Sunday, October 20, 2024

எழில்(ழகரக் கவியரங்கம்)

 எழில் - மல்லிகா மணி

 கனியிடை ஏறிய சுளையும் முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும்

தமிழை என்னுயிர் என்பேன் என்ற பாவேந்தரின்

எழில்மிகு பா எடுத்து

என் கவிதையைத் துவங்குகிறேன்.

 

அழகான தமிழ் மொழிக்கு

அழகு சேர்க்கும்

ழகரத்தை

முன்னிருத்தும்

கவியரங்கத்தில்

எனக்கான தலைப்பு எழில்!

 

அவையோருக்கு எழில் வணக்கம்!

எழில் கவிதை இப்போதே

துவக்கம் !

இயற்கையன்னையின்

எழில் வடிவங்களை

தமிழன்னையின்

எழில் வடிவில்

எழுதி வந்தேன்!

ஏற்றமிகு தமிழில்

எழிலைப் பாடவந்தேன்!

 

முதலில் கதிரோனின் எழிலைப் பார்க்கலாம் வாருங்கள்!

 

உலகம் விளக்கமுற கீழ்த்திசையில்

உதிக்கும் அகண்ட ஒளி விளக்காம்

ஆதவன் அவன் ஒளிர

படர்ந்திடும் செம்மை!

பதமாய்ப் பரவிடும் வெம்மை!

சோதியாய் எழுந்தவன்

சோம்பல் முறித்து நீட்டினான்

செங்கதிர்களாய்

தன் கைகளையும் கால்களையும்!

எழிலாய்ப் புலர்ந்ததே

செழுங்காலை எனும் வேளை!

இரவைப் பூட்டி

பகலைத் திறந்த பகலவன்

பொன் துகள்களாய்க் கொட்டி

புவியைத்  திறந்ததென்ன!

அடடா!

இயற்கையின் வர்ண ஜாலம்!

கண்கவரும் எழிலோவியம்!

செங்கதிரோன் ஒளிப்பட்டு ஓடி ஒளிந்தன பனித்துளிகள்!

புள்ளினங்களின் இனிமையான ரீங்காரங்கள்!

இளங்காலை இழைத்தளித்த இதமான சூடு!

அடடா! எழிலே!

எழிலின் திரளே!

 

அடுத்து கதிரவனை வணங்கிவிட்டு

கிராமத்தின் எழில் காண செல்வோமா?

கதிரவனும் கிறங்குவான் கிராமத்தின் எழிலில்..

வாழ வேண்டும் என்பான் கிராமத்தின் நிழலில்...

பெண்ணின் கையில் அகப்பட்டதோ

அரிசி மா !

அவளின் கைத்திறன் எல்லோருக்கும் வருமா ?

உருவானதோ எழில் வண்ணக் கோலம்!

எழில் வண்ண கோலத்திற்குக்  கதிரோனே தன் கதிர்கள்  என்னும் கரங்களால் ஆரத்தழுவிப் பாராட்டி

தன் பொன்ணொளியையே பரிசாய் நீட்டினான்!

 

கிராமத்தின் சாலையெங்கும்

உழவு மாடுகள்

அசைந்தாடி செல்ல...

பின்னே

மேழியோடு உழவர்களும் அணிவகுக்க...

குயிலும் கிளியும்

இன்னிசைக் கீதமிசைக்க

அடடா! அடடா

இதுவும் கூட ஒரு எழில் கோலமே!

 

வாருங்கள்! வயல்களின் எழிலைக்

காண செல்வோம்..

பச்சைப் பட்டுடுத்திய வயல்கள்!

பார்டர்கள் என வரப்புகள்!

பொன்மணிகள் என விளைந்த நெற்கதிர்கள்!

அசைந்தாடும்

கால்நடைகளின் கழுத்து மணிகள்!

எசப்பாட்டும்

நக்கல் பாட்டும் பாடித் திரியும்

பெண்கள்!

பெண்களின் எழிலை.

எதிர்ப் பாட்டு பாடி கடைக்கண் பார்வை

கொண்டு ரசிக்கும் ஆண்கள்

கண்களுக்கு விருந்தளிக்கும் எழிலன்றோ!

 

வாருங்கள்! ஆற்றின் எழிலைக் காண

செல்வோம்!

 

ஆற்றில் கலகலவென நீரோட்டம்!

துள்ளி விளையாடும் மீன்களின் துள்ளாட்டம்!

சிறுவர் சிறுமியரின் நீச்சல் குளியலாட்டம்!

மீனுக்காக காத்திருக்கும்

சிறுவர்களின் ஏக்கமான

பார்வையாட்டம்!

கண்ணால் காதல் கதை பேசும்

கன்னியரின் நீச்சலாட்டம்!

அப்பெண்களைக் கவரும் வண்ணம்

சுற்றித் திரியும்  ஆண்களின் குறும்பாட்டம்!

இனிமையான கண்கவர் எழிலாட்டம்!

 

அடுத்து அருவியின் எழிலைக் காண்போம்!

மயில்கள் தோகை விரித்தாட

குயில்கள் இன்னிசை கானமிசைக்க

வாசம் உடைய நற்காற்று குளிர்ந்தடிக்க

கண்ணாடி போன்ற நீர் ஊற்றுகள்

வழிந்தோட

தேனீக்கள் ரீங்காரமிட

இசை பாடி களிக்கும்

அருவிகள் வைரமணிகளாய் மினுமினுக்க

அடர்கொடி பசுந்தளிர்கள் தலையசைக்க

குருவிகள் கிரீச்சிட

அடடா! அடடா!

எழிலே! எழிலே!  என்னென்பேன்

அத்தனையும் தேனென்பேன்!

 

அடுத்து ஓவியனின் கற்பனையில் ஒரு எழில் ஓவியம் காண்போம்!

ஓவியனின்

கையில் இருப்பதோ தூரிகை! மனதிலோ ஒரு கற்பனை!

விளைந்ததோ ஓர் அழகான எழிலோவியம்!

இயற்கை பாடிடும் காவியம்!

ஓயாமல் பார்க்கத் தூண்டும்

எழில் காட்சி!

பச்சைப் பசேலென

மரங்களோடு சில குன்றுகள்!

குன்றுகளுக்கிடையே 

குன்றுமணியாய் ஒரு சிறிய குடில்!

கணவன் மனைவி குழந்தை  என ஒரு எழில் குடும்பம்!

காணி நிலத்தில்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை

தென்னைகளாம் ..

வாழைகளாம்...

ஒரு கிணறும் உண்டாம்!

அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடிய பாரதிக்கு

மெய்ப்படாத கனவு ஓவியனின் கற்பனை கைவண்ணத்தில் மெய்ப்பட்டது இன்று எழில்மிகு ஓவியமாய்!

 

இயற்கையன்னையின்

செயல்களெல்லாம் எழிலே!

இயற்கை காட்சிகளும் எழிலே!

எழிலே! உலகின் வித்தே!

எழில்மிகு முத்தே!

உலகமே  மகிழும்

உன்னைப் பார்த்தே!

காண்பது மட்டுமல்ல

செம்மொழி பேசினால்

வாய் மொழிவதெல்லாம்

எழிலே!

தமிழன்னையின் எழிலுக்கு

எழில் சேர்க்க

பூம்பொழிலின் அருவி போல்

கவிதை எழுதி வந்தேன்.

கவியரங்க மேடைதனில்

வாசித்தும் விட்டேன்.

 

நிறையோ குறையோ

யானறியேன்!

அறையில் இருக்கும்

பெரியோரே!

இறையை வணங்கிக்

கூறுகிறேன்

நூறாயிரம் நன்றி நன்றி!

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...