சுழல் - அமுதவல்லி
உலகமே சுழலும்
சுழல் அங்கு தொடங்கும்
உலகம் சுழலாது போனால்
உறைபனிதானே மிஞ்சும்
உலகம் உய்யத் தேவை சுழலே
சுழல் பற்றி படைத்தளிக்க வந்தேனே!
வற்றா நதியாம் தமிழ்
எழில்மிகு மொழியில்
சொற் சுழலில் தேடி
கவிதை கொணர்ந்தேனே
நாவைச் சுழலச் செய்யும்
சிறப்பு ழகரமே...
உன் உச்சரிப்பு சுழலில்
என் நா பிறழாது
சுழல் பற்றி
உரைத்திட
விழைகிறேன்
உலகமே சுழலும்
சுழல் இங்கு தொடங்கும்
சுழலும் பூமியில்
சுழலும் வாழ்க்கையில்
எத்தனை சுழல்கள்?
பிறப்பு இறப்பு
இன்பம் துன்பம்
வெற்றி தோல்வி
நிழல் அழல்
புகழ் இகழ்
நன்மை தீமை
எழல் விழல்
இவற்றின் சுழலன்றோ
வாழ்க்கை...
நீரின்றி அமையாது உலகு
சுழலின்றி நிலையாது நீர்
நீர் காற்றின் சுழல் வேண்டும்
மழைக்கு...
பருவங்களின் சுழல் வேண்டும்
மண்ணுயிரின் உய்வுக்கு
உலகமே சுழலும்
சுழல் அங்கு தொடரும்
உலகமே சுழலும்
சுழல் அங்கு தொடரும்
எதிர் விசைகளின்
சந்திப்பில் உண்டாகும்
அலைபாய விடும் ...
சுழல்
விசைகள் தேவை இல்லை
வாழ்வில் உழலும்
சுழல்களுக்கு
சுழல் காற்றின் இலைகளாக
உணர்விழைகளின் சுழல்
மனித மனம்
இதயங்களின் இழுப்பில்
மனங்களைச் சிறையிடும்
காதல் எனும் சுழல்
மழலையின் மிழற்றலில்
மயங்க வைக்கும்
அன்பு எனும் சுழல்
கோப தாபங்களால்
மனிதன் விழுவது
மருளெனும் சுழல்
பொன் மண் புகழ்
என உள்ளிழுக்கும்
ஆசை எனும் சுழல்
நாவின் சுழலில்
வன்சொல் சுட்டால்
மனமாகும் ஆழ் சுழல்
உலகமே சுழலும்
சுழல் அங்கு மயக்கும்
உலகமே சுழலும்
சுழல் அங்கு மயக்கும்
முதலும் இன்றி
முடிவும் இன்றி
இயங்கும் சுழல்
பேரண்டத்தில் நிலைக்க
அண்டங்கள் சுழலும்
அண்டத்தில் நிலைக்க
கோள்கள் சுழலும்
கோள்கள் சுழல
ரவியும் சுழலும்
ரவி சுழல
உயிர்கள் சுழலும்
ரவியோடு
நிழலும் சுழலும்
அன்பு சூழ் உலகம்
தாய்மையால் சுழலும்
அன்பு சூழ் உலகம்
தாய்மையால் சுழலும்
குழவியின் உலகம்
தாயிடம் சுழலும்
காற்று சுழல
குழலும் இசைக்கும்
தழல் சுழல
கருவிகள் உருவாகும்
குப்பை சுழல
இயற்கை உரமாகும்
விழலும் பசுமையாகும்
சுழல் விளக்கு
சுழன்று வழிகாட்டும்
சுழல் திட்டம்
அதிக வாய்ப்புகள் தரும்
சுழல் கோப்பை
மீண்டும் நம்பிக்கை ஊட்டும்
இறைவனின்
சங்கு சக்கரமென்றாலும்
மனிதனின்
வண்டி சக்கரமென்றாலும்
சக்கரத்தின் சுழலன்றோ
உலகை இயக்கும்
உலகமே சுழலும்
சுழல் அங்கு இயக்கும்...
உலகமே சுழலும்
சுழல் அங்கு இயக்கும்...
ஈசனின் கழலடி சுழல
தாண்டவம் உதித்தது
பாற்கடலில் மேரு சுழல
அமிழ்தம் கிடைத்தது..
அமிழ்தம் மட்டுமா...
ஆலகாலமும் உருவானது
வாழ்வில் உழல்கிறோம்
நாளும் சுழல்கிறோம்
நன்றும் தீதும் நம்முடனே..
மனதை அகழ்ந்து
மனஞ்சுழல் விலக்கினால்
வாழ்க்கை அமிழ்தமே
மனஞ்சுழல் விலக்கினால்
வாழ்க்கை அமிழ்தமே
ஓடும் நீரில்
சிக்கும்வரை
தெரிவதில்லை
சுழலின் இருப்பு
இயற்கையின்
சுழல் நீரோ ..
சுழல் காற்றோ..
மீள்வது கடினம்
தட்டாமாலை சுற்றில்
சுழலின்
ஒருதுளி உணர்கிறோம்
சட்டென மீள்கிறோம்
நிலை கொள்கிறோம்
வாழ்வின் சுழல்கள்
மாயச் சுழல்கள்
மனம் வைத்தால்
தட்டாமாலை சுற்றென
மீண்டு வரலாம்
உலகமே சுழலும்
சுழல் நம்மை செதுக்கும்
உலகமே சுழலும்
சுழல் நம்மை செதுக்கும்
நல்லதை நினைப்போம்
அல்லதைத் தவிர்ப்போம்
எண்ணச் சுழல்தனை
வண்ண மயமாக்குவோம்..
நம்..
எண்ணச் சுழல்தனை
வண்ண மயமாக்குவோம்..
No comments:
Post a Comment