மழலை - இ.ச.மோகன்
தமிழுக்குஅழகு சேர்ப்பது 'ழ'கரம்
ஆனால் 'ழ'கரத்துக்குத் தனிப்பெருமை
சேர்ப்பது
மழலை
அன்றோ!
மதலையின் மிழற்றல் பிதற்றலா
அல்ல அல்ல
எச்சில் கூட்டிப்பிஞ்சு உதடுகள்
வெளிக்கொணரும் உணர்வுகளின் வெளிப்பாடு.
மழலைக்கு மொழி வேறுபாடே
கிடையாது மக்களே.
'அம்மா' என்கிற மழலையின் முதல் சொல் எம்மொழியையும
செம்மொழியாக்கும்.
பிஞ்சுகளின் மொழி நஞ்சு மொழி அல்ல ;நெஞ்சங்களை இணைக்கும்பாலம்.
மழலை மொழிகளின் சிறந்த
மொழிபெயர்ப்பாளர்கள் தாய்கள்
அல்லவா!
முதல் மழலை செவியுற்று தாய்தந்தை அடையும் பெருமிதப்பூரிப்பு சொல்லவும்
முடியுமோ?
ஏழு ஸ்வரங்களின் இனிய கூட்டணியை விட
மழலையின் ஒரு சொல்
கேட்பவர் காதில் இன்பத்தேனைப் பாய்ச்சுமே!
இந்தக் கிள்ளைகளின் பிள்ளை மொழி
குழலிசையையும் வெறும்
காற்றாகக் கேட்கச்செய்யும்.
நக்கீரரோ ,தொல்காப்பியரோ
பிழை காண முடியாத இலக்கண வரையற்ற
மொழி.
பொக்கை வாய் பாட்டனும் , பால்மணம்மாறா பெயரனும்
பேசும் மழலை தலைமுறை இடைவெளிகளை
உடைத்தெறிகிறதன்றோ!
கிழவனையும் குழவியையும்
இணைப்பது 'ழ'கரத்தின் சிறப்பு அல்லவா!
மழலை கேட்டு மகிழ்கையில்
மனதில்ஓர்ஆசை எழும்.
மழலை பேசும் குழவியாகவே
இருந்து விட்டால் வாழ்க்கையே
பூந்தோட்டம் ஆகாதோ!
குழவியாக ஆகாவிட்டால் என்ன?
குழந்தை மனம் கொண்டிட்டால்
இவ்வுலகே நம் சொர்க்கம்.
தமிழ்த்தாயின் இக்குழவி படைத்திட்ட
இம்மழலைக்கவிதை
அவையோரை மகிழ்வித்தால்
நானும் மகிழ்வேன்.
No comments:
Post a Comment