Friday, February 28, 2025

முரண்பாடு ஏன்?

 முரண்பாடு ஏன்? 


வாசிக்கும் கல்வியதை ஆசான் கற்பிப்பார்

   வழித்தோன்றல் அவரின் ஏன் சிலர் மூடர்? 


தேசியவாதி என்பார் தேசம் நேசிப்பவர்

   தேசத் துரோகியும் பிள்ளையாய் இருப்பார்


பேசிப் பேசியே சிலர் பெருஞ் செல்வந்தராம்

   பிள்ளை, பேரன் பேச்சு எவரோ எழுதுவாராம்


காசினிக் கீரையோ காலங்காலமாய் துவர்க்குது

   காசு பின்னால் ஓடும் மனிதனில் ஏன் முரண்பாடு? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Thursday, February 27, 2025

சுஜாதா எனும் ஜாம்பவான்

யாரும் எழுத முடியாது என

ஒதுங்கி நின்ற எல்லையை

எளிதாய்த் தொட்டவன்!


அறிவியல் புத்தகங்கள் தமிழிலா

என புருவம் உயர்த்தியோரை

எல்லாம் அலற விட்டவன்!


கம்ப்யூட்டரின் கதையை

எளிய நடையிலே

அழகு தமிழிலே 

படைத்தளித்தவன்!


சிலிக்கன் சில்லுப் புரட்சியை

சிறப்பான தமிழில்

இலகுவாக எழுதி

புரட்சி செய்தவன்!


நவீன தமிழ் அறிவியல்

புதினங்களின் முன்னோடி

தமிழ் இலக்கிய உலகில்

நவீனத்தைக் காட்டிய கண்ணாடி!


ஸ்ரீரங்கத்து கதைகளையும்

ரோபோ நாயான ஜீனோவையும்

யார் மறப்பார்கள்!


இவரது கதைகளைப் படிக்க

தமிழ் வாசகர்கள் பற்பலர்

அனைத்தையும் துறப்பார்கள்!!


சுஜாதா எனும் ஜாம்பவான்

எழுதியதை நிறுத்திய தினம் இன்று

தமிழ் எழுத்துலகை விட்டு

நிரந்தர ஓய்வெடுக்க சென்ற

நாள் இன்று!


நினைவேந்துவோம்!

அவர்தம் புகழ் பரப்புவோம்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி

Friday, February 21, 2025

தள்ளாடும் தாய்மொழி தினம்

 தள்ளாடும் தாய்மொழி தினம்


வாய்த்த பேறு நம் தமிழ் மொழி கிடைத்தது

   வள்ளுவன், பாரதி...என ஊட்டியும் விட்டது


தாய் மொழியாம் ஆலமரம் அழியுது இன்று

   தாங்கும் அதன் விழுதுகள் வெட்டப் படுது


வாய் நிறைய அம்மா அப்பா மழலை அழைத்தது

   வந்த சொற்கள் "மம்மி, டாடீ" விரைந்து துடைத்தது


ஆய்ந்தாய்ந்து முன்னோர்கள் கட்டிய கோட்டை

   அலட்சிய அரசுகள் பின் போட்டன பூட்டை


வேய்ந்த பட்டாடை இது தேர்ந்த நூல் கொண்டு

   வீட்டில் அலமாரியில் தூசு படிந்து கொண்டு


பாய்ந்து தேடிச்சென்று உ. வே. சா. தொகுத்தது

   படிப்பாரின்றி காற்றில் பறக்க விடவா இது? 


தாய்ப்பால் விற்று குழவிக்குத் தருவாரோ வேறு? 

   தாய்மொழி நேராய் அறிவு தருமோ வேறொன்று? 


காய்ந்து முற்றாக அழிக்கப் பட விடலாமோ? 

   கட்டாயப் பயிற்று மொழி தமிழ்  என்றாமோ?

   

__  குத்தனூர் சேஷுதாஸ்


---------------------

`०`०`०`०`०`०`०`०`०`०`०

தமிழா..விழி.. எழு..

தமிழைத் தொழு

०`०`०`०`०`०`०`०`०`०`०


தமிழ் மொழி நன்கு

தழைக்கட்டும்

இப்பூவுலகே தமிழால்

பிழைக்கட்டும்


புவியெங்கும்

தமிழே ஒலிக்கட்டும்

நம் தலைமுறைகள்

தமிழைப் படிக்கட்டும்.


எம்மொழி யாகினும்

வாசிக்கப் பழகு

செம்மொழியாம் நம்மொழியை

நேசித்தல் அழகு


தமிழ் இல்லத்துக்

குழந்தைகள் எல்லாம்

டாடி மம்மி என

விளித்தல் இழுக்கு.


அம்மா அப்பா என

சொல்லிடவே பழக்கு.


தித்திக்கும் தமிழே 

தரணி ஆளும்..

எத்திக்கும் அதனது

கரங்கள் நீளும்..!


*உலகத் தாய் மொழி

தினமாம்* இன்று (பிப்.21)

தமிழை உயர்த்த

சூளுரைத்தல் நன்று!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி


Wednesday, February 19, 2025

தமிழ்த்தாத்தா

 சங்க இலக்கிய சுவடிகள் எல்லாம்

செல்லரித்துப் போய் இருக்கும்

தங்கத் தினும் உயர்ந்த

ஓலைகளோ

மண்ணோடு மண்ணாகிப் போய் இருக்கும்


பதிணென் மேல் கணக்கு

பயன் படாது போய் இருக்கும்

பதிணென் கீழ் கணக்கு

போகித் தீயில் எரிந்திருக்கும்


அர்ப்பணிப்பு உணர்வோடு

அங்கும் இங்கும் அலைந்தாரே

காடு மேடு கழனி எல்லாம் 

சுற்றிச் சுற்றித் திரிந்தாரே


இலக்கியப் புதையல் ஓலைகளை

தேடித் தேடி  அலைந்தாரே

அரிய பொக்கிஷ சுவடிகளை

மீட்டெடுத்துக் கொடுத்தாரே


கரையான் அரித்து ஒழிக்கா திருக்க

அச்சில் அவற்றை ஏற்றினாரே

செம்மொழியாய் உலா வரவே

நம் மொழிக்கு சேவை அவரும் செய்தாரே


தமிழன்னை சேவை புரிய

தமிழ்த்தாத்தா பிறந்த

தினமின்று

போற்றி நாமும் புகழ்ந்திடுவோம்

அவரைப் புகழ்ந்து மகிழ்ந்திடுவோம்!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


------------------------------------

🙏🙏

தமிழ்த் தாத்தா உ. வே.

சாமிநாத ஐயரின்

171 ஆவது பிறந்த தினம் இன்று.


 அன்னாருக்கு,முதற் கண் தமிழ்ப் பெயரன்களும் பெயர்த்திகளும்

கண்கள் பனிக்க

நெஞ்சு நிறைய

செலுத்தும் அஞ்சலி, இரு கரம் கூப்பி.



 ஓலைச் சுவடிகளுக்கும்

காய்ந்த ஓலைகளுக்கும்

வேறுபாடு தெரியாத

தமிழ் தற்குறிகளிடமிருந்து

தமிழ் பொக்கிஷ இலக்கியங்களை

"தீயினில் தூசு" ஆகாமல் காப்பாற்றிப்

பாதுகாத்த முத்தமிழ்க்காவலர்.



சுவடுகள் இல்லாமல்

சிதறிக் கிடந்த  ஓலைச்சுவடிகளை

நாடெங்கும் தம் காலடிச்சுவடிகளைப்

பதித்து , தேடி எடுத்து

அச்சிலேற்றி ,

'நச்சென்று" தமிழை நச்சினார் மனதில்

இடம்

பெற்றவர்.


தீ, கரையான், கைநாட்டுகளிடம் இருந்து அவர் காத்துக்

கொடுத்த தமிழ்ப் புதையல்களை தொழில் நுட்ப உதவியுடன் டிஜிட்டல்

தரவுகளாக , காப்பது

தமிழ் சமுதாயத்தின்

பெருங்கடமை.


- மோகன்

----------------------

குவிகிறதோ விசா !


கன்னல் சாறிடம்  சிற்றெறும்புகள் அறியும்

   கலாப மயில் கண்டு கார்மேகம் பொழியும்

   

பின்னிய கூந்தல் பிச்சிப் பூக்கள் தேடும்

   பேனா முனை தேடி கற்பனைகள் ஓடும்


தன்னிகரிலாத் தமிழில் தனையே இழந்தாய் ! 

    " த " என்றால் "எங்கே? எங்கே?" அலைந்தாய்


அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த " உ. வே. சா ! "

   அதனால் தான் தமிழ் அறிய குவிகிறதோ " விசா " ! 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-மோகன்

Sunday, February 16, 2025

ஆதலால் பேசுவோம் !

 ஆதலால் பேசுவோம் ! 


வேங்கை அது வாய் திறந்து பேசும் வரை

   வேடனவன் சொல்லே ஆகும் உண்மை 


ஆங்கிலத்தில் ஒன்றுரைத்தால் ஆஹா என்பார்

   அழகுத் தமிழில் அதையே அலட்சியம் செய்வார்


தூங்கும் சிங்கம் அது யார் கவனம் ஈர்க்கும்

   துள்ளியோடும் மான், முயலே பேசப்படும்


வாங்கக் குடம் நிறைக்கும் வெள்ளைப் பசு அது

   வண்ணத் தமிழில்  கோதையால் வள்ளலானது


மூங்கிலாய் இருக்கும் வரை யார் சீண்டுவார்? 

   மூன்று, நான்கு துளை வழி பேசக் கொண்டாடுவார்


தாங்குவார் மேல் சுமையை மேன்மேலும் ஏற்றும்

   தண்டுவடம் தப்பிக்க பேசித் தான் ஆகணும்


ஓங்கித்  தென்னையாய் நாம் உயர வேண்டாம்

   ஒரு குயிலாய்ப் பேசினால் பேசப் படுவோம்


ஏங்கிக் கொண்டிருந்தால் அதுவே சுமையாம் 

   என்னைப் போல் கவிதையில் கொட்டித் தீரும் ! 


__  குத்தனூர் சேஷுதாஸ்


------------------------------------------

இதயம் துடித்த சத்தம்

யாருக்கும் கேட்கவில்லை..

நிசப்தம்!


இமைகள் மூடிய சத்தம்

காதுகளுக்கு எட்டவில்லை..

நிசப்தம்!


பூக்கள் மலர்ந்த சத்தம்

வண்டுகளேனும் கேட்டிருக்குமோ?

நிசப்தம்!


மனம் பேசுவதையெல்லாம்

வாய் மொழிவதில்லை!

மனதின் நிசப்தம்...

மெளனம்!


மெளனமும்  

நிசப்தமாகிவிட்டால்

மோனம்??


வாய்ச்சொல் விமானம்

ஏறாமல் காக்க..

வேண்டும் நிதானம்!

எல்லாம் தெரிந்தும்

வாய்க்கோ

வாய்க்கு வந்ததையெல்லாம்

பேசுவதே பிரதானம்😁

வாய் உள்ள பிள்ளை

பிழைக்கும்..

இதுவே கணேசன் ஐயா 

சொல்லும் சமாதானம்!!!😀


- சாய்கழல் சங்கீதா


-----------------------------------------------

Saturday, February 15, 2025

வளர்ச்சியா! வறட்சியா!!

 -----------

வளர்ச்சியா! வறட்சியா!!

------------


விளையாண்டு மகிழ்ந்த மைதானங்கள்

விண்ணை முட்டும் வணிக 

வளாகங்கள் ஆகின.


வளர்ச்சி என்ற பெயரில்

வாழ்க்கையின் குதூகலங்கள் 

மறைந்து

வறண்டும் போயின!


இது வளர்ச்சியா..!

வறட்சியா....?


கூறிடுவீர் அறிவுசால் ஆன்றோரே!


உங்கள் தோழன் ஸ்ரீவி


---------------------------------------

வளர்ச்சி அரிதாரம்


ஏரிகள், நீர்நிலைகள் எங்கே போயின? 

   எல்லாம் கட்சிகளின் வாக்குகள் ஆயின


மாரி அது பெய்தால் தேங்கவோ இடமில்லை

   மறைந்து போகுது மழைநீர் ஓடும் பாதை


வேரோடு மரங்களின் படுகொலை தொடருது

   வெறும் புல்லைக் காட்டி கலைநயம் என்குது


போராளி என எண்ணிக் கொடுத்தால் அதிகாரம் 

   புவியின் வளங்கள் பங்கு போடுகிறார் அநியாயம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


Friday, February 14, 2025

உலக காதலர் தினம்

●०●०●०●०●०●०●०●०

காதல் செய்வோம்

உலகத்தீரே!

●०●०●०●०●०●०●०●०


கார்மேக மழை 

போலாம் காதல்.

பார்புகழும் உணர்வு

ஆனதாம் காதல்


இயற்கையன்னையின்

எழில்மிகு கோலம்,

நமக்காக எதையும்

செய்யும் குடும்பத்தார், 


மயக்கி இனிமையூட்டும்

மழலைச் செல்வம்,

தோள் கொடுக்கும்

நண்பர் குழாம் 


தோழர்தம் தோழமை

தமிழ்மொழியின் இனிமை

பாரதத்தின் பெருமை

மனங் கவரும் கேண்மை


என காதலிக்க 

நீளப் பட்டியல் உண்டாம். 

*ஆதலால்                 காதல் செய்வோம் உலகத்தீரே!!*


காதலர்தின நல் வாழ்த்துகள்!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

---------------------------------------------------- 

உலக காதலர் தினம்

14/02/2025

---------------

இன்று.


நாகரீக உலகில்

வருடம் ஒரு நாள்

காதல் கொண்டாடப்படுகிறது


        

           எப்படி?


சாக்கலேட்டுகள், மலர்

பூங்கொத்துகள்,  விலை உயர்ந்த உபயோகமில்லாத பரிசுகள்,அரை

இருட்டில் நடனங்கள்

என்று...


நம்  பாரம்பரிய பண்பாட்டில்

காதல் தினமுமே

போற்றப்படுகிறது.


எப்படி?


மகிழ்ச்சியோ துக்கமோ, சேர்ந்து பகிர்தல்,கண்ணோடு கண் நோக்கியே செய்திப்பரிமாற்றங்கள், சிறு சிறு அன்பு சமிக்ஞைகள், சண்டைகள் சமரசத்தில் முடியமே தவிர மனமுறிவில் அல்ல, 

என்று ,பலப்பல விதங்களில் காதல்

பேணப்படும்.



விலை உயர்ந்த பரிசுகளே தேவை இல்லை," செம்புலப்பெயல் நீர்

போல கலந்த அன்புடை நெஞ்சங்களுக்கு"!


மணத்தால் இணைந்த காதலர்கள, மனத்தால் மட்டும் இணைந்த காதலர், என்று யாவருக்கும் வாழ்த்துகள்.🌺🌺❤️


காதல் காதல் காதல்

காதல் போயினும்?


போனால்தானே!


- இ.ச.மோகன்

----------------------------------------

காதல் பற்றி கவிதை

எழுத எண்ணும் 

போதெல்லாம் 

பேனா "மை"

கசிந்து விடுகிறதே!

பேனா " மை" க்கு

காகிதக் காதலன்

மீதான "மை" யலோ????

காதலாகிக் கண்ணீர்

மல்கிக் கசிந்ததோ???




மன ஓட்டம்...

அடுத்தமுறை ஜெல் அல்லது ரீபில் பேனா

உபயோகித்துப் பார்க்க வேண்டும்..


- சாய்க்கழல் சங்கீதா

----------------------------------------------------------

கையில் பூங்கொத்து..

வாயில் 🍰உனக்கு🙃 

அவளை நொடியும் நீங்க மாட்டேன் எந்நேரமும் தென்றலாய் தீண்டுவேன்..

கண் சிமிட்டல் மட்டுமில்லை உலகையே மறப்பேன்.. 

தீரா காதல் கைபேசி மீதோ...🤔


கண்ணோடு கண் நோக்குவதாம்... செய்தி பரிமாற்றமா... முகத்தைக் கூட யாரும் பார்த்து கொள்வதில்லை...😂😂


- சுல்தானா


----------------------------------------

நாள்தோறும் " காதலர் தினம் "


நாள்தோறும் கொண்டாடுகிறோம் காதலர் தினம்

   நானும் மனைவியும், இல்லை (ஒருநாள்) கஞ்சத்தனம்


தோளோடு தோள் உரசும் வெளியே செல்வோம்

   தொட்டுத் தொட்டே அடிக்கடி பேசவும் செய்வோம்


வேளுக்குடி உபன்யாசம் கேட்கும் போதும்

   வேறு வேறாய் இல்லை சேர்ந்தே அமர்வோம்


 " வாள் இரண்டு எதற்கு முகத்தில்?" கேட்பேன்

   வாலை, மீசையை நறுக்க பதிலும் கேட்பேன்


தேளும், பல்லியும் போல் சண்டை இராது

   தேவையிலா வாதப்போர் அறவே கூடாது


கேளாது செவிகள் மனைவியைக் குறை சொன்னால்

   கேட்கும் என் குறை அவர் செவிகள் தன்னால்


சாளுக்கிய வம்சமெனத் தற்பெருமை இல்லை

   சரியாம் இருவரின் அந்தஸ்து, பேதமில்லை

   

ஆளாளுக்கு என்னென்னவோ சொல்வதே உலகம்

   அயரோம், பாரதி தம்பதியர் எம் பின்புலம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Wednesday, February 12, 2025

சிறார்கள் கையில் கைபேசி வேண்டாம்

 ●०●०●०●०●०●०●०●०●०●०

     சிறார்கள் கையில்

 கைபேசி வேண்டாம்

●०●०●०●०●०●०●०●०●०●०


செல்ஃபோன் எனும் 

கையடக்க அரக்கனின்

கோரப்பிடியில் -

அது உருவாக்கிய 

மாயச் சுழலில்

சிக்கிய தன் தோழனை

மீட்க புத்தகத்தின்

துணையோடு

முயற்சிக்கும் சிறுவன்!


இவன் முயற்சி 

வெல்லட்டும்!

இந்த அவனியில்

இவன் போல பலர்

உருவாகட்டும்!!


சிறார்களின் கையில்

நூல்கள் தவழட்டும்

கைபேசிகள் சற்று 

விலகி வழி விடட்டும்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி


-----------------------------------

இதுவும் விடாத கருப்பு


எட்டாத தூரத்தில் உணவகம் இருந்தும்

   எவர்க்கும் கவலையில்லை இது உதவும்


பட்டன் போல் தட்டுவார், பாதை நோக்குவார்

   பத்து மணித்துளி கடந்தால் பதைபதைப்பார்


வட்டமாக அமர்ந்து உண்டோமே அது கனவா? 

   வாரிசாம் ஒன்று, அதுவும் இதன் பிடியிலா ! 


குட்டிச் சிறார் கையில் கொடுத்து விட்டோம் அணுகுண்டு

   கொள்ளை போயின அவரின் குறும்பு, விளையாட்டு


தொட்டுத் தொட்டுப் பேசிய சொந்தங்கள் எங்கே? 

   தொடும் தொலைவுக்கும் குறுஞ்செய்தியாம் இங்கே


பட்டான விழிகள் எல்லாம் பாழாய்ப் போகின்றன

   படிக்க வைத்த நூல்கள்   cell கள் அரிக்கின்றன


சொட்ட வியர்வை வங்கியில் சேர்த்த பணமெலாம்

   சொடுக்கிடும் நேரம் காணாமல் போகுதாம்


விட்டு விடாது தொடரும் இதுவும் ஒரு கருப்பு

   விரைந்து நம் குலம் பொசுக்கும் " செல் " நெருப்பு. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------------------------------

👍

அன்று தொலை பேசி

தொல்லை பேசி என்று 

அறியப்பட்டது.


"பேசித் தொலை" என்று கூறுவாரும் உண்டு.


இன்று அலைபேசியாக

புது உருமாற்றம்- காதில் வைத்துக்கொண்டு பேசியே அலைய வைப்பதாலோ!


இந்த " செல் " போன்களைப்பேணி

நூல்களைப் புறக்கணித்தால்

அவை " செல்"

அரித்துப்போகும்

அபாயம்😒


அன்று " ஹலோ கேக்குதா" என்று கதற 

வைத்த தொலைபேசிகள்!

இன்று காதுகளில் " தொங்கட்டான்களை"

மாட்டிக்கொண்டு பேசுவதால் கேட்பதில்

தொல்லையில்லை.


எதிரே பார்ப்போர்க்கு

தனக்கு தானே பேசிக்கொண்டு செல்லும் பித்தர்கள்என்று 

தோன்றலாம்.


இதெல்லாம் சரி-

அலை பேசி ஒரு தொல்லையா அல்லது

இல்லையா?!


பயன்பாட்டில் உள்ளது சுட்சுமம்!


இன்றைய பாதுகாப்பற்ற சூழ நிலையில் சிறார்களின்

நடமாட்டத்தைக் கண்காணிக்க;


இன்றைய அவசர உலகில் குடும்பத் தலைவன் விபத்தின்றி

அலுவலகம் சென்றானா என்று அறிய;


தனிமரங்களாக மோட்டுவளையை நோக்கும் முதியோர் நிலை அறிய


எனப்பல நன்மைகளைத்

தரும் கைக்கு அடக்கமான கருவி.


மூர்த்தி சிறிது எனினும்

கீர்த்தி பெரிது


இதை ஒரு வழித்துணையாக ஆள வேண்டும்; வாழ்க்கைத்

துணையாக அல்ல.


சிறார்களும் பதின்ம வயதினரும்அல்லவை நீக்கி நல்லவை காணச்

செய்வது பெற்றோர்களின் மற்றும் மற்ற மூத்த குடும்பத்தினரின்

(உடனுறைந்தால்)

கடமையாகும்.


முதல் கடமையாக முழுமையாக எழுதப் பழக்க வேண்டும்

Lol! Omg! எல்லாம்

நமக்கு எதற்கு ஐயா!

- மோகன்

---- ---------------------------------------------------


Monday, February 10, 2025

நானும் ரவுடிதான்

 *நானும் ரவுடிதான் (கவிஞன் தான்) 😱*

ஒரு தூசி தொட்டால் கூட

வெட்கப்பட்டு வேர்த்து சிவந்து விடுகிறது..    

*விழிகள்!*

- தியாகராஜன்

-----------------------------------------------------

இன்று

நகரத்தை சூழ்ந்திருக்கும்

தூசிப் பட்டாளத்தைப்

பார்த்தாலே விழிகள்

சிவக்கின்றன.

எல்லோரும் தாமரைக்கண்ணர்

ஆயினர்!

(தாம் அரைக்கண்ணால்

நோக்கி நோக்கி!)

- மோகன்

-----------------------------------------------


*பசுமை நினைவுகள்*

 *°*°*°**°*°*°*°*°*°*°*°*°*°*°*

*பசுமை நினைவுகள்*

°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*


சென்னை சென்ட்ரல் பக்கம்

செந்நிறக் கட்டடம் கம்பீரமாய் நிற்கும்

அல்லிக் குளம் அருகில் 

புத்தகங்கள் நடைபாதையிலும் விற்கும்


மூர் மார்க்கெட் வளாகத்தில்

கிடைக்காத பொருளே இல்லை

ஊரார் இனிப்பை மொய்க்கும் ஈக்களாய்

கடைகளில் புத்தகம் வாங்கா நாளுமில்லை


அந்தோ பரிதாபம் அவ்விடமே

இரவோடு இரவாக எரிந்து போனது

சென்னை நகரின் சிறப்பு ஒன்று

மண்ணோடு மண்ணாய் சரிந்து போனது.


அக்கினித் தேவன் தானே வந்தானோ

அக்கிரம செயலில் வந்து விழுந்தானோ

அகிலம் அறிய வாய்ப்பில்லை

அவனியில் இப்போது மூர்மார்க்கெட் இல்லை


ஆனாலும்

அந்நினைவுகள்

அக்கால

சென்னைவாசிகளுக்கு

பசுமையான நினைவுகளே!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

இதுதான் குழந்தை


உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், 

கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!


- தியாகராஜன்

------------------------------------------------------

இது மட்டுமா குழந்தை


நோகும் கால்கள் என தூக்க நினைப்போம்

   நோ நோ வேண்டாமென இன்னும் ஓடும்


வேகமாய் ஓடாதே விழுவாய் என்போம்

   விழுந்து முடிக்குமுன் இரத்தமும் வரும்


போகாதே அங்கே பூச்சி உண்டாம் என்போம்

   புழு ஒன்று கையில் துடிதுடிக்கக் காண்போம்


தாகமாய் இருக்கும் தண்ணீர் குடி என்போம்

   தட்டித் தண்ணீர் அதைக் கீழே கொட்டும்



கைபேசி வேண்டாம் கண்கள் சிவக்கும் என்போம்

   கையிலிருந்ததைக் காகமாய்க் கவ்வி ஓடும்


தைதை என குதிக்காதே தாமரைக் கால் நோகும் 

   தரையில் இருந்த கோலம் மாயம் மாயம்


நெய், பருப்பு சாதம் சக்தி வரும் என்போம்

   நெளியும் நூடுல்ஸ் தான் வேணும் அடமாம்


வெயிலில் போகாதே வியர்க்குரு வரும் என்போம்

   வியர்வையில் நனைந்து விளையாடி வரும்


 " இவையும் இன்னமும் தான் குழந்தை "


__  குத்தனூர் சேஷுதாஸ்

-------------------

குழந்தை சொன்னதை

கேட்கும் அல்லது கேட்காது..

பதின்ம பருவமோ

நம்மை

நோக்காது!

எது சொன்னாலும்

நோ( no)க் காது!

திட்டினாலும்

நோகாது!

- சங்கீதா

----------------------------


Thursday, February 6, 2025

அன்பு....

 நடைபயிற்சி நேரமது

அழையா தோழமையாக...

கொஞ்சம் அன்பு தேடி

சேர்ந்து வரும் நாயொன்று 

கடித்து விடுமென

என் வேகம் கூடும்...

புரிந்து விலகிச் செல்லும் 

அன்பு கிடைக்காத நாய்

வாழ்வின் எங்கோ ஓரிடத்தில் 

நாயாக நானும் இருந்திருந்தாலும் ...

கேட்பவருக்கெல்லாம் 

கிடைத்து விடுவதில்லை அன்பு...'


அமுதவல்லி

Wednesday, February 5, 2025

ஆதாயம் எங்கே?

 ஆதாயம் எங்கே? 


வாங்கிக் கொள்ளும் நேரம் வருவாராம் பலர்

   வறண்ட பின்னரும் உடன் இருப்பார் எவர்? 


தேங்கும் நீர்க் குளமதில் அல்லி, நீர்க்கோழி

   தெரியும் அதற்கு அவை அழையா விருந்தாளி


தாங்கும் கிளையில்தான் பறவையும் அமரும் 

   தவறியும் நாணலிடம் போகாதாம் ஏதும். 


வாங்க வாங்க என வரவேற்கப்படும் பணம்

   வயிறு ஒட்டினால் உலகு வாசலில் நிறுத்தும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

என்ன உலகம்

 என்ன உலகம்

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை ஒழுங்கில்லாதவன் னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், லூஸு எனச் சொல்லுகிறதே!

- தியாகராஜன்

------------------------------------------------

சட்டை பட்டனை 

சட்டை செய்வோரை

அசட்டை செய்தால்

கிடைக்கும் மனநிம்மதி

- அமுதவல்லி

--------------------------------------

பித்தானை சரியாகப்

போடாதவன் பித்தன்!

- மோகன்

--------------------------------------

இதுதான் உலகம்


சட்டை இல்லாதவனைச் சட்டை செய்யாதாம்

   சட்டையோடு கோட்டு போட்டால் தலைக்கனமாம்


குட்டக் குட்டக் குனிந்தும் கொள்ளும்

   கோபம் வர பாரதியாய் மீசை முறுக்கும்


கட்டை பிரம்மசாரியா ? கையாலாகதவன் எனும்

   கல்யாணமானவனைக் கண்டு கைகொட்டும்


சொட்ட நனைந்த பின்னர் குடை வேணுமா? கேட்கும்

   சொல்லிக் கொண்டே போகலாம் இதுவே உலகம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


Tuesday, February 4, 2025

வல்லரசுக் கனவு

 ●०●०●०●०●०●०●०●

வல்லரசுக் கனவு

●०●०●०●०●०●०●०●


கல்வியும் நிதிக்காய் காத்திருக்க

கலையும் அதனோடு சேர்ந்து நிற்க

மருத்துவத்தின் கண்கள் பூத்திருக்க

விஞ்ஞானம் நிதியின்றி வேர்த்திருக்க


உலக நாடுகள் பற்பலவும்

வல்லரசு எனும் கனவிலே

போருக்காக பெருநிதி ஒதுக்கி

ஆயுதக் குவிப்பு செய்திடுமாம்


மனித இனம் தோன்றிய முதலாய்

ஒருவரை ஒருவர்

அழித்து வாழ்தல்

அவற்றினது அரக்க குணமாம்


அரக்கத் தனம் மேலோங்கின்

இரக்க குணமோ

ஒழிந்திடுமே

உரக்க மறுக்க

மனமில்லை

கிறுக்கு புத்தி

களம் ஆடிடுமே!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Monday, February 3, 2025

பனி படர்ந்ததோர் அழகிய காலை

 பனி படர்ந்ததோர் அழகிய காலை

பறவைகளின் கானம் கீச் கீச் என ஒலிக்க

இயற்கையில் மெய்மறந்த ஒரு கணத்தில் 

இனிய நனவைக் கலைத்துச் சென்றது

புகை படர்ந்த வாகனம் ஒன்று

புது ஒலிப்பானின் கீய்ங் கீய்ங் என்ற ஒலியோடு...

- அமுதவல்லி


அட... கட்டிடங்கள் மறைந்த மாயமென்ன?

வானம் பூமியில் இறங்கிவிட்டதோ???!!!!

அல்லது

பனிக்கு பணிந்து

கட்டிடங்கள் கறைந்து போனதோ??!!! 

மேகமும் பனியைப் 

போர்த்திக் கொண்டதோ?

வானம் தன் வண்ணத்தை

இரவல் கொடுத்ததோ???!!!


--------------------

ஏழு குதிரைகள் பூட்டிய

ரதத்தில் பகலவன்

ஊர்வலம்...(இன்று ரதசப்தமி)

எல்லா பனியும்

அடுத்த குளிர்காலம்

வரும்வரை எங்கே வசிப்பது என்று விடியற்காலை

மாநாடு போட்டதோ?


- சாய்கழல் சங்கீதா

-------------------------------------

மனிதன் இயற்கையை

சீரழிப்பது கண்டு

இயற்கையன்னை

மனம் வெதும்பி விடும்

பெருமூச்சே 

பனிமூட்டமாய்

காட்சிதனை மறைக்கிறதோ!


கண்மூடி

வெறியாட்டம் போடும்

மனிதனுக்கு

எச்சரிக்கைக் கொடுக்கிறதோ!?

- ஸ்ரீவி

----------------------------------------------

இனி இவ்வாறே போலும் ! 


என்ன ஆச்சு இன்று இந்த சென்னைக்கு? 

   எழவில்லை இன்னும் எட்டு மணி ஆச்சு


சன்னமாய் எங்கும் மூடுபனிப் போர்வை

   சந்தித்த மார்கழியும் இதுபோலில்லை


தின்ன இரை தேடப் போக முடியவில்லை

   திகைக்கும் மைனாக்கள் புரியவில்லை


கன்னத்தில் கை வைத்தக் காகம் பேசும்

   " கலிகாலம் இனி இவ்வாறே போலும் "


__  குத்தனூர் சேஷுதாஸ்



Saturday, February 1, 2025

அண்டம்

 கண்முன்னே ஒன்று


அண்டம், பேரண்டம் அலசி ஆய்ந்தோம்

   அதிலுள்ள அழியாத் துகள்கள் வியந்தோம்


கண் முன்னே ஒன்று கடந்து போகிறோம்

   கத்தரி இலையை ஒத்ததாம் அதுவும்


வண்டி வண்டியாய்ச் சத்துக்கள் கொண்டது

   வயிற்று உபாதைக்கு மிகவும் நல்லது


பெண்கள் பிரச்சினை பெரிதும் தீர்க்கும்

   பிரியா இருமல், சளியும் தொலையும்

   

குண்டானவரின் கொழுப்பைக் குறைக்கும்

   குழந்தைக்குப் பழக்க கூடும் ஆரோக்கியம்


உண்டது எதையும் செரிக்க உதவும்

   உள்ளது வைட்டமின் B உம், C உம்


சண்டை போடும் நோய் எதிர்ப்புச் சக்தி

   சத்தியமாய் உளது இதில் தான் மிகுதி


சுண்டைக்காய் அது தான் இது வரை சொன்னது

   சுறுசுறுப்பாக  வைக்கும் பாட்டியும் சொன்னது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


தண்டம் தொடர்கிறது....



அண்டையில் உள்ள சுண்டையை விட்டு அண்டம் அகழ்ந்தோமே

தண்டமாய் இருந்தாலே போதுமே!

தண்டங்களைத் தாங்கும் அண்டமோ

பிரம்மாண்டம்!

பிண்டமாய் உருவாகி

ஊண் பிண்டங்களால்

ஊன் வளர்த்து 

அண்டத்தையே ஆள நினைக்கின்ற துண்டங்களாக்கும் 

தண்டங்களால்

பிற தண்டங்களுக்கும்

பிற இனங்களுக்கும் கண்டம்!!!😳


- சங்கீதா


-----------------------------------

அண்டம்

பேராண்டம்

தண்டம்!

--------------

அண்டம் என்றால் வித்து எனவும் பொருள்

கொள்ளலாம்-

சிறிய வித்துலிருந்து

பெரிய உருவாக்கம்-

ஆலமரம் ஓர் உதாரணம்.


பேரண்டம் என்றால்

பெரிய அண்டம், பல அண்டங்களைக் கொண்டது.


தண்டம் என்பது இவைகளோடு    ஒத்து ஒலித்து('Rhyming' )

ரசிக்க வைக்கிறது.


ஆனால் இந்த "தண்டம்" வீண் அல்ல.

தண்டம் என்றால் மர தடி அல்லதுகைத்தடி எனப் பொருளுண்டு.


இதை செங்குத்தாக "பிடிப்புகளின்றி"

நிற்க விட்டால் அப்படியே கீழே விழும்

-அகங்காரமின்மயை ,குறிக்கும்.


" தண்டம் சமர்ப்பிப்பது" என்பது

ஆண்டவனுக்கோ அல்லது குருவுக்கோ

"நெடுஞ்சாண்கிடையாக" அகங்காரமின்றி

உடலின்எட்டு அங்கங்களும் தரையில்

படும்படி விழுந்து வணக்கம் செலுத்துவது.


- மோகன்

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...