வந்தாச்சு வந்தாச்சு
பண்டிகையும் வந்தாச்சு
பட்டாசு சத்தம்
படீருனு கேட்குது
புதுத்துணி எடுத்தாச்சு
உடுத்த மனம் ஏங்குது
எண்ணெயும் காயுது
மாவு நிறம் மாறுது
நெய்வாசம் துளைக்குது
பலகாரமா மாறுது
வெல்லமும் சர்க்கரையும்
இனிக்க இனிக்க இழுக்குது
பண்டிகைக்கு முன்னாலே
பலகாரத்த ருசிக்கலாம்
வாழ்க்கையும் ருசிக்கட்டும்
தீப ஒளி என
மனமெல்லாம் ஒளிரட்டும்
வந்தாச்சு வந்தாச்சு
பண்டிகையும் வந்தாச்சு!!?
-அமுதவல்லி
*------------------*
பூந்தி லட்டு
பூரிக்க வைக்கட்டும்!
ஜாங்கிரி ஜமாய்க்க
வைக்கட்டும்!
மைசூர்பா மகிழ்ச்சி
கொடுக்கட்டும்!
நெய் மைசூர்பா
நெகிழ வைக்கட்டும்!
குலோப் ஜாமீன்
குதூகலப்படுத்தட்டும்!
பாதுஷா பா பாட வைக்கட்டும்!
அங்கூர் பூந்தி அகங்காரம் நீக்கி
அன்பைப் பெருக்கட்டும்!
ஆப்பிள் பேடா ஆணவம் தகர்த்து
ஆனந்தம் கொடுக்கட்டும்!
சந்திரகலா கலையை
வளர்க்கட்டும்!
சூர்யகலா சுறுசுறுப்பை
அருளட்டும்!
சோன்பப்டி சோம்பலை
விரட்டட்டும்!
பாதாம் அல்வா
பரவசப்படுத்தட்டும்!
ரசகுல்லா ரசிக்க
வைக்கட்டும்!
சந்தேஷ் சந்தோஷம்
நல்கட்டும்!
பாசந்தி பாசத்தை
வளர்க்கட்டும்!
காரட் அல்வா
களிப்புற செய்யட்டும்!
பால் பாயாசம்
ஆயாசம் நீக்கட்டும்!
பால் கொழுக்கட்டை
பந்தத்தை வளர்க்கட்டும்!
அசோகா அல்வா
சோகத்தை விரட்டட்டும்!
மலாய் குல்லாவால் மகிழ்ச்சி நிலைக்கட்டும் !
அஞ்சீர் பர்பி அச்சம்
தவிர்க்கட்டும்!
மோத்தி பாக்கும் மோஹன்தாலும் மோதலைத்
தவிர்க்கட்டும்!
சாக்லேட் பர்பி
சாகாவரம் அருளட்டும்!
காஜு கத்லி
கணக்கில்லாமல் கிடைக்கட்டும்!
ஜீரா பூரியும் ஜீரணமாகட்டும்!
'சுகர் ப்ரீ' இனிப்புகளும்
சுவையாய் இருக்கட்டும்! இனிமை மிகுந்த இரத்தமுடையோர்
இரகசியமின்றி இனிப்புகளை
இரசித்து ருசிக்கட்டும்!
அளவோடு உண்டு சுகர்
அளவைக் கட்டுக்குள்
வைக்கட்டும்!
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
இனிப்பும்
இனிமையும்
நிறையட்டும்!
தீப ஒளியால்
வாழ்க்கை சிறக்கட்டும்!
இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!!!
- சாய்கழல் சங்கீதா
*--------------*
நண்பர்கள் அனைவருக்கும்..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இல்லம் இனிக்கட்டும்!
தினம் தினம் மனதை
புத்தாடை போல
தூய்மையாக வைத்து இருப்போம்!
தீபாவளி இனிப்பு போல
என்றும்
இனிமையாக
இதயத்தை
வைத்து இருப்போம்!
நல்ல நாளில்
பலகாரங்களை
பக்கத்து வீடுகளுக்கு
பரிமாறுவது போல
அன்பை தினம் தினம்
பரிமாறு வோம்!
நல்லவர்களுடன்
நட்பு பாராட்டி
நாளும் தொடர்பில் இருப்போம்!
அயலாரையும்
அன்னியரையும்
அன்பால்
அன்பிற்குரிய வர்களாக்குவோம்!
துன்பங்களும்
துயரங்களும் பட்டாசு போல
வெடித்து சிதறட்டும்!
எழுந்தவுடன் எண்ணெய்
குளியல் செய்து
ஆரோக்கியமாய் இருப்போம்!
இடர்கள் களைந்து
இன்பங்கள்
நம்மை சூழ
இந்நன்னாளில்
இறைவனை வணங்குவோம்!
இயற்கையை நேசிப்போம்!!
இருள் விலகி
அனைவர் வாழ்விலும்
ஒளி பரவ
தீப திருநாளில் வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
அன்புடன்.......
அக்ரி சா.இராசா முகமது
*-----------------*
டும் டும் டும்...
விரி வானில் வாணங்கள் சீறிப் பாயட்டும்
விண்மீன்கள் நடுநடுங்கி விரைந்து ஒளியட்டும்
கரியாகட்டும் காசு இன்று ஒரு நாள் மட்டும்
காது துளைக்கட்டும், கண்கள் பூக்கட்டும்
சிரிக்கும் சிறார்கள் இனிப்புகள் சுவைக்கட்டும்
சீனி உதிரத்தார் கண்களால் கடிக்கட்டும்
பிரியாமல் உறவுகள் இன்னும் இறுகட்டும்
பேசட்டும், சிரிக்கட்டும், வயிறும் வலிக்கட்டும்
உரிமை இது எங்களென்று ஊரே திரளட்டும்
உற்சாகம் வீதி எங்கும் கரை புரளட்டும்
பெரியோர்கள் சிறியோர்க்கு வெடிக்க உதவட்டும்
பெரிய விபத்துகள் நிகழாமல் தவிரட்டும்
நரியாக எதிர்ப்பவர்களும் ஊளையிடட்டும்
நன்றாக தம் செவிகள் பொத்திக் கொள்ளட்டும்
திரியிட்ட எண்ணெய்த் தீபங்கள் ஒளிரட்டும்
" தீபாவளி " திருநாள் இன்று கொண்டாட்டம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
**-----------------**
தீப ஒளியில்
நன்மைகள் பெருகட்டும்
தீமைகள் கருகட்டும்
சமூகக் கேடுகள்
நரகாசுரன் போல்
வீழட்டும்.
அனைவருக்கும்
தீப ஒளித் திருநாள்
நல் வாழ்த்துகள்!
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment