு ஆகியவை நிலை இல்லாதவை. 

அதனால் 


இருக்கும்வரையில் 

செல்லுமிடமெல்லாம் பிறருக்குத் துணையாக இருந்து, அவர்களின் துணையைத் தேடிக் கொள்ளுங்கள்

இப்படி, வளம் மிக்க இந்த உலகத்தில் வாழ்வீர்களாக.


அறத்தை பற்றி 

மானுடம் வாழ மனிதன் செய்ய வேண்டியதை பற்றி 

தெள்ளத் தெளிவாய் 

வெள்ளிடை மலையாய் 

வாழ்த்திய அடிகளை போற்றி மகிழ்வோம்! 


*ஶ்ரீவி*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...