Sunday, October 20, 2024

அகழ்(ழகரக் கவியரங்கம்)

அகழ் - வித்யா

 காடகழ்ந்து   மலையகழ்ந்து

      மண்ணகழ்ந்துமனிதகுலமகழ்ந்து      

      தமிழ் மொழி  அகழ்ந்த நம் ஆன்றோர்களுக்கும் ,

      நம்  தமிழ்ச்சங்கம் அகழ்ந்த சான்றோர்களுக்கும்

      எங்கள் கவியகழவீடகல்ந்து

      இங்கு வீற்றிருக்கும் அவையோர் அனைவருக்கும்

      நான் தமிழ்ச்சொல்லகழ்ந்து கூறும்

      இனிய மாலை வணக்கம் .

 

      நீங்கள் இருக்கை அகலாமல் இருக்க

      நான் தமிழகழ்ந்து  கொணர்ந்த  அகழ்                        இதோ!

      

அகழ்வதெனக்கு பிடிக்கும்;

அகழ்வதென் பிறவி குணம்

பிறந்ததும் தாய்மடி அகழ்ந்தேன்

கிடைத்ததவள் அமுதப்பால்!

 

அகவையைந்தில் ஆவல் முட்டும்போது

பாடப்புத்தகம் அகழ்ந்தேன்

கிடைத்ததிந்த அறிவுப்பால்!

 

  வளர்ந்து வரும் பருவத்திலே

வள்ளுவனை அகழ்ந்தேன்

கிடைத்ததவன்  அறத்துப்பால்!

 

பயம் என்னை துரத்தியபோது

பாரதியை அகழ்ந்தேன்

கிடைத்ததவன் வீரப்பால்!

 

அறியாமை கண்ணை மறைத்திடும்போது

கடவுளை அகழ்ந்தேன்

கிடைத்ததவன் ஞானப்பால்!

                   

(அகழ்வதெனக்கு பிடிக்கும்;

 அகழ்வதென் பிறவி குணம் )   

 

பசி வந்து வாட்டியபோது

பெருஞ்சித்தனை அகழ்ந்தேன் 

கிடைத்ததவன் கொய்யாக்கனி!

 

மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தபோது ;

காதல் அகழ்ந்தேன்

கிடைத்ததிந்த வாழ்க்கைக்கனி !

 

மூடநம்பிக்கையில் மனம்  மூழ்க்கியபோது ;

அறிவியல் அகழ்ந்தேன்

கிடைத்ததொரு விடுதலைக்கனி !

 

கேலி என்னை துரத்தியபோது ;

தோல்வி அகழ்ந்தேன்

கிடைத்ததிந்த வெற்றிக்கனி !

 

(அகழ்வதெனக்கு பிடிக்கும் ;

 அகழ்வது என் பிறவி குணம் )

 

மரம் வளர்க்க எண்ணி

மண்ணை  அகழ்ந்தேன்

கிடைத்ததோர் தங்கப்புதையல் !

 

அறம் வளர்க்க எண்ணி

தமிழை அகழ்ந்தேன் 

கிடைத்தது நம் சங்கப்புதையல்!

 

சங்கம் அறிய விரும்பி

கீழடி அகழ்ந்தேன்

கிடைத்தது நம் வாழ்கைப்புதையல்!

(அகழ்வதெனக்கு பிடிக்கும்;

அகழ்வதென் பிறவி குணம் )

 

காலை எழுந்தவுடன் சோம்பலகல்வேன்! (நீங்குவேன் )

காலை இழப்பினும் தன்னம்பிக்கையகலேன்! (நீங்கமாட்டேன் )

 

வீட்டில் இருப்பின் கிணறகழ்வேன்

காட்டில்  இருப்பினும் கிழங்கழ்வேன்!

 

தாகம் என்னை வதைக்கும்போது;

தண்ணீர் அகழ்வேன்

தாய் என்னை அழைத்ததுமே

தயக்கம் அகல்வேன்! (நீங்குவேன் )

 

வளமை என்னை தழுவும்போது

கலை அகழ்வேன்!

வறுமை என்னை வாட்டும்போதும்

களை அகழ்வேன் !

எனினும் ;

தமிழ் என்னை அகல்ந்தால்  (நீங்கினால் )

என் உயிர் அகல்வேன்(நீங்குவேன் )

 

(அகழ்வதெனக்கு பிடிக்கும் ;

அகழ்வது என்  பிறவி குணம் )

 

மனிதா! நீ தயக்கம் அகல்! ( நீக்கு )

உன் தாய்மொழி அகழ் !

அகழ்வது உனக்கு பிடிக்கும் ;

அகழ்வது உன் பிறவிக்குணம் !

உணவு வேண்டின் 

மண்ணை அகழ் !

கனவு  வேண்டின்

கற்பனையை அகழ் !

 

உண்மை வேண்டின்

பொய் அகழ் !

தொன்மை வேண்டின் ;

தொல்காப்பியம் அகழ் !

 

வண்மை  வேண்டின்

வள்ளல்களை  அகழ் !

வளமை வேண்டின்

வறுமையின் காரணம் அகழ் !

 

இனிமை வேண்டின்

தமிழை  அகழ்!

தமிழின் தொன்மை வேண்டின் ;

குமரிகண்டம்  அகழ் !

 

உலகம் வேண்டின்

உன்னை அகழ் !

உன்னை அறிய ;

உன்னையே அகழ் !

 

(அகழ்வது உனக்கும் பிடிக்கும் ;

 அகழ்வது  உனக்கும் பிறவிகுணம்)

 

தமிழகழ்வாய் !

தலைமுறை காப்பாய் !!


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...