Sunday, October 20, 2024

உழல் (ழகரக் கவியரங்கம்)

 உழல் - குத்தனூர் சேஷுதாஸ் (நாகணேசன்)

தமிழை வியந்து...

எண்ணற்ற மொழிகள் தோன்றின இம் மண்ணில்

   எம் தமிழே !  எப்படி நீ என்றும்  இளமையில்?

புண்ணியமாம் பெற்றோர் என்னோடு தமிழ் பேசினர்

   பூரிக்கிறேன், என்றும் தமிழில் சிந்திக்கிறேன்

 

அண்ணன் அடித்தாலும் தமிழில் முறையிடுவேன்

   ஆலய இறை முன் தமிழில் வழிபடுவேன்

தண்ணிலவும், தென்றலும் உன் நிழல் அறிவேன்

   தமிழே ! உனைப் பெற்றோம், இறும்பூது அடைகிறேன்

         

      அழகுத் தமிழ் சூடிய அணிகலன் ஆயிரம் ஆயிரம்

   அவைகளில் கிடைத்தவை ஐம்பெரும் காப்பியம்

குழையும் " "கரம் அதில் குறிப்பிட்ட முத்தாம்

   கொள்ளை கொள முடியா எம் பாட்டன் சொத்தாம்

 

" உழல் " அது தலைப்பு, உரைக்க வேண்டும் கவிதையில்

ஒரு பொருள் " நிலை கெடுதல் "

அதிக பயன்பாட்டில்

சுழலுதல், அசைதல், அலைதல் மற்றவையாம்

   சுந்தர நம் தமிழில் சான்றுகள் பல இங்காம்

 

 அசையும் " உழல் "

காட்சி1.

வயலிடைக் கேணி, கரையில் வேலமரம்

   வாயால் வடிவம் பெற்ற கூடுகள் உழலும்

கயவர்கள் அரவு, பூனை,... அடைய முடியாதாம்

   காற்றிலவை உழலும், கண்ணுக்கு விருந்தாம்.

 

காட்சி2.

சங்குப் பூச் செவிகள், தொங்கும் தொங்கட்டான்

   சர்க்கரைப் பந்தலாள் ஊஞ்சலில் ஆடத்தான்

சிங்க ஆண்மை அங்கு சிதறு தேங்காயாம்

   சிறு தொங்கட்டான்கள் சிரித்து உழலுமாம்

 

சுழலும் " உழல் "

நுரைத்துக் காவிரி ஒகேனக்கல் நுழையும்

   நூறாயிரம் புரவி சக்தியும் தோற்கும்

கரையில் நின்றபடி களித்தது போதும்

   கழைப் பரிசல் ஏற காலை மனம் பிரண்டும்

 

விரைந்து சுமந்தபடி பரிசல் உழலும்

   வெளிவந்த தொப்பை பயத்தில் சுருங்கும்

கரையும் கொஞ்ச நேரம், மறையும் அச்சம்

   காற்றாலை நம் பரிசல் உழலும், சுழலும்.

 

 அலையும் " உழல் "

பொருள் அதன் பின்னே பேயாய் உழல்வார்

   பொன்னாம் தன் ஆரோக்கியம் பொருட்படுத்தார்

கருவளையம் கண் அருகே வந்து அமரும்

   கண்டு கொள்ளாமல் உழல்வார் மேலும்

 

நரை வரும், நடுக்கம் வரும் புத்தி வராது

   " நாளை நிச்சயமிலை " இன்னும் உழல்வார்

வருமாம் முதுமையுடன் நோயும் கை சேர்க்கும்

   வங்கிப் பணம் அழைத்தும் வாராது ஆரோக்கியம்.

 

நிலை கெடும் " உழல் "

வறுமையில் தவிப்பாரை உழல்கிறார் என்பார்

   வாழ்வே நோயானால் அதுவும் உழல்தலே

வெறுமையே உணர்வார் அவரும் உழல்கிறார்

   வீண் கடன் பட்டார் விரைவில் உழல்வார்

 

பொறுமை இழந்த மதி புலம்பும் பின் உழலும்

   போரிடும் நாடுகளின் பொருளாதாரம் உழலும்

மறுமை நம்பிக்கையில் அறம் கொஞ்சம் பிழைக்கும்

   மனம் போன வாழ்வானால் மனித குலம் உழலும்

 

 கதம்பமாய் உழல்..

காட்சி 3.

புவியது எஞ்ஞான்றும் உழல்கின்றது

   பொழுததனால் புலர்கிறது, போகிறது

கவி அவன் பார்வையும் அவ்வாறே உழலும்

   கண்ணில் படுவதெலாம் கற்பனை தூண்டும்

 

தவிப்பும் தலைவியின் கவி முன் உழலும்

   தனிமையும், தண்ணிலவும் தூபம் போடும்

குவிந்த குளத் தாமரையும் மெல்லத் திறக்கும்

   கோதையவள் துஞ்சவில்லை இன்னும் பாவம்.

 

காட்சி 4.

குழலது இதழில் கொஞ்சமும் சாயமில்லை

   குளிர் நிலவு, யாழ் என ஏதும் ஈடில்லை

தழலில் உழல்பவளாய்  தனிமையில் தலைவி

   தன்னையும் அறியாமல் தொடர்வாள் இசைத் திசை

 

கழலணிந்த கண்ணன் தான் காத்திருப்பவனாம்

   கட்டாயம் வருவாள் இராதை அதுவும் அறிவானாம்

பழகிய இருவர் இதோ நேருக்கு நேராய்

   பார்க்கும் விழி நான்கும் மூடும் தாமாய்

 

கொசுறாக  உழல்

ஏர் பூட்டி வயலிடைச் சேற்றில் உழல இன்பம்

 எங்கும் பச்சைப் பசேல் ஏன் சென்னை போகணும்?

மாரியில் நனைந்துழல மழலையர்க்கு இன்பம்

  மாப்பிள்ளை உறவில் உழல காளைக்கு இன்பம்

 

ஊர் ஓரம் குல தெய்வம், வழிபாடும் இன்பம்

   உறவுகள் ஒன்று கூடி உழலுதல் இன்பம்

தேரில் வரும் தெய்வம் , களை கட்டும் தெருவும்

   திரளான பக்தர் வெள்ளம் அதிலுழல இன்பம்

 

வேரிருந்து தமிழ் கற்க வெகு நாளாய் விருப்பம்

   வேலை, குடும்பம் என உழல கை நடுக்கம்

பார் அதைச் சுற்றி வர பல ஆண்டுகள் திட்டம்

   பணச் செலவோடு உழல வேண்டாமே விட்டோம்

 

யாருமிலாச் சாலையில் நூறைத் தாண்டும் வேகம்

   எதிர் பாராதது நிகழ என்றும் உழல நேரும்

பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்தது பேரின்பம்

   படைப்பேன் என இன்று உழல்வதும் இன்பம்.

 



No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...