தேவை என்ன, தேடல் எதற்கு?
நாளும் நாளும் மனம் ஏங்குவது யாருக்கு?
விரைந்து ஓடும் வாழ்க்கை பாதையில்,
நிம்மதி காணும் தேடல் வழிதான்.
செல்வம் தேடினால் சுகம் கிடைக்குமா?
அன்பை தேடினால் எல்லாம் ஒட்டுமா?
முடியாத தேடலின் முடிவில் நின்று,
தேவை என்பதின் உண்மையை உணர்ந்திடு.
இங்கு வாழ்ந்திடும் பொழுதிலே,
மகிழ்ச்சி கண்டு மனதிலே;
தேவை எனும் மாயை போக,
இனிதாய் வாழ்ந்து விடு — அது தான் போதுமே!
- தியாகராஜன்
*------------*
"பா" வைத் தேடினால்
பைந்தமிழ் பழகுமே!
ரதியை மட்டும் தேடினால்
நிம்மதி நழுவுமே!
பாரதியைத் தேடினாலோ
அச்சம் தீருமே!
- சாய்கழல் சங்கீதா
என்னைத் தேடினேன்
அனைவரும் கிடைத்தனர்!
நான் நீ என்ற
பேதமில்லாமல்..
உண்மையைத் தேடினேன்
எனக்குள்ளும் இல்லை
உலகத்தை உறைவிடமாய்க்
கொண்டதால்..
- சாய்கழல் சங்கீதா
வளர்ந்த என் பிள்ளைக்குள்
நான் தாலாட்டிய என் கைக்குழந்தையைத்
தேடினேன்..
காணவில்லை!
எனக்குள்
என் பெற்றோரின்
கரம் பிடித்து
சாலை நெரிசலைக்
கடந்த சிறுமியைத்...
தேடினேன்..
காணவில்லை!
சிறு வயதில்
தின்பண்டம் கொடுத்த
பக்கத்து வீட்டுத்
தாத்தாவைத் தேடினேன்
காணவில்லை!
தேடியவர்கள் காணவில்லை!!!
நினைவில் மட்டும்
தொலையவில்லை!!!
- சாய்கழல் சங்கீதா
*---------------*
தேடல்
------
பிறந்தபோது தொடங்கிய தேடல்
உடன்பிறவா சகோதரனாக இன்றும் என்னைத்
தொடர்கிறது.
எத்துணை தேடல்கள்!
-நல்ல படிப்பைத்தேடி
-உயர் ஊழியத்தைத் தேடி
-நற்றுணயான இல்லாளைத்தேடி
அன்பை சொரிய மகவைத் தேடி
-எல்லாம் இருந்தும்
கானல் நீராய் நம்மைப்
பரிதவிக்க வைக்கும்
மன நிம்மதியைத்தேடி.
ஆடல், பாடல், கூடல்,
ஊடல் என வாழ்க்கைப்
பாதையில் பல எல்லைக்கற்களை சந்தித்தாலும் இந்தத் தேடல், ஏன் ஐயா ஓயவில்லை? மௌனமே பதில்!
நீரும் இந்தத் தேடல் கூட்டத்தில் ஒருவர்தானே; நம் தேடல்
காணொளித்தொடர்கிறது, வாரம் தப்பாமல்!
பின் என்றுதான் தேடல் முடிவறும்?
வெளித்தேடலை நிறுத்தி, உட்தேடலை
பயில ஆரம்பித்தாலா?
இல்லை, கடைசி மூச்சு வாங்கும் நேரத்தில்
வாழ்நாள் முழுவதும்
தேடல் வெறி கொண்டு அலைந்தது வீண் என்று உதிக்கும் போதா?
விடை கிடைக்கவில்லை;
என் தேடலும்
தொடர்கிறது!
- மோகன்
*---------------*
சில நடைமுறைத் தேடல்கள்!
மேல்நெற்றியில் மூக்குக்கண்ணாடியை
செருகிக்கொண்டு, அதை வீடு முழுவதும்
தேடிய தேடல்
கொரிக்க வாங்கிய
'மிக்சரில் விரல் துழாவிய முந்திரித்தேடல்
கல்யாண வீட்டில்
குவிந்து கிடந்த
காலணிகளில், காவல்காரர் என்னை
சந்தேகக் கண்ணோடு
பார்த்த எனது செருப்புத்தேடல்
நெடுக நின்ற திரையரங்க நுழைவுச்சீட்டு வரிசையில்
முன்னே நின்றவரில்
தெரிந்த முகம் உள்ளதா எனும் தேடல்
முதுமை காரணமாக வீட்டில்ஏன்இந்த அறைக்கு வந்தோம் என்ற தேடல்!
-மோகன்
*------------*
அறிவுத் தேடல் ஆழமானால்
ஞானத் தேடலாகிறது.
வெளித் தேடல் குறைந்து
உட் தேடல் தொடங்கினால்
உண்மை தெரிகிறது.
சாய் அண்ணா தேடியது போல்
தீவிரமாய் தேடினால்
நாம் நாமில்லை
எனப் புரிகிறது.
தேடல் இல்லையேல்
வளர்ச்சியில்லை
அறிவு முதிர்ச்சியுமில்லை.
தேடுவோம்.
தேடலைத் தொடர்வோம்
--ஸ்ரீவி
*--------------------*
அகண்ட தேடலில் உண்டோ பெரும்பயன்
ஆழ்ந்த தேடலே அறிவின் செம்பயன்
- வெங்கட்ராமன்
கார்க்கலாமே விடை
கருமேகத் தேடலுக்கு
சூரியனே விடை
சந்திரனின் தேடலுக்கு
அன்பே விடை
அணைக்கத் தேடும் மக்களுக்கு
- வெங்கட்ராமன்
*---------------*
No comments:
Post a Comment