Thursday, October 31, 2024

தனைத் தான் ஆளும் தன்மை பெற்றிடல்

 ----------------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

----------------------------


     ◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●

         (3) தனைத் தான் ஆளும்

              தன்மை பெற்றிடல்

     ◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●


காலை வெயில் ஜன்னல் வழியே சுளீரென பீட்டர் முகத்தில் உறைக்கவே, புரண்டு படுத்தான். அரைகுறை தூக்கத்தால் கண்ணிரண்டும் ஜிவுஜிவு என எரிந்தது. சமையலறை உள்ளேயிருந்து கீதாவின் குரல் வந்தது. 'இன்னுமா தூக்கம். எழுந்திருச்சு ஆக வேண்டிய வேலைய கவனிங்க. சோம்பேறித்தனமா சும்மா படுத்துக் கெடக்காதீங்க..' - இது முதல் அபாய சங்கு. இன்னும் படுத்துக் கிடந்தால் சங்கொலி காதைக் கிழிக்கும் என பீட்டருக்குத் தெரியும். எழுந்து உட்கார்ந்தவன் சோம்பல் முறித்தபடியே கைபேசியை எடுத்து பார்த்துவிட்டு சார்ஜில் போட்டான். 'என்ன எழவோ சார்ஜ் நிக்கவே மாட்டாங்குது. பேட்டரி மாத்தனும் போல. அதுக்கு எவ்வளவு தண்டம் அழணுமோ தெரில..' - என அங்கலாய்த்துக் கொண்டே எழுந்தவன் பக்கத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும், சத்தப் படுத்தாமல் எழுந்து போர்வையை எடுத்து குழந்தைகளுக்குப் போர்த்தி விட்டான். பின்னாலிருந்து வந்தது கீதாவின் குரல் 'என்ன கரிசனம் அய்யாவுக்கு.. அதுங்களும் எழுந்திருக்க வேண்டியதுதானே. இப்ப போயி வக்கனையா போத்தி விட்றே' - என பாதி அதட்டலும் பாதி அன்புமாக வந்தது. அவளைத் திரும்பிப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு 'இதுங்க இப்ப எழுந்து என்ன பண்ணப் போகுதுங்க. கொஞ்ச நேரம் தூங்கட்டும் விடு' என்று சொல்லிவிட்டு பல் துலக்கச் சென்றான். கீதாவும் சிரிப்போடு நகர்ந்து சமையலறைக்குச் சென்றாள்.


பீட்டர் ஒரு பட்டதாரி. கல்லூரி நாட்களில் கல்லூரியின் கதாநாயகனாக வலம் வந்தவன். படிப்பு, விளையாட்டு, பேச்சுப் போட்டி, ஓவியம், கவிதை, கல்ச்சுரல்ஸ் என அனைத்திலும் கலக்கியவன். அசந்து மறந்தும் கூட பிறரின் உதவிக்காக காத்திருக்காதவன். தன்னால் எது முடியுமோ, தனக்கு எது சாத்தியமோ அது மட்டும் செய்தல் நலம் பயக்கும் என உணர்ந்தவன். பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருந்தது அவன் குடும்பம். வசதியான உறவுக்காரர்கள் இவனின் குடும்பத்தாரை உதாசீனப் படுத்துவதை சிறு வயதிலேயே பார்த்து உலகின் போக்கை அறிந்து கொண்டவன். பணமே பிரதானம் என இருக்கும் உலகத்தில் நேர்மையாய் வாழ்வதே தனது இலட்சியம் என பள்ளிப் பருவத்திலேயே முடிவு செய்தவன். 


அவன் படித்த கோ-எட் கல்லூரியில் அவனது ஜூனியர்தான் கீதா. பிற மாணவிகள் பலரைப் போல பீட்டர் மீது நாட்டம் கொண்டவள். பலத்த போட்டியிருப்பினும் பீட்டரின் இதயத்தில் இடம்பிடிப்பதில் வெற்றி கண்டவள். ஓரளவு பசையுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். இரு வீட்டிலும் மதம் மாறித் திருமணம் செய்ய ஒப்பாததால், வீட்டினரைப் பகைத்துக் கொண்டு, கல்லூரி பட்டப் படிப்பு முடிந்த கையோடு நண்பர்கள் துணையுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். இருதரப்பிலும் உறவுகள் முறைத்துக் கொள்ள, தனியே வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கினார்கள். திறமைக்கும் படிப்புக்கும் ஏற்ற வேலை அமையாததால் பீட்டர் ஆட்டோ ஒன்றை வங்கிக் கடன் பெற்று வாங்கி ஓட்டத் துவங்கினான். கீதாவோ ஒரு துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி அமர்ந்தாள். நகரின் எல்லையிலிருக்கும் ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் ஜாகை.  கைக்கும் வாய்க்கும் போதாது ஏதோ குடும்பம் நடந்து கொண்டிருந்தது. இருவரின் குடும்ப வாழ்க்கை இனிதே நடந்ததற்கான அத்தாட்சியாக இரு குழந்தைகள். பெரியவள் ஆறாம் வகுப்பு. இளையவன் இரண்டாம் வகுப்பு. ஏதோ ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கும் வந்தது பிரச்சனை. ஆம். கொரோனாவின் கோரப் பிடியில் உலகமே விழி பிதுங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் மட்டும் என்ன தப்பிக்கவா முடியும். குருவிபோல் பாடுபட்டுச் சேர்த்திருந்து சிறிய சேமிப்பும் ஒரே மாதத்தில் கரைந்துவிட, குழந்தைகளோடு இரண்டு வேளை சாப்பிடவே தடுமாற வேண்டியிருந்தது. ஆட்டோவுக்கு வங்கியில் கட்ட வேண்டிய ஈ.எம்.ஐ, வீட்டு வாடகை, குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் என நாலாபக்கமும் நெருக்கடி. கீதாவின் பள்ளி மூடிவிட, கொரோனாவைக் காரணம் காட்டி நிர்வாகம் சம்பளம் தராமல் கையை விரித்து விட்டது. ஆட்டோ ஓட்ட வழியில்லை. இந்த நிலையில் ஆன்லைன் க்ளாஸூக்காக ஒரு கைப்பேசியை மகள் ரோஸிக்காக வாங்க வேண்டிய கட்டாயமுமிருந்தது. இத்தனை நாள் பணியில்லாததால் தன் செல்போனையே அதற்குப் பயன்படுத்திக் கொண்டான். அரசு லாக்டவுனை சிறிது தளர்த்தியதால் தானும் ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் எழுந்தது. அப்போது செல்ஃபோன் தனக்குத் தேவைப் படும் என்பதால், குழந்தைக்கு ஒரு பழைய ஃபோனையாவது வாங்க வேண்டும். தனது ஃபோனுக்கு பேட்டரி மாற்ற வேண்டும். ஏற்கனவே பூதாகராமாய் அச்சுறுத்தும் ஈ.எம்.ஐ, ஸ்கூல் ஃபீஸ், வீட்டு வாடகை இவற்றோடு இந்த செலவினங்களும் வந்துசேர, அந்தக் கவலையிலேதான் இரவு தூக்கமின்றித் தவித்தான் பீட்டர். வங்கிக்கடனை இரண்டு மாதம் கழித்துச் செலுத்தலாம் எனவும், வீட்டு வாடகைக் கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அன்போடு ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி விட்டு தங்கள் கைகளைக் கழுவிக் கொள்ள, பீட்டரோ எந்தப் பிரச்னையிலிருந்தும் மீளாமல் தவித்துக் கொண்டிருந்தான். இதிலே கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, சதத்தைத் தாண்டி விரைவாக நடைபோடும் பெட்ரோல் விலை வேறு தலையில் பெரிய பாறாங்கல்லை இறக்கியது. கீதாவிடமிருந்த சொற்ப நகைகளையும் விற்றுத்தான் வண்டியோட்ட வேண்டுமென எண்ணிக் கொண்டே சூடான டீயை உறிஞ்சலானான் பீட்டர். அதற்கு ஏனோ அவன் மனது சம்மதிக்கவில்லை. யதார்த்தத்துக்கும் தனது கொள்கைப் பிடிப்புக்கும் இடையே அவன் தடுமாறினான்.


மாதக்கணக்கில் நீடித்த லாக்டவுன் சிறிதே தளர்த்தப்பட ஆட்டோவை ஓட்டத் துவங்கினாலும் பெட்ரோல் விலை இவனைப் பதற வைத்தது. கறாராக ஸ்கூல் ஃபீஸைக் கறந்துவிடும் ஸ்கூல் நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு கொரோனாவைக் காரணம் காட்டி சம்பளத்தைத் தராமல் டபாய்ப்பதை அரசுகள் வேடிக்கைப் பார்க்கின்றனவே என்ற ஆத்திரம் மேலோங்க ஆட்டோவைக் கிளப்பியவன் நேராக டவுனுக்கு வண்டியை விட்டான். போகும் வழியில் வினைதீர்க்கும் விநாயகருக்கு ஒரு கும்பிடையும் மேரியன்னை சிலையைப் பார்த்ததும் சிலுவைக் குறியையும் போட்டு மனதார இறைஞ்சினான், கண்ணைத் திறக்க. கலப்பு மணம் 'எம்மதமும் சம்மதமே' என்பதை பீட்டர் வீட்டில் நிலை நிறுத்தி இருந்தது.


தெரு முனையில் ஒரு வயதான மூதாட்டியும், நடுத்தர வயது இல்லத்தரசியும் கைகாட்டியதும் ஆட்டோவை நிறுத்தினான். பார்த்தவுடனே பணக்காரக் களை பளிச்செனத் தெரிந்தது. நகரிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் ஒரு நகைக் கடை வாயிலில் அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பும் போது, பசி வயிற்றைக் கிள்ள நாஸ்தா தின்ன ஒரு கையேந்தி பவனில் நின்றான். கீழே இறங்கி இரண்டு ஆப்பத்தைத் தின்று டீ குடித்துவிட்டு, ஆட்டோவை எடுக்கக் கிளம்பும் போதுதான் பின் சீட்டில் இருந்த பெரிய பையைக் கவனித்தான். எடுத்துப் பார்த்தால் கத்தை கத்தையாகப் பணமும், இரண்டு கைப் பேசிகளும் இருந்தன. அந்தப் பெண்மணிகள்தான் அதனை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் என ஊகித்தான். குப்பென்று வேர்த்துக் கொட்டியது. அவர்களின் செல்ஃபோனை எடுத்து அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றால் அதனது பேட்டர்ன் தெரியவில்லை. கடைப்பக்கம் போய் சிறிது நேரம் சுற்றிப் பார்த்தான். யாரும் கண்ணில் தென்படவில்லை. நகைக் கடைக்குத்தான் போனார்களா என்பதையும் அவன் சரிவரக் கவனிக்கவில்லை. அப்போதுதான் ஏட்டாகப் பணிபுரியும் அவனது பள்ளிக்கால நண்பன் கணபதி ஞாபகம் வர நேராக காவல்நிலையம் சென்று அந்தப் பையை ஒப்படைக்கச் சென்றான் அவன். மனதில் பெரிய போராட்டம் ஓடிக் கொண்டிருந்தது. இறுதியில் வாழ்நாளெல்லாம் கட்டிக் காப்பாற்றிய நேர்மை அவனது மனதை ஒருமுகப் படுத்த காவல் நிலையத்தை அடைந்தான். கணபதியோடு கைப்பேசியில் பேசிக் கொண்டே உள்ளே சென்றபோது, அங்கு கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண்மணிகள் இருவரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் அவர்களிடம் புகார் எழுதி வாங்கிக் கொண்டிருந்தார். பீட்டர் அவர்களைப் பார்த்ததும் 'அம்மா.. உங்க பைய வச்சுட்டுப் போயிட்டீங்களே. உங்கள எப்படி கண்டுபிடிக்கறதுன்னு தெரியல. அந்தக் கடை பக்கம் போய் பார்த்தேன். என்ன செய்யறதுன்னு புரியாம போலீஸ்ல கொடுக்கலாம்னு வந்தேன். நல்லதாப் போச்சு இந்தாங்கம்மா ஒங்க பேக். எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்கம்மா' - எனக் கூறிக் கொண்டே பையை அவர்களிடம் கொடுத்தான். ஆனந்தமும் அழுகையும் ஒன்றாய்ப் பொங்கிவர அவர்கள் அப்பையை வாங்கிக் கொண்டு அவனுக்குப் பெரிய கும்பிடு போட்டனர். இன்ஸ்பெக்டர் தனது வழக்கமான கேள்விகளைக் கேட்கத் துவங்கும்போது அங்கு வந்து சேர்ந்த ஏட்டு கணபதி 'சார். இவன் என க்ளாஸ்மேட் பீட்டர். ரொம்ப நல்லவன் சார்' - என சர்டிபிகேட் கொடுத்தான். 


பிறகு வழக்கமான ஃபார்மாலிட்டீஸ் முடித்துவிட்டு பை அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி வீடியோவாகப் பதியப்பட்டு கணபதியால் வாட்ஸ்அப்பில் பகிரப்பட, அது சமூக ஊடகங்களில் வைரலாகி வலம் வந்தது. 


இரண்டு நாட்கள் கழித்து, ஸ்கூலிலிருந்து ஃபோன். உடனே ஸ்கூலுக்கு வரச்சொல்லி. ஃபீஸ் கட்டவும், ஆன்லைன் க்ளாஸூக்கு ரோஸி சரியாக வருவதில்லை எனப் புகாரளிக்கவும். நேரில் சென்றபோது பிரின்ஸிபல் ரூமில் நான்கைந்து பேர் இருந்தனர். இவனோ பவ்யமாக பிரின்ஸியிடம் தனது கஷ்டங்களைக் கூறினான். அங்கிருந்த ஒருவர் இவனைப் பார்த்தபடி, "காணாமல்போன பணத்தை போலீஸிடம் ஒப்படச்ச ஆட்டோ ட்ரைவர்தானே நீங்க" - எனக் கேட்டதும், இவன் பரிதாபமாக தலையாட்டினான். பிரின்ஸியோ குறுக்கேத் தலையிட்டு 'அதெல்லாம் சரி.. எப்ப ஃபீஸ் கட்டப் போறீங்க.. முடியலனா டி.சி. வாங்கிக்கங்க' என கறாராகக் கூறத் தொடங்கினார். உடனே, கேள்வி கேட்ட அந்த நபர், "சார். அவர் எவ்வளவு கட்டணும்னு சொல்லுங்க. இவர் எங்க வீட்டுப் பணத்தை ஒருபைசா குறையாம கொண்டுவந்து கொடுத்தவரு. இவரை இவர் வீட்லேயே இவர் ஃப்ரண்டோட  போய் பாக்குறதா இருந்தோம். அன்னிக்கு இருந்த பதட்டத்துல இவரை சரியாகூட நாங்க  அங்கிருந்த போது கவனிக்கல. பேசக் கூட இல்ல. எங்க மக கல்யாணத்துக்கு நகை வாங்கப் போனபோதுதான் இது நடந்துச்சு... இவரோட பிரச்சனைகளை  ஏட்டையா மூலம் தெரிஞ்சுக்கிட்டோம்.' என படபடவெனப் பேசி முடித்தார். அவர் அந்தப் பள்ளியின் போர்ட் மெம்பரில் முக்கியமானவரெனப் பின்னர் பீட்டருக்குத் தெரிய வந்தது. ஒரு வாரத்திற்குள் அவரின் ஏற்பாட்டின் காரணமாக அதே பள்ளியில் காவல் ஆணையரை வரவழைத்து பீட்டருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி அதில் ஒரு புதிய செல்ஃபோனை பரிசாகவும் கொடுத்தார்.


தனைத் தான் ஆளும் தன்மை பெற்றிட்டதால் தான் பீட்டரால் மனத் தடுமாற்றத்தை புறந் தள்ளி அவனது வாழ்நாள் லட்சியமான நேர்மையைக் கடைப் பிடிக்க இயன்றது. வறுமையில் உழன்றாலும் உறுதியாக நிற்க முடிந்தது.


குறிப்பு: எங்கள் அஞ்சல் துறையில் திருச்சி ஆர்.எம்.எஸ். பகுதியில் வேலை பார்க்கும் ஜெ. கிஷோர் குமார் எனும் க்ரூப் 'டி' ஒருவர் ரயில்வே ஸ்டேசனில் நகைகளோடு இருந்த ஒரு பையைக் கண்டெடுத்து, ரயில்வே போலீஸில் ஒப்படைத்தார். ஓர் இஸ்லாமியக் குடும்பம் அதைத் தவற விட்டிருந்தது. மீண்டும் அவர்கள் வசம் அது ஒப்படைக்கப் பட்டது. அவ்வப்போது இது போல பல செய்திகளை ஊடகங்களில் பார்க்கிறோம். அந்த நேர்மையாளர்கள் தங்கள் சொந்த வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி என்றாவது இச்சமூகம் கவலைப் பட்டிருக்கிறதா எனும் கேள்விக்கு இச்சமூகந்தான் பதில் சொல்ல வேண்டும். சொல்லுமா? இந்தக் கதை மூலமாக அவர்களைப் பற்றி வெளியுலகத்துக்குச் சொல்லுவோம் என்ற என் எண்ணமே இந்தக் கதை. இது போன்ற நேர்மையான செயல்கள் எப்போதும் எல்லோராலும் நடந்தால் நலமே! 


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Wednesday, October 30, 2024

பண்டிகையும் வந்தாச்சு(கவிக்கோவை)

 வந்தாச்சு வந்தாச்சு 

பண்டிகையும் வந்தாச்சு 

பட்டாசு சத்தம்

படீருனு கேட்குது


புதுத்துணி எடுத்தாச்சு

உடுத்த மனம் ஏங்குது


எண்ணெயும் காயுது

மாவு நிறம் மாறுது


நெய்வாசம் துளைக்குது

பலகாரமா மாறுது


வெல்லமும் சர்க்கரையும்

இனிக்க இனிக்க இழுக்குது


பண்டிகைக்கு முன்னாலே

பலகாரத்த ருசிக்கலாம்


வாழ்க்கையும் ருசிக்கட்டும்

தீப ஒளி என

மனமெல்லாம் ஒளிரட்டும்


வந்தாச்சு வந்தாச்சு 

பண்டிகையும் வந்தாச்சு!!?


-அமுதவல்லி


*------------------*

பூந்தி லட்டு

பூரிக்க வைக்கட்டும்!

ஜாங்கிரி ஜமாய்க்க

வைக்கட்டும்!

மைசூர்பா மகிழ்ச்சி

கொடுக்கட்டும்!

நெய் மைசூர்பா

நெகிழ வைக்கட்டும்!

குலோப் ஜாமீன்

குதூகலப்படுத்தட்டும்!

பாதுஷா  பா பாட வைக்கட்டும்!

அங்கூர் பூந்தி அகங்காரம் நீக்கி

அன்பைப் பெருக்கட்டும்!

ஆப்பிள் பேடா ஆணவம் தகர்த்து

ஆனந்தம் கொடுக்கட்டும்!

சந்திரகலா கலையை

வளர்க்கட்டும்!

சூர்யகலா சுறுசுறுப்பை

அருளட்டும்!

சோன்பப்டி சோம்பலை

விரட்டட்டும்!

பாதாம் அல்வா

பரவசப்படுத்தட்டும்!

ரசகுல்லா ரசிக்க

வைக்கட்டும்!

சந்தேஷ் சந்தோஷம்

நல்கட்டும்!

பாசந்தி பாசத்தை

வளர்க்கட்டும்!

காரட் அல்வா

களிப்புற செய்யட்டும்!

பால் பாயாசம்

ஆயாசம் நீக்கட்டும்!

பால் கொழுக்கட்டை

பந்தத்தை வளர்க்கட்டும்!

அசோகா அல்வா

சோகத்தை விரட்டட்டும்!

மலாய் குல்லாவால் மகிழ்ச்சி நிலைக்கட்டும் !

அஞ்சீர் பர்பி அச்சம்

தவிர்க்கட்டும்!

மோத்தி பாக்கும் மோஹன்தாலும் மோதலைத்

தவிர்க்கட்டும்!

சாக்லேட் பர்பி

சாகாவரம் அருளட்டும்!

காஜு கத்லி

கணக்கில்லாமல் கிடைக்கட்டும்!

ஜீரா பூரியும்  ஜீரணமாகட்டும்!

'சுகர் ப்ரீ' இனிப்புகளும்

சுவையாய்  இருக்கட்டும்! இனிமை மிகுந்த இரத்தமுடையோர்

இரகசியமின்றி இனிப்புகளை

இரசித்து ருசிக்கட்டும்!

அளவோடு உண்டு சுகர் 

அளவைக் கட்டுக்குள்

வைக்கட்டும்! 



இல்லங்களிலும் உள்ளங்களிலும்

இனிப்பும்

இனிமையும்

நிறையட்டும்!

தீப ஒளியால்

வாழ்க்கை சிறக்கட்டும்!


இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!!!


- சாய்கழல் சங்கீதா

*--------------*

நண்பர்கள் அனைவருக்கும்..


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


இல்லம் இனிக்கட்டும்!


தினம் தினம் மனதை 

புத்தாடை போல

தூய்மையாக வைத்து இருப்போம்!


தீபாவளி இனிப்பு போல

என்றும்

இனிமையாக

இதயத்தை

வைத்து இருப்போம்!


நல்ல நாளில்

பலகாரங்களை 

பக்கத்து வீடுகளுக்கு

பரிமாறுவது போல

அன்பை தினம் தினம் 

பரிமாறு வோம்!


நல்லவர்களுடன்

நட்பு பாராட்டி

நாளும் தொடர்பில் இருப்போம்!


அயலாரையும்

அன்னியரையும்

அன்பால் 

அன்பிற்குரிய வர்களாக்குவோம்!


துன்பங்களும்

துயரங்களும் பட்டாசு போல

வெடித்து சிதறட்டும்!


 எழுந்தவுடன் எண்ணெய் 

குளியல் செய்து

ஆரோக்கியமாய் இருப்போம்!


இடர்கள் களைந்து

இன்பங்கள்

நம்மை சூழ

இந்நன்னாளில்

இறைவனை வணங்குவோம்!

இயற்கையை நேசிப்போம்!!


இருள் விலகி

அனைவர் வாழ்விலும்

ஒளி பரவ 

தீப திருநாளில் வாழ்த்தும் அன்பு நெஞ்சம்


அன்புடன்.......

அக்ரி சா.இராசா முகமது

*-----------------*

டும் டும் டும்... 


விரி வானில் வாணங்கள் சீறிப் பாயட்டும்

   விண்மீன்கள் நடுநடுங்கி விரைந்து ஒளியட்டும்


கரியாகட்டும் காசு இன்று ஒரு நாள் மட்டும்

   காது துளைக்கட்டும், கண்கள் பூக்கட்டும்


சிரிக்கும் சிறார்கள் இனிப்புகள் சுவைக்கட்டும்

   சீனி உதிரத்தார் கண்களால் கடிக்கட்டும்


பிரியாமல் உறவுகள் இன்னும் இறுகட்டும்

   பேசட்டும், சிரிக்கட்டும், வயிறும் வலிக்கட்டும்


உரிமை இது எங்களென்று ஊரே திரளட்டும்

   உற்சாகம் வீதி எங்கும் கரை புரளட்டும்


பெரியோர்கள் சிறியோர்க்கு வெடிக்க உதவட்டும்

   பெரிய விபத்துகள் நிகழாமல் தவிரட்டும்


நரியாக எதிர்ப்பவர்களும் ஊளையிடட்டும்

   நன்றாக தம் செவிகள் பொத்திக் கொள்ளட்டும்


திரியிட்ட எண்ணெய்த் தீபங்கள் ஒளிரட்டும்

   " தீபாவளி " திருநாள் இன்று கொண்டாட்டம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


**-----------------**

தீப ஒளியில் 

நன்மைகள் பெருகட்டும்

தீமைகள் கருகட்டும்


சமூகக் கேடுகள்

நரகாசுரன் போல்

வீழட்டும்.


அனைவருக்கும்

தீப ஒளித் திருநாள்

நல் வாழ்த்துகள்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி





கல்வி -- அன்றும், இன்றும்

 கல்வி -- அன்றும், இன்றும்


அல்வா போல் கல்வி ஆரம்பத்தில் இனிக்காது

   அடுத்த கட்டம் போனால் என்றும் திகட்டாது


செல்வம் போல் கல்வி களவாட முடியாது

   சேர்ந்தால் மாமியார், மருமகள் போலது


கல்விக்கு அதிகாரம் தனியே வள்ளுவன் வைத்தார்

   கற்றார் முகத்தில் தான் கண்கள் என்றார்


பல்கலைக்கழகங்கள் பல்லாயிரம் ஆண்டு முன்பாம்

   பாரதத்தில் பல இருந்தன சான்றுகளும் உண்டாம்


நல் விளக்கு என்றார் கல்வியை முன்னோர்

   நான்குடன் அறுபது (64) கலைகள் கற்பித்தார்


தொல்காப்பியம், இலக்கியம், வேதம்.. என நீளும்

   தொன்மை, செழுமை இவை போல் உண்டா ஏதும்? 


பல் துலக்கா பிராணிகள் சில இங்கு கூறும்

   பரங்கியர் தந்ததே கல்வி என்ற பொய்யும்


நல்வழிப் படுத்தலே கல்வி அன்று செய்தது

   நான்கிலக்கம் (OTP)  சொல இன்று எல்லாம் பறிபோகுது.


__  குத்தனூர் சேஷுதாஸ்

பிறர் துயர் தீர்த்தல் ; பிறர் நலம் வேண்டுதல்

 ------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

--------------------


◆●◆●◆●◆●◆●■●■●◆●◆

பிறர் துயர் தீர்த்தல் ;

பிறர் நலம் வேண்டுதல்

◆●◆●◆●◆●◆●■●◆●◆◆●


திண்டுக்கல்லுக்கும் பழனிக்கும் போகும் பாதையில் மலைப்பாங்கான ஒரு சிறு கிராமம் உண்டு. பெயரோ சித்திரக் குளம். வறண்ட பூமியும் கற்பாறைகளும் நிறைந்த ஓரிடம். கிராமத்தில் மருந்துக்குக் கூட ஒரு குளம் கிடையாது. எந்த நீர்நிலையும் கிடையாது. மூன்று மைல்கள் நடந்து சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவார்கள் மக்கள். அங்கிருந்தோர் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள். பொதுவாக அக்கிராமப் பகுதி பற்றி அம்மாவட்ட மக்களிடையே இருந்த ஒரு பிரபலான கூற்று அந்தக் கிராம நிலையை தெளிவாகக் கூறிடும். தங்கள் வீட்டு வாரிசுகளுக்கு திருமண வரன் பார்க்கத் துவங்குகையில்


 "சித்திரக் கொளத்துலேந்து பொண்ணு எடுக்கலாம்... மாடா ஒழைக்கும்... ஆனா பொண்ணு கொடுக்கக் கூடாது.. அங்க வாழ்க்கப்பட்டா வாழ்க்கை பூரா ஒழைச்சு ஒழைச்சு ஓடாத் தேயணும்" - என்பார்கள், தண்ணீர் கஷ்டத்தை மனதில் நினைத்து.


இந்தக் கூற்று சித்திரக் குளத்தின் வறட்சியின் எதிரோலியே. இன்றும் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே மக்கள் மிகவும் கஷ்டப் படுவது கண்கூடு. கல்லுடைப்பதைத் தவிர அங்கு பெரிய வேலை ஏதுமில்லை. வயலில் வேலை செய்யவோ, பிற தொழில் செய்யவோ அக்கிராம மக்கள் அக்கம் பக்க ஊர்களுக்குச் செல்லுதலே நடைமுறையாக உள்ளது.


அங்கு பிறந்து வளர்ந்த அறிவழகன் தற்போது ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் ஏராளமான திராட்சைத் தோட்டங்களோடும் கனிமவள சுரங்கங்களோடும் வளமாக வாழ்ந்து வருகிறார். நாட்டின் பெருந் தனவந்தர்கள் பட்டியலில் இவர் பெயருமுண்டு. சிறுவயதில் தண்ணீருக்காகவும் பிற தேவைகளுக்காகவும் அல்லல் பட்ட வடுக்கள் அவரது அடிமனதின் ஆழத்தில் இன்றும் உண்டு. கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்த அறிவழகன் தன்னுடன் படித்த மாலதியைக் காதலித்து மணந்தார். மாலதியின் தந்தை நரசிம்ம ரெட்டி சுரங்க முதலாளி. அவரின் ஒரே பெண்ணான மாலதியை மணந்ததால் ரெட்டியின் செல்வங்களுக்கு ஏகபோக அதிபதி ஆனார். தனது உழைப்பாலும் கூரிய மதியாலும் சொத்துகளைப் பன்மடங்கு உயர்த்தினார். இருபது ஆண்டுகள் கழிந்து தனது பிறந்த ஊரான சித்திரக் குளம் சென்று பார்க்க அவருக்குத் திடீரென ஆசை வந்தது. தனது வணிகக் குழுமத் தொடர்புகள் மூலம் திண்டுக்கல் வந்து தன் நண்பரின் கெஸ்ட் ஹவுசில் தங்கினார். சித்திரக் குளத்திலிருந்து அங்கு வந்து பணி புரியும் இரு சிப்பந்திகளோடு அவ்வப்போது அளவளாவினார். தான் அவ்வூர்க்காரன் என்பதை ஏனோ அவர் தெரிவிக்கவில்லை. . ஓரிரு நாட்கள் உரையாடல் அவருக்குத் தேவையான தகவல்களைத் தந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தான் இருந்த அதே சித்திரக் குளம் சிறிதும் முன்னேறாது அதே நிலையில் இருந்ததைத் தெரிந்து கொண்டார். தனது ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என அவர் அடிமனதில் ஊறியிருந்த ஆவல் இப்போது மேலும் வலுவடைந்தது. அதற்கான வழிமுறைகளை யோசிக்கத் துவங்கினார். 


உரையாடல்களில் பல சமயங்களில் உச்சரிக்கப் பட்ட லூர்துராஜ் எனும் பெயர் அவருக்கு ஓர் ஈடுபாட்டைத் தந்தது. கிராமத்தைப் பற்றி தகவல்களை விட லூர்துவைப் பற்றித் தெரிந்து கொள்ள விழைந்தார். அதில் அதிக கவனம் செலுத்தினார்.


லூர்துராஜ் இருபது வயது இளைஞன். கடுமையான உழைப்பாளி. பெரிய படிப்பு பெறவில்லையெனினும் அறிவாற்றல் கொண்டவன்.

தன்னைச் சுற்றியுள்ள ஊர்மக்களுக்கு உதவுவதை உயிர்மூச்சாகக் கொண்டவன்.


தன் சக்திக்கு மீறி பிறருக்கு பொருளுதவியும் சிறிதும் தயங்காது செய்து வந்தவன். வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் கடமையிலிருந்தும் சற்றும் வழுவாதவன். பாறைகளை வெடிவைத்து உடைக்கும் கான்ட்ராக்டரிடம் பணி செய்தாலும் பிளம்பர், எலக்ட்ரீசியன், கார்பன்டர் என பல தொழில்களையும் கைவசம் வைத்திருப்பதால் அந்த வேலைகளையும் அசராது பார்ப்பவன். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கட்டணம் துவங்கி பல முதியோர்களின்  மருத்துவச் செலவு வரை தன்காசை செலவழித்து உதவி புரிபவன். 


இதையெல்லாம் தெரிந்து கொண்ட அறிவழகனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. மறுநாள் அந்த வேலையாட்களில் ஒருவரை அழைத்துக் கொண்டு சித்திரக் குளம் போனார். மாலை வேலையாதலால், ஊரின் எல்லையில் இருந்த ஒரு டீக்கடையில் டீ அருந்தச் சென்றார்கள். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி டீ ஆர்டர் செய்தார்கள். அப்போது உடன் வந்தவன்,


"சார்... லூர்து வாரான் சார்.." - என்றபடி


"டேய்..  லூர்து.." என்று கூப்பிட்டான். ஒரு கட்டுமஸ்தான இளைஞன் அருகில் வந்தான். வந்து,


"என்னன்ணே.. அதிசயமா இருக்கு.. கெஸ்ட் அவுஸ விட்டு வர மாட்டீங்களே.. ஏது இம்புட்டு தூரம்'' - என சொல்லியவாறே சிரித்த முகத்தோடு அருகில் வந்தான். 


"ஒண்ணும் இல்லீப்பா.. சார் நமக்குத் தெரிஞ்சவரு.. இந்தப் பக்கமா ஓரெடத்துக்குப் போறாரு.. என்னியும் கூப்டாரு.. அதான்" - என்றான். அப்படித்தான் அறிவழகன் சொல்லச் சொல்லியிருந்தார்.


இதற்குள் டீ சாப்பிட்டு விட்டு, காசெடுக்க அறிவழகன் சட்டைப் பையைத் துழாவினான்.


"சார்.. நம்மூருக்கு வந்திருக்கீங்க.. காசெல்லாம் வேணா சார்.. அண்ணே இவங்களோடு டீயும் என் கணக்குல சேத்துருங்க" - என்றான் புன்னகையோடு. வணிகச் சூழலில் உழன்று எதைச் செய்தாலும் காசு பார்ப்பதையே குறிக்கோளாக வாழ்ந்தவருக்கு முன்பின் பார்த்தறியாத ஒருத்தருக்கு இவ்வாறு ஒருவன் உளப்பூர்வமாக விருந்தோம்பல் செய்வது ஆச்சரியம் அளித்தது. 


பிறகு தினம் அவனை சந்தித்து அவனோடு நெருக்கமாக உரையாடி அவனது உள்ளத்தை அவர் அறிந்து கொண்டார். 


"சார்.. எனக்குப் பெரிய பெரிய கனவெல்லாம் இருக்கு சார்.. கலாம் ஐயா சொன்ன மாதிரி அந்தக் கனவு எல்லாம் என்னை தூங்க விடாம செய்யுற கனவு சார். நான் சாவறத்துக்குள்ள இந்தூர்ல நெலத்தடி தண்ணி வாகு பாத்து ஒரு பெரிய கெணறு வெட்டணும் சார்.. மக்கள்லாம் தண்ணிக்கு அல்லாடுறாங்க.. அத மொதல்ல போக்கணும் சார்.. இந்த ஊர்ல பிள்ளைங்க படிக்க ஒரு எலவசப் பள்ளிக்கோடம் கட்டணும் சார்.. பெருசுங்கள்ளாம் சீக்குல படுத்துருச்சுன்னா எலவசமா வைத்தியம் செய்ய ஒரு ஆஸ்பிடல் கட்டணும்.. முடிஞ்சா ஒரு லைப்ரரி வைக்கணும்.... அப்புறம்.... உம்ம்.. இப்போதைக்கு இது போதும் சார்.. " - கண்கள் விரிய உணர்ச்சியோடு லூர்து மளமளவென கொட்டித் தீர்த்தான்.


அறிவழகனும், "கவலப் படாத லூர்து.. எங்க முதலாளி நல்லவரு.. இன்னிக்கு ராத்திரி அவரோட பேசும்போது ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்குறேன்" - எனச் சொன்னார். 


அவரது கைகளைப் பிடித்த படி கண்களில் ஒளியோடு


"சார்.. நீங்க சொல்றதே பெரிய விஷயம் சார்.. கஷ்டப் பட்டு கொஞ்சம் காசு போஸ்டாபீஸூல சேத்து வச்சுருக்கேன் சார். ஒங்க முதலாளி பெரிய மனசு பண்ணாருன்னா இதையும் சேத்துப் போட்டு ஏதாவது ஒண்ணாச்சும் பண்ணிடனும் சார்"- என சொல்கையில் குரல் தழுதழுத்தது. தனது அரை நிஜார் பையிலிருந்து கசங்கிய பாஸ்புக் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். அதில் ௹.3,327/- இருப்பு இருந்தது. அவர் புன்னகைத்த படி கிளம்பினார். மறுநாள் அவர் முதலாளி உதவுவதாக ஒத்துக் கொண்டதாகக் கூறியதோடு, அதற்கு அடுத்த நாளே கிணறு தோண்டும் பணிகள் தொடங்கலாம் என்றார்.


முதலில் முத்து ஆசாரியைக் கூட்டி வந்து தண்ணி வாட்டம் பார்த்தனர். அறிவழகன் ரகசியமாக ஹைட்ராலஜி டிபார்ட்மன்ட் மூலமாக நிலத்தடி நீர் இருக்குமிடத்தை தெரிந்து கொண்டார். முத்து ஆசாரியும் கிட்டத் தட்ட அதே இடத்தில் தன் கையிலுள்ள மூங்கில் குச்சி சுழன்றதைக் காட்டி அவ்விடத்தைக் குறித்துக் கொடுத்தார். அறிவியலும் இயற்கையை கணிக்கும் கிராம மக்கள் ஆற்றலும் இணைந்திருக்கும் அற்புதத்தைப் பார்த்த அறிவழகன் அதிசயப் பட்டார். வேலைகள் மளமளவென நடக்கத் துவங்கின. ஜேசிபி ஆழமாக நிலத்தைத் தோண்டத் துவங்க, மூன்றாம் நாள் அதிகாலை அடி ஊற்று கொப்புளித்து வந்தது. கிட்டத் தட்ட பாலைவன பூமியாக இத்தனை ஆண்டுகள் இருந்த சித்திரக் குளத்தில் பெரிய கிணறு நல்ல நீர்வளத்தோடு வந்தே விட்டது. ஊர்மக்கள் லூர்துசாமியைக் கொண்டாட, அவனோ அறிவழகன் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான்


"சார்.. நீங்க தெய்வம் சார்.. ஒங்க மொதலாளியோட ஒரே வாட்டி பேசிடணும் சார்.. அவரு மாதிரி மனுசங்க எல்லாரும் இருந்துட்டா.. ஒலகமே சூப்பராயிடும் சார்" -என உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தான். 


தனது வணிகத்தையெல்லாம் தனது மேனேஜரிடம் விட்டு விட்டு மூன்று மாதம் சித்திரக் குளத்தில் தங்கி ஒரு பள்ளிக் கூடம், தர்ம ஆஸ்பத்திரி, நூலகம் என அனைத்தையும் கட்ட பணியை முடுக்கி விட்டு நடத்தி முடித்ததோடு தனது மனைவியையும் வரவழைத்தார். தனது குழுமத்தின் சார்பில் ஒரு நிர்வாக அலுவலகம் கட்டி லூர்துவின் பெயரில் ட்ரஸ்ட் துவங்கி, அதனை நிர்வகிக்க ஒரு கமிட்டியையும் போட்டார். பள்ளி, மருத்துவ மனை, நூலகம் நடத்த ட்ரஸ்ட் அக்கவுன்ட்டில் இருபது கோடி பணத்தையும் போட்டார். அங்கேயே தனது மனைவியுடன் தங்கிடவும் முடிவு செய்து விட்டார்


ட்ரஸ்ட் அலுவலகத் திறப்பு விழாவில்,


"நான் இந்தக் கிராமத்துல பிறந்து வளந்தவன். காலேஜ் படிக்க மெட்ராஸ் போனேன். அங்க கல்யாணம் ஆச்சு. ஹைதராபாத் போயி வியாபாரம் செஞ்சேன். இருபது வருஷம் ஓடிப் போச்சு.. நம்ம கிராமத்த சும்மா ஆசைக்காகப் பாக்க வந்தேன். இங்க லூர்து பத்திக் கேள்விபட்டு அசந்து போயிட்டேன். கடுமையா ஒழைச்சு சம்பாதிக்கிற காச ஊருக்காக செலவழிக்கிற பரோபகாரம் எல்லாருக்கும் வராது. அவன்கிட்ட அது நெறய இருந்துச்சு.. அது என் மனசாட்சிய உலுக்கிச்சு.. நீ என்ன செய்யப் போற ஒன் ஊருக்குன்னு அது கேள்வி கேட்டுச்சு.. அதுக்கான பதில்தான் இந்த ட்ரஸ்ட். "பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்" - என்கிற லூர்துவின் பெரிய மனசுக்கு ஆண்டவனோட பரிபூரண ஆசிர்வாதம் என்னிக்கும் உண்டு" - இப்படியாக அவர் கூறி முடித்த போது ஊரே கைதட்டி ஆரவாரித்தது. அதுவரை அவரைப் பற்றி முழுதும் அறியாத லூர்துவும் திகைத்து நின்றான்.


சித்திரக் குளம் இப்போது வளம் கொழிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக வரைபடத்தில் ஒரு முக்கிய இடமாக விரைவில் மாறிடவும் செய்யும்.

Tuesday, October 29, 2024

தேடல் - III (கவிக்கோவை)

 நிலையில்லா வாழ்வில் 

நித்தம் நித்தம்  

எத்தனையோ 

தேடும் மனிதா!!!

பொன் பொருளை விட்டு -

அழுக்கில்லா இயற்கையைத் 

தேடு. 

ஆதரவான உறவைத் தேடு. 

இனிய நட்பைத் தேடு. 

ஈகையில் மகிழ்வைத் தேடு. 

உன்னில் உலகைத் தேடு. 

ஊழலற்ற சமுதாயம் தேடு. 

எண்ணித் துணியும் திறமையைத் 

தேடு. 

ஏற்றமிகு எண்ணத்தைத் தேடு. 

ஒழுக்கமிகு வாழ்வைத் தேடு.

ஓங்கிச் சொல்லும் துணிவைத் 

தேடு. 


- முகம்மது சுலைமான்


*----*

தேடித் தேடி.... 


தேனீ தேடியது, தேன் நமக்குக் கிடைத்தது

   தினகரன் தேடலில் தினந்தோறும் கிடைக்குது


மானை இராமன் தேட மனைவி பறிபோனாள் 

   மாருதி தேடலில் மைதிலி அவள் கிடைத்தாள் 


வானில் தண்ணிலவு தேடுது எதையோ பாவம்

   வருந்தும் தலைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் 


கானமதில்  செல்வார் சிலர் கடவுளைத் தேடி

   கடவுளே பலவாய் அறியார் கண் முன்னாடி



பல் அது தேடியது பட்டாணி கிடைத்தது

    பாகல், சுண்டை அவை தேடாமல் கிடைத்தன


வல்லினம் தேடலில் மெல்லினம் கிடைத்தது

   வாண்டுகளோடு இலவசம் வழுக்கை வந்தது


சொல் எல்லாம் தேட கவிதையும் பிறக்குது

   சொன்ன பொருளில் கவிதை சொரியச் சொல்லுது


எல்லாம் தேடும் மனிதா ! என்று உனைத் தேடுவாய்? 

   இருப்பிடமது அறிய மௌனத்தில் புகுவாய். 


__  குத்தனூர் சேஷுதாஸ்


*------------*

தேட வேண்டியதை தொலைத்து விட்டு.....

தொலைக்க வேண்டியதை தேடிக்கொண்டிருக்கிறாயே?

முதலில் உன் தேடல் எதுவென தேடு

😊 சாயி 😊



தேடல் - II (கவிக்கோவை)

 தேவை என்ன, தேடல் எதற்கு?

நாளும் நாளும் மனம் ஏங்குவது யாருக்கு?

விரைந்து ஓடும் வாழ்க்கை பாதையில்,

நிம்மதி காணும் தேடல் வழிதான்.


செல்வம் தேடினால் சுகம் கிடைக்குமா?

அன்பை தேடினால் எல்லாம் ஒட்டுமா?

முடியாத தேடலின் முடிவில் நின்று,

தேவை என்பதின் உண்மையை உணர்ந்திடு.


இங்கு வாழ்ந்திடும் பொழுதிலே,

மகிழ்ச்சி கண்டு மனதிலே;

தேவை எனும் மாயை போக,

இனிதாய் வாழ்ந்து விடு — அது தான் போதுமே!


- தியாகராஜன்


*------------*

"பா" வைத் தேடினால்

பைந்தமிழ் பழகுமே!

ரதியை மட்டும் தேடினால்

நிம்மதி நழுவுமே!

பாரதியைத் தேடினாலோ

அச்சம் தீருமே!


- சாய்கழல் சங்கீதா

என்னைத் தேடினேன்

அனைவரும் கிடைத்தனர்!

நான் நீ என்ற

பேதமில்லாமல்..

உண்மையைத் தேடினேன்

எனக்குள்ளும் இல்லை

உலகத்தை உறைவிடமாய்க்

கொண்டதால்..


 - சாய்கழல் சங்கீதா

வளர்ந்த என் பிள்ளைக்குள் 

நான் தாலாட்டிய என் கைக்குழந்தையைத்

தேடினேன்..

காணவில்லை! 


எனக்குள்

என் பெற்றோரின்

கரம் பிடித்து

சாலை நெரிசலைக் 

கடந்த சிறுமியைத்...

தேடினேன்..

காணவில்லை!


சிறு வயதில்

தின்பண்டம் கொடுத்த

பக்கத்து வீட்டுத்

தாத்தாவைத் தேடினேன் 

காணவில்லை!


தேடியவர்கள் காணவில்லை!!!

நினைவில் மட்டும்

தொலையவில்லை!!! 


- சாய்கழல் சங்கீதா


*---------------*

தேடல்

------

பிறந்தபோது தொடங்கிய தேடல்

உடன்பிறவா சகோதரனாக இன்றும் என்னைத்

தொடர்கிறது.


எத்துணை தேடல்கள்!

-நல்ல படிப்பைத்தேடி

-உயர் ஊழியத்தைத் தேடி

-நற்றுணயான இல்லாளைத்தேடி

அன்பை சொரிய மகவைத் தேடி

-எல்லாம் இருந்தும்

கானல் நீராய் நம்மைப்

பரிதவிக்க வைக்கும்

மன நிம்மதியைத்தேடி.


ஆடல், பாடல், கூடல்,

ஊடல் என வாழ்க்கைப்

பாதையில் பல எல்லைக்கற்களை சந்தித்தாலும் இந்தத் தேடல், ஏன் ஐயா ஓயவில்லை? மௌனமே பதில்!

நீரும் இந்தத் தேடல் கூட்டத்தில் ஒருவர்தானே; நம் தேடல் 

காணொளித்தொடர்கிறது, வாரம் தப்பாமல்!


பின் என்றுதான் தேடல் முடிவறும்?


வெளித்தேடலை நிறுத்தி, உட்தேடலை

பயில ஆரம்பித்தாலா?


இல்லை, கடைசி மூச்சு வாங்கும் நேரத்தில்

வாழ்நாள் முழுவதும்

தேடல் வெறி கொண்டு அலைந்தது வீண் என்று உதிக்கும் போதா?


விடை கிடைக்கவில்லை;

என் தேடலும்

தொடர்கிறது!


- மோகன்


*---------------*

சில நடைமுறைத் தேடல்கள்!


மேல்நெற்றியில் மூக்குக்கண்ணாடியை

செருகிக்கொண்டு, அதை வீடு முழுவதும்

தேடிய தேடல்


கொரிக்க வாங்கிய 

'மிக்சரில்  விரல் துழாவிய முந்திரித்தேடல்


கல்யாண வீட்டில்

குவிந்து கிடந்த 

காலணிகளில், காவல்காரர் என்னை

சந்தேகக் கண்ணோடு

பார்த்த எனது செருப்புத்தேடல்


நெடுக நின்ற திரையரங்க நுழைவுச்சீட்டு வரிசையில்

முன்னே நின்றவரில்

தெரிந்த முகம் உள்ளதா எனும் தேடல்


முதுமை காரணமாக  வீட்டில்ஏன்இந்த அறைக்கு வந்தோம் என்ற தேடல்!


-மோகன்

*------------*


அறிவுத் தேடல் ஆழமானால்

ஞானத் தேடலாகிறது.


வெளித் தேடல் குறைந்து

உட் தேடல் தொடங்கினால்

உண்மை தெரிகிறது.


சாய் அண்ணா தேடியது போல்

தீவிரமாய் தேடினால்

நாம் நாமில்லை

எனப் புரிகிறது.


தேடல் இல்லையேல்

வளர்ச்சியில்லை

அறிவு முதிர்ச்சியுமில்லை.


தேடுவோம்.

தேடலைத் தொடர்வோம்


--ஸ்ரீவி

*--------------------*

அகண்ட தேடலில் உண்டோ பெரும்பயன் 

ஆழ்ந்த தேடலே அறிவின் செம்பயன்


- வெங்கட்ராமன்


கார்க்கலாமே விடை 

கருமேகத் தேடலுக்கு 

சூரியனே விடை 

சந்திரனின் தேடலுக்கு 

அன்பே விடை 

அணைக்கத் தேடும் மக்களுக்கு

- வெங்கட்ராமன்

*---------------*







Monday, October 28, 2024

தேடல் - I (கவிக்கோவை)

 தேடித் தேடொனா 

மனித நேயத்தை

என் உள்ளே,

தேடிக் கண்டு கொண்டேன்

-- ஸ்ரீனிவாசன்


*------------------*

திரவியம் நாடி

தேடித் தேடி

ஓயாமல் ஓடி 

ஓய்வைத் தேடி

ஓயும் வேளை..

கடையிலும் கிட்டா

மருந்தைத் தேடி..

அலட்சியம் செய்த

அன்பைத் தேடி..

பாராமல் விட்ட

பாசம் தேடி..

பிடித்ததை உண்டு

பிடித்ததை செய்து

பொழுதுகளைப் புதையலாய் நினைக்கும் வேளையிலே..

தேடி வருவான்

ஒரு தூதன்!

தேடலை முடித்திடவே..

இதுவரையிலும் தேடாத

மிச்சமில்லா நொடி அதுவே! 

அதுவரை தேடலாம்..

உலகிலுள்ள உன்னதங்களை...


- சாய்கழல் சங்கீதா


*----------------------*

எனக்குள் ஒரு தேடல்....

"நான்" யார் என்ற தேடல்.....

விடைகொடுத்தது என் தேடல்......

"நான் " நான் இல்லையென.....

😊 சாயி 😊


*------------------*

மனைவிக்கு தெரியாமல் அடுப்படியில் சில்லறையைத் தேடல் (பழைய காலத்தில்), அம்மாவிற்கு தெரியாமல் பல காரத்தை தேடல்,பழைய காதலின் நினைவான பரிசு பொருளை தேடல்,அறிவு பசிக்கு நூல்களை தேடல், திருவிழா கூட்டத்தில் தவற விட்ட குழந்தையை தேடல்,தாயை பிரிந்த குட்டி யானையின் தேடல்,முட்டை முந்தியா கோழி முந்தியா ?வினாவிற்கு விடை தேடல்,ஞானத்திற்கு ஆன்மீகத் தேடல்,இன்றைய உலகில் மனித நேயம் தேடல்! இப்படி தேடல்களில் எந்த தேடல் சிறந்தது என்று தேடுவேன்? கூகுளிலும் தேடி விட்டேன்!தேடல் முடியவில்லையே!!


- நாகராஜ்


*---------------*

கவிதையில் 

வெண்பாவைத் தேடினேன் கிடைக்கவில்லை  

ஆசிரியப்பாவைத் தேடினேன் கிடைக்கவில்லை. 

தலைவரின் முயற்சியால்,

அவரின் பயிற்சியால் 

தேடிய *தேடல்* *கிடைக்குமே*!!..


-முத்துராஜா


*-----------*


இசை(கவிக்கோவை)

 இசையது.... 


இசையது செவி வழி தேனாய் நுழைவது

   இதயம் தொடுவதோடு வருடி விடுவது


அசையும் அனைத்தையும் ஆட்டுவிப்பது

   ஆணவ ஹேமநாதனை ஓடச் செய்வது


கசையடியாம் செவிகளுக்கு இந்நாள் திரையிசை

   கரவொலி, விருதுகள் முடியவில்லை இம்சை


பசையாய் ஒட்டின பழைய பாடல்கள் மனதில்

   பாய்ந்து வரும் புதுப் புயல் மறையுதே எளிதில். 


__  குத்தனூர் சேஷுதாஸ்



*-----------*

தலையை ஆட்ட வைப்பதும் இசை..

தலை ஆட்டுவதும் இசை..

"தலை" என புகழ

வைப்பதும் இசை..


கைகளும் கால்களும்

தாளம் போடுமே!

நல்லிசை இரத்த 

நாளம் சேருமே!

உணர் நரம்புகளும்

ஊஞ்சலாடுமே!

விவரிக்க இயலா

" ஏதோ ஒன்று"

உயிரையும் உருக்குமே!


ஏழை ஓசையும்

ஏகாந்தமாகுமே...

குழலோசையிலே!

குழவியோசைலே!

கழலோசையிலே!


ஏழை சத்தமும்

நிசப்தமாகுமே..

மனதை மயக்கும் 

இசையின் இயக்கத்திலே!


- சாய்கழல் சங்கீதா


*--------------------*


 விழி வழி மொழி 

அழகு 

செவிவழி மொழி

இசை


மழலையின் 

முதல் அழுகையில்

துவங்கும் வாழ்வின்

எழிலிசை


இசையில் உழல்தல்

இன்பமே

இசையின் சுழல்

பேரின்பம்


மொழி சொல்லா

கதைகளை

இசை சொல்லும் 


இதயத்துடிப்பும் இசையே

அவ்விசையில் துடிப்பது

இன்னுயிரே


பஞ்சபூதங்களின் இசை

என்றென்றும் ஒலிக்கும்


இந்த பூத உடலின்

இதய ஓசை அடங்கினாலும்

இன்னிசையாக

பிறர் வாழ்வில் ஒலிப்பதன்றோ

நல்வாழ்வின் அடையாளம்


-அமுதவல்லி


*--------------------*

 இசை

-------

ஏழு ஸ்வரங்கள் பின்னிப்பிணைந்து

இனிய நாதங்களை எழுப்பும் ஒற்றுமைக் கூட்டணி.


கல்லையும் கனியாக்கும்

வெந்து புண்ணான

மனதுக்கும் இதம் தரும்

இன்னிசை.


புகழுடன் வாழ்வதையே'இசை பட ' வாழ்வதாக போற்றுவது அல்லவோ தமிழ்மரபு!


இரண்டு மனங்கள் இணைவதும் இசைபட( ஒத்து) வாழ்வதும் இசையின்

மற்றொரு முகம் அன்றோ!


சத்தம், ஓசை என்பதெல்லாம்

நல்லிசையின்

ஏழை சகோதரரோ ?


மூங்கில் கூட்டமும் காற்றும் நிகழ்த்தும்

கச்சேரியைக் கேட்ட ஆதி மானுடர்க்கு இயற்கையே இன்னிசைதான்.


எசப்பாட்டோ , குலவையோ

வெள்ளை உள்ளங்களின்

உணர்வுப் பொழிவுகள்.


இன்னிசை 

யானது மொழி, மத வேறுபாடின்றி உலகை

ஒன்றுபடுத்தும், கேட்டு ஈடுபட காதுகள் 

தயாராக வேண்டுமே!


---மோகன்

*-----------*










Sunday, October 27, 2024

அச்சந் தீரும் அமுதம் பெருகும்

 --------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

--------------------


◆●◆●◆●◆●◆●■●■

அச்சந் தீரும்

அமுதம் பெருகும்

◆●◆●◆●◆●◆●■●■


காஞ்சிபுரம் அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லீலாவதி எனப் பெயரிட்டனர். பிறந்தவுடனே சாதாரணமாக அழ வேண்டிய குழந்தை கலகலவென சிரித்திருக்கிறது. அது ஓர் அதிசய செய்தியாக சுற்று வட்டாரத்தில் பரவியதால் அக்குழந்தையைப் பார்க்க அக்கம் பக்கத்து மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். குழந்தைப் பேறு பார்த்த காளியம்மாளுக்கு நல்ல மவுசு வந்தது. வருவோர் போவோரிடம் எல்லாம் 


०-  இந்த அதியத்த என்னான்னு சொல்றது.. பொறந்த அடுத்த நிமிஷமே என்ன உத்துப் பாத்துச்சு... அழவே இல்லேன்னா பாத்துக்கயேன்... திடீர்னு கலகலன்னு சிரிச்சுச்சு... - என சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தாள். 


அக்கிராமத்தின் காவல் தெய்வம் லீலாவதி அம்மன் எனும் காளி என்பதால் அக்குழந்தைக்கு லீலாவதி எனப் பெயரிட்டனர். சிறுவயது முதலே தைரியத்தின் விளைநிலமாக அவள் இருந்தாள். 

எதற்கும் அஞ்சிட மாட்டாள். வயல் வெளிகளில் காணப்படும் ஓடுகிற பாம்புகளையும் பிடித்து புதர் காட்டிற்குள் விட்டிடுவாள். முரட்டுக் காளைகளையும் அடக்கி விரட்டிடுவாள். ஒரு முறை குழந்தைகள் பலர் விளையாடிக் கொண்டிருக்கும் பெரிய பொட்டல் வெளியில் ஒரு வெறிபிடித்த கொழுத்த காளை ஒன்று ஓடி வருவதைப் பார்த்து பாய்ந்து அதன் முன்றே சென்று தைரியமாக நிமிர்ந்து நின்றாள். ஓடி வந்த மாடு திகைத்து நிற்க, கையிலே கழியொன்றை எடுத்து அதனைத் தாக்கவும் ஆரம்பித்தாள். அதற்குள் பலர் கழிகளுடன் ஓடி வரவே, அச்சமுற்ற அந்தக் காளை வந்த வழியே திரும்பி ஓடியது. 


பிறந்த போதே ஊரின் கவனத்தை ஈர்த்த பெண் இப்போது ஊரின் மரியாதையை பெற்றாள். காவல் தெய்வமான லீலாவதி அம்மனின் சக்தி பெற்ற சிறுமி அவள் என ஊரே நம்பியது. குடித்து விட்டு ரகளை செய்யும் ஆண்கள், வேலையாட்களுக்கு கூலி தர டபாய்க்கும் பண்ணையார்கள், கலப்படம் செய்யும் வியாபாரிகள், கள்ளச் சந்தைக்காரர்கள் என எவரும் அவளிடமிருந்து தப்ப இயலாது. அவர்களுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பிடுவாள். அம்மனின் சக்தி உள்ளவள் என ஊரே நம்பியதாலும், அவளுக்குத் தீங்கிழைக்க நினைத்த பண்ணையார் ஒருவரை கருநாகம் தீண்டியதும், வேறொரு வியாபாரி மாடு முட்டி குடல் சரிந்து இறந்ததும் நிகழவே அவளை நெருங்கவே கெட்ட எண்ணம் கொண்டோர் அச்சப் பட்டனர். அவளாலேயே, அக்கிராமத்தில் குற்றங்கள் அருகிப் போயின. 


அக்காலக் கட்டத்தில் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கொண்டு இருந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த லீலாவதி அதன்பால் ஈர்க்கப் பட்டாள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நேரமது. அது போன்றோருக்குத் தேவைப் படும் பல உதவிகளை மனமுவந்து அவள் செய்யலானாள். இவ்வாறு பல ஆண்டுகள் உருண்டோடின. ஆங்கில அதிகாரிகளின் செவிகளுக்கு இது எட்டியது. அவளைக் கண்டு அஞ்சிய பல தீய சக்திகள் தக்க சமயத்திற்குக் காத்திருந்தனர். தேடிச் சென்று அதிகாரிகளின் காதைக் கடித்தனர்.


ஒருமுறை, ஆங்கில அரசால் தேடப் பட்டு வந்த நல்லசாமி நாடார் எனும் போராளி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது உடல் கிராமத்துக்கு வெளியே மேற்கே உள்ள மண்மேட்டில் கிடந்தது. தலையின் பின்புறம் பலத்த அடி பட்டிருந்ததால் இரத்தம் பெருக்கெடுத்து ஓடி உறைந்திருந்தது. ஊரின் தலையாரி தவறிக் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்து போனதாக குறித்துக் கொண்டான். அந்த உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ கூட முயற்சிக்கவில்லை. ஆண்டர்சன் எனும் அதிகாரி நாய்களும், கழுகுகளும் அந்த உடலைப் பதம் பார்க்கட்டும் என சொல்லி விட்டதாகத் தகவல் கசிந்தது. தலையாரியும் போலீஸ்காரர்களும் திரண்டிருந்த ஊர் மக்களை விரட்டத் துவங்கினர். அப்போது


-० தலையாரி ஐயா.. பின்னந்தலைல மட்டுமா அடிபட்டுருக்கு... கைகால் எல்லாம் ரத்தக் காயங்களிருக்கே.. மூக்குலயும் ரத்தம் வந்துருக்கு.. கண்ணுகிட்ட கன்னிப் போயிருக்கு.. இதெல்லாம் பாக்க மாட்டீங்களா... -ன்னு கணீர்னு ஒரு குரல் கேட்டது. வேறு யாருக்கு அந்தத் தைரியம் வரும். நம்ம லீலாவதிக்குத்தான்.


பிறகென்ன... வைக்கோல் போரில் தீப்பற்றியது போல ஆவேசம் அங்கு உருவானது. மனித நேயத்தோடு பலருக்கும் உதவி செய்தவர் நல்லசாமி என்பதால் அவரிடம் மரியாதையுடன் கூடிய பிணைப்பு மக்களிடையே அதிகம் இருந்தது. லீலாவதி குரல் கொடுத்ததும், சட்டென அங்கு ஒரு பெரிய சலசலப்பு எழுந்தது. அங்கிருந்த நான்கு போலீஸை வைத்துக் கொண்டு காட்டாற்று வெள்ளம் போல எகிறி வரும் மக்களை சமாளிக்கத் திணறினான் தலையாரி. போலீஸ் தஸ்தாவேஜ்  ரெஜிஸ்டரில் 'அடித்துக் கொலை' செய்யப் பட்டதாக பதிவு செய்ய அவன் கட்டாயப் படுத்தப் பட்டான். 


பிறகு, அந்த பூதவுடலை கிராம மக்கள் பெற்றுக் கொண்டு ஊர் மரியாதையோடு ஊர்வலம் போய் தகனம் செய்தனர். இதையெல்லாம் லீலாவதி தலைமை தாங்கி நடத்தினாள்.


பல ஆண்டுகளாக தனது கழுகுக் கண்களை அவள் மீது பதித்திருந்த பிரிட்டிஷ் நிர்வாகம் களம் இறங்கியது. அவளைக் கைது செய்ய தனிப் படை அமைத்தது. ஆயினும் அவளை அவ்வளவு எளிதாகக் கைது செய்ய அவர்களால் இயலவில்லை. இறுதியில் அவளைப் பழிவாங்கக் காத்திருந்த ஊர்ப் பெரியவர்கள் சிலரின் கைங்கரியத்தினால் அவள் கைதானாள்.


அவளைக் கைது செய்த பிரிட்டிஷ் காவல் துறை சென்னை எழும்பூரில் 1941 டிசம்பர் -1ந் தேதி சிறை வைத்தது. அதன்பின் அவள் பற்றிய செய்தி எதுவும் வெளியுலகுக்குத் தெரியவில்லை. 


அவள் பிறக்கையில் அவளது கிராமம் கீழ்நிலையில் இருந்தது. கொழுத்த தனக்காரர்களின் கைகளில் சிக்கி சீரழிந்திருந்தது. முறைகேடுகள் மலிந்திருந்தன. உழைக்கும் மக்களின் நிலையோ நரகத்தை விட மோசமாக இருந்தது. ஒழுங்காக கூலி கிடைக்காது. வயிற்றுக்கு சோறு கிடைக்காது. மனிதர்களாக கௌரவமாக வாழ முடியாது என இருந்த இழிநிலையை "அச்சந் தவிர்த்து அமுதம் விளைய"ச் செய்த லீலாவதி அம் மண்ணில் தோன்றிய காவல் தெய்வமன்றோ!


குறிப்பு: எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் காணக் கிடைக்கும் எண்ணற்ற வெளியுலகம் அறியாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் லீலாவதி அம்மையார் பெயரும் உள்ளது. அவரைப் பற்றி முழு விவரங்கள் இல்லாத காரணத்தால் புனைவும் கலந்து இக்கதையைப் புனைந்துள்ளேன். லீலாவதி அம்மையாரின் நினைவுக்கு இதனைக் காணிக்கை ஆக்குகிறேன்.


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

Saturday, October 26, 2024

சூடான பெட்டி

 சுடச்சுட சுருக்கமெடுக்கும்

சூடான பெட்டி!

நீராவி பறக்குமே

விண்ணை முட்டி!

கரித்துண்டுகள்

கணலின் வசம்!

கைப்பிடியோ நம் வசம்!

எடையோ அதிகம் கனக்கும்!

உடையோ மிடுக்காய் இருக்கும்!

மின்சாதனமாய் இன்று 

புது பொலிவுடன்..

சுருக்கமெடுக்குதே எளிதாய்

உடனுக்குடன்..

கவனம் தவறி போனாலோ

ஓட்டை விழுந்த உடை!

பதமாய் பார்த்து செய்ய

உண்டு தெருவுக்கு ஒரு கடை!!!


- சாய்கழல் சங்கீதா

Friday, October 25, 2024

வாழ்க்கைத் திரை

 விழிகள் மூட

மணி பத்தரை!

உடன் வந்ததே 

நித்திரை!

கனவுகளுக்கு உண்டோ

காட்சித் திரை?!

காட்டாறாய் ஓட உண்டு

மனத்திரை!

மாதமோ சித்திரை!

நாட்காட்டி பார்த்தது விழித்திரை!

புதிய திரைப்படம்

வெளியிட்டது வெள்ளித்திரை!

நுழைவுச் சீட்டில்

தேதியுடன் ஒரு முத்திரை!

பெற்று அமர்ந்தவுடன்

மேலே எழும்பியது

துணித்திரை!

மெல்லத் திறந்தது

ஒளித்திரை!

ஒளி பட்ட இடமோ

முகத்திரை!

கண்கள் கூச

காலை வைத்துப் பார்த்தால்...

வெறும் தரை!!

காலையில் எழுப்பும் 

ஞாயிறுக்குப் போடவில்லை

சன்னலில் திரை! 

 *எல்லாமே* *கனவு* *தானோ* *கடைசி* *வரை* ?!

நித்திரையிலும்..

வாழ்க்கைத் திரையிலும்.....


- கழல் சங்கீதா

Monday, October 21, 2024

ஆந்தையே!

 ஆந்தையே! 

என் வீட்டுப் பால்கனியில்

உன்னை கண்டது விந்தையே!

மகிழ்ந்தது என் 

சிந்தையே!

ஆங்கிலத்தில் புத்திசாலிக்கு

உவமையே!

இது நாள் வரை

புத்தகத்திலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே 

இருந்தாயே!

என் இல்லத்தில் நீயா?

உன் இல்லத்தில் நானா?

உன் உறைவிடம் தலைக்கீழாய்!!!

இதற்காகவா பறந்து

வந்தாய்????

ஆந்தை விடு தூதாய்

இயற்கை அன்னையிடம்

சொல்வாயா?

உன்னைப் படைத்துப் பாதுகாக்கும் அவளுக்கு அவளையும்

பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று!

அவளை அழிக்க உண்டு 

பல்லாயிரம் பேர்!

அரவணைக்க உண்டோ

சில பேர்????

Sunday, October 20, 2024

௧வியரங்கம் - நூல் வெளியீடு - பொதுக்குழு : விவரணம்

 ★०★०★०★०★०★०★०★०★

௧வியரங்கம் - நூல் வெளியீடு - பொதுக்குழு : விவரணம்

★०★०★०★०★०★०★०★०★


20 அக்டோபர் 2024 மாலை ஆறு மணிக்கு நமது முப்பெரும் விழாவான கவியரங்கம் - நூல் வெளியீடு - பொதுக் குழு பன்பயன்பாட்டு அரங்கத்தில் துவங்கியது.


திருமதிகள்.

சுஜாதா அருண் கோபால்,

பிரபு குமாரி,

சுபாஷிணி,

புஷ்பா பாலகிருஷ்ணன்,

மைதிலி நீலகண்டன் 


ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.


நிகழ்ச்சியின் துவக்கமாக பூர்வாவின் இசைக் குயில்கள் விஜயலக்ஷ்மி பாலாஜி மற்றும் துர்கா சாய்ராம் அவர்களோடு அரங்கமே தமிழ்ப் பண் பாடியது. 


செல்வி. சாதனா தன் இனிய குரலில் அவையோரை வரவேற்புரை நிகழ்த்தினார்.


பிறகு, ஸ்ரீவி தலைமையில் ழகரக் கவியரங்கம் துவங்கியது.


கவியரங்கத்தில் கவிஞர்களும் அவர்களுக்கான தலைப்புகளும்:


★ உழல் - கணேசன்

★ சுழல் - அமுதவல்லி

★ உழவு - மகாலக்ஷ்மி

★ குழல் - ஹரீஷ்

★ எழில் - மல்லிகா மணி

★ மழலை - மோகன்

★ விழல் - தியாகராஜன்

★ நிழல் - மலர்விழி

★ தழல் - சுல்தானா (சிறுவன் கௌஸலேஷ் வாசித்தார்)

★ அகழ் - வித்யா

★ புகழ் - வெங்கட்ராமன்

★ கழல் - சங்கீதா


பன்னிருவரும் அவையோர் மகிழ தத்தம் கவிதைகளைப் படைத்து, படித்து அரங்கேற்றினர். ஒவ்வொருவரின் கவிதை படிக்கப் படுகையில் உன்னிப்பாய் கவனித்து, இரசித்து, மகிழ்ந்து அரங்கம் அதிரும் அளவிற்கு கரவொலி எழுப்பிய அவையோரின் தமிழ்ப் பற்றும் இரசிப்புத் தன்மையும் பங்கேற்பாளர்களுக்கு அதிக ஊக்கமளித்தது.

மகாகவி பாரதி தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வருகையும் இரசித்து மகிழ்ந்த விதமும் நம் சங்கத்தின் தரமிகு நிகழ்ச்சிக்கு கட்டியங் கூறின. இந்த விஷயம் சிறப்பு விருந்தினர்களையும் வெகுவாகக் கவர்ந்தது என்பது வெள்ளிடை மலை. உறுப்பினர்களின் பங்கேற்பு பாராட்டுதலுக்குரியது.


கவிஞர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அன்புப் பரிசினை வழங்கினர். திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு நம் நிதிச் செயலர் திரு. சாய்ராம் அவர்களும், திருமதி. சுஜாதா அருண் கோபால் அவர்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. மல்லிகா அவர்களும்

"புதிய ஆத்திசூடிக் கதைகள்" நூல்கள் வழங்கி அன்பளித்தார்கள்.


பிறகு, திரு. அழகிய சிங்கர் அவர்கள் தனது சிறப்புரையில் கவிஞர்களை மனதாரப் பாராட்டியதோடு, அரங்கம் நிறைந்தளவில் பங்கு பெற்று உற்சாகமூட்டிய உறுப்பினர்களையும் வெகுவாகப் பாராட்டினார். அவர் அவரது பத்திரிக்கையான விருக்ஷம் எனும் நூலை கவிஞர்களுக்கு அன்பளித்து உற்சாகம் தந்தார்.


திருமதி. சுஜாதா அருண் கோபால் அவர்கள் தன்னுரையில் ஒவ்வொரு கவிஞரின் கவிதையிலும் முத்தாய்ப்பான வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார்கள். நமது செயலர் மலர்விழி அவர்களுக்கு சன் தொலைக் காட்சியில் பட்டிமன்ற நிகழ்வில் பங்கேற்க வைக்க முயற்சி எடுப்பதாகக் கூறியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


இரண்டாம் நிகழ்ச்சியாக ஸ்ரீவி அவர்கள் எழுதிய புதிய ஆத்திசூடிக் கதைகள் - நூல் வெளியீடு நடந்தது. நூல் வெளிவர தன்னை விட அதிக ஈடுபாட்டுடன் முயன்று செயல்பட்ட இருவர் சாய்ராம் மற்றும் தியாகராஜன் ஆகியோரே நூல் வெளியிடுதல் சிறப்பும் முறையும் ஆகும் என ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டார். அதன்படி,


முதல் பாகத்தை நிதிச் செயலர் திரு. சு. சாய்ராம் அவர்கள் வெளியிட திருமதி. எம். லலிதா சார்பில் அவரது புதல்வி சாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.


இரண்டாம் பாகத்தை நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. தியாகராஜன் வெளியிட திருமதி. பி.ஆர். ஆண்டாள் அம்மா பெற்றுக் கொண்டார்கள்.


பல்வேறு காரணங்களால் நூல்களை அன்று விற்பனைக்குக் கொணர இயலவில்லை என்பதால் ஓரிரு வாரங்களில் அதற்கான ஏற்பாடுகள் நடக்கும் எனவும், புலனக் குழுவில் அது குறித்துத் தகவல் வெளியாகும் எனவும் விளக்கப் பட்டது. இப்போதே திருமதி ஆண்டாள் அம்மா அவர்களும் திரு. இ.ச. மோகன் அவர்களும் தலா பத்து செட்களுக்கான முன் பதிவு செய்ததைக் கூறி நூலாசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டினார்.


அதன்பின் பொதுக்குழு நடந்தேறியது. உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் நல்ல பல ஆலோசனைகளை வழங்கினர். அவற்றில் சில துளிகள்:


● ழகரக் கவியரங்கம் தந்திட்ட உற்சாகத்தால் அதன் நீட்சியாக "ஏழ்மை" எனும் ழகரத் தலைப்பில் மூத்த உறுப்பினர் திரு. பிச்சைமணி அருமையான கவிதையைப் படைத்தளித்தார். இது கவியரங்கத்தின் வெற்றியை உறுதியாக்கி பிரகடனம் செய்தது. அவருக்கு நம் வாழ்த்துகள்.


● அடுத்த நிகழ்ச்சிகளுக்கு பல பதாகைகள் செய்திடுதலைத் தவிர்க்கலாம். (ஏற்றுக் கொள்ளப் பட்டது)


● நிகழ்ச்சிகள் நடக்கையில் அதனை உறுப்பினர்கள் இலகுவாக பார்த்திடும் வகையில் புலனக் குழுவில் ஸ்டேட்டஸாகவும், பின் செய்தும் முக்கியத்துவப் படுத்த வேண்டும் (ஏற்கப் பட்டது)


● அதிக உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் 'மொட்டை மாடி இசை நிகழ்ச்சி' நடத்த வேண்டும் (ஏற்கப் பட்டது)


● நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ஆர். மகாலக்ஷ்மி அவர்கள் நமது மேடையை எதிர்காலத்தில் அலங்கரிக்கவுள்ள பேச்சாளர்களைக் கண்டறிய *சொல் வேந்தர் மன்றம்* எனும் குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் ஓரிரு தினங்களில் பகிரப் படும் எனவும் தெரிவித்தார்.


நிகழ்ச்சிகளை சிறப்பாக திருமதி. காமாட்சி தொகுத்து வழங்கியது குறிப்பிடத் தக்கது. அவருக்கு நம் நன்றி.


நிறைவாக, சிறுமி ரோஷ்ணா தன் அழகான உச்சரிப்பில் நன்றியுரை சொன்னார்.


தேசியப் பண் இசைக்கப் பட்டதோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


வழக்கம் போல தேனீக்களைப் போல் சுழன்று தேநீர் வழங்கியும் அரங்கப் பணிகளை செவ்வனே செய்தும் உதவிய தன்னார்வலர்களுக்கு சிரந்தாழ்ந்த நன்றிகள்.


நிகழ்ச்சி முடிவில் உறுப்பினர்கள் அனைவருக்கும் செவிக்கு உணவு அளித்ததோடு சிறிது வயிற்றும் ஈய மல்லிகைப் பூ இட்லி வழங்கப் பட்டது மனநிறைவினைத் தந்தது.


மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் இணைவோம் 


நன்றி 🙏


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

தலைவர்.

" ழ " கரக் கவியரங்கம் - கவிதை

 " ழ " கரக் கவியரங்கம்


சோலையாம் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்

   சொன்னது போல் நேற்று " ழ " கரக் கவியரங்கம்


" வால் சுருட்டி இருக்க வேண்டும் " இது தலைமை 

   வாய் பாடும் கவிதைகள் கவிகள் கொட்டியவை


தோலில் புள்ளிகள் கொண்ட இரு சிறு மான்களாம்

   தொடக்க உரை, நன்றியுரை சொல்ல வந்தனவாம்


காலால் ஈரெட்டடி பாயும் புலிக் குட்டி ஒன்றும்

   கவிதை ஏந்தி தாயோடு வந்ததாம் அதுவும்



சேலையில் செவசெவன்னு சிறப்பு  விருந்தினராம் , 

   சிங்க ராஜாவும் அழகாய் வீற்றிருந்தாராம்


வேலை எல்லாம் விட்டு வந்த ஆர்வலர்களாம்

   வெகுநேரம் கரவொலி ஓயவில்லையாம்


நூல் இரண்டு தலைவரின் வெளியீடாம்

   நூறு ஐஸ் க்ரீம் மகிழ்ச்சி அனைவருக்குமாம்


மாலைப் பொழுது இவ்வாறு இனிதே கழிந்தது

   மல்லிப் பூ இட்லியும் மறவாமல் கிடைத்தது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

ஏழ்மை

 ஏழ்மை - Rபிச்சைமணி


அறியேன் யாப்பில் ஆறடி எழுத

விரியேன் எந்தன் விண்மீன் பார்வையைத்

தெறியேன் கூட்டுப் பாவகை எனினும்

பிரியேன் என்றும் நினது பதமே

 

பொதுக்குழுவில் ஓர் புதுக்குழு

புதுக்குழுவில் அடியேன் ஓர் எறும்பு

கடல் அலையில் அடியேன் ஒரு துரும்பு

 

கவிதை "" "வி" "தை"

இதிலும் ஒரு கவிதை

 

"" கழற்றி விடப் பட்டால் விதையாகும்

"வி" விடுவிக்கப் பட்டால் கதையாகும்

"தை" தவிர்த்தால் அடியேன் கூட கவியாவேன்

 

அடியேனுக்கு ஓர் ஆசை

கவிதை படைக்க

கவிதை படிக்க

 

கலைமகள் அருள் வேண்டும்

உங்கள் மனதில் இடம் பிடிக்க

 

வீட்டில் விறகு அடுப்பு

அணைந்து விடாமல் காக்க

தாய் ஊதுவாள் தன் சுவாசக் காற்றை

 

பகீரென்று பற்றிக் கொள்ளும் அடுப்பு

எழையின் வயிற்றைப்போல

 

காலை வேளையில் அம்மா படைப்பாள்

அமுதமாக பழைய சோறும் வெங்காயமும்

A person's hand squeezing white liquid into a bowl

Description automatically generated

மறு வேளைக்கு சோறு இல்லா

விட்டாலும் அதுவே தாங்கும்

அன்று முழுவதும்

 

தாய்க்கு காதுகளில் தோடுண்டு

பள்ளிக் கட்டணம் செலுத்த

தோடுகள் காணாமல் போவதுமுண்டு

 

தோடுகளுடன்  திருமாங்கல்யமும்

சில சமயங்களில் பணமாக மாறும்

 

உடன் மஞ்சள் திருமாங்கல்யமாக ஏறும்

 

அப்பா குளித்து ஈரத்துண்டுடன் வெயிலில் நின்றால்

 

உடுத்திய உடுப்பு (உடுத்த) காய்கிறது

என பொருள்

 

நவராத்திரி சுண்டலுக்கும்

மார்கழி பொங்கலுக்கும்

ஏங்கிய காலமுண்டு

 

வாழ்விலே  ஏழையாய் பிறந்து

ஏழ்மையில் உழன்று

 

வாழ்க்கையில்

எழ முடியாமல் வீழ்ந்து

மீண்டும் எழுந்து

நாமும் வாழ்ந்து

வாழ்க வளமுடன்

என வாழ்த்தி

பிறரையும் வாழ வழி செய்வோம்

 

வருவதை அப்படியே எதிர் கொண்டோம்

இனியும் எதிர் கொள்வோம்

 

பாசத்திற்கு ஏங்கும் பாலகர்களுக்கு அது ஏழ்மை

அன்புக்காக ஏங்கும் தாய் தந்தைக்கு அது ஏழ்மை

கூட்டு குடும்பங்கள் பிரிந்ததினால்

பிரிந்து சென்ற சகோதர சகோதரிகளுக்கு

அவர்களின் எதிர்பார்ப்புகளே ஏழ்மை

 

இல்லாதவர்களின் எதிர் பார்ப்புகளை

பூர்த்தி செய்ய இயலாமை அதுவும் ஏழ்மை

 

ஆகவே

இனி வறுமைக்கு வறுமையைக் கொடுப்போம்

இல்லை என்ற சொல்லையே இல்லாததாக்குவோம்

இல்லாமையே இல்லாத நிலையை உருவாக்குவோம்

 

தன்னைப் பற்றி யாரும் கவலைப்பட வில்லையே என்று கவலைப்படும் "கவலையை" "கவலையுற" வைத்திடுவோம்

 

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடுவோம்

காரியம் நடக்கட்டும் துணிந்து விடுவோம்

 

ஏழ்மையை போக்க

எழுச்சியோடு

எழுந்து நிற்போம்


         


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...