Wednesday, October 30, 2024

பிறர் துயர் தீர்த்தல் ; பிறர் நலம் வேண்டுதல்

 ------------------

பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்

--------------------


◆●◆●◆●◆●◆●■●■●◆●◆

பிறர் துயர் தீர்த்தல் ;

பிறர் நலம் வேண்டுதல்

◆●◆●◆●◆●◆●■●◆●◆◆●


திண்டுக்கல்லுக்கும் பழனிக்கும் போகும் பாதையில் மலைப்பாங்கான ஒரு சிறு கிராமம் உண்டு. பெயரோ சித்திரக் குளம். வறண்ட பூமியும் கற்பாறைகளும் நிறைந்த ஓரிடம். கிராமத்தில் மருந்துக்குக் கூட ஒரு குளம் கிடையாது. எந்த நீர்நிலையும் கிடையாது. மூன்று மைல்கள் நடந்து சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவார்கள் மக்கள். அங்கிருந்தோர் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள். பொதுவாக அக்கிராமப் பகுதி பற்றி அம்மாவட்ட மக்களிடையே இருந்த ஒரு பிரபலான கூற்று அந்தக் கிராம நிலையை தெளிவாகக் கூறிடும். தங்கள் வீட்டு வாரிசுகளுக்கு திருமண வரன் பார்க்கத் துவங்குகையில்


 "சித்திரக் கொளத்துலேந்து பொண்ணு எடுக்கலாம்... மாடா ஒழைக்கும்... ஆனா பொண்ணு கொடுக்கக் கூடாது.. அங்க வாழ்க்கப்பட்டா வாழ்க்கை பூரா ஒழைச்சு ஒழைச்சு ஓடாத் தேயணும்" - என்பார்கள், தண்ணீர் கஷ்டத்தை மனதில் நினைத்து.


இந்தக் கூற்று சித்திரக் குளத்தின் வறட்சியின் எதிரோலியே. இன்றும் அடிப்படை வாழ்வாதாரத்துக்கே மக்கள் மிகவும் கஷ்டப் படுவது கண்கூடு. கல்லுடைப்பதைத் தவிர அங்கு பெரிய வேலை ஏதுமில்லை. வயலில் வேலை செய்யவோ, பிற தொழில் செய்யவோ அக்கிராம மக்கள் அக்கம் பக்க ஊர்களுக்குச் செல்லுதலே நடைமுறையாக உள்ளது.


அங்கு பிறந்து வளர்ந்த அறிவழகன் தற்போது ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் ஏராளமான திராட்சைத் தோட்டங்களோடும் கனிமவள சுரங்கங்களோடும் வளமாக வாழ்ந்து வருகிறார். நாட்டின் பெருந் தனவந்தர்கள் பட்டியலில் இவர் பெயருமுண்டு. சிறுவயதில் தண்ணீருக்காகவும் பிற தேவைகளுக்காகவும் அல்லல் பட்ட வடுக்கள் அவரது அடிமனதின் ஆழத்தில் இன்றும் உண்டு. கல்லூரிப் படிப்புக்காக சென்னைக்கு வந்த அறிவழகன் தன்னுடன் படித்த மாலதியைக் காதலித்து மணந்தார். மாலதியின் தந்தை நரசிம்ம ரெட்டி சுரங்க முதலாளி. அவரின் ஒரே பெண்ணான மாலதியை மணந்ததால் ரெட்டியின் செல்வங்களுக்கு ஏகபோக அதிபதி ஆனார். தனது உழைப்பாலும் கூரிய மதியாலும் சொத்துகளைப் பன்மடங்கு உயர்த்தினார். இருபது ஆண்டுகள் கழிந்து தனது பிறந்த ஊரான சித்திரக் குளம் சென்று பார்க்க அவருக்குத் திடீரென ஆசை வந்தது. தனது வணிகக் குழுமத் தொடர்புகள் மூலம் திண்டுக்கல் வந்து தன் நண்பரின் கெஸ்ட் ஹவுசில் தங்கினார். சித்திரக் குளத்திலிருந்து அங்கு வந்து பணி புரியும் இரு சிப்பந்திகளோடு அவ்வப்போது அளவளாவினார். தான் அவ்வூர்க்காரன் என்பதை ஏனோ அவர் தெரிவிக்கவில்லை. . ஓரிரு நாட்கள் உரையாடல் அவருக்குத் தேவையான தகவல்களைத் தந்தது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தான் இருந்த அதே சித்திரக் குளம் சிறிதும் முன்னேறாது அதே நிலையில் இருந்ததைத் தெரிந்து கொண்டார். தனது ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என அவர் அடிமனதில் ஊறியிருந்த ஆவல் இப்போது மேலும் வலுவடைந்தது. அதற்கான வழிமுறைகளை யோசிக்கத் துவங்கினார். 


உரையாடல்களில் பல சமயங்களில் உச்சரிக்கப் பட்ட லூர்துராஜ் எனும் பெயர் அவருக்கு ஓர் ஈடுபாட்டைத் தந்தது. கிராமத்தைப் பற்றி தகவல்களை விட லூர்துவைப் பற்றித் தெரிந்து கொள்ள விழைந்தார். அதில் அதிக கவனம் செலுத்தினார்.


லூர்துராஜ் இருபது வயது இளைஞன். கடுமையான உழைப்பாளி. பெரிய படிப்பு பெறவில்லையெனினும் அறிவாற்றல் கொண்டவன்.

தன்னைச் சுற்றியுள்ள ஊர்மக்களுக்கு உதவுவதை உயிர்மூச்சாகக் கொண்டவன்.


தன் சக்திக்கு மீறி பிறருக்கு பொருளுதவியும் சிறிதும் தயங்காது செய்து வந்தவன். வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்ளும் கடமையிலிருந்தும் சற்றும் வழுவாதவன். பாறைகளை வெடிவைத்து உடைக்கும் கான்ட்ராக்டரிடம் பணி செய்தாலும் பிளம்பர், எலக்ட்ரீசியன், கார்பன்டர் என பல தொழில்களையும் கைவசம் வைத்திருப்பதால் அந்த வேலைகளையும் அசராது பார்ப்பவன். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் கட்டணம் துவங்கி பல முதியோர்களின்  மருத்துவச் செலவு வரை தன்காசை செலவழித்து உதவி புரிபவன். 


இதையெல்லாம் தெரிந்து கொண்ட அறிவழகனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. மறுநாள் அந்த வேலையாட்களில் ஒருவரை அழைத்துக் கொண்டு சித்திரக் குளம் போனார். மாலை வேலையாதலால், ஊரின் எல்லையில் இருந்த ஒரு டீக்கடையில் டீ அருந்தச் சென்றார்கள். அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தபடி டீ ஆர்டர் செய்தார்கள். அப்போது உடன் வந்தவன்,


"சார்... லூர்து வாரான் சார்.." - என்றபடி


"டேய்..  லூர்து.." என்று கூப்பிட்டான். ஒரு கட்டுமஸ்தான இளைஞன் அருகில் வந்தான். வந்து,


"என்னன்ணே.. அதிசயமா இருக்கு.. கெஸ்ட் அவுஸ விட்டு வர மாட்டீங்களே.. ஏது இம்புட்டு தூரம்'' - என சொல்லியவாறே சிரித்த முகத்தோடு அருகில் வந்தான். 


"ஒண்ணும் இல்லீப்பா.. சார் நமக்குத் தெரிஞ்சவரு.. இந்தப் பக்கமா ஓரெடத்துக்குப் போறாரு.. என்னியும் கூப்டாரு.. அதான்" - என்றான். அப்படித்தான் அறிவழகன் சொல்லச் சொல்லியிருந்தார்.


இதற்குள் டீ சாப்பிட்டு விட்டு, காசெடுக்க அறிவழகன் சட்டைப் பையைத் துழாவினான்.


"சார்.. நம்மூருக்கு வந்திருக்கீங்க.. காசெல்லாம் வேணா சார்.. அண்ணே இவங்களோடு டீயும் என் கணக்குல சேத்துருங்க" - என்றான் புன்னகையோடு. வணிகச் சூழலில் உழன்று எதைச் செய்தாலும் காசு பார்ப்பதையே குறிக்கோளாக வாழ்ந்தவருக்கு முன்பின் பார்த்தறியாத ஒருத்தருக்கு இவ்வாறு ஒருவன் உளப்பூர்வமாக விருந்தோம்பல் செய்வது ஆச்சரியம் அளித்தது. 


பிறகு தினம் அவனை சந்தித்து அவனோடு நெருக்கமாக உரையாடி அவனது உள்ளத்தை அவர் அறிந்து கொண்டார். 


"சார்.. எனக்குப் பெரிய பெரிய கனவெல்லாம் இருக்கு சார்.. கலாம் ஐயா சொன்ன மாதிரி அந்தக் கனவு எல்லாம் என்னை தூங்க விடாம செய்யுற கனவு சார். நான் சாவறத்துக்குள்ள இந்தூர்ல நெலத்தடி தண்ணி வாகு பாத்து ஒரு பெரிய கெணறு வெட்டணும் சார்.. மக்கள்லாம் தண்ணிக்கு அல்லாடுறாங்க.. அத மொதல்ல போக்கணும் சார்.. இந்த ஊர்ல பிள்ளைங்க படிக்க ஒரு எலவசப் பள்ளிக்கோடம் கட்டணும் சார்.. பெருசுங்கள்ளாம் சீக்குல படுத்துருச்சுன்னா எலவசமா வைத்தியம் செய்ய ஒரு ஆஸ்பிடல் கட்டணும்.. முடிஞ்சா ஒரு லைப்ரரி வைக்கணும்.... அப்புறம்.... உம்ம்.. இப்போதைக்கு இது போதும் சார்.. " - கண்கள் விரிய உணர்ச்சியோடு லூர்து மளமளவென கொட்டித் தீர்த்தான்.


அறிவழகனும், "கவலப் படாத லூர்து.. எங்க முதலாளி நல்லவரு.. இன்னிக்கு ராத்திரி அவரோட பேசும்போது ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்குறேன்" - எனச் சொன்னார். 


அவரது கைகளைப் பிடித்த படி கண்களில் ஒளியோடு


"சார்.. நீங்க சொல்றதே பெரிய விஷயம் சார்.. கஷ்டப் பட்டு கொஞ்சம் காசு போஸ்டாபீஸூல சேத்து வச்சுருக்கேன் சார். ஒங்க முதலாளி பெரிய மனசு பண்ணாருன்னா இதையும் சேத்துப் போட்டு ஏதாவது ஒண்ணாச்சும் பண்ணிடனும் சார்"- என சொல்கையில் குரல் தழுதழுத்தது. தனது அரை நிஜார் பையிலிருந்து கசங்கிய பாஸ்புக் ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தான். அதில் ௹.3,327/- இருப்பு இருந்தது. அவர் புன்னகைத்த படி கிளம்பினார். மறுநாள் அவர் முதலாளி உதவுவதாக ஒத்துக் கொண்டதாகக் கூறியதோடு, அதற்கு அடுத்த நாளே கிணறு தோண்டும் பணிகள் தொடங்கலாம் என்றார்.


முதலில் முத்து ஆசாரியைக் கூட்டி வந்து தண்ணி வாட்டம் பார்த்தனர். அறிவழகன் ரகசியமாக ஹைட்ராலஜி டிபார்ட்மன்ட் மூலமாக நிலத்தடி நீர் இருக்குமிடத்தை தெரிந்து கொண்டார். முத்து ஆசாரியும் கிட்டத் தட்ட அதே இடத்தில் தன் கையிலுள்ள மூங்கில் குச்சி சுழன்றதைக் காட்டி அவ்விடத்தைக் குறித்துக் கொடுத்தார். அறிவியலும் இயற்கையை கணிக்கும் கிராம மக்கள் ஆற்றலும் இணைந்திருக்கும் அற்புதத்தைப் பார்த்த அறிவழகன் அதிசயப் பட்டார். வேலைகள் மளமளவென நடக்கத் துவங்கின. ஜேசிபி ஆழமாக நிலத்தைத் தோண்டத் துவங்க, மூன்றாம் நாள் அதிகாலை அடி ஊற்று கொப்புளித்து வந்தது. கிட்டத் தட்ட பாலைவன பூமியாக இத்தனை ஆண்டுகள் இருந்த சித்திரக் குளத்தில் பெரிய கிணறு நல்ல நீர்வளத்தோடு வந்தே விட்டது. ஊர்மக்கள் லூர்துசாமியைக் கொண்டாட, அவனோ அறிவழகன் காலில் விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான்


"சார்.. நீங்க தெய்வம் சார்.. ஒங்க மொதலாளியோட ஒரே வாட்டி பேசிடணும் சார்.. அவரு மாதிரி மனுசங்க எல்லாரும் இருந்துட்டா.. ஒலகமே சூப்பராயிடும் சார்" -என உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தான். 


தனது வணிகத்தையெல்லாம் தனது மேனேஜரிடம் விட்டு விட்டு மூன்று மாதம் சித்திரக் குளத்தில் தங்கி ஒரு பள்ளிக் கூடம், தர்ம ஆஸ்பத்திரி, நூலகம் என அனைத்தையும் கட்ட பணியை முடுக்கி விட்டு நடத்தி முடித்ததோடு தனது மனைவியையும் வரவழைத்தார். தனது குழுமத்தின் சார்பில் ஒரு நிர்வாக அலுவலகம் கட்டி லூர்துவின் பெயரில் ட்ரஸ்ட் துவங்கி, அதனை நிர்வகிக்க ஒரு கமிட்டியையும் போட்டார். பள்ளி, மருத்துவ மனை, நூலகம் நடத்த ட்ரஸ்ட் அக்கவுன்ட்டில் இருபது கோடி பணத்தையும் போட்டார். அங்கேயே தனது மனைவியுடன் தங்கிடவும் முடிவு செய்து விட்டார்


ட்ரஸ்ட் அலுவலகத் திறப்பு விழாவில்,


"நான் இந்தக் கிராமத்துல பிறந்து வளந்தவன். காலேஜ் படிக்க மெட்ராஸ் போனேன். அங்க கல்யாணம் ஆச்சு. ஹைதராபாத் போயி வியாபாரம் செஞ்சேன். இருபது வருஷம் ஓடிப் போச்சு.. நம்ம கிராமத்த சும்மா ஆசைக்காகப் பாக்க வந்தேன். இங்க லூர்து பத்திக் கேள்விபட்டு அசந்து போயிட்டேன். கடுமையா ஒழைச்சு சம்பாதிக்கிற காச ஊருக்காக செலவழிக்கிற பரோபகாரம் எல்லாருக்கும் வராது. அவன்கிட்ட அது நெறய இருந்துச்சு.. அது என் மனசாட்சிய உலுக்கிச்சு.. நீ என்ன செய்யப் போற ஒன் ஊருக்குன்னு அது கேள்வி கேட்டுச்சு.. அதுக்கான பதில்தான் இந்த ட்ரஸ்ட். "பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்" - என்கிற லூர்துவின் பெரிய மனசுக்கு ஆண்டவனோட பரிபூரண ஆசிர்வாதம் என்னிக்கும் உண்டு" - இப்படியாக அவர் கூறி முடித்த போது ஊரே கைதட்டி ஆரவாரித்தது. அதுவரை அவரைப் பற்றி முழுதும் அறியாத லூர்துவும் திகைத்து நின்றான்.


சித்திரக் குளம் இப்போது வளம் கொழிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக வரைபடத்தில் ஒரு முக்கிய இடமாக விரைவில் மாறிடவும் செய்யும்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...