ழகரக் கவியரங்க கவிதைகள்
கவியரங்கத் தலைவர்: (ஸ்ரீவி)
நற்றுணையாவது நம்
தமிழே
நற்றமிழ் என்றும் நம் உறவே!
கார்மேகம் கண்டிட்டால் மயில்களுக்குக்
கொண்டாட்டம்
கவியரங்கம் என்றாலோ கவிகளுக்குக்
கொண்டாட்டம்
தோகைமயில் பார்த்திட்டால் பார்த்தோருக்கு
ஆனந்தம்
கவிமழையில் நனைந்திட்டால் கேட்போருக்கு
ஆனந்தம்
கொண்டாட்டமும் குதூகலமும்
இவ்வரங்கை நிறைக்கட்டும்
இரசிப்போரின் கரவொலியால்
இவ் அவையே
அதிரட்டும்
*********************************
காவிரியின்
கரையினிலே
பூவிரியும்
கவியரங்க
மேடையிலே
பாவிரியும்
பூவிரியும்
வேளையிலே
மணங் கமழும்
பாவிரியும்
வேளையிலே
மனம் மகிழும்
மனம் மகிழ
வந்திருக்கும்
அவையோரே
அகம் மகிழ்ந்து கூறுகிறேன்
உமக்கு எமது முதல் வணக்கம்.
*********************************
கவியரங்கம்
சிறந்திடவே
நம்மிடையே
சங்கத்தின் அழைப்பெற்று வந்துள்ள
சீர்மிகு சிறப்பு விருந்தினர் இருவருக்கும்
கரம்கூப்பி சொல்கின்றோம் நம் வந்தனம் .
தமிழ்த்தாயின் ஆசி பெற்று
தரணியெங்கும் புகழ் பெற்று
ஆல விருக்ஷமாய் வளர்ந்திருக்கும்
ஆம் . .. விருக்ஷமாய் வளர்ந்திருக்கும்
அழகிய சிங்கர் ஐயாவிற்கு
கூறுகிறோம் சிறப்பு வணக்கம்
தன் படைப்பாக்கத் திறமையினால்
சூரிய தொலைக்காட்சியினில்
ஆமாங்க . ... சன் டிவி யில்தான்
சுந்தரி எனும் நெடுந் தொடரை
படைத்தளித்துக் கோலோச்சும்
பாரதியின் புதுமைப் பெண்
சுஜாதா அருண் கோபால்
அவர்களுக்கும் சிறப்பு வணக்கம் .
இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு .
வங்கியில் பணி செய்து
படைப்பாளிகளாய் உருமாறி
வெற்றி உலா வருபவர்கள் .
நம் நிகழ்ச்சிக்கு சிறப்பு தருபவர்கள் .
*********************************
மனம் மகிழ
வந்திருக்கும்
அவையோரை
கவி பாடி
களிப்புறச்
செய்யவுள்ள
எனதருமை
கவிஞர்கட்கு
தமிழ் வணக்கம்.
*********************************
தமிழன்னையின் தாள் பணிந்து
மகாகவி பாரதியை
மனதில் நினைந்து
அவையோரை
அன்புடன் வணங்கி
கவியரங்கத்தைத்
துவக்குகிறேன்.
*********************************
கவியரங்கம் வந்த கதை
எட்டாயிரம் மேடை கண்டு ,
எட்டாத உயரம் சென்று
உயரத்திலே நின்றாலும்
அல்லும் பகலும் இங்கே
சங்க வளர்ச்சிக்காய் சிந்திக்கின்ற
நம் நிதிச் செயலர் சாய் ராம்
ஐயாவோடு நடந்தது
ஓர் உரையாடல்
கவியரங்கம் நடத்துதல் பற்றி..
உரையாடல் முடிந்து இல்லம் ஏகினேன்
தமிழ்ச் சங்கப் பணி முடித்து
தண்ணிலவு ஒளி சிந்தி
தடம் பதிக்கும் வேளையிலே
தனியாக நான் இருந்தேன்.
நித்திரை வந்து எமை சூழ
நிம்மதியாக உறங்கிடவே
நானுந்தான் தயாரானேன்
நறுமணப் புகை
நாசியைத் துளைத்தது.
மங்கல இசை எங்கும் ஒலிக்க
நீராருங் கடலுடுத்த எனும்
தமிழ்ப்பண்ணும் சேர்ந்தொலிக்க
புன்னகை தவழும் முகத்தோடு
மகிழ்வு பொங்கும்
அகத்தோடு
தமிழன்னை நின்றிருந்தாள்
அவள் கரம் பற்றி
அவளது தலைமகன்
பாரதியும் பாலகனாய் நின்றிருந்தான்.
கரங்கள் நடுங்க
தொழுதபடி
கண்கள் பனிக்க
அழுதபடி
இருவரையும் சிரந் தாழ்த்தி
வணங்கி நின்றேன்.
உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தியபடி
தடுமாறி பேசலானேன்
அன்னையே! உன் பணி செய்ய
உன்னையே நினைந்துருகும்
அன்பர்கள் ஒன்றிணைந்து
பூர்வாவில் சங்கமமைத்தோம்.
உன்னருள் பெற்ற
பாரதியின் பெயர் வைத்தோம்.
பதினைந்து திங்கள்
உருண்டோடின
பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறின
மெல்லிசையில்
பாட்டிசைத்தோம்
பட்டி மன்றத்தில்
களமாடினோம்
நூல் அறிமுகமும்
செய்திட்டோம்
பாரதியின் பாடலைப் பாடி ஆடினோம்
சிறார்களுக்கென ஒரு நிகழ்ச்சி
மகளிருக்கென
ஒரு நிகழ்ச்சி
குதூகலமாய் நடத்தி
முடித்திட்டோம்
இலக்கிய உரையும்
ஆற்றிட்டோம் -
என்று பணிவோடு
நான் பகன்றேன்.
ஆம் மகனே! யாமறிவோம் அனைத்தையும்!!
மகிழ்ச்சியுற்றேன்
வாழ்த்துகிறேன் -
என்றாள் புன்னகைத்தபடி தமிழன்னை
பாரதியும் மீசையை முறுக்கிய படி,
"வாழிய நற்றமிழ்!
வாழிய தமிழ்த்திரு நாடு" - என்றுரைத்தான்.
மனம் மகிழ உணர்ச்சிப் பெருக்கில்
"அன்னையே!
உன் புகழ் பாட ஒரு கவியரங்கம் நடத்திட
ஆசையுண்டு!
அருளாசி உண்டா தாயே"- என
இறைஞ்சினேன்.
நிச்சயமாக மகனே
சிறப்பாக நடத்துங்கள்
எனக்கு மகுடம் போன்ற
ழகரத்தை முன்னிருத்தி நடத்துங்கள்
என அருள் பாலித்தாள்.
மகாகவியும் உற்சாகமாய்த் தலை அசைத்தான்
மேலும் அவள் சொன்னாள்
மெல்லிசை நிகழ்ச்சி எனில்
ஆயிரம் முறை கேட்ட பாடல்
பாடகர் ஒருவர் பாடிடுவார்
ரசிப்பது அனைவருக்கும் எளிது
பட்டிமன்ற மேடையென்றால்
சொற்போரோ களை கட்டும்
குதூகலமாய் ரசிப்பது எளிது.
உரைவீச்சு என்றாலோ
ஓரிரு நிமிட
கவனச்சிதறல்
ரசிப்பதற்கு தடையாய் இராது.
ஆனால் கவியரங்கம் என்றாலோ
உன்னிப்பாய் கவனித்தலும்
ஒவ்வொரு சொல்லாய்
உள்வாங்குதலும்
மிக மிக அவசியம் மகனே!
என் பிள்ளைகள் எல்லோருக்கும்
நான் சொன்னதாய்
வலியுறுத்து
கவனச் சிதறல் ஏதுமின்றி
கவிபாடும் கவிஞர்
மனமது நோகாது
செவிகளைக் கூராக்கி கேட்கச் சொல்.
தங்களுக்குள்ளாக
உரையாடுதலைத் தவிர்க்கச் சொல்.
சலசலப்பு ஏதுமின்றி அமைதியாக கவனிக்கச்
சொல்.
கவிநயம் கவர்ந்திட்டால்
கைதட்டி மகிழச் சொல்.
படைப்பாளிகளுக்கு கரவொலி போல்
உயரிய சன்மானம்
ஏதுமில்லை
மனம் மகிழும் தருணத்தில்
உற்சாகமாய் கரவொலியை எழுப்பச் சொல்.
இது தமிழன்னையின்
கூற்று என
உரக்கச் சொல் -
என்றிட்டாள்
முண்டாசுக் கவிஞனோ
முந்தி வந்து
சொல்லலுற்றான்.
அன்னையே..
உன்னடி போற்றும்
பூர்வா குடிகள்
தமிழ் மொழியின்
ஆர்வலர்கள்
உன்னையே சுவாசிப்பவர்கள்
கண்ணுங் கருத்துமாய்
கவிதைகளை கவனிப்பார்கள்
கவலையுறாதே
தமிழ்த் தாயே -
என கம்பீரமாக
முழங்கினான்.
*********************************
தமிழ்த்தாயின்
கூற்றினை மறவாதீர்
பாரதியின் நம்பிக்கையை உடைக்காதீர்.
குண்டூசி விழுந்திடினும்
ஓசை கேட்கும் அளவிற்கு அமைதி காத்திடுவீர்.
கவனமாக கவிதைகளைக் கேட்டிடுவீர்.
தலைவராக என் தாழ்மையான விண்ணப்பமிது.
தமிழ்த்தாயின் வாழ்த்தோடு
பாரதியின் ஆசியும் உடன் சேர
கவியரங்கம் நடத்திட விழைந்தோம்
அதனை நோக்கிப் பயணித்தோம்.
நிர்வாகக் குழுவில் ஒப்புதலும்
பெற்றிட்டோம்
பற்பலக் கேள்விக் கணைகள்
பல திசையிலிருந்தும்
பாய்ந்தன நமை நோக்கி.
கவியரங்கம் - நடத்துகிறதா நம் தமிழ்ச்
சங்கம்? - என்றொரு கேள்வி
கவிஞர்கள் உள்ளனரா? - என்றொரு கேள்வி
கவியரங்கம் காண ஆர்வமுடன்
வருவரா மக்களெல்லாம்? - என்றொரு கேள்வி.
இவ்வாறெல்லாம் கேள்விகள் துளைத்தெடுத்தன.
அவற்றுக்கெல்லாம் விடையாக
இதோ.. நடக்கிறது
சிறப்பான கவியரங்கம்.
அரங்கம் மகிழ கவிஞர்கள் படைத்தளிக்க,
அரங்கம் நிறைந்த
உறுப்பினர்கள்
அக்கேள்விகளுக்கு
விடையளித்து விட்டனர்.
கவிதையை எனில் யாதென
விளக்கிட இயலுமோ
இக்கேள்வியும் எழத்தானே செய்யும்
கவிதை என்றால் என்ன
இக்கேள்வியும் எழத்தானே செய்யும்
கவிதைக்கு நன்னூல் சொல்லும்
சூத்திரந்தனை முதலில் பார்ப்போம்:
"பல்வகைத் தாதுவின்
உயிர்க்குடல் போற்பல
சொல்லாற் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்"
(நன்னூல் பெயரியல்,.
268 - பவணந்தி முனிவர்)
அதாவது மனித உடலை
குருதியும், நிணமும், எலும்பும்
நரம்பும் தசையும்
கட்டமைப்பது போல
கவிதையை சொல்லும்
பொருளும்
கட்டமைக்கின்றனவாம்
கவித்துவமும் கவிநயமும்
இருப்பதே கவிதை எனில்
அவற்றின் விளக்கம் என்ன
இருக்கிறேன் நானென
வருகிறான் பாரதி பொருள் சொல்ல
"தெளிவுறவே அறிந்திடுதல்,
தெளிவுதர மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல
காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல்
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
சொல்வதையும் சற்றே பார்த்திடுவோம்
"கலையென்றால் உணர்ச்சிகளைக்
கவர வேண்டும்,
களிப்பூட்டி அறிவினைப்போய்க் கவ்வ
வேண்டும்,
கவிமன்னர்கள் கூறிய விளக்கம் சொன்னீர்
கவியரங்கத் தலைவராய் நீவிர் என்
சொல்கிறீர்
என்கின்ற உமது மனங்களின் குரல்
என் செவிகளை எட்டத்தானே செய்கிறது
இமயமலைகள் கூறிய பின்
இந்தக் கூழாங்கல்லின் கூற்று எடுபடுமோ
இருப்பினும் கூறுகிறேன் கேளீர் . .
கவிதையெனில் யாது
கேட்கையில் களிப்புற வைப்பது
கவிநயத்தைத் தன்னகத்தே
கொண்டிருப்பது
கற்பனை வளம்
பெருக்கெடுத்து
ஓடுவது
நயமிகு சொல்லாட்சியால் சொக்க வைப்பது
சீரிய சிந்தனையை
செறிவுடன் தருவது
கருத்து வளம்
மிகுந்திருப்பது
நற்செய்தியினை
நளினமாய் நவில்வது
இவையெலாம்
கூடி வரின்
கவிஞர் இதைப்
பாடி வரின்
அதுவே கவிதையாம்.
*********************************
தீந்தமிழில் சொல்லெடுத்து
வைர வரிகளாய்க்
கோத்தெடுத்து
நல்ல கருத்தை
தெரிந்தெடுத்து
கற்பனை வளத்தை
உடன் சேர்த்து
பாமாலையாய்
தொடுத்தெடுத்து
தமிழன்னைக்குச்
சூடுதலே கவிதையாம்.
அவையோருக்கு
வணக்கம் சொன்னோம்
கவிதைக்கு ஒரு
விளக்கம்
சொன்னோம்.
கவியரங்கத் தலைப்பு
எதுவென்று
தற்போது சொல்வோம்.
ழகரக் கவியரங்கம்:
தமிழன்னை ஆசி வழங்கி
மகாகவி வழிமொழிந்த
ழகரமே கவியரங்கத் தலைப்பாம்
ழகரத்தின் சிறப்புக் கேட்பின்
நமக்கெல்லாம் மலைப்பாம்
*********************************
ழகரத்தின் சிறப்பு பார்ப்போம்
தமிழுக்கு ழ அழகு
நம் நாவு சுழலுதலே ழவுக்கு அழகு
சுழலாது போனாலோ
இருக்கும் சரிவு
உச்சரிப்பே
அதன் உயிர் நாடி
சரியாய் உச்சரிப்போம்
தமிழின் புகழ் பாடி
"எழுத்தெனப் படுவ அகர
முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப"
வரையறுத்தது நம் தொல்காப்பியம்
முப்பதும் இணைந்து உயிர் மெய்கள்
வந்தனவே
அவற்றினுள்
ழகரம் ஒரு
சிறப்புதானே
தமிழின் சிறப்பு ழகரம்
அதுவே மொழியின் சிகரம்
வேறெந்த மொழியும் பெற்றிடா சிறப்பு
சரியாய் உச்சரிப்பது
நமது பொறுப்பு
ழகரம் தமிழின் இதயமாம்
இதுவே தமிழர்
பெருமையாம்
முக்கிய சொற்களில்
ழ'வே வருமாம்
தமிழுக்கு அது அழகு தருமாம்
மொழிகளுக்கு
தமிழே இமயம்
தமிழுக்கு
ழகரமே இதயம்
தமிழன் தன் வாழ்வின்
முக்கிய நிலைகளைக்
குறிக்கும் சொற்களில் எல்லாம் ழ
வைத்தான்
வாழ்க்கை எனும் சொல்லில்
ழகரம் வைத்தான்
வாழ்விற்குத் தேவை உணவு
உணவு தருவது உழவு
உழவில் ழகரம் வைத்தான்
உழவிற்குத் தேவை மழை
மழையில்
ழகரம் வைத்தான்
தன்னைக் காக்க தீ வளர்த்தான்
தீயினை தழல் என்றான்
அழல் என்றான்
தழலிலும் அழலிலும்
ழகரம் வைத்தான்
கதிரோனின் கதிரொளியில்
தன் உடன் எப்போதும்
வரும் நிழல் பார்த்தான்
நட்பிற்கு உருவகப் படுத்தினான்
நிழல் என்பதிலும்
ழகரம் வைத்தான்
தன் வாழ்வு செழிக்க தொழில் செய்தான்.
தொழிலில்
ழகரம் வைத்தான்
இயற்கையின் அழகை ரசித்தான்
அதன் எழிலைப் போற்றினான்
அழகு எழில் இரண்டிலும்
ழ வைத்தான் .
வாலிபத்தில் மணம் முடித்தான்
மகிழ்ச்சியாய் வாழ்ந்தான்
மகிழ்ச்சியில்
ழகரம் வைத்தான்
மணவாழ்வில் குழந்தை பெற்றான்
குழந்தையை குழவி என்றான்
குழந்தை குழவி இரண்டிலும்
ழகரம் வைத்தான்
குழந்தை பேசும்
மழலை கேட்டான்
மழலையில்
ழகரம் வைத்தான்
இனிமையான இசை தரும்
யாழிலும்
குழலிலும்
ழகரம் வைத்தான்
அவை இரண்டும்
மழலை முன்
தோற்றதைப்
பார்த்தான்.
வாழ்க்கையை நெறியோடு வாழ
நீதி சொன்னான்
ஒழுக்கத்தோடு வாழச் சொன்னான்
ஒழுக்கத்தில்
ழகரம் வைத்தான்
ஒழுக்கமே வழக்கமானால்
நற்பழக்கம்
வருமென்றான்
வழக்கத்திலும்
பழக்கத்திலும்
ழகரம் வைத்தான்
புகழோடு வாழச் சொன்னான்
புகழிலும்
ழகரம் வைத்தான்
அத்துனை சிறப்பு வாய்ந்த
ழகர மே இக்கவியரங்கத்
தலைப்பாகும்
*********************************
கவிஞர்களின் எண்ணிக்கை பனிரெண்டு
இவர்களால் இம்மேடை சிறக்கப்
போவது இன்று
கவியரங்கம் புகழ்
பெறும் உங்கள்
மனங்களை வென்று
காதாரக் கேட்போர்
கரவொலி எழுப்பி
மகிழ்ந்தால் நன்று
கைகள் கரவொலி எழுப்பட்டும்
கைபேசிகள் கொஞ்சம் உறங்கட்டும்
*********************************
கவிஞர்களுக்கான தலைப்புகள்:
உழல்
சுழல்
தழல்
விழல்
நிழல்
எழில்
அகழ்
குழல்
புகழ்
கழல்
உழவு
மழலை
கவிஞர்களின் அணிவகுப்புத் தொடங்குகிறது.
*********************************
தமிழன்னை அருள் பெற்று
தீந்தமிழில் சொல்லெடுத்து
நல்ல நல்ல கவிதைகளை
பாமாலையாய்க் கோத்தெடுத்து
கவிஞர்கள் இங்கே
வாசித்தளிக்கும்
வேளையிலே
கைகள் இங்கே
கரவொலி எழுப்பட்டும்
கைபேசிகள் கொஞ்சம் உறங்கட்டும்
அன்பர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்
எங்கள் படைப்புகளுக்கு மதிப்பெண்
போடாதீர்
மதிப்புரையும் வழங்காதீர்.
மனமகிழ்ந்து நிறைவாக இருப்பின்
கைதட்டி உற்சாகம் தாருங்கள்
பிழையேதும் கண்டால்
பொருத்தருளுங்கள்.
மீண்டும் நினைவூட்டுகிறேன்:
உங்கள்
கைகள் கரவொலி எழுப்பட்டும்
உங்கள்
கைபேசிகள் சற்றே
உறங்கட்டும்
*********************************
கவியரங்கத் தலைவர்:
1)
கணேசன் - சுழல்
இவர் பெயரைச் சொன்னாலோ
பலருக்கும் இங்கே தெரியாது
புனைபெயரைச் சொல்லி விட்டால்
தெரியாமல் எவருக்கும் இருக்காது.
எதையொன்றைச் செய்தாலும்
கணேசனை வணங்கித் துவங்கிடுவர்
கவியரங்க முதல் கவிதையை
கணேசனே வாசித்துத் துவங்கிடுவார்.
கணேசன் யாரெனப் பார்ப்போரே
குத்தனூர் சேசுதாஸ்
தெரியாதோ உமக்கு
குத்தனூரார் கவிதை படைப்பார்
முத்து முத்தாய் படைத்து அளிப்பார்.
சத்தான கருத்துகளை உவகையுடன் உவந்தளிப்பார்.
இவருக்கான தலைப்பு உழல்
உழல் எனில் எதிர்மறைச் சொல்லென்று
நினையாதீர்
உழலுக்கு பல பொருள் உண்டாம்
யாவை அவை என அறிந்திட விழைவோரே
அவை பற்றி இந்த
அவையிலே கூற
கவிதையோடு வருகிறார்
கணேசன்.
கணேசரே வாருமைய்யா
நற்கவிதைத் தாருமைய்யா
சங்கத்துக்குப் பெருமை சேருமைய்யா
நும் புகழ் மேலே
ஏறுமைய்யா
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
உழல் பற்றி உத்தமமாய்
கவிதை சொன்னார்
தீந்தமிழில் உழல்வதே
பேறு பெற வழியென
திகட்டாத மொழியினிலே
உவகையோடு
நன்கு சொன்னார்
உழலுதலின் பல்வேறு
பொருளும் சொன்னார்
தமிழ் மொழியில் உழலுதலே
உய்வு தரும் வழியென
உவந்து சொன்னார்
நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
2)
அமுதவல்லி - சுழல்
தமிழுக்கும் அமுதென்று பேர்
இவருக்கும் அமுதென்று பேர்
அமுதத்தைத் தன் பெயரில் வைத்து
குமுதத்தை மலர்த்தும்
நிலவைப் போல
தீந்தமிழ் சொல்லெடுத்து
நற்கவிதை படைத்தளிப்பார்
வாசிப்பை நேசித்தலும்
நேசித்து வாசித்தலும்
நம்முள்ளே இருந்து விட்டால்
நற்றமிழ் தானே வரும்.
எடுத்துக் காட்டு இவரேதான்.
அமுதவல்லி எனும் பெயருடையார்
சுழல் பற்றி கவி படைத்தார்.
படைத்ததை படிக்கவே வருகிறார்.
மனித வாழ்வில் எத்துனை சுழல்கள்
அனைத்தையும்
கூறிடுவார்
வாருங்கள் அமுதவல்லி
மகிழ்வியுங்கள்
உங்கள் கவிதைசொல்லி
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
சுழல் - அமுதவல்லி
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
அப்பப்பா சுழல்களில்
இத்துனை வகைகளா
சுந்தரத் தமிழில்
சுழல் பற்றி சிந்தையைத் தூண்ட
படைத்தளித்தார்
அமுதவல்லி.
சுழல் எனும் சொல்லில்
சிக்கி
அரங்கமே சுழல்கிறது
ஆனந்த சுழலில்
உள்ளமே சுழல்கிறது
எமை சுழல வைத்த
உமது கவிதைக்கு நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
3) மகாலக்ஷ்மி - உழவு
அவையோரே!
அடுத்து வருபவர் பற்றி
அறிமுகம் செய்திடலாமா!
தொகுப்பாளினியாய்
வந்து
பட்டி மன்றத்தில் சொற்போர் நடத்தியவர்.
பங்கேற்பாளர்கட்கு
புத்தகங்கள் தந்திடலாமே
எனும் நல்ல ஆலோசனை நல்கியவர்.
கலைமகளும் அலைமகளும்
ஒரே இடத்தில்
இருப்பதுண்டா
எனக் கேட்போர் இங்குண்டு.
இருப்பதுண்டு எனும் பதிலை
இறுமாப்போடு சொல்லுபவர்
சரஸ்வதி கடாட்சம்
பெற்ற மகாலக்ஷ்மியேதான் அவர்.
உலகில் உண்மையில் வாழ்பவர் எவர்
என்பதற்கு
வள்ளுவப் பெருந்தகை விடை சொன்னான்
இப்படி
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
என வரையறுத்தான்.
அந்த உழவின் பெருமையைப்
பாட வருகிறார்
வாருங்கள் மகா!
நீவிர் கலைமகளின் சகா!!
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
உழவு - மகாலக்ஷ்மி
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
உழவின் பெருமையைப்
பகலுகையில்
உலகம் உய்ய பாடுபடும்
உழவர்தம் அவலநிலையை
அப்படியே
படம் பிடித்து
அவைதனிலே
உணர்ச்சியோடு
பகிர்ந்திட்டார்.
கவிதையை இரசிப்போரே
இனிமேல் நாமும்
ஒரு கவளம்
வாயில் வைக்கும்முன்
உழவுக்கு வந்தனம் சொல்வோம்
உழவனுக்கு நன்றியும் சொல்வோம்
இப்போது மகாலக்ஷ்மிக்கு நன்றி சொல்வோம்
*********************************
கவியரங்கத் தலைவர்:
4) சி. ஹரீஷ் - குழல்
பூர்வாக் குடியிருப்பில்
பக்திப் பாடல் பாடுவோரில்
புதுப்புனலாய் பொங்கி வருகுது
ஒரு குரல்
யாரது..
சற்றே பொறுங்கள்.. கூறுகிறேன்.
முதியோர் இல்லவாசிகளுக்கு
Zoom- ல்
இலக்கியப் பேருரை
கேட்போர் மகிழ
நிகழ்த்திடுவார்..
யாரது..
சற்றே பொறுங்கள்.. கூறுகிறேன்.
பொதுக் குழுவில் பரிமேலழகர்
தெள்ளத் தெளிவாய் விளக்கிடுவார்
யாரது..
சற்றே பொறுங்கள்.. கூறுகிறேன்.
பட்டி மன்ற மேடையென்றால்
சிம்மம் போல கர்ச்சிப்பார்
ஆன்மீகக் களமென்றாலோ
உள்ளம் உருகி அர்ச்சிப்பார்
யாரது என
இப்போதாவது கூறுங்களேன்..
பதறாதீர் பெருமக்களே!
கூறுகிறேன் பெருமையோடு
தமிழ்உறவு எமக்குத் தந்த நல்லுறவு
என் இளவல்.
தம்பியுடையான் படைக்கஞ்சான்
நாமறிந்த பொதுமொழி
ஹரீஸ்தம்பி மேடைக்கஞ்சான்
இது நான் கூறும் புதுமொழி.
இளவலுக்கான தலைப்பு
இன்னிசை வழங்கும்
குழல்
குழலூத வா தம்பி
அழைக்கிறேன் உன்னை நம்பி
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
குழல் - சி. ஹரீஷ்
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
குழல் என்றால் தென்றலாய்த்தானே
வருடும்
ஹரிஷ் குரலில் சூறாவளியாய்
சுழன்றடித்ததே
குழலின் மேன்மை உன் குரலில்
பெருமை உற்றதே
கார்வண்ணக் கண்ணனின் குழல் துவங்கி
கன்னியரின் கார்மேகக் குழல்
அடுப்பூதும் குழல்
ஊது குழல்
ஈறாக
குழல் பற்றி
நல்லதொரு கவிதை கேட்டோம்.
நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
5) மல்லிகா மணி
- எழில்
பூர்வா குடியிருப்பில்
விளையாட்டுப் போட்டிகள்
ஜனவரி மாதம் களை கட்டும்
ஜம்ப்பின் ஜனவரியில்
உற்சாகம் விண்ணை முட்டும்.
மூத்த மகளிருக்கான நடைப் போட்டி
முதலில் சிட்டாய் வந்த பெருமாட்டி
இறுதி இலக்கை அடைந்ததும்
நடனமாடினார் வெற்றிக் கொடி நாட்டி
களிப்புமிகு எழில் நடனம்
கலக்கியது நம் முன்னோடி
பட்டி மன்றத்தில்
தமிழ் மொழியோடு
நல்ல உடல்மொழி கலந்து
மனங்களை வென்றவர்
மேடையில் நிலைத்து நின்றவர்
சகோதரி மல்லிகா மணி
விபத்தில் கால் உடைந்தாலும்
குறையாது இவர் ஆர்வம்
தடை பலவரினும்
உடைத்தெறிந்து முன்னேறும்
நெஞ்சுறுதி கொண்ட முன்னோடி
எழில் எனும் சொல்லெடுத்து
மணியான கவிதை சொல்ல
வருகிறார் மல்லிகா மணி
இவருக்குப் பிடித்தது
என்றுமே தமிழ்ப் பணி.
வாருங்கள் சகோதரி,
கலக்கிடுங்கள் பிய்த்து உதறி!
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
எழில் - மல்லிகா மணி
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
தணியாத
ஆர்வத்துடன் கவியரங்க
மேடை வந்தீர்
ஏற்றமிகு தமிழிலே
எழில் பற்றி
எழில்மிகு
கவிதை தந்தீர்
பச்சை நிறப் பட்டுப் புடவையாய்
வயல் வெளிகள்
பழுப்பு நிற பார்டராய் வயல் வரப்புகள்
ஆகா! அற்புதம்!!
நல்லதொரு கற்பனை
நயமான வர்ணனை
அன்புச் சகோதரி மல்லிகா மணி
தொடரட்டும் உம் தமிழ்ப் பணி
*********************************
கவியரங்கத் தலைவர்:
6) மோகன் - மழலை
மோகன் எனும் சொல்லுக்கு
காலமற்ற தன்மையால் செதுக்கப்பட்டு,
மனிதர்களுக்கு இயற்கையால் அருளப்பட்டது
என்பதே பொருளாம்
இப்பெயர்
கொண்டோருக்கு
இயற்கையன்னை தந்திட்ட
அருளாம்.
நம் சங்கத்துக்கு
தமிழன்னையால் அருளப் பட்டவர்.
படைப்பதிலே அதிக
நாட்டம் கொண்டவர்
எழுபது அகவையைத் தாண்டிட்ட
எழுச்சி நாயகர்
எழுதுவதில் ஈடில்லா
மகிழ்ச்சி கொள்பவர்
தம் எழுத்தால்
நம் மனங்களை ஆள்பவர்
காலத்தினாற் வந்த அனுபவமும்
தமிழன்னை தந்த
சொல்லாட்சியும்
இவருக்குத் துணையுண்டு
இவரது எழுத்துக்கு
வேறெது இணையுண்டு?
இவருக்கான தலைப்பு - மழலை
இத்தலைப்பு
கவியரங்க மேடைதனில்
மூத்த குழந்தையான
இவருக்கு வந்தது
மிகச் சிறப்பு.
யாழையும் குழலையும்
விஞ்சுகின்ற
கொஞ்சு மொழியாம்
மழலை பற்றி கவிசொல்ல வருகிறார்.
வாருங்கள் மோகனாரே
இவர் மழலைபற்றி
இனிய கவிதை கூறுவாரே..
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
மழலை - இ.ச.மோகன்
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
வஞ்சக நெஞ்சத்தையும்
கொஞ்சு மொழியால் மயக்கும்
மழலை பற்றி
மயக்கும் கவிதை தந்திட்டார்.
மீண்டும் மதலையாகி
மகிழும் விருப்பமும்
பகிர்ந்திட்டார்.
அனைவருக்கும் வருகின்ற
விழைவு அதுதானே!
கிடைத்திடுமோ அந்த வரம்!
நம்மை மழலை ஆக்கி
மகிழ வைத்த கவிஞருக்கு
நம் நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
7) தியாகராஜன் - விழல்
தன் அரிய நேரத்தைத்
தியாகம் செய்வார்
தமிழ்ச்சங்கம் வளர்த்திட
சேவை செய்வார்
தமிழ்ப்பணி என்றாலோ
ஓடோடி வந்திடுவார்
உடலுழைப்பு பொருளுதவி
மனமுவந்து தந்திடுவார்
ஆண்டு விழா வந்த போது
ஆர்வத்தோடு பங்களித்தார்
புதிய நல் கருத்துகளை
பக்குவமாகப் பகிர்ந்திடுவார்.
தன்னார்வலக் குழுவின்
தகைசால் மனிதர்
நிர்வாகக் குழுவின்
தூண்களில் ஒருவர்
கவியரங்க மேடையில்
கலக்கப்போகும் கவிஞர்.
தியாகராஜன் எனும் இவரது
பெயருக்கு இலக்கணக் குறிப்பு
யாதெனக் கேட்டால் காரணப் பெயர்
என்பேன் நான் .
சங்க வளர்ச்சிக்கு
தன் அரிய நேரத்தை
மனமுவந்து
தியாகம் செய்வதால்
வந்த பெயராம்
இப்பெயர் வைத்த இவரது
பெற்றோர்கள்
தீர்க்க தரிசிகளே!
இவருக்கான தலைப்பு விழல்
இதுவும் ஒரு எதிர்மறை பொருள்தரும்
சொல்லே!
ஆம் அதற்கு வீண் என்பது பொருளே
இதனை எப்படி இவர்
கையாள்கிறார்
பார்த்திடுவோம்
தித்திக்கும் தேன்தமிழில்
தியாகராஜன் கவிதை சுவைக்கும்
வாசித்து அளியுங்கள்
அன்பரே
இந்த அவையே ரசிக்கும்
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
விழல் - தியாகராஜன்
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
தோகைமயில் கண்ட வான் கோழியாம் இவர்
அதனை நாம் நம்பிடவும் வேண்டுமாம்.
வான்கோழியோ இவர்…?
எமக்கு சேவற் கோழியாய்த் தெரிகிறத.
உலகம் விடிய சேவல் கூவுகிறது
சமூகம் விடிய இவர் கூறினார்.
பெண்கல்வியை விழல் என்பார்
வீணர்கள் அன்றி வேறில்லை
என உரக்கச் சொன்ன நீவிர்
தமிழ்க் கடவுள் கையிலிருக்கும்
கொடியில் ஒளிரும்
சேவற் கோழி ஐயா நீவிர்!
அதனால்தான்!
எதிர்மறையைக்
தன் சிந்தனை வளத்தால்
நேர்மறையாக்கிட
எம்மால் முடியுமென
நிரூபித்தீர்.
பெண்கல்வியை
கருப்பொருளாக்கி
கவிதையைப் படைத்தளித்தீர்.
பெண்கல்வியே
சமூகத்தின் பலம் என்றார்
அதனை விழலென்பதே
சமூகக் கேடென்றார்.
நல்லதொரு கருத்தை ஓங்கி உரைத்தார்.
அவருக்கு நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
8) மலர்விழி - நிழல்
அடுத்து வருவது மலர்விழி -
நல்ல சொல்
எடுத்து வருவது
அவரின் தனி வழி.
எதிர்த்து எவர் நின்றாலும்
உடைத்து வரும்
அவர் கவிதை
துவக்க விழா துவங்கி
ஆண்டு விழா வரையினிலே
தொகுப்பாளினியாய்,
பட்டி மன்ற பேச்சாளராய்,
பயிலரங்கப் பயிற்சியாளராய்
சிறாருக்கான மகளிருக்கான
போட்டிகளை நடத்துபவராய்
வலம் வரும் பலரில்
முக்கியமானவர்.
தமிழ்ச்சங்கத்தின் செயலர் இவர்.
தட்டெழுத இயலா மூத்தோருக்கு
ஆவலோடு உதவிக்கரம் நீட்டுபவர்.
நம் சங்கத்தின் இணைபிரியா நிழலாய்
இருப்பவருக்கு
நிழல் என்பதே தலைப்பாம்.
தமிழன்னையை பூசிப்பவள்
தமிழை உயிராய்
நேசிப்பவள்
தமிழ் நூல் தேடி வாசிப்பவள்
வாசிக்கிறாள் தன் படைப்பை.
வருக என் மகளே!
நம் சங்கத்தின் நிழலே!
வருக என் மகளே
தருக நற்கவி ஒன்று
வாழிய திருமகளே
நீ தருவதெல்லாம் நன்று!
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
நிழல் - மலர்விழி
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
நிழல் தரும் மரங்களை
வெட்டும் மடமையை
அகச்சீற்றத்தோடு சாடினீர்
பிறருக்கு நிழலாய் நிற்போம்
என உரத்த குரலில சொன்னீர்
அன்பின் நிழல் அறமெனச் சொல்லி
அன்பின் வழி நின்று வாழச் சொன்னீர்
மாக்களாக இல்லாது மனிதர்களாக
வாழ நல்லதொரு வழியும் பகன்றீர்
.
மலர்விழி மகளே நன்றி!
*********************************
கவியரங்கத் தலைவர்:
9) சுல்தானா - தழல்
சொல் தானா வந்து அழகு செய்யும்
சுல்தானா கவிதை எழுதிட்டால்
நல்லதொரு தமிழ்ப் பற்றாளர்
நல்லதைத் தேடும் பண்பாளர்
இவர் மகள் சிலம்பம் ஆடுபவர்
இவரோ சொற்சிலம்பம் ஆடுபவர்.
நல்ல தமிழ் படைப்பை நாள்தோறும்
நாடுபவர்.
தெரிந்துகொள்ள
நல்ல நூல்களை
எப்போதும் தேடுபவர்.
சுல்தானாவுக்கான தலைப்பு
தழல்
சுட்டெரிக்கும் தழல் பற்றி
சுவைமிகு சொல்லாடலால்
கவிதை படைத்தார் சுல்தானா
தமிழ்ப் பூவெடுத்து
தமிழன்னையை பூசித்தார் சுல்தானா
இவரது படைப்புகளை
இரசிக்காதவன் இருப்பானா!
கவிதைபடைத்த கவிஞர் அவர்
வெளியூர் செல்ல
நேரிட்டதால்
சுல்தானாவின் கவிதைதனை
குட்டிப் புலியொன்று
வாசிக்க வருகிறது.
மலர்விழி ஈன்றெடுந்த
அருமை மைந்தன்.
தமிழ்மொழி மேல்
பற்று கொண்ட பாலகன்.
தன் உரைவீச்சுத் திறமையால் கேட்போரை
மயங்க வைப்பவன்.
நம் சங்கத்தின் எதிர்கால நம்பிக்கை
நட்சத்திரம் இவன்.
வருகிறான் கௌசலேஸ்
புலிக்குப் பிறந்தது
பூனாயாகாதெனக் காட்ட
தாய் எட்டடி பாய்ந்தால்
..
இப்புலிக்குட்டி....
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
தழல் - சுல்தானா
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
ஆக்கல் என்றாலும் அழித்தல் என்றாலும்
இரண்டுக்குமே அடிநாதமான
ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான
தழல் பற்றி தரமிகு
கவிதை படைத்த
சொல்லரசி சுல்தானாவுக்கும்
அவரது கவிதையை
அருமையாக துடிப்போடு வாசித்தளித்த
கௌசலேஸூக்கும் நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
10) வித்யா - அகழ்
தமிழ் உறவு எனக்குத் தந்த இன்னொரு
மகள்
பெயரிலேயே கல்வியைக் கொண்டமகள்
வித்யா என்றால் கல்விதானே
கற்றல் உனது வலிமைதானே!
கற்பவள் இவள்
கற்பிப்பவளும் இவள்!
ஆம்.
தமிழ் கற்பித்தலும்
செய்கிறாள்.
இலக்கணப் பதிவா ஓடியிவள் வருவாள்
இலகுவாக சரியான
பதில்களைத் தருவாள்
இலக்கிய மேடையா
இன்முகத்தோடு வருவாள்
இனிய கவிதைகளை
இயற்றித்தான் தருவாள்..
வா மகளே!
கற்றதை அவையில் வை.
மற்றதை அகத்தில் வை
வித்யாவிற்கான தலைப்பு
அகழ்
அகழ்தலும்
ஆராய்தலும்
கற்றலின் கருவிகளே!
அகழ்ந்து
ஆராய்ந்து
அகழ் பற்றி
கவிதை தர
வந்திடு மகளே!
அவையோர் இன்பமுற
சுவையோடு கவிதை கொடு
இவையாவும் வரலாறாகும்
இப்போது கவிக்கணைத் தொடு
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
அகழ் - வித்யா
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
நம்மை அகழ்ந்தால்
நம்மை அறியலாம்
தமிழை அகழ்ந்தால்
நானிலம் அறியலாம்
கீழடி அகழ்ந்தால் நம்
தொன்மை அறியலாம்
மனதினை அகழ்ந்தால்
மனிதம் மலரலாம்
அகழ் பற்றி
அருமையான கவிதை சொன்ன வித்யா நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
11)
வெங்கட்ராமன் - புகழ்
மரபிலக்கணம் என்றாலோ
அசை, சீர், தளை
என்றாலோ
காத தூரம் ஓடுவோருண்டு
வேப்பங்காயாய்ப் பார்ப்போருண்டு
இலக்கண நெறி நின்று
யாப்பினை கைக் கொண்டு
மரபுக் கவிதை படைப்பதை
உயிர்மூச்சாய் நினைப்பவர்
கவிதையோடு
கருத்துச் செறிவையும் இணைப்பவர்.
வெங்கட்ராமன் இவர் பெயராம்
வெற்றிவாகை சூடுபவராம்
வெண்பாவே இவர்
அடிநாதமாம்
கவிதைநயம் இவர் பலமாம்
பூவுலகில் வாழ்வோரெல்லாம்
புகழ் தேடி அலைகின்றார்
புகழ் எனும் ழகரத் தலைப்போ
இவரைத் தேடி வந்திட்டது.
புகழுக்கே புகழ் சேர்க்க
புன்னகையோடு வருகின்றார்
புத்துணர்வு தரும்
பைந்தமிழில்
பாடல் ஒன்று
தருகின்றார்.
வெங்கட் ராமரே
உம் கவிதை கூறுமே
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
புகழ் - வெங்கட்ராமன்
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
ஆசிரியப் பா இவர் வசம்
வெண்பாவும் இவர் வசம்
அப்பப்பா.. வேறே எந்தெந்த பாவெலாம்
உன் வசம் அப்பா..
தோன்றிற் புகழோடு தோன்றிய
புகழ் எனும் சொல்லிற்கு
புகழ் சேர்க்கும் வகையினிலே
பொலிவு சேர்த்தார்
புதுமை செய்தார்
வியத்தகு தமிழ் மொழியில்
விரும்பிய வண்ணம்
கவியும் சொன்னார்
புகழொடு வாழ்தல் நலமே எனினும்
புகழ்போதை தலைக்கேறாது
இருத்தல் அதைவிட நலமென்றார்.
அதுவே பலமென்றார்.
வெங்கட்ராமனுக்கு
நம் நன்றி
*********************************
கவியரங்கத் தலைவர்:
12)
சங்கீதா - கழல்
சங்க கால இலக்கியமா
சங்கடமின்றி
அலசிடுவார்
தொல்காப்பிய இலக்கணமா
தேடி அலசிப் பகிர்ந்திடுவார்
தேடல் என்பது இவரது பலமாம்
தேடித் தேடிப்
பகிர்தல் நலமாம்
பாடல் எழுதுதல்
இவர்க்குத் தேனாம்
இவரது வரிகள்
துள்ளும் மானாம்.
சங்க நாதம் போல்
இவரது சொற்கள்
ஓங்கி ஒலிக்கும்
அற்புத வரிகள்.
தொகுப்பாளினியாய் நம் சங்கத்தில்
பயணத்தைத் துவங்கி
கவியரங்கில் இன்று கால் பதித்திருக்கும்
இன்னொரு மகள்
சங்கீதா.
ஐயா என விளிக்காமல்
பேசிட மாட்டார்
நல்ல தமிழில்
உரையாடாது
இருக்க மாட்டார்.
இவருக்கான தலைப்பு
கழல்
கலகலவென கழல் பற்றி
கவிதையினைத் தந்திடுவார்
கேட்போர் மனதை வென்றிடுவார்
சங்கீதம் போல கவிதை சொல்ல
சங்கீதாவை
உவகையோடு அழைக்கிறேன்.
வா மகளே!
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
கழல் - சங்கீதா
****************************************************************************
கவியரங்கத் தலைவர்:
கழலின் பொருளையெல்லாம்
அணிவகுத்து வரச் செய்தார் தம் கவிதையிலே
கழல் எனும் சொல்லை
செதுக்கிட்டார் கேட்போர் நெஞ்சினிலே.
சங்கீதாவிற்கு நன்றி..
*********************************
கவியரங்கத் தலைவர்:
வாழ்த்துக் கவி
தமிழன்னையின் தாள் பணிந்து
கவியரங்கைத் தொடங்கியதனாலே
தமிழன்னையின் திருவடியிலிருந்து
நிறைவுப் பாவை
நயமுடன் துவங்குவோம்.
தமிழன்னையின் பூநிகர் பாதத்தில்
பார்புகழ் தமிழாலே
பாக்கழல் அணிவித்த
'தேடல் நாயகி சங்கீதா'
வாழிய!
அகழ வொண்ணா
ஆழியின் ஆழத்தை
தன் னகத்தே கொண்ட
நம் மொழிக்கு
"அகழ்"
ந்து ஆராய்ந்து
புகழ் மாலை சூடிய
'கற்றல் மாணவி வித்யா'
வாழிய!
உலக மொழிகளின்
தாய்மொழியாம்
தமிழ் மொழி அழகை
அழகொளிரும்
தமிழன்னை எழிலை
ஏற்றமிகு எம்மொழியில்
எளிய நடையில்
எழுதி அளித்த
'பூர்வாவின் கலைமணி'
மல்லிகா மணி வாழிய!
செம்மொழியாம் நம் மொழிக்கு இசைபாட
கார்மேகக் கண்ணனை
கவியரங்கம் வரவழைத்து
குழலூதி ஆராதித்து
வழிபட்ட
நம் சங்கத்தின் இளைய தளபதி
ஹரீஷ் வாழிய
எதிர்மறை சொல்லா
எழுதுவது கடினம் என
ஓரமாக ஒதுங்காமல்
ஓடி வந்து அச்சொற்களை
நேர்மறைக் கருத்துக்கு ஆணிவேராக்கிய
நம் தமிழ்ச்சங்க விருட்சத்தின்
வலிமை மிகு விழுதுகள்
இருவர்
விழல் என்றால் வீண் என்ற
நிகண்டு சொல்லும் பொருள் எடுத்து
'பெண் கல்வி விழலாகா'
எனும்
சீரிய சமூகக் கருத்தை
தேனொத்த கவிதையில்
தெளிவுற சொன்ன
தியாகத்தில் ராஜாவான
தியாகராஜன் ஐயா வாழி!
உழல் எனில் நிலை கெடுதல்,
துயரத்தில் உழன்று தவித்தல்
என்பதே பலரின் எண்ணம்.
அதையே நற்றமிழ் சொல்லும்
நல்வழியில் உழல்தல்
இலக்கியச் சுவையில் உழல்தல்,
சொல்நயத்தில் உழல்தல் என
மக்கள் மகிழ்வுற
வழி காட்டிய
குற்றமறு கவிஞர்
குத்தனூரார் வாழிய!
தமிழன்னையின் நிழல் கூட
தமிழ்ப் பயணத்தில்
துணை நிற்கும்
சங்ககால இலக்கிய
நயத்தின் நிழல்
நல் வாழ்க்கைக்கு வழி காட்டும்
என நிழல் பற்றி நயமுடன் கூடிய கவிதையில் மனிதம் கூறிய மலர்விழி வாழிய!
உலகமே சுழலும் எனத் துவங்கி
சுழல்களை எல்லாம்
பட்டியலிட்டு
தமிழின் கன்னலொத்த
படைப்புகளில் சுழல்வோம்
எண்ணச் சுழல்களை
வண்ண மயமாக்கி மகிழ்வோம்
என்று
சொற்களை சுழல விட்டு
சுந்தரக் கவிதை சொன்ன
அருமைக் கவி அமுதவல்லி வாழிய!
தமிழ்த்தாயின் சிரசை அலங்கரிக்கும்
ஒளிரும் கிரீடத்தின்
ஒளிமிகு தழல் போல்
தழல் பற்றி தரமான கவிதை தந்த சுட்டும்
சுடர் கவி சுல்தானா வாழிய
சுல்தானாவின் வரி வடிவத்திற்கு
சொல்சுத்தத்தோடு ஒலி வடிவம்
தந்திட்ட பாலகன் கௌசலேஸ் வாழ்வாங்கு
வாழிய!
தமிழனின் தனிப்பெரும் பெருமையாம்
திருக்குறள் போற்றிய
உழவு பற்றி
பாடியதோடு
உழவனை வணங்கச் சொல்லி
உயரிய கவிதை தந்த
உன்னத கவி
மகாலக்ஷ்மி வாழிய
தமிழன்னைக்குப்
புகழ் சேர்க்க
நடக்கின்ற கவியரங்கத்தில்
புகழ் பற்றி
கவிபாடி
புகழ்சேர்த்த புகழ்மிகு கவி
வெங்கட் ராமன் வாழிய
தமிழ்த்தாயின் மதலைகள் நாங்கள்
எங்கள் மழலைப் பிழற்றலுக்கு
ஆசி கூறு தாயே என
மழலையில் வேண்டிய
மதலைக் கவி
மோகன் ஐயா வாழிய!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
எனும் பாரதியின் பொன்வரிகளோடு
வாழிய தமிழ்ச் சங்கம் வாழிய தமிழ்ச் சங்கம்
வாழிய வாழியவே
வளர்க நம் சங்கம் வளர்க நம் சங்கம்
வளர்ந்து வளமுறவே எனும் என்வரிகளையும்
கூறி
கவியரங்கத்தை நிறைவு செய்கிறோம்
தமிழன்னையை வணங்கி பாரதியின் வழி நின்று
கூறுகிறோம்
நன்றி! வணக்கம்!
*********************************
கவியரங்கம் என்றதுமே ஆர்வத்தோடு பங்கேற்க வந்தோர் உண்டு
ஆயிரம் தயக்கங்களோடு வந்தோரும் உண்டு.
ழகரம் என்பதே தலைப்பு என்பது முதல் அடியையே பிரம்மாண்டமாய் எடுத்து வைப்பது.
ஆயினும், அசராது கவிஞர்கள் களமிறங்கினர்.
எதிர்மறைப் பொருள் தரும்
சொற்களையும்
தயக்கமின்றி எடுத்து
கவிதைப் படைத்தோர் உண்டு
இந்தக் கவியரங்கம் அரங்கேறும் முன்னரே
உற்சாகம் பெருக்கெடுத்து ஓடியதால்
கவியரங்கத்தில் பங்கேற்காதோர் கூட
ழகரத் தலைப்பு எடுத்து
கவிதை படைத்து பொது அரங்கில் படைத்த அற்புதம் நிகழ்ந்தது.
கவியரங்கத்தின் வெற்றியை கட்டியங் கூறி முரசடித்ததது.
எண்பது அகவை கடந்த
பிச்சைமணி ஐயா அவர்கள்
ஏழ்மை எனும் தலைப்பெடுத்து
ஏற்றமிகு சொல்லாடலில்
கவிதை படைத்திட்டார்
பொது அரங்கில் படித்திட்டார்.
அக்கவிதை இதோ
****************************************************************************
கவிதைக்கு சுட்டியை அழுத்தவும்
****************************************************************************
No comments:
Post a Comment