Sunday, February 16, 2025

ஆதலால் பேசுவோம் !

 ஆதலால் பேசுவோம் ! 


வேங்கை அது வாய் திறந்து பேசும் வரை

   வேடனவன் சொல்லே ஆகும் உண்மை 


ஆங்கிலத்தில் ஒன்றுரைத்தால் ஆஹா என்பார்

   அழகுத் தமிழில் அதையே அலட்சியம் செய்வார்


தூங்கும் சிங்கம் அது யார் கவனம் ஈர்க்கும்

   துள்ளியோடும் மான், முயலே பேசப்படும்


வாங்கக் குடம் நிறைக்கும் வெள்ளைப் பசு அது

   வண்ணத் தமிழில்  கோதையால் வள்ளலானது


மூங்கிலாய் இருக்கும் வரை யார் சீண்டுவார்? 

   மூன்று, நான்கு துளை வழி பேசக் கொண்டாடுவார்


தாங்குவார் மேல் சுமையை மேன்மேலும் ஏற்றும்

   தண்டுவடம் தப்பிக்க பேசித் தான் ஆகணும்


ஓங்கித்  தென்னையாய் நாம் உயர வேண்டாம்

   ஒரு குயிலாய்ப் பேசினால் பேசப் படுவோம்


ஏங்கிக் கொண்டிருந்தால் அதுவே சுமையாம் 

   என்னைப் போல் கவிதையில் கொட்டித் தீரும் ! 


__  குத்தனூர் சேஷுதாஸ்


------------------------------------------

இதயம் துடித்த சத்தம்

யாருக்கும் கேட்கவில்லை..

நிசப்தம்!


இமைகள் மூடிய சத்தம்

காதுகளுக்கு எட்டவில்லை..

நிசப்தம்!


பூக்கள் மலர்ந்த சத்தம்

வண்டுகளேனும் கேட்டிருக்குமோ?

நிசப்தம்!


மனம் பேசுவதையெல்லாம்

வாய் மொழிவதில்லை!

மனதின் நிசப்தம்...

மெளனம்!


மெளனமும்  

நிசப்தமாகிவிட்டால்

மோனம்??


வாய்ச்சொல் விமானம்

ஏறாமல் காக்க..

வேண்டும் நிதானம்!

எல்லாம் தெரிந்தும்

வாய்க்கோ

வாய்க்கு வந்ததையெல்லாம்

பேசுவதே பிரதானம்😁

வாய் உள்ள பிள்ளை

பிழைக்கும்..

இதுவே கணேசன் ஐயா 

சொல்லும் சமாதானம்!!!😀


- சாய்கழல் சங்கீதா


-----------------------------------------------

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...