----------------------------
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
----------------------------
◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●
(3) தனைத் தான் ஆளும்
தன்மை பெற்றிடல்
◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●◆●
காலை வெயில் ஜன்னல் வழியே சுளீரென பீட்டர் முகத்தில் உறைக்கவே, புரண்டு படுத்தான். அரைகுறை தூக்கத்தால் கண்ணிரண்டும் ஜிவுஜிவு என எரிந்தது. சமையலறை உள்ளேயிருந்து கீதாவின் குரல் வந்தது. 'இன்னுமா தூக்கம். எழுந்திருச்சு ஆக வேண்டிய வேலைய கவனிங்க. சோம்பேறித்தனமா சும்மா படுத்துக் கெடக்காதீங்க..' - இது முதல் அபாய சங்கு. இன்னும் படுத்துக் கிடந்தால் சங்கொலி காதைக் கிழிக்கும் என பீட்டருக்குத் தெரியும். எழுந்து உட்கார்ந்தவன் சோம்பல் முறித்தபடியே கைபேசியை எடுத்து பார்த்துவிட்டு சார்ஜில் போட்டான். 'என்ன எழவோ சார்ஜ் நிக்கவே மாட்டாங்குது. பேட்டரி மாத்தனும் போல. அதுக்கு எவ்வளவு தண்டம் அழணுமோ தெரில..' - என அங்கலாய்த்துக் கொண்டே எழுந்தவன் பக்கத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும், சத்தப் படுத்தாமல் எழுந்து போர்வையை எடுத்து குழந்தைகளுக்குப் போர்த்தி விட்டான். பின்னாலிருந்து வந்தது கீதாவின் குரல் 'என்ன கரிசனம் அய்யாவுக்கு.. அதுங்களும் எழுந்திருக்க வேண்டியதுதானே. இப்ப போயி வக்கனையா போத்தி விட்றே' - என பாதி அதட்டலும் பாதி அன்புமாக வந்தது. அவளைத் திரும்பிப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு 'இதுங்க இப்ப எழுந்து என்ன பண்ணப் போகுதுங்க. கொஞ்ச நேரம் தூங்கட்டும் விடு' என்று சொல்லிவிட்டு பல் துலக்கச் சென்றான். கீதாவும் சிரிப்போடு நகர்ந்து சமையலறைக்குச் சென்றாள்.
பீட்டர் ஒரு பட்டதாரி. கல்லூரி நாட்களில் கல்லூரியின் கதாநாயகனாக வலம் வந்தவன். படிப்பு, விளையாட்டு, பேச்சுப் போட்டி, ஓவியம், கவிதை, கல்ச்சுரல்ஸ் என அனைத்திலும் கலக்கியவன். அசந்து மறந்தும் கூட பிறரின் உதவிக்காக காத்திருக்காதவன். தன்னால் எது முடியுமோ, தனக்கு எது சாத்தியமோ அது மட்டும் செய்தல் நலம் பயக்கும் என உணர்ந்தவன். பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருந்தது அவன் குடும்பம். வசதியான உறவுக்காரர்கள் இவனின் குடும்பத்தாரை உதாசீனப் படுத்துவதை சிறு வயதிலேயே பார்த்து உலகின் போக்கை அறிந்து கொண்டவன். பணமே பிரதானம் என இருக்கும் உலகத்தில் நேர்மையாய் வாழ்வதே தனது இலட்சியம் என பள்ளிப் பருவத்திலேயே முடிவு செய்தவன்.
அவன் படித்த கோ-எட் கல்லூரியில் அவனது ஜூனியர்தான் கீதா. பிற மாணவிகள் பலரைப் போல பீட்டர் மீது நாட்டம் கொண்டவள். பலத்த போட்டியிருப்பினும் பீட்டரின் இதயத்தில் இடம்பிடிப்பதில் வெற்றி கண்டவள். ஓரளவு பசையுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவள். இரு வீட்டிலும் மதம் மாறித் திருமணம் செய்ய ஒப்பாததால், வீட்டினரைப் பகைத்துக் கொண்டு, கல்லூரி பட்டப் படிப்பு முடிந்த கையோடு நண்பர்கள் துணையுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். இருதரப்பிலும் உறவுகள் முறைத்துக் கொள்ள, தனியே வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கினார்கள். திறமைக்கும் படிப்புக்கும் ஏற்ற வேலை அமையாததால் பீட்டர் ஆட்டோ ஒன்றை வங்கிக் கடன் பெற்று வாங்கி ஓட்டத் துவங்கினான். கீதாவோ ஒரு துவக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி அமர்ந்தாள். நகரின் எல்லையிலிருக்கும் ஒரு ஒண்டுக் குடித்தன வீட்டில் ஜாகை. கைக்கும் வாய்க்கும் போதாது ஏதோ குடும்பம் நடந்து கொண்டிருந்தது. இருவரின் குடும்ப வாழ்க்கை இனிதே நடந்ததற்கான அத்தாட்சியாக இரு குழந்தைகள். பெரியவள் ஆறாம் வகுப்பு. இளையவன் இரண்டாம் வகுப்பு. ஏதோ ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கும் வந்தது பிரச்சனை. ஆம். கொரோனாவின் கோரப் பிடியில் உலகமே விழி பிதுங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் மட்டும் என்ன தப்பிக்கவா முடியும். குருவிபோல் பாடுபட்டுச் சேர்த்திருந்து சிறிய சேமிப்பும் ஒரே மாதத்தில் கரைந்துவிட, குழந்தைகளோடு இரண்டு வேளை சாப்பிடவே தடுமாற வேண்டியிருந்தது. ஆட்டோவுக்கு வங்கியில் கட்ட வேண்டிய ஈ.எம்.ஐ, வீட்டு வாடகை, குழந்தைகளின் ஸ்கூல் ஃபீஸ் என நாலாபக்கமும் நெருக்கடி. கீதாவின் பள்ளி மூடிவிட, கொரோனாவைக் காரணம் காட்டி நிர்வாகம் சம்பளம் தராமல் கையை விரித்து விட்டது. ஆட்டோ ஓட்ட வழியில்லை. இந்த நிலையில் ஆன்லைன் க்ளாஸூக்காக ஒரு கைப்பேசியை மகள் ரோஸிக்காக வாங்க வேண்டிய கட்டாயமுமிருந்தது. இத்தனை நாள் பணியில்லாததால் தன் செல்போனையே அதற்குப் பயன்படுத்திக் கொண்டான். அரசு லாக்டவுனை சிறிது தளர்த்தியதால் தானும் ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் எழுந்தது. அப்போது செல்ஃபோன் தனக்குத் தேவைப் படும் என்பதால், குழந்தைக்கு ஒரு பழைய ஃபோனையாவது வாங்க வேண்டும். தனது ஃபோனுக்கு பேட்டரி மாற்ற வேண்டும். ஏற்கனவே பூதாகராமாய் அச்சுறுத்தும் ஈ.எம்.ஐ, ஸ்கூல் ஃபீஸ், வீட்டு வாடகை இவற்றோடு இந்த செலவினங்களும் வந்துசேர, அந்தக் கவலையிலேதான் இரவு தூக்கமின்றித் தவித்தான் பீட்டர். வங்கிக்கடனை இரண்டு மாதம் கழித்துச் செலுத்தலாம் எனவும், வீட்டு வாடகைக் கேட்டுத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அன்போடு ஆட்சியாளர்கள் அறிவுறுத்தி விட்டு தங்கள் கைகளைக் கழுவிக் கொள்ள, பீட்டரோ எந்தப் பிரச்னையிலிருந்தும் மீளாமல் தவித்துக் கொண்டிருந்தான். இதிலே கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, சதத்தைத் தாண்டி விரைவாக நடைபோடும் பெட்ரோல் விலை வேறு தலையில் பெரிய பாறாங்கல்லை இறக்கியது. கீதாவிடமிருந்த சொற்ப நகைகளையும் விற்றுத்தான் வண்டியோட்ட வேண்டுமென எண்ணிக் கொண்டே சூடான டீயை உறிஞ்சலானான் பீட்டர். அதற்கு ஏனோ அவன் மனது சம்மதிக்கவில்லை. யதார்த்தத்துக்கும் தனது கொள்கைப் பிடிப்புக்கும் இடையே அவன் தடுமாறினான்.
மாதக்கணக்கில் நீடித்த லாக்டவுன் சிறிதே தளர்த்தப்பட ஆட்டோவை ஓட்டத் துவங்கினாலும் பெட்ரோல் விலை இவனைப் பதற வைத்தது. கறாராக ஸ்கூல் ஃபீஸைக் கறந்துவிடும் ஸ்கூல் நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு கொரோனாவைக் காரணம் காட்டி சம்பளத்தைத் தராமல் டபாய்ப்பதை அரசுகள் வேடிக்கைப் பார்க்கின்றனவே என்ற ஆத்திரம் மேலோங்க ஆட்டோவைக் கிளப்பியவன் நேராக டவுனுக்கு வண்டியை விட்டான். போகும் வழியில் வினைதீர்க்கும் விநாயகருக்கு ஒரு கும்பிடையும் மேரியன்னை சிலையைப் பார்த்ததும் சிலுவைக் குறியையும் போட்டு மனதார இறைஞ்சினான், கண்ணைத் திறக்க. கலப்பு மணம் 'எம்மதமும் சம்மதமே' என்பதை பீட்டர் வீட்டில் நிலை நிறுத்தி இருந்தது.
தெரு முனையில் ஒரு வயதான மூதாட்டியும், நடுத்தர வயது இல்லத்தரசியும் கைகாட்டியதும் ஆட்டோவை நிறுத்தினான். பார்த்தவுடனே பணக்காரக் களை பளிச்செனத் தெரிந்தது. நகரிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் ஒரு நகைக் கடை வாயிலில் அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பும் போது, பசி வயிற்றைக் கிள்ள நாஸ்தா தின்ன ஒரு கையேந்தி பவனில் நின்றான். கீழே இறங்கி இரண்டு ஆப்பத்தைத் தின்று டீ குடித்துவிட்டு, ஆட்டோவை எடுக்கக் கிளம்பும் போதுதான் பின் சீட்டில் இருந்த பெரிய பையைக் கவனித்தான். எடுத்துப் பார்த்தால் கத்தை கத்தையாகப் பணமும், இரண்டு கைப் பேசிகளும் இருந்தன. அந்தப் பெண்மணிகள்தான் அதனை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் என ஊகித்தான். குப்பென்று வேர்த்துக் கொட்டியது. அவர்களின் செல்ஃபோனை எடுத்து அவர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றால் அதனது பேட்டர்ன் தெரியவில்லை. கடைப்பக்கம் போய் சிறிது நேரம் சுற்றிப் பார்த்தான். யாரும் கண்ணில் தென்படவில்லை. நகைக் கடைக்குத்தான் போனார்களா என்பதையும் அவன் சரிவரக் கவனிக்கவில்லை. அப்போதுதான் ஏட்டாகப் பணிபுரியும் அவனது பள்ளிக்கால நண்பன் கணபதி ஞாபகம் வர நேராக காவல்நிலையம் சென்று அந்தப் பையை ஒப்படைக்கச் சென்றான் அவன். மனதில் பெரிய போராட்டம் ஓடிக் கொண்டிருந்தது. இறுதியில் வாழ்நாளெல்லாம் கட்டிக் காப்பாற்றிய நேர்மை அவனது மனதை ஒருமுகப் படுத்த காவல் நிலையத்தை அடைந்தான். கணபதியோடு கைப்பேசியில் பேசிக் கொண்டே உள்ளே சென்றபோது, அங்கு கண்ணீரும் கம்பலையுமாக அந்தப் பெண்மணிகள் இருவரும் அமர்ந்திருந்ததைப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் அவர்களிடம் புகார் எழுதி வாங்கிக் கொண்டிருந்தார். பீட்டர் அவர்களைப் பார்த்ததும் 'அம்மா.. உங்க பைய வச்சுட்டுப் போயிட்டீங்களே. உங்கள எப்படி கண்டுபிடிக்கறதுன்னு தெரியல. அந்தக் கடை பக்கம் போய் பார்த்தேன். என்ன செய்யறதுன்னு புரியாம போலீஸ்ல கொடுக்கலாம்னு வந்தேன். நல்லதாப் போச்சு இந்தாங்கம்மா ஒங்க பேக். எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கோங்கம்மா' - எனக் கூறிக் கொண்டே பையை அவர்களிடம் கொடுத்தான். ஆனந்தமும் அழுகையும் ஒன்றாய்ப் பொங்கிவர அவர்கள் அப்பையை வாங்கிக் கொண்டு அவனுக்குப் பெரிய கும்பிடு போட்டனர். இன்ஸ்பெக்டர் தனது வழக்கமான கேள்விகளைக் கேட்கத் துவங்கும்போது அங்கு வந்து சேர்ந்த ஏட்டு கணபதி 'சார். இவன் என க்ளாஸ்மேட் பீட்டர். ரொம்ப நல்லவன் சார்' - என சர்டிபிகேட் கொடுத்தான்.
பிறகு வழக்கமான ஃபார்மாலிட்டீஸ் முடித்துவிட்டு பை அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி வீடியோவாகப் பதியப்பட்டு கணபதியால் வாட்ஸ்அப்பில் பகிரப்பட, அது சமூக ஊடகங்களில் வைரலாகி வலம் வந்தது.
இரண்டு நாட்கள் கழித்து, ஸ்கூலிலிருந்து ஃபோன். உடனே ஸ்கூலுக்கு வரச்சொல்லி. ஃபீஸ் கட்டவும், ஆன்லைன் க்ளாஸூக்கு ரோஸி சரியாக வருவதில்லை எனப் புகாரளிக்கவும். நேரில் சென்றபோது பிரின்ஸிபல் ரூமில் நான்கைந்து பேர் இருந்தனர். இவனோ பவ்யமாக பிரின்ஸியிடம் தனது கஷ்டங்களைக் கூறினான். அங்கிருந்த ஒருவர் இவனைப் பார்த்தபடி, "காணாமல்போன பணத்தை போலீஸிடம் ஒப்படச்ச ஆட்டோ ட்ரைவர்தானே நீங்க" - எனக் கேட்டதும், இவன் பரிதாபமாக தலையாட்டினான். பிரின்ஸியோ குறுக்கேத் தலையிட்டு 'அதெல்லாம் சரி.. எப்ப ஃபீஸ் கட்டப் போறீங்க.. முடியலனா டி.சி. வாங்கிக்கங்க' என கறாராகக் கூறத் தொடங்கினார். உடனே, கேள்வி கேட்ட அந்த நபர், "சார். அவர் எவ்வளவு கட்டணும்னு சொல்லுங்க. இவர் எங்க வீட்டுப் பணத்தை ஒருபைசா குறையாம கொண்டுவந்து கொடுத்தவரு. இவரை இவர் வீட்லேயே இவர் ஃப்ரண்டோட போய் பாக்குறதா இருந்தோம். அன்னிக்கு இருந்த பதட்டத்துல இவரை சரியாகூட நாங்க அங்கிருந்த போது கவனிக்கல. பேசக் கூட இல்ல. எங்க மக கல்யாணத்துக்கு நகை வாங்கப் போனபோதுதான் இது நடந்துச்சு... இவரோட பிரச்சனைகளை ஏட்டையா மூலம் தெரிஞ்சுக்கிட்டோம்.' என படபடவெனப் பேசி முடித்தார். அவர் அந்தப் பள்ளியின் போர்ட் மெம்பரில் முக்கியமானவரெனப் பின்னர் பீட்டருக்குத் தெரிய வந்தது. ஒரு வாரத்திற்குள் அவரின் ஏற்பாட்டின் காரணமாக அதே பள்ளியில் காவல் ஆணையரை வரவழைத்து பீட்டருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி அதில் ஒரு புதிய செல்ஃபோனை பரிசாகவும் கொடுத்தார்.
தனைத் தான் ஆளும் தன்மை பெற்றிட்டதால் தான் பீட்டரால் மனத் தடுமாற்றத்தை புறந் தள்ளி அவனது வாழ்நாள் லட்சியமான நேர்மையைக் கடைப் பிடிக்க இயன்றது. வறுமையில் உழன்றாலும் உறுதியாக நிற்க முடிந்தது.
குறிப்பு: எங்கள் அஞ்சல் துறையில் திருச்சி ஆர்.எம்.எஸ். பகுதியில் வேலை பார்க்கும் ஜெ. கிஷோர் குமார் எனும் க்ரூப் 'டி' ஒருவர் ரயில்வே ஸ்டேசனில் நகைகளோடு இருந்த ஒரு பையைக் கண்டெடுத்து, ரயில்வே போலீஸில் ஒப்படைத்தார். ஓர் இஸ்லாமியக் குடும்பம் அதைத் தவற விட்டிருந்தது. மீண்டும் அவர்கள் வசம் அது ஒப்படைக்கப் பட்டது. அவ்வப்போது இது போல பல செய்திகளை ஊடகங்களில் பார்க்கிறோம். அந்த நேர்மையாளர்கள் தங்கள் சொந்த வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி என்றாவது இச்சமூகம் கவலைப் பட்டிருக்கிறதா எனும் கேள்விக்கு இச்சமூகந்தான் பதில் சொல்ல வேண்டும். சொல்லுமா? இந்தக் கதை மூலமாக அவர்களைப் பற்றி வெளியுலகத்துக்குச் சொல்லுவோம் என்ற என் எண்ணமே இந்தக் கதை. இது போன்ற நேர்மையான செயல்கள் எப்போதும் எல்லோராலும் நடந்தால் நலமே!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment