ஏழ்மை - R. பிச்சைமணி
அறியேன் யாப்பில் ஆறடி எழுத
விரியேன் எந்தன் விண்மீன் பார்வையைத்
தெறியேன் கூட்டுப் பாவகை எனினும்
பிரியேன் என்றும் நினது பதமே
பொதுக்குழுவில் ஓர் புதுக்குழு
புதுக்குழுவில் அடியேன் ஓர் எறும்பு
கடல் அலையில் அடியேன் ஒரு துரும்பு
கவிதை "க" "வி" "தை"
இதிலும் ஒரு கவிதை
"க" கழற்றி விடப் பட்டால் விதையாகும்
"வி" விடுவிக்கப் பட்டால் கதையாகும்
"தை" தவிர்த்தால் அடியேன் கூட கவியாவேன்
அடியேனுக்கு ஓர் ஆசை
கவிதை படைக்க
கவிதை படிக்க
கலைமகள் அருள் வேண்டும்
உங்கள் மனதில் இடம் பிடிக்க
வீட்டில் விறகு அடுப்பு
அணைந்து விடாமல் காக்க
தாய் ஊதுவாள் தன் சுவாசக் காற்றை
பகீரென்று பற்றிக் கொள்ளும் அடுப்பு
எழையின் வயிற்றைப்போல
காலை வேளையில் அம்மா படைப்பாள்
அமுதமாக பழைய சோறும் வெங்காயமும்
மறு வேளைக்கு சோறு இல்லா
விட்டாலும் அதுவே தாங்கும்
அன்று முழுவதும்
தாய்க்கு காதுகளில் தோடுண்டு
பள்ளிக் கட்டணம் செலுத்த
தோடுகள் காணாமல் போவதுமுண்டு
தோடுகளுடன் திருமாங்கல்யமும்
சில சமயங்களில் பணமாக மாறும்
உடன் மஞ்சள் திருமாங்கல்யமாக ஏறும்
அப்பா குளித்து ஈரத்துண்டுடன் வெயிலில் நின்றால்
உடுத்திய உடுப்பு (உடுத்த) காய்கிறது
என பொருள்
நவராத்திரி சுண்டலுக்கும்
மார்கழி பொங்கலுக்கும்
ஏங்கிய காலமுண்டு
வாழ்விலே ஏழையாய் பிறந்து
ஏழ்மையில் உழன்று
வாழ்க்கையில்
எழ முடியாமல் வீழ்ந்து
மீண்டும் எழுந்து
நாமும் வாழ்ந்து
வாழ்க வளமுடன்
என வாழ்த்தி
பிறரையும் வாழ வழி செய்வோம்
வருவதை அப்படியே எதிர் கொண்டோம்
இனியும் எதிர் கொள்வோம்
பாசத்திற்கு ஏங்கும் பாலகர்களுக்கு அது ஏழ்மை
அன்புக்காக ஏங்கும் தாய் தந்தைக்கு அது ஏழ்மை
கூட்டு குடும்பங்கள் பிரிந்ததினால்
பிரிந்து சென்ற சகோதர சகோதரிகளுக்கு
அவர்களின் எதிர்பார்ப்புகளே ஏழ்மை
இல்லாதவர்களின் எதிர் பார்ப்புகளை
பூர்த்தி செய்ய இயலாமை அதுவும் ஏழ்மை
ஆகவே
இனி வறுமைக்கு வறுமையைக் கொடுப்போம்
இல்லை என்ற சொல்லையே இல்லாததாக்குவோம்
இல்லாமையே இல்லாத நிலையை உருவாக்குவோம்
தன்னைப் பற்றி யாரும் கவலைப்பட வில்லையே என்று கவலைப்படும் "கவலையை" "கவலையுற" வைத்திடுவோம்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடுவோம்
காரியம் நடக்கட்டும் துணிந்து விடுவோம்
ஏழ்மையை போக்க
எழுச்சியோடு
எழுந்து நிற்போம்
No comments:
Post a Comment