இசையது....
இசையது செவி வழி தேனாய் நுழைவது
இதயம் தொடுவதோடு வருடி விடுவது
அசையும் அனைத்தையும் ஆட்டுவிப்பது
ஆணவ ஹேமநாதனை ஓடச் செய்வது
கசையடியாம் செவிகளுக்கு இந்நாள் திரையிசை
கரவொலி, விருதுகள் முடியவில்லை இம்சை
பசையாய் ஒட்டின பழைய பாடல்கள் மனதில்
பாய்ந்து வரும் புதுப் புயல் மறையுதே எளிதில்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
*-----------*
தலையை ஆட்ட வைப்பதும் இசை..
தலை ஆட்டுவதும் இசை..
"தலை" என புகழ
வைப்பதும் இசை..
கைகளும் கால்களும்
தாளம் போடுமே!
நல்லிசை இரத்த
நாளம் சேருமே!
உணர் நரம்புகளும்
ஊஞ்சலாடுமே!
விவரிக்க இயலா
" ஏதோ ஒன்று"
உயிரையும் உருக்குமே!
ஏழை ஓசையும்
ஏகாந்தமாகுமே...
குழலோசையிலே!
குழவியோசைலே!
கழலோசையிலே!
ஏழை சத்தமும்
நிசப்தமாகுமே..
மனதை மயக்கும்
இசையின் இயக்கத்திலே!
- சாய்கழல் சங்கீதா
*--------------------*
விழி வழி மொழி
அழகு
செவிவழி மொழி
இசை
மழலையின்
முதல் அழுகையில்
துவங்கும் வாழ்வின்
எழிலிசை
இசையில் உழல்தல்
இன்பமே
இசையின் சுழல்
பேரின்பம்
மொழி சொல்லா
கதைகளை
இசை சொல்லும்
இதயத்துடிப்பும் இசையே
அவ்விசையில் துடிப்பது
இன்னுயிரே
பஞ்சபூதங்களின் இசை
என்றென்றும் ஒலிக்கும்
இந்த பூத உடலின்
இதய ஓசை அடங்கினாலும்
இன்னிசையாக
பிறர் வாழ்வில் ஒலிப்பதன்றோ
நல்வாழ்வின் அடையாளம்
-அமுதவல்லி
*--------------------*
இசை
-------
ஏழு ஸ்வரங்கள் பின்னிப்பிணைந்து
இனிய நாதங்களை எழுப்பும் ஒற்றுமைக் கூட்டணி.
கல்லையும் கனியாக்கும்
வெந்து புண்ணான
மனதுக்கும் இதம் தரும்
இன்னிசை.
புகழுடன் வாழ்வதையே'இசை பட ' வாழ்வதாக போற்றுவது அல்லவோ தமிழ்மரபு!
இரண்டு மனங்கள் இணைவதும் இசைபட( ஒத்து) வாழ்வதும் இசையின்
மற்றொரு முகம் அன்றோ!
சத்தம், ஓசை என்பதெல்லாம்
நல்லிசையின்
ஏழை சகோதரரோ ?
மூங்கில் கூட்டமும் காற்றும் நிகழ்த்தும்
கச்சேரியைக் கேட்ட ஆதி மானுடர்க்கு இயற்கையே இன்னிசைதான்.
எசப்பாட்டோ , குலவையோ
வெள்ளை உள்ளங்களின்
உணர்வுப் பொழிவுகள்.
இன்னிசை
யானது மொழி, மத வேறுபாடின்றி உலகை
ஒன்றுபடுத்தும், கேட்டு ஈடுபட காதுகள்
தயாராக வேண்டுமே!
---மோகன்
*-----------*
No comments:
Post a Comment