குழல் - சி. ஹரீஷ்
யாமறிந்த மொழிகளில் தமிழ் மொழி
போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதிக்கு முதல் வணக்கம்
உயிரையும் மெய்யையும் தந்த என்
அன்னைக்கும்
உயிர்மெய்யும் சேர்த்து தந்த தமிழன்னைக்கும்
வணக்கம்
தலைமை வணக்கம்
கவிஞர்களை நற்கவிதைப் பாட ஏவி
தன்னம்பிக்கை என்னும் மலரினை தூவி
சிந்தனை கதவை திறந்த சாவி
வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா ஸ்ரீவி
சிறப்பு விருந்தினர் வணக்கம்
ஆசிரியர் மாணவர்களை வழிகாட்டுவதற்கு
நிகர்
தங்கள் நல்வருகை திரு அழகிய சிங்கர்
படைப்பு சிறப்பானது பொறுப்பேற்ற
அப்பால்
அன்பு வணக்கம் திருமதி சுஜாதா கோபால்
அவையோருக்கு வணக்கம்
கவிதைக்கு அழகு கவிஞர்களின் ஆக்கம்
கவிஅரங்கிற்கு அழகு அவையோரின் ஊக்கம்
மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்
நிகழ்த்தும் மகத்தான கவியரங்கம்
மனதையும் சிந்தனையும் சற்றே சூழல்
கவி பாட இருக்கும் தலைப்போ குழல்
குழல் புல்லாங்குழலாய்
நின் புகழ் மணக்கும் திசைகள் நான்கில்
நின் இசைக் கேட்டால் துள்ளும் ஓங்கில்
நற்றிசையை உலகிற்கு நல்கும் பாங்கில்
உன்னை ஈன்றுயெடுத்த தாய் மூங்கில்
வெண்மை விசை என்றால் மலையருவி
மென்மை இசை என்றால் காற்றுக்கருவி
நிகழும் கடைகளில் உனது விற்பனை
புகழோ கவிஞர்களுக்கும் எட்டாத கற்பனை
உன்மீது எத்தனை துளைகள் இட்டாலும்
வெளிக்கொண்டு வருவது என்றும் இனிமை
ஊடலில் ராதை பிரிந்தால் என்ன
நீ இருக்கையில் கண்ணனுக்கு எப்படி
தனிமை
வேங்குழல் ஓசையில் லயித்து கொண்டு
பசுக்களும் கன்றுகளும் நன்றாக தூங்கின
கண்ணன் கையிலேயே இருப்பதைக் கண்டு
மற்ற இசைக்கருவிகள் எல்லாம் ஏங்கின
குழல் கார்குழலாய்
மாதவன் கையில் குடிகொண்டு
மனதை கொள்ளைகொள்வது புல்லாங்குழல்
மாதவம் புரிந்து மலராய் மலர்ந்து
அலங்கரிக்க படுவதே கார்குழல்
தங்க காலத்தில் பாரதி சொன்னது
ஆணிற்கு நிகர் பெண்பால்
சங்க காலத்திலியே ஐந்து வகை
சிகை அலங்காரம் விளக்கியது ஐம்பால்
உச்சியில் முடிந்தால் முதல்வகை
வார்முடி
எண்ணெய் குளியலில் படியும் சொன்னபடி
பக்கவாட்டில் முடிந்தால் இரண்டாம்வகை
கொண்டை
கொண்டைமலர் சுண்டி இழுக்கும் வண்டை
பின்னி சொருகினால் மூன்றாம்வகை
சுருள்
கருமையில் தோற்கும் உன்னிடம் இருள்
சடையாக பின்னினால் நான்காம்வகை
பனிச்சை
ஆயுள் முழுவதும் உன்மேல் இச்சை
சுருட்டி முடிந்தால் குழல் ஐந்தாம்வகை
மணத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சாம்பிராணி புகை
கருவிலே பிறப்பாய் கருமையாய் இருப்பாய்
பாதுகாக்கனும் பொறுப்பாய் இல்லையெனில்
நரைப்பாய்
வெட்டினால் துடிப்பாய் நீண்டால்
வியப்பாய்
சீவினால் அணிவகுப்பாய் பூக்களை
முடிப்பாய்
காற்றிலே பறப்பாய் மனதை பறிப்பாய்
மலர்களை அலங்கரிப்பாய் அழகை நிர்ணயப்பாய்
கவிஞர்கள் வர்ணிப்பது வெகு சிறப்பாய்
தலைவன் உறங்க நீயே பத்தமடை பாய்
நன்மையில் முடிந்தது இயற்கையின்
பிழை
குழலை மேகமாக கருதி பொழிந்த வான்மழை
கார்குழல் பெண்கள் பெருமை இல்லிற்கு
புல்லாங்குழல் உவமை மழலை சொல்லிற்கு
குழல் ஊதுகுழலாய்
குழல் ஊதி தழல் ஏற்றி
அன்று சமைத்தது விறகு அடுப்பு
நவீன வசதிகள் பல இருந்தும்
சமைப்பதில் ஏனில்லை இன்று பிடிப்பு
பொற்கொல்லர் குழலாய்
இசை வல்லுநர் புல்லாங்குழலில்
ஒலிக்கும் சங்கராபரணம்
பொற்கொல்லர் ஊது குழலில்
ஜொலிக்கும் தங்க ஆபரணம்
குழல் துப்பாக்கி
வண்ண வண்ணமாய் கடைகளில் தொங்கும்
குழந்தை மனதிலும் கையிலும் தங்கும்
வெடிப்பதற்காக வளைந்து கொடுக்கும்
குழலும்
வெடிக்க வெடிக்க வெடியே சுழலும்
நாட்டு எல்லையில் நீ விழித்து இருப்பதால்
நன்றாகப் பொழுதை கழித்து வருகிறோம்
படையை நோக்கி பகைவரைத் தாக்கி
நாட்டை காற்பது வீர குழல் துப்பாக்கி
நன் நாளாய் அமைந்தது உனக்கும் எனக்கும்
வணங்கி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்
No comments:
Post a Comment