Sunday, October 20, 2024

கழல்(ழகரக் கவியரங்கம்)

 கழல் - சங்கீதா

தமிழை விழையும் உயிருக்கு நற்றுணையாம் தமிழையே அமிழ்தமாய் ஊட்டும் தமிழன்னை கழல்

பணிந்து….

 

அக்கழலிலிருந்து….

 

இடையினமாம்

""கரத்தை காலில் அணியாமல்

இடையிலேயே அணிந்த

"கழல்" என்றழகிய

தமிழ்ச் சொல்லை

அகழ்ந்தெடுத்து அகமகிழ்ந்து..

 

""கர கவியரங்கத்தில்

கவிமழை பொழிய

கவி பாடுவதில் மழலையாம்

என்னையும் இணைத்துக் கொண்ட

நம் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்திற்கும்

நம் சங்கத்தின்

தலைமையாகவும்கரத்தை மையப்படுத்தும் கவியரங்கத்தின்

மையமாகவும் வீற்றிருக்கும்

நம் கவியரங்கத் தலைவருக்கும்

புகழ் மிகு புனைப் பெரயரில்

அழகிய தமிழை சிங்காரித்து தன் சீரிய எழுத்துகளால் வாசகர்களின்

மனங்களில் உழவு செய்து விருட்சமாய் வளர்ந்து நிற்கும்

சிறப்பு விருந்தினருக்கும்

அண்டத்தின் பெரிய அழலாம் ஞாயிரின் பெயராம் நல்ல தொலைக்காட்சியில் சிறந்த  நிகழ்ச்சிகளைப் படைப்பதே நேக்கம் என படைப்பாக்கம் செய்வதில் தலைமைப்பணி ஆற்றி வரும் நம் மற்றொரு சிறப்பு விருந்தினருக்கும்….

மற்றும் இங்கு கூடியிருக்கும் தமிழ் உறவுகளுக்கும்

வழக்கமாய் சொல்ல வேண்டுமே என்று

வழ வழ கொழ கொழ

என்று இழுக்காமல்

சிரம் தாழ்த்தி

விழைந்து விரைந்து

விரிவாய் இயம்புகிறேன்

வணக்கம்!

 

"கழல்" யாது?

ஒரே பொருள் தரும் சொல் கிடையாது!

பல பொருள் உள்ளது!

அறிந்து கொள்வது நல்லது!

 

அணியாமலே காலை உறுத்தும் கால் ஆணி அல்ல கழல்..

அணிகலனாய்க் காலில் அணியும் காலணியே கழல்...

வீராதி வீரர்களின் கண்ணிலும் வெளிப்படும் தழல்...

வீரத்தின் சின்னமாய் தம் காலில் அணிவர் "வீரக்கழல்"...

 

வந்தியத்தேவனும் பாகுபலியும் போர்க்களம்  புகுந்தால் அணிவது கம்பீரமான வீரக்கழல்..

எழில்விழிப் பூவையராம் குந்தவை, தேவசேனாவுடன்

காதல் களம் புகுந்தால் அணிவது..

பூ போன்ற

பூங்கழலோ???

 

பெயரும் புரிந்த சாதனையும்

பொறித்த வீரக்கழல்

போர் வீரனுக்குப் பரிசாம்!

அந்தோ பரிதாபம்!

பகை மன்னனுக்கோ

மணிமகுடம் இல்லா சிரசாம்!

அம்மன்னன் மகுடம் மாயமாய்ப்

போனதெங்கே?

வென்ற மன்னனின்

புத்தம்புது  வீரக்கழல்கள்

பளப்பளக்குது இங்கே!

 

இட ஆகுபெயர் என்று இலக்கணத்தில் ஒரு விதி உண்டு..

இதன்படி காலில் இடம்பிடித்த கழலுக்கு இன்னும் சில பொருள் உண்டு...

 

கழலணிந்த கடவுளோ

கழலணியாத கடவுளோ

கடவுளின் திருவடி நிழலும் கழலன்றோ!

இக்கழலைப் பற்றாவிடில் வாழ்க்கை விழலன்றோ!

என்று

பரம்பொருளின் பூங்கழல்

பற்றியோர்  கூறுவதுண்டு..

வந்தியத்தேவன் அணிந்த

அந்தப் பூங்கழல் அல்ல..

தேவாதிதேவர்களும் போற்றிடும் கமலக்கழல்!

காரியம் சாதிக்க சிலர் பிடிப்பது மனிதர்களின் கழலை..

நற்காரியம் சித்திக்கப் பற்றுவது இறைவனின் மலர்க்கழலை

 

வாதங்களின்றி  மனிதரின் பாதங்களும் கழல்..

இரு பாதங்களில் இருப்பது

பத்து விரல்..

அந்தப் பத்து விரலிலும்

அணியலாம் கழல்...

ஆம்! அம்மி மிதிக்கும் மணப்பெண்ணுக்கு

இன்று கம்மி விலையில்

கிடைக்காத மெட்டியும் கழலே

கட்டிய கணவன் மெட்டியைச் சரியாக மாட்டவில்லையெனில்

கழன்று விடுமன்றோ?!

"கழல்"வது கழலின்

வினைச்சொல் அன்றோ !

 

இளம் பூவையர் அணியும் காற்சிலம்பும் கழலாம்..

பூவையர்  72 அகவையர் ஆன பின் அணிவது கழற்கடகமாம்...

இவை போக

கழற்காய் ...காற்றாடி..

பொன்வண்டு..தயிர்..மோர்..

இவையெல்லாம் கூட கழலாம்..

இணையம் சொன்ன

பொருளாம்..

அட..இவ்வளவு ஏன்..?

மறுப்பின்றி கடையில் விற்கும்

"பாட்டா" செருப்பும் கழலாம்!

பாட்டா என்று சொன்னதால்

தமிழுக்கு வந்ததோ தடை?

பெயர்ச்சொல்லுக்கு

மொழிபெயர்ப்பில்லை!

இதுவே நல்ல விடை!

 

சரி..இவையெல்லாம் கழல் எனில் நான் எந்த கழலைப் பற்றிச் சொல்ல?

இதுவா அதுவா என்று

என் உள்ளம் உழல..

தலையும் சேர்ந்து சுழல

முடிவு காண என்னால முடியல..

 

கனல் ஈன்ற காரிகையாம் அவளை

கரம்பிடித்த கணவன்மார்

சூதாடி தோற்றபோது

கெளரவமில்லா கயவர் கூட்டம் அவள்

கௌவரவத்தை சூறையாட வந்த போது..

ஐவரின் கரம் பற்றியவளை

ஒரு கரமும் காக்காமல்

கை கட்டி நின்ற போது..

கடைந்து வைத்த வெண்ணெய் மட்டுமன்றி

குழலூதி மனங்களையும்

குடைந்து கொள்ளையடித்த

ஆநிரை மேய்த்தவனிடம்

"அபயம் அபயம்" என்று

இரு கரங்களையும் தூக்கிய

பாண்டவர் குழலி!

பெயர் பாஞ்சாலி!

அன்று பற்றினாளே...

அந்தக் கண்ணனின் கழல்

பற்றிச் சொல்லவா?

அல்லது கண்முன்

குலப் பெண்ணுக்கு

நடந்த அநீதியைத்

தட்டிக் கேட்காமல்

வெட்கித் தலைகுனிந்த அவையோரின் வீரக்கழல்கள் வீழ்ந்த கதை சொல்லவா?

 


மீன் ஆட்சி செய்யும் மாமதுரை நகர் அடைந்து

மீளாத் துயருடன் மாமன்னன் அவை புகுந்து

சிலம்பெனும் கழலை உடைத்து

தனக்கு அநீதி இழைத்த

தன் கணவன் கோவலனுக்கு

பாண்டிய மன்னன் இழைத்த அநீதிக்கு நீதி கேட்ட

சிலம்பின் நாயகி

கற்புக்கரசி கண்ணகியின்

சிலம்பெனும் கழல்

அழகிய மதுரையை

அழலுக்கு இரையாக்கிய

கதை சொல்லவா?

 

அன்று கண்ணகியின் கண்களில் கண்ணீர்

பெருகியதன்றோ!

அவள் சிலம்பும் புலம்பியதன்றோ!

மாணிக்கப் பரல் உண்மையை விளம்பியதன்றோ!

குற்ற உணர்வில் வெந்து மடிந்த பாண்டியனின் வீரக்கழல்வெட்கி

விலகியிருக்குமன்றோ!

 

இலக்கியமும் புராணமும் போதும் போதும்!

இந்நொடிப் பொழுததே கைவசமாகும்!

 

கழல் ...........கழன்று கொள்.......

ஆமை போல் உன் வாழ்வில் நுழைந்து

தீமைக்கு வழிகாட்டும் கூடா நட்பிடம் கூடாமல் கழல்....

முகம் கொடுக்காமல் கழல்.. முகநூலிலும் கழல்...

 

கழலாதே ! கழலாதே !

கழலாய் உழைத்து கண்ணின் இமை போல் காத்த பெற்றோரை

விட்டுக் கழலாதே!

 

வரமாய்க் கிடைத்த நல்ல

வாழ்க்கைத்துணையின்

கரம் விட்டுக் கழலாதே!

 

இன்று..

பெருகி வருகுது விவாகரத்து..

மனம் பொருந்தாமல் போக

இருக்கலாம் காரணம் பத்து...

ரத்து செய்வதோ பேராபத்து... பாதிக்கப்படுவது

பெற்ற பிள்ளை

என்னும் உன் சொத்து..

வேகமாய் முடிவெடுத்து

செய்யாதே விவாகரத்து..

சேர்ந்து வாழ  வேண்டும் இரு மனம் ஒத்து...

நல்வாழ்வுக்கு உண்டு

நல் இதயங்களின் வாழ்த்து!

 

கழல் போற்றுதும்!

கழல் போற்றுதும்!

 

குறைகளை ஒதுக்கி

நிறைகளை அடுக்கி

வம்பைக் குறைத்து

அன்பைப் பெருக்கி

துன்பம் கண்டு துறவறம் கொள்ளாமல்

நல்லறமாய் இல்லறம் பேணும் இல்லறத்தார்களின் கழல் போற்றுதும்!

 

என்று சொல்லி இதுவரை நான் கூறியவற்றைக் கேட்டு இருக்கையை விட்டுக் கழலாமல் பொறுமை காத்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு

 

தமிழுக்கு "" அழகு!

காலுக்குக் கழல் அழகு!

கவி பாடியவுடன் மேடையை விட்டுக் கழல்வதே எனக்கழகு!  என்பதால் 

 

நற்றுணையாவது நம் தமிழே!

தமிழ் வாழ்க!

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் வெல்க!

 

என்று வாழ்த்தி

இங்கிருந்து கழன்று கொண்டே நவில்கிறேன்

நன்றி!!!

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...