--------------------
பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்
--------------------
◆●◆●◆●◆●◆●■●■
அச்சந் தீரும்
அமுதம் பெருகும்
◆●◆●◆●◆●◆●■●■
காஞ்சிபுரம் அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லீலாவதி எனப் பெயரிட்டனர். பிறந்தவுடனே சாதாரணமாக அழ வேண்டிய குழந்தை கலகலவென சிரித்திருக்கிறது. அது ஓர் அதிசய செய்தியாக சுற்று வட்டாரத்தில் பரவியதால் அக்குழந்தையைப் பார்க்க அக்கம் பக்கத்து மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். குழந்தைப் பேறு பார்த்த காளியம்மாளுக்கு நல்ல மவுசு வந்தது. வருவோர் போவோரிடம் எல்லாம்
०- இந்த அதியத்த என்னான்னு சொல்றது.. பொறந்த அடுத்த நிமிஷமே என்ன உத்துப் பாத்துச்சு... அழவே இல்லேன்னா பாத்துக்கயேன்... திடீர்னு கலகலன்னு சிரிச்சுச்சு... - என சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தாள்.
அக்கிராமத்தின் காவல் தெய்வம் லீலாவதி அம்மன் எனும் காளி என்பதால் அக்குழந்தைக்கு லீலாவதி எனப் பெயரிட்டனர். சிறுவயது முதலே தைரியத்தின் விளைநிலமாக அவள் இருந்தாள்.
எதற்கும் அஞ்சிட மாட்டாள். வயல் வெளிகளில் காணப்படும் ஓடுகிற பாம்புகளையும் பிடித்து புதர் காட்டிற்குள் விட்டிடுவாள். முரட்டுக் காளைகளையும் அடக்கி விரட்டிடுவாள். ஒரு முறை குழந்தைகள் பலர் விளையாடிக் கொண்டிருக்கும் பெரிய பொட்டல் வெளியில் ஒரு வெறிபிடித்த கொழுத்த காளை ஒன்று ஓடி வருவதைப் பார்த்து பாய்ந்து அதன் முன்றே சென்று தைரியமாக நிமிர்ந்து நின்றாள். ஓடி வந்த மாடு திகைத்து நிற்க, கையிலே கழியொன்றை எடுத்து அதனைத் தாக்கவும் ஆரம்பித்தாள். அதற்குள் பலர் கழிகளுடன் ஓடி வரவே, அச்சமுற்ற அந்தக் காளை வந்த வழியே திரும்பி ஓடியது.
பிறந்த போதே ஊரின் கவனத்தை ஈர்த்த பெண் இப்போது ஊரின் மரியாதையை பெற்றாள். காவல் தெய்வமான லீலாவதி அம்மனின் சக்தி பெற்ற சிறுமி அவள் என ஊரே நம்பியது. குடித்து விட்டு ரகளை செய்யும் ஆண்கள், வேலையாட்களுக்கு கூலி தர டபாய்க்கும் பண்ணையார்கள், கலப்படம் செய்யும் வியாபாரிகள், கள்ளச் சந்தைக்காரர்கள் என எவரும் அவளிடமிருந்து தப்ப இயலாது. அவர்களுக்கு எதிராக போர்க்கொடி எழுப்பிடுவாள். அம்மனின் சக்தி உள்ளவள் என ஊரே நம்பியதாலும், அவளுக்குத் தீங்கிழைக்க நினைத்த பண்ணையார் ஒருவரை கருநாகம் தீண்டியதும், வேறொரு வியாபாரி மாடு முட்டி குடல் சரிந்து இறந்ததும் நிகழவே அவளை நெருங்கவே கெட்ட எண்ணம் கொண்டோர் அச்சப் பட்டனர். அவளாலேயே, அக்கிராமத்தில் குற்றங்கள் அருகிப் போயின.
அக்காலக் கட்டத்தில் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கொண்டு இருந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த லீலாவதி அதன்பால் ஈர்க்கப் பட்டாள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நேரமது. அது போன்றோருக்குத் தேவைப் படும் பல உதவிகளை மனமுவந்து அவள் செய்யலானாள். இவ்வாறு பல ஆண்டுகள் உருண்டோடின. ஆங்கில அதிகாரிகளின் செவிகளுக்கு இது எட்டியது. அவளைக் கண்டு அஞ்சிய பல தீய சக்திகள் தக்க சமயத்திற்குக் காத்திருந்தனர். தேடிச் சென்று அதிகாரிகளின் காதைக் கடித்தனர்.
ஒருமுறை, ஆங்கில அரசால் தேடப் பட்டு வந்த நல்லசாமி நாடார் எனும் போராளி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது உடல் கிராமத்துக்கு வெளியே மேற்கே உள்ள மண்மேட்டில் கிடந்தது. தலையின் பின்புறம் பலத்த அடி பட்டிருந்ததால் இரத்தம் பெருக்கெடுத்து ஓடி உறைந்திருந்தது. ஊரின் தலையாரி தவறிக் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்து போனதாக குறித்துக் கொண்டான். அந்த உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ கூட முயற்சிக்கவில்லை. ஆண்டர்சன் எனும் அதிகாரி நாய்களும், கழுகுகளும் அந்த உடலைப் பதம் பார்க்கட்டும் என சொல்லி விட்டதாகத் தகவல் கசிந்தது. தலையாரியும் போலீஸ்காரர்களும் திரண்டிருந்த ஊர் மக்களை விரட்டத் துவங்கினர். அப்போது
-० தலையாரி ஐயா.. பின்னந்தலைல மட்டுமா அடிபட்டுருக்கு... கைகால் எல்லாம் ரத்தக் காயங்களிருக்கே.. மூக்குலயும் ரத்தம் வந்துருக்கு.. கண்ணுகிட்ட கன்னிப் போயிருக்கு.. இதெல்லாம் பாக்க மாட்டீங்களா... -ன்னு கணீர்னு ஒரு குரல் கேட்டது. வேறு யாருக்கு அந்தத் தைரியம் வரும். நம்ம லீலாவதிக்குத்தான்.
பிறகென்ன... வைக்கோல் போரில் தீப்பற்றியது போல ஆவேசம் அங்கு உருவானது. மனித நேயத்தோடு பலருக்கும் உதவி செய்தவர் நல்லசாமி என்பதால் அவரிடம் மரியாதையுடன் கூடிய பிணைப்பு மக்களிடையே அதிகம் இருந்தது. லீலாவதி குரல் கொடுத்ததும், சட்டென அங்கு ஒரு பெரிய சலசலப்பு எழுந்தது. அங்கிருந்த நான்கு போலீஸை வைத்துக் கொண்டு காட்டாற்று வெள்ளம் போல எகிறி வரும் மக்களை சமாளிக்கத் திணறினான் தலையாரி. போலீஸ் தஸ்தாவேஜ் ரெஜிஸ்டரில் 'அடித்துக் கொலை' செய்யப் பட்டதாக பதிவு செய்ய அவன் கட்டாயப் படுத்தப் பட்டான்.
பிறகு, அந்த பூதவுடலை கிராம மக்கள் பெற்றுக் கொண்டு ஊர் மரியாதையோடு ஊர்வலம் போய் தகனம் செய்தனர். இதையெல்லாம் லீலாவதி தலைமை தாங்கி நடத்தினாள்.
பல ஆண்டுகளாக தனது கழுகுக் கண்களை அவள் மீது பதித்திருந்த பிரிட்டிஷ் நிர்வாகம் களம் இறங்கியது. அவளைக் கைது செய்ய தனிப் படை அமைத்தது. ஆயினும் அவளை அவ்வளவு எளிதாகக் கைது செய்ய அவர்களால் இயலவில்லை. இறுதியில் அவளைப் பழிவாங்கக் காத்திருந்த ஊர்ப் பெரியவர்கள் சிலரின் கைங்கரியத்தினால் அவள் கைதானாள்.
அவளைக் கைது செய்த பிரிட்டிஷ் காவல் துறை சென்னை எழும்பூரில் 1941 டிசம்பர் -1ந் தேதி சிறை வைத்தது. அதன்பின் அவள் பற்றிய செய்தி எதுவும் வெளியுலகுக்குத் தெரியவில்லை.
அவள் பிறக்கையில் அவளது கிராமம் கீழ்நிலையில் இருந்தது. கொழுத்த தனக்காரர்களின் கைகளில் சிக்கி சீரழிந்திருந்தது. முறைகேடுகள் மலிந்திருந்தன. உழைக்கும் மக்களின் நிலையோ நரகத்தை விட மோசமாக இருந்தது. ஒழுங்காக கூலி கிடைக்காது. வயிற்றுக்கு சோறு கிடைக்காது. மனிதர்களாக கௌரவமாக வாழ முடியாது என இருந்த இழிநிலையை "அச்சந் தவிர்த்து அமுதம் விளைய"ச் செய்த லீலாவதி அம் மண்ணில் தோன்றிய காவல் தெய்வமன்றோ!
குறிப்பு: எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் காணக் கிடைக்கும் எண்ணற்ற வெளியுலகம் அறியாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் லீலாவதி அம்மையார் பெயரும் உள்ளது. அவரைப் பற்றி முழு விவரங்கள் இல்லாத காரணத்தால் புனைவும் கலந்து இக்கதையைப் புனைந்துள்ளேன். லீலாவதி அம்மையாரின் நினைவுக்கு இதனைக் காணிக்கை ஆக்குகிறேன்.
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment