★०★०★०★०★०★०★०★०★
௧வியரங்கம் - நூல் வெளியீடு - பொதுக்குழு : விவரணம்
★०★०★०★०★०★०★०★०★
20 அக்டோபர் 2024 மாலை ஆறு மணிக்கு நமது முப்பெரும் விழாவான கவியரங்கம் - நூல் வெளியீடு - பொதுக் குழு பன்பயன்பாட்டு அரங்கத்தில் துவங்கியது.
திருமதிகள்.
சுஜாதா அருண் கோபால்,
பிரபு குமாரி,
சுபாஷிணி,
புஷ்பா பாலகிருஷ்ணன்,
மைதிலி நீலகண்டன்
ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக பூர்வாவின் இசைக் குயில்கள் விஜயலக்ஷ்மி பாலாஜி மற்றும் துர்கா சாய்ராம் அவர்களோடு அரங்கமே தமிழ்ப் பண் பாடியது.
செல்வி. சாதனா தன் இனிய குரலில் அவையோரை வரவேற்புரை நிகழ்த்தினார்.
பிறகு, ஸ்ரீவி தலைமையில் ழகரக் கவியரங்கம் துவங்கியது.
கவியரங்கத்தில் கவிஞர்களும் அவர்களுக்கான தலைப்புகளும்:
★ உழல் - கணேசன்
★ சுழல் - அமுதவல்லி
★ உழவு - மகாலக்ஷ்மி
★ குழல் - ஹரீஷ்
★ எழில் - மல்லிகா மணி
★ மழலை - மோகன்
★ விழல் - தியாகராஜன்
★ நிழல் - மலர்விழி
★ தழல் - சுல்தானா (சிறுவன் கௌஸலேஷ் வாசித்தார்)
★ அகழ் - வித்யா
★ புகழ் - வெங்கட்ராமன்
★ கழல் - சங்கீதா
பன்னிருவரும் அவையோர் மகிழ தத்தம் கவிதைகளைப் படைத்து, படித்து அரங்கேற்றினர். ஒவ்வொருவரின் கவிதை படிக்கப் படுகையில் உன்னிப்பாய் கவனித்து, இரசித்து, மகிழ்ந்து அரங்கம் அதிரும் அளவிற்கு கரவொலி எழுப்பிய அவையோரின் தமிழ்ப் பற்றும் இரசிப்புத் தன்மையும் பங்கேற்பாளர்களுக்கு அதிக ஊக்கமளித்தது.
மகாகவி பாரதி தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் வருகையும் இரசித்து மகிழ்ந்த விதமும் நம் சங்கத்தின் தரமிகு நிகழ்ச்சிக்கு கட்டியங் கூறின. இந்த விஷயம் சிறப்பு விருந்தினர்களையும் வெகுவாகக் கவர்ந்தது என்பது வெள்ளிடை மலை. உறுப்பினர்களின் பங்கேற்பு பாராட்டுதலுக்குரியது.
கவிஞர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அன்புப் பரிசினை வழங்கினர். திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு நம் நிதிச் செயலர் திரு. சாய்ராம் அவர்களும், திருமதி. சுஜாதா அருண் கோபால் அவர்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. மல்லிகா அவர்களும்
"புதிய ஆத்திசூடிக் கதைகள்" நூல்கள் வழங்கி அன்பளித்தார்கள்.
பிறகு, திரு. அழகிய சிங்கர் அவர்கள் தனது சிறப்புரையில் கவிஞர்களை மனதாரப் பாராட்டியதோடு, அரங்கம் நிறைந்தளவில் பங்கு பெற்று உற்சாகமூட்டிய உறுப்பினர்களையும் வெகுவாகப் பாராட்டினார். அவர் அவரது பத்திரிக்கையான விருக்ஷம் எனும் நூலை கவிஞர்களுக்கு அன்பளித்து உற்சாகம் தந்தார்.
திருமதி. சுஜாதா அருண் கோபால் அவர்கள் தன்னுரையில் ஒவ்வொரு கவிஞரின் கவிதையிலும் முத்தாய்ப்பான வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசினார்கள். நமது செயலர் மலர்விழி அவர்களுக்கு சன் தொலைக் காட்சியில் பட்டிமன்ற நிகழ்வில் பங்கேற்க வைக்க முயற்சி எடுப்பதாகக் கூறியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இரண்டாம் நிகழ்ச்சியாக ஸ்ரீவி அவர்கள் எழுதிய புதிய ஆத்திசூடிக் கதைகள் - நூல் வெளியீடு நடந்தது. நூல் வெளிவர தன்னை விட அதிக ஈடுபாட்டுடன் முயன்று செயல்பட்ட இருவர் சாய்ராம் மற்றும் தியாகராஜன் ஆகியோரே நூல் வெளியிடுதல் சிறப்பும் முறையும் ஆகும் என ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டார். அதன்படி,
முதல் பாகத்தை நிதிச் செயலர் திரு. சு. சாய்ராம் அவர்கள் வெளியிட திருமதி. எம். லலிதா சார்பில் அவரது புதல்வி சாந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இரண்டாம் பாகத்தை நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. தியாகராஜன் வெளியிட திருமதி. பி.ஆர். ஆண்டாள் அம்மா பெற்றுக் கொண்டார்கள்.
பல்வேறு காரணங்களால் நூல்களை அன்று விற்பனைக்குக் கொணர இயலவில்லை என்பதால் ஓரிரு வாரங்களில் அதற்கான ஏற்பாடுகள் நடக்கும் எனவும், புலனக் குழுவில் அது குறித்துத் தகவல் வெளியாகும் எனவும் விளக்கப் பட்டது. இப்போதே திருமதி ஆண்டாள் அம்மா அவர்களும் திரு. இ.ச. மோகன் அவர்களும் தலா பத்து செட்களுக்கான முன் பதிவு செய்ததைக் கூறி நூலாசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டினார்.
அதன்பின் பொதுக்குழு நடந்தேறியது. உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் நல்ல பல ஆலோசனைகளை வழங்கினர். அவற்றில் சில துளிகள்:
● ழகரக் கவியரங்கம் தந்திட்ட உற்சாகத்தால் அதன் நீட்சியாக "ஏழ்மை" எனும் ழகரத் தலைப்பில் மூத்த உறுப்பினர் திரு. பிச்சைமணி அருமையான கவிதையைப் படைத்தளித்தார். இது கவியரங்கத்தின் வெற்றியை உறுதியாக்கி பிரகடனம் செய்தது. அவருக்கு நம் வாழ்த்துகள்.
● அடுத்த நிகழ்ச்சிகளுக்கு பல பதாகைகள் செய்திடுதலைத் தவிர்க்கலாம். (ஏற்றுக் கொள்ளப் பட்டது)
● நிகழ்ச்சிகள் நடக்கையில் அதனை உறுப்பினர்கள் இலகுவாக பார்த்திடும் வகையில் புலனக் குழுவில் ஸ்டேட்டஸாகவும், பின் செய்தும் முக்கியத்துவப் படுத்த வேண்டும் (ஏற்கப் பட்டது)
● அதிக உறுப்பினர்கள் பங்கேற்கும் வகையில் 'மொட்டை மாடி இசை நிகழ்ச்சி' நடத்த வேண்டும் (ஏற்கப் பட்டது)
● நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி. ஆர். மகாலக்ஷ்மி அவர்கள் நமது மேடையை எதிர்காலத்தில் அலங்கரிக்கவுள்ள பேச்சாளர்களைக் கண்டறிய *சொல் வேந்தர் மன்றம்* எனும் குழு ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் ஓரிரு தினங்களில் பகிரப் படும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளை சிறப்பாக திருமதி. காமாட்சி தொகுத்து வழங்கியது குறிப்பிடத் தக்கது. அவருக்கு நம் நன்றி.
நிறைவாக, சிறுமி ரோஷ்ணா தன் அழகான உச்சரிப்பில் நன்றியுரை சொன்னார்.
தேசியப் பண் இசைக்கப் பட்டதோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
வழக்கம் போல தேனீக்களைப் போல் சுழன்று தேநீர் வழங்கியும் அரங்கப் பணிகளை செவ்வனே செய்தும் உதவிய தன்னார்வலர்களுக்கு சிரந்தாழ்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சி முடிவில் உறுப்பினர்கள் அனைவருக்கும் செவிக்கு உணவு அளித்ததோடு சிறிது வயிற்றும் ஈய மல்லிகைப் பூ இட்லி வழங்கப் பட்டது மனநிறைவினைத் தந்தது.
மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் இணைவோம்
நன்றி 🙏
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
தலைவர்.
No comments:
Post a Comment