விழல் - தியாகராஜன்
எனக்கான
ழகரத் தலைப்பு
விழல்.
வீண் எனப் பொருள்படும்
எதிர்மறைத் தலைப்பு.
தமிழன்னையின்
அருளிருந்தால்
பாரதியும்
உடனிருந்தால்
எதிர்மறையும்
நேர்மறையாகாதோ!
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
(முயற்சித்தேன், முடித்தேன்,
இதோ உங்கள் முன் வைக்கிறேன்
விழலுக்கு நீர் பாய்ச்சி
வீணாக வேண்டாம் - என
பழங்காலம் முதற்கொண்டே
பலரும் சொல்வதுண்டு
*பயன்தரா நிலத்திற்கு
பாய்ச்ச வேண்டாம் நீரென்றார்
சரி யென்றோம்*
பயன்பாட்டில் இந்தச் சொல்
பயன்படுத்தும்
இடங்களில் தான்
பகுத்தறிவு
விழித்தெழுந்து
பல கேள்வி கேட்கிறது.
அன்பின் வடிவான
அரும் புதல்வி
கல்விபெற
அனுப்புகின்ற
போழ்தினிலே
நண்பராய்,
உறவினராய்
நல்லவர்போல் ஓர் கூட்டம்
பெண்ணுக்கு
பெருங்கல்வி
பணத்திற்கு வருங்கேடு
விழலுக்கு நீர் இறைத்து
வீண் துயரில் சிக்காதே
கல்யாணச்
செலவிருக்கு
கடன் வாங்கும் நிலை உனக்கு
என்றெல்லாம்
உரைப்பதற்கு
எப்போதும் காத்து நிற்கும்.
எது விழலென்ற
எதிர்க் கேள்வி மனதிற்குள்
இப்போது
முளைத்து நிற்கும்.
பெண்கல்வி விழலென்று - அந்தப்
பித்தர்கட்கு யார் சொன்னார்
ஆண்மகவைப் படிக்க வைத்து
அகிலம் ஆளச் செய்தாலும்
பணம் காய்க்கும் மரமாக - அவன்
பக்கத்தில் இல்லையென்றால்
விழலுக்கு
நீர் வார்த்து
வீணாகிப் போனவனே
என்றே தான் இடித்துரைப்பார்
இந்த ஈன மனம் கொண்ட நல்லோர்.
வளமற்ற
நிலம் விழலென்றால்
பயிர் விளையாத மண் விழலென்றால்
கால்நடைகள்
உண்ணமுடியா
களைப்பயிராம்
விழல் விளையும் நிலம்
வீண்
என்றால்
நல்ல கருத்துகளை
நயமிகு வார்த்தைகளை
உதிர்க்க முடியா - இந்த
ஊனப்பிறவிகளும் விழலன்றோ
நட்பென்னும் நீர்பாய்ச்சி
உறவென்னும் உரமிட்டு
விழல்களை வளர்ப்பதினும்
வெட்டி எறிவதே மேல்
சொற்சிலம்பம்
ஆடி- நம்
சுயம் இழக்கச் செய்யும் - அந்த
அற்பர்களின் பால் விழல் முறையோ ?
எண்ணித்துணிக என்றார்
எம் ஐயன் வள்ளுவன்
எண்ணித் துணிந்த பின்
இவர் சொன்னார்,
அவர் சொன்னார் என்று
எடுத்த கொள்கையில் இருந்து
என்றும் விழல் சரியோ?
விழுவது
பள்ள மென்றால்
விரைவில் எழுந்தோடிடலாம்
விழல் மனிதர்களின் பிடியிலென்றால்
எழுவதும் கடினம் - நம்
இலக்கைத் தொடுவதும் கடினம்
எனவே தான் அவர்
சுட்டும் செய்திகளை
சொல் என்னும் அக்கினியை
புறக்கணித்துப் புறந்தள்ளி
புதுயுகம்
நாம் படைப்போம்
பொன்னாலும் பொருளாலும்
மனிதரைப்
புடம்போட்டுப் பார்க்காமல்
அகத்தாலும், அன்பாலும்
அரவணைத்து உய்விப்போம்
விழலுக்குப் புது விளக்கம்
விரைவில் நாம் அறிவிப்போம்
மனிதரில் விழலுண்டு - என
மறவாமல்
உரைத்திடுவோம்
அணிதிரண்டு ஒன்றாக - அந்த
அசுரர்களை
வென்றிடுவோம்
அதையும்
அஹிம்சையால்
கைக்கொள்வோம்.
No comments:
Post a Comment