நிழல் - மலர்விழி
ஆதவன் வரைந்த அழகான ஓவியம் நீ
அள்ளி அணைக்க இயலாத காவியம் நீ
ஆதவன் கொட்டும் கருமை நீ
அள்ள முடியா வெறுமையும் நீ
மையின்றி தீட்டிய கலை நீ
உளியின்றி செதுக்கிய சிலையும் நீ
ஒளியில் பிறந்த ஒளியிலா பிள்ளை நீ
ஒளிஎலாம் உண்ணும்
கார் வண்ணக் கிள்ளையும் நீ
வளர்பிறை தேய்பிறை காண்பது நிலவென்றால்
காலையில் வளர்ந்து
உச்சியில் தேய்ந்து
மாலையில் வளரும்
நிழலும் நிலவு தானே
நிலவின் எழில் வெண்மை என்றால்
நிழலின் எழில் கருமை அன்றோ
அண்டத்தின் முதல் புகைப்படம்
அறிவீர்களா அன்பர்களே ?
நிலமகள் திரையில்
பகலவன் ஒளியில் எடுத்த
முதல் புகைப்படம் நிழல் தானே
முதல் திரைப்படமும் அதுதானே
நாயகனும் நாயகியும் நாம் தானே!
நிழலும் உழவும்
நிழலே!
உனை நோக்கி காலம் அறிந்து
உனை நோக்கி விதை விதைத்து
உனை நோக்கி அறுவடை செய்து
உனை நோக்கி இன்பமாய் இளைப்பாறும்
உழவன் அறிவான்
மண் புழு போல் நிழலும் தன் தோழன் என்று
நிழலின் அருமை
வெயிலில் தெரியுமாம்
மரம் வெட்டி
நிழல் தேடும் மாக்களுக்கு
எப்போது இது புரியுமாம்?
நிழலின்றி மடியும்
புள்ளினங்களே
நிழலில் உரங்கும்
புல்லுண்ணிகளே
உற்ற உறையுள் நிழல்தானே
உச்சி வெயில் நுகர்ந்து
திசையறிந்த முன்னையோர்
புவியளவு காண
அடித்தளமும் நிழல்தானே
நிழல் பொம்மலாட்டம் கண்டு
நெகிழாதோர் பாரினில் யாருண்டு
இதிகாச கதைகள் கூறி
தேச விடுதலை எழுச்சியும் ஊட்டி
அழலாய் திகழ்ந்ததும் நிழல்தானே
மாலை முடிய, இரவு வர
காத்திருந்து
மர்மக் கதைகளின் பாத்திரம்
ஏற்பதும் நிழல்தானே
இரு பரிமாண ஒவியமோ
உயிர்ப்பித்து முப்பரிமாண
ஓவியமாக மாற்றுவதும்
நிழல்தானே
நிழலும் நானும்
என்னுடன் நடக்கும்
என் உடன் பிறப்பே
நானோ சுவடு பதிய நடக்கிறேன்
நீயோ சுவடின்றி
வலியுமின்றி நடக்கிறாய்
பிறப்பு முதல் இறப்பு வரை
என்னுடன் இருக்கும் என் இணைபிறப்பே
இருளில் ஒளிந்து
அகலில் ஒளிர்ந்து
கண்ணாம்பூச்சி ஆடும்
என் இரட்டைக் கதிரே
நம் போல் இரட்டையர்
பலருண்டு பாரினில்
ஆணின் நிழல் பெண்
பெண்னின் நிழல் தாய்மை
தாய்மையின் நிழல் மென்மை
மென்மையின் நிழல் மலர்
மலரின் நிழல் மணம்
அன்பின் நிழல் அறம்
எண்ணின் நிழல் எழுத்து
உண்மையின் நிழல் நேர்மை
கேண்மையின் நிழல் தேறல்
இரட்டையரை பிரிக்கும் மருத்துவம் உண்டோ இப்பூவுலகில்
எவராலும் பிரிக்க முடியாது
பிரித்தாலும் பொருள் தராது
நிழலின் சுழல்
ஓரெட்டு தாயின் நிழலில்
ஈரெட்டு தந்தையின் நிழலில்
மூவெட்டு தாரத்தின் நிழலில்
நாங்கெட்டு நிழலாக நாம்
நம் தலைமுறைக்கு
இதுவே நிழலின் எழிலான சுழற்சி
நிழல் வேண்டி நிற்போர் பலர்
நிழலாய் நிற்போர் சிலர்
நிழலின் எழில்
மேக நிழலாய் கலைந்தும்
மர நிழலாய் நிலைத்தும் நிற்கும்
தனிமையின் நிழலோ உந்தன் உண்மை கதையுரைக்கும்
நிழலில் நடப்பது நன்மையே
நிழலிலே நடப்பது தின்மையே
மனிதனின் நிழலாக நற்சிந்தனை இருக்குமென்றால்
பூவுலகமும் பூந்தோட்டம் தானே
ஒளியின்றி
நிழல் கூட வர மறுக்கும்
இயன்றவரை இயலாதோர்க்கு
ஒளியாக
நிஜத்தின் நிழலாக
நிழலின் நிழலாக
திகழ விளைகிறேன்
தமிழின் நிழலாய் பாரதி
பாரதியின் நிழலாய் நம் சங்கம்
தமிழ் படைப்பின்
ஏக்க நிழல் இன்று நிஜமாகியது
என்றும் உண்மை நம் நிழலாகவும்
தமிழின் நிழல் நாமாகுவோம்
No comments:
Post a Comment