Sunday, October 20, 2024

உழவு(ழகரக் கவியரங்கம்)

உழவு - மகாலக்ஷ்மி

பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம்

அப்பசியைப் போக்கும் குல தெய்வமாம் உழவு

அதுவே எம் தலைப்பு.

 

உயிர்களைப் படைப்பவன் பிரம்மன்

உணவினை படைப்பவன் உழவன்

ஆக இருவரின் தொழில் ஒன்றே

 

வான் மழை வந்து பயிர் வளர்க்கிறது

உழவு நம் வயிறை நிறைத்து

உயிர் வளர்க்கிறது.

 

நாகரிகம் வளர்ந்தது உழவின் உதயத்தினால்

நாமும் வளர்ந்தோம் உழவனின் உபயத்தினால்

 

அடிகாட்டுக்கு 

நடு மாட்டுக்கு

நுனி வீட்டுக்கு

இழுத்து சென்றான் இயற்கையின் சங்கிலி அறுபடாமல்

ஆடும், கோழியும்,மாடும், நாயும் உணர்வுள்ள உறவுகள் இங்கே

 

உழவு மனிதர்களை விஞ்ஞானிகளாக்கியது

அது நிலத்தில் மட்டுமல்ல

மனிதர்களின் மனத்திலும் மனிதம் விதைத்தது.

 

மருந்தின் வாசம் அறியா வண்ணம்

உணவே  மருந்தாக

உழவனே வைத்தியனாக

பல தலைமுறைகள் கடந்தோம் 

இன்றோ மருந்தே உணவாகிப் போனோம்

 

நுனி நாக்கின் சுவைக்காக

இழந்தோம் பலவற்றை

மறந்தோம் உழவின் அருமையை

 

பசுமைப் புரட்சியால்  விவசாயம் வளர்ந்தது

அறிவியல் வளர்ந்தது,

விவசாய அறிவியல் வளர்ந்திருந்தால்

மாறியிருக்கும்  உழவனின் நிலையும்

உழவின் நிலையும்

 

நம் வயிற்று பசி தீர்த்தவனின் குடும்பம்

பஞ்சத்தால் காலனின் காலடியில்

உழுபவனுக்கு நிலம் சொந்தம் இல்லை

விலை சொல்லும் உரிமையுமில்லை

வாயிருந்தும் வாயில்லா பூச்சியாய்

வாழும் பெரும் வாழ்வு உழவனுக்கு

 

காட்டை கழனியாக்கி உழவு செய்தோம்

கழனிகளை கட்டிடங்களாக்கி பிழை செய்தோம்

 

விதை சேமிப்பு செய்தோம்

முளைப்பாரி மூலம் அன்று

மரபணு மாற்றத்தால்

விதையில்லா விதையையே விதைக்கிறோம் இன்று

 

மாடு பிடித்து ஏர் உழன்ற பூமியெல்லாம்

சவுக்குத் தோப்பும் தைலத்தோப்பாகவும் மாறியது.

இது பெரும் சமூகக் கேடு

 

உழவே நாட்டின் முதுகெலும்பாம்

தெருவுக்குத் தெரு  கூவிக் கொண்டிருக்கிறோம்

அது கூன் விழுந்து பல ஆண்டுகள் ஆனது அறியாமல்.

 

மக்கள் கணக்கெடுப்பு போல

மரக்கணக்கெடுப்பும் ஒரு வேலையாகிப் போனது

இரணமான பூமியில்

நாம் நிவாரணம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

 

நாம் உண்ணும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கைக்கும் காரணமான

ஒவ்வொரு உழவனுக்கும்

 

ஊரின் பசியாற்றி

தான்மட்டும்

பசியால் வாடும்

ஒவ்வொரு உழவனுக்கும்

 

வானம் பொய்க்கையில்

மகசூல் குறைந்து

மனம் வெதும்பும்

ஒவ்வொரு உழவனுக்கும்

வாங்கிய கடனைக் கட்ட இயலாமல்

நெருக்கடிக்கு ஆளாகி

பூச்சிமருந்தை உட்கொண்டு மரணிக்கும்

ஒவ்வொரு உழவனுக்கும்

 

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடிய வள்ளலாரின் வழித் தோன்றலாய்

வாழ்கின்ற

ஒவ்வொரு உழவனுக்கும்

சொல்லிடுவோம் வந்தனம்

 

வள்ளுவப் பெருந்தகை

பகன்றது போல்

தொழுதுண்டு

பின் செல்லல் வேண்டாம்

மிக்சமிருக்கும் விளை நிலங்களையாவது விட்டுவைப்போம் மனைகளாக்காமல்

உழவுக்காக! உழவனுக்காக!

 

உழவில்லையேல் நமக்கில்லை வாழ்வு

இதை உணரவில்லையேல் அதுவே தாழ்வு

முனைவோம் நம் வாழ்வைக்காக்க

இணைவோம் உழவை மீட்டெடுக்க



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...