Friday, February 14, 2025

உலக காதலர் தினம்

●०●०●०●०●०●०●०●०

காதல் செய்வோம்

உலகத்தீரே!

●०●०●०●०●०●०●०●०


கார்மேக மழை 

போலாம் காதல்.

பார்புகழும் உணர்வு

ஆனதாம் காதல்


இயற்கையன்னையின்

எழில்மிகு கோலம்,

நமக்காக எதையும்

செய்யும் குடும்பத்தார், 


மயக்கி இனிமையூட்டும்

மழலைச் செல்வம்,

தோள் கொடுக்கும்

நண்பர் குழாம் 


தோழர்தம் தோழமை

தமிழ்மொழியின் இனிமை

பாரதத்தின் பெருமை

மனங் கவரும் கேண்மை


என காதலிக்க 

நீளப் பட்டியல் உண்டாம். 

*ஆதலால்                 காதல் செய்வோம் உலகத்தீரே!!*


காதலர்தின நல் வாழ்த்துகள்!


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

---------------------------------------------------- 

உலக காதலர் தினம்

14/02/2025

---------------

இன்று.


நாகரீக உலகில்

வருடம் ஒரு நாள்

காதல் கொண்டாடப்படுகிறது


        

           எப்படி?


சாக்கலேட்டுகள், மலர்

பூங்கொத்துகள்,  விலை உயர்ந்த உபயோகமில்லாத பரிசுகள்,அரை

இருட்டில் நடனங்கள்

என்று...


நம்  பாரம்பரிய பண்பாட்டில்

காதல் தினமுமே

போற்றப்படுகிறது.


எப்படி?


மகிழ்ச்சியோ துக்கமோ, சேர்ந்து பகிர்தல்,கண்ணோடு கண் நோக்கியே செய்திப்பரிமாற்றங்கள், சிறு சிறு அன்பு சமிக்ஞைகள், சண்டைகள் சமரசத்தில் முடியமே தவிர மனமுறிவில் அல்ல, 

என்று ,பலப்பல விதங்களில் காதல்

பேணப்படும்.



விலை உயர்ந்த பரிசுகளே தேவை இல்லை," செம்புலப்பெயல் நீர்

போல கலந்த அன்புடை நெஞ்சங்களுக்கு"!


மணத்தால் இணைந்த காதலர்கள, மனத்தால் மட்டும் இணைந்த காதலர், என்று யாவருக்கும் வாழ்த்துகள்.🌺🌺❤️


காதல் காதல் காதல்

காதல் போயினும்?


போனால்தானே!


- இ.ச.மோகன்

----------------------------------------

காதல் பற்றி கவிதை

எழுத எண்ணும் 

போதெல்லாம் 

பேனா "மை"

கசிந்து விடுகிறதே!

பேனா " மை" க்கு

காகிதக் காதலன்

மீதான "மை" யலோ????

காதலாகிக் கண்ணீர்

மல்கிக் கசிந்ததோ???




மன ஓட்டம்...

அடுத்தமுறை ஜெல் அல்லது ரீபில் பேனா

உபயோகித்துப் பார்க்க வேண்டும்..


- சாய்க்கழல் சங்கீதா

----------------------------------------------------------

கையில் பூங்கொத்து..

வாயில் 🍰உனக்கு🙃 

அவளை நொடியும் நீங்க மாட்டேன் எந்நேரமும் தென்றலாய் தீண்டுவேன்..

கண் சிமிட்டல் மட்டுமில்லை உலகையே மறப்பேன்.. 

தீரா காதல் கைபேசி மீதோ...🤔


கண்ணோடு கண் நோக்குவதாம்... செய்தி பரிமாற்றமா... முகத்தைக் கூட யாரும் பார்த்து கொள்வதில்லை...😂😂


- சுல்தானா


----------------------------------------

நாள்தோறும் " காதலர் தினம் "


நாள்தோறும் கொண்டாடுகிறோம் காதலர் தினம்

   நானும் மனைவியும், இல்லை (ஒருநாள்) கஞ்சத்தனம்


தோளோடு தோள் உரசும் வெளியே செல்வோம்

   தொட்டுத் தொட்டே அடிக்கடி பேசவும் செய்வோம்


வேளுக்குடி உபன்யாசம் கேட்கும் போதும்

   வேறு வேறாய் இல்லை சேர்ந்தே அமர்வோம்


 " வாள் இரண்டு எதற்கு முகத்தில்?" கேட்பேன்

   வாலை, மீசையை நறுக்க பதிலும் கேட்பேன்


தேளும், பல்லியும் போல் சண்டை இராது

   தேவையிலா வாதப்போர் அறவே கூடாது


கேளாது செவிகள் மனைவியைக் குறை சொன்னால்

   கேட்கும் என் குறை அவர் செவிகள் தன்னால்


சாளுக்கிய வம்சமெனத் தற்பெருமை இல்லை

   சரியாம் இருவரின் அந்தஸ்து, பேதமில்லை

   

ஆளாளுக்கு என்னென்னவோ சொல்வதே உலகம்

   அயரோம், பாரதி தம்பதியர் எம் பின்புலம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...