தழல் - சுல்தானா
என்னைப் பண்ணாய் இசைத்திடும் - தழல் நீ
என்னைப் பனியாய் உருக்கும் - தழல் நீ
என்னை நஞ்சாய் மாய்க்கும் - தழல் நீ
என்னுள் தமிழ் எய்திய - தழல் நீ
அழலோ தழலோ கனலோ
- யாரோ நீ
*******
பஞ்ச பூதங்களில் ஒருவன் - நான்
பஞ்ச பூதங்களின் சேர்க்கையான யாக்கையிலும் - நான்
அழற்கதிர் ஆற்றல் - நான்
சுழற்சிக்கு முதல் ஆதாரம் - நான்
விண்ணொளி விழையும் மண்ணிருள் விலக
முயற்சியின் விளைவு முட்டி விளையும்
ஒளியின் பிறப்பு - நான்
இருளின் முடிவு- நான்
தழல் நான்! ஆக்கல் அழித்தல் என் தொழிலே!
*********
உயிர் பிறந்தேன் மின்னல் வரியால் - நான்
உயிர்வளி தாலாட்டும் மின்னும் ஒளியாய் - நான்
திரித்தூண்ட பனி இரவைத் தொலைத்தேன் - நான் (2)
திங்கள்வர தழல் அழலாய் கருகினேன் - நான்(2)
தழல் அழலாய் கனலாகி தணலானேன்
தணலைத் தணிக்கும் கார்முகிலாய்
வருவாயா! (2)
தழல் நான்! ஆக்கல் அழித்தல் என் தொழிலே!
********
சிவந்த பொன்னே தழல் பெறவே
சிறுகுடில் மிளிரும் தழல் ஒளி பெறுமே (2)
மாலை அணியத் தீண்டும் தென்றலே (2)
மாயமாய் உன்னை அனைத்திடுமோ!
போர் தொலைத்த காதல் மொழி - நான்
தழல் நான்! ஆக்கல் அழித்தல் என் தொழிலே!
********
தழல் மழைத்தூற சங்காய்ச் சுழல
இரவிலும் மழை வானவில்லாய் - நான்
சுடசுட சுட்ட பணியாரம் முறுக்கு (2)
நொறுங்கியது பல்லானால் பொறுப்பல்ல - நான்
தீயன அழியும் தீபவொளி பரவும்
தழல் நான்! ஆக்கல் அழித்தல் என் தொழிலே!
********
வீழ்த்தும் சோர்வை அகற்றும் - தழல் நான்
மனதின் அகத்தீயை அகற்றும் - தழல் நான்
மனதில் குறிக்கோளை ஏற்றும் - தழல் நான்
தடைகளை தகர்த்து சாதனைப் படைத்திடு!
தழல்
தழல் நான்! ஆக்கல் அழித்தல் என் தொழிலே!
*******
மழலை பெண் வன்கொடுமை எரிக்கும் - தழல் நாம்
மழலை பெண் பாதுகாப்பு ஏற்றும் - தழல் நாம்
பசி பிணி பாகுபாடு போக்கும் - தழல் நாம்
பசுமை போர்த்த உழவு போற்றும் - தழல் நாம்
எந்தன் அறம் மறம் உலகமறியும் - தமிழன் நான்
எந்தன் நாகரிகம் பண்பாடு போற்றும் - தமிழன் நான்
தமிழன் நாம் தழல் நாம்!
நல்வினை ஆக்கல் தீவினை அழித்தல் நம் தொழிலே! (2)
தமிழன் நாம் ! தழல் நாம்!
No comments:
Post a Comment