०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●
கத்திரிக்காயும் கந்தவேலும்
०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●
நல்ல அசந்த தூக்கத்தில் வேலு என்கிற ௧ந்தவேல் இருந்தான். மணி காலை ஆறரை. அவனது செல் ஃபோன் சிணுங்கியது. "டுடே இஸ் ஸாடர்டே. குட் மார்னிங். ப்ளீஸ் வேக் அப்" என்று கைபேசி பெண் குரலில் இனிமையாக வந்தனம் சொன்னது. மனதினுள் 'எவன்டா இந்த செல் ஃபோனக் கண்டு பிடிச்சான். சனிக்கிழமை கூட நிம்மதியா தூங்க விட மாட்டேங்குது..' -என முனகியவாறே கைபேசியை எடுத்து அலாரத்தை ஆஃப் செய்து விட்டு போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.
"ஐயாவுக்கு அலாரம் அடிச்சா போதாதோ.. நாங்க வந்து திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்பணுமோ.. இப்படி ஒரு சோம்பேறிய புள்ளயா பெத்து என் தலைல கட்டிட்டு ஒங்க அம்மா -புண்ணியவதி போய் சேர்ந்தாச்சு' - அவன் மனைவி சுலோ என்கிற சுலோச்சனா
"ஐயய்யோ.. அம்மாவ இழுத்துட்டா.. அடுத்து என்ன உரிச்சு தொங்க விட்டுடுவா.."- என எண்ணியவாறே படபடப்போடு வாரி சுருட்டி எழுந்தான் வேலு. சுலோ ஏதும் பேசும் முன்னே வேகமாக பாத்ரூமுக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான். வெளியே அவள் பேசினாலும் காதில் விழாதவாறு குழாயைத் திருகி பக்கெட்டில் தண்ணீர் பிடித்தான். சில சமயங்களில் அதையும் மீறி சுலோவின் குரல் கேட்கும். இன்று ஏனோ கேட்கவில்லை. நிம்மதி பெருமூச்சு விட்டவாறே, காலைக் கடன்களை முடித்து விட்டு வெளியே வந்தான்.
ஹாலில் வந்து சேரில் அமர்ந்து கையில் ரிமோட்டை எடுத்தான். டிவியை ஆன் செய்யும் முன், சுலோ பற்றி ஞாபகம் வந்ததால் அம்முயற்சியைக் கைவிட்டான். கையிலிருந்த ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு, எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையை எடுத்து நோட்டம் விட ஆரம்பித்தான். இரு நாட்கள் முன் அவன் வாங்கிய கம்பெனி ஷேர்கள் எல்லாம் தாறுமாறாய் இறங்கியிருந்தன. அவனை அறியாமல் அவனது வயிறை அச்செய்தி கலக்கியது. 'நாம ஷேர் வாங்கும் போதுதானா டவுன்ஃபால் வரணும்.. நம்ம போதாத காலம்' -என மனம் புழுங்கினான். இனிமேல்தான் போதாத காலம் ஆரம்பிக்கப் போகிறது என தெரியாமல். அவன் ஷேர்கள் விழுந்த கவலையில் இருந்த போது 'டங்' என்ற சத்தத்தோடு காஃபி டம்ளர் டைனிங் டேபிள் மேல் வைக்கப் பட்டது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் வேலு.
"என்ன.. திரும்பவும் தூக்கமா.. இல்ல ஃப்ரென்ட்ஸ்களோட வீக் என்ட் செலிப்ரேஷன் பத்தி தீவிர யோசனையா" -சுலோ
"இல்லே.. சும்மா பேப்பரை பாத்துட்டு இருந்தேன்" -வேலு
"அப்புறம் ஏன் மூஞ்சி பேயடிச்ச மாதிரி இருக்கு"
மனதினுள் புழுங்கியவாறே, "அதான் நீ இருக்கியே" -என்று வேலு உளறினான்
"என்ன சொல்றீங்க"
"இல்ல... இல்லே.. பேய் வந்தாலும்.. உம்ம்.. என்னக் காப்பாத்த... அதான் .. நீ இருக்கியே" -என மேலும் உளறிக் கொட்டி சமாளித்தான்.
"சரி.. சரி.. சீக்கிரமா காஃபியைக் குடிங்க"
அடுத்த நொடி காஃபி குடிக்கலானான். அன்று என்னவோ காஃபி அவ்வளவு பிரமாதமாக இருந்தது. சுவைத்துக் குடித்தான். காஃபி தீர்ந்து விட்டது. அதன் சுவையும் மணமும் நன்றாக இருந்ததால்
"சுலோ..." -என அழைத்தான்.
"என்ன.." -ஓங்கி உரத்த குரலில் பதில் வந்தது.
"இல்ல... வந்து... ம்ம்.. இன்னொரு கப் காஃபி கிடைக்குமா?"
"அதெல்லாம் கிடையாது. இன்னிக்கு பொங்கல்-வடை பண்ணப் போறேன்.. கத்திரிக்கா கொத்சு சூப்பரா இருக்கும். சட்டைய மாட்டிட்டுப் போயி கத்திரிக்கா ... நல்ல எளசா பாத்து வாங்கிட்டு வாங்க..
நம்ம கந்தசாமி அண்ணாச்சி கடைலயே வாங்கிட்டு வாங்க. சட்னி அரைக்க நல்ல முத்துன தேங்காயா பாத்து ஒண்ணு வாங்கிட்டு வாங்க.. மசமசன்னு நிக்காம சட்புட்டுனு சட்டையப் போட்டுகிட்டு கிளம்புங்க"
இதுக்கு மேல நிக்க வேலுவுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு.. சட்டையை மாட்டி பட்டன்களை போட்டவாறே கிளம்பினான்
"கத்திரிக்கா எப்படி வாங்கணும்னு சொல்லிருக்கேன்ல.. நாமக் கத்திரிக்கா வேணாம். கல்லு மாதிரி இருக்கக் கூடாது.. காம்பு காஞ்சு போனதா இருந்தா காய் பழசுன்னு அர்த்தம். அமுக்கிப் பாத்து பஞ்சு மாதிரி இருக்கறதா வாங்கணும்.. குறிப்பா பூச்சி அரிக்காததா பாத்து எடுக்கணும். என்ன தெரியுதா... அந்தத் தேங்கா. அத மறந்துறாதீங்க.." -சுலோ.
சரியாக செருப்பு மாட்டி கிளம்பும் வரை அவளது குரல் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஷேர்களின் வீழ்ச்சி அவன் மனதை விட்டு ஓடிப் போய் விட்டது. இப்போது கத்திரிக்காய் நல்லதாக வாங்கி வர வேண்டும் என்ற கவலை ஆக்கிரமித்துக் கொண்டது. தெரு முக்கில் உள்ள கந்தசாமி அண்ணாச்சிக் கடைக்கு குழப்பத்துடனே வந்து சேர்ந்தான். கடையில் எதிர் வீட்டு சுந்தரம் நின்றிருந்தார்.
"என்ன வேலு ... காலைலே டோஸ் விழுந்துச்சா... குழப்பத்துல சட்டை பட்டன மாத்தி மாத்தி போட்டு வந்துருக்கே பாரு" -நக்கலாகக் குசலம் விசாரித்தார். கந்தசாமி அண்ணாச்சி நமட்டு சிரிப்புடன்,
"சார்.. சட்டையப் போட்டுகிட்டு வந்தார்ல.. அத பாருங்க... அதயும் மறந்துட்டு வரலேல.." -நமுட்டு சிரிப்பைத் தொடர்ந்தார்.
"அண்ணாச்சி பாகக்காய் வேணும்"-என பதற்றத்தோடு சொன்னான்.
"அதோ.. இருக்கு போய் எடுத்துக்குங்க தம்பி" - என காய்கறிகள் அடுக்கி வைத்திருந்த அலமாரியைக் காட்டினார்.
"ஏம்பா.. வேலு... இன்னிக்கு சுலோச்சனா பொங்கல் பண்ணப் போறதா சொல்லிட்டு கத்திரிக்கா கொத்சு செய்ய ரெசிப்பி கேட்டு என் வீட்டுக்காரிகிட்டே குறிப்பு எடுத்துட்டு இருந்தாளே காலைல.. நீ எதுக்கு பாகக்காய் கேக்குறே?" -இந்த முறை சுந்தரத்தின் குரலில் அக்கறை தெரிந்தது.
ஷாக் அடித்தாற் போல் துள்ளிய வேலு, பரிதாபமாக அண்ணாச்சியைப் பார்த்தான். அவரும் சிரித்தவாறே,
"தம்பி.. ஒண்ணும் பதட்டப் படாதீங்க.. அதோ அந்த மூலைல இருக்குதே அது கம்போடியா கத்திரிக்காய்.. தேனா இருக்கும். ஊட்டச் சத்து அதிகமாம்.. சூப்பர் மார்க்கெட்ல கிலோ இருநூறு ரூபா.. நம்மகிட்ட நூத்தம்பதுதான்.. சும்மா அள்ளுங்க" -என்றார்.
அவன் கண்ணுக்கு அது சாதாரணக் கத்திரிக்காய் ஆகத்தான் தெரிந்தது. ஏதோ தட்டுத் தடுமாறி அமுக்கிப் பாத்து பொறுக்க ஆரம்பித்தான்.
"தம்பி.. பாத்து.. நீங்க அமுக்குற அமுக்குல கத்திரிக்கா இங்கேயே கொத்சாகிடப் போகுது" -அண்ணாச்சி..
ஒரு வழியாக கத்திரிக்காயும் தேங்காயும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான். சுலோ சொல்லிய படி, தேங்காயை உடைத்துத் தர முனைந்தான். தேங்காய் அழுகலாய் இருந்தது. பரிதாபமாக சுலோவிடம் அதைக் கொண்டு வந்தான்.
"என்ன... தேங்கா அழுகலா... நினச்சேன்.. ஒங்க முகத்துலேயே ஏமாளின்னு எழுதி ஒட்டிருக்கே.. அதான் அண்ணாச்சி ஏமாத்திட்டாரு.. இதோ பாருங்க நீங்க வாங்கி வந்த கத்திரிக்கா லட்சணத்த.. பாதிக்கு மேல வேஸ்ட்.. முத்தினது பூச்சி அரிச்சதுன்னு பாத்து பாத்து வாங்கிட்டு வந்துருக்கீங்க"- என பொரிந்தாள்.
"அண்ணாச்சிதான் அமுக்கக் கூடாதுன்னு..."-என இழுத்தான்.
"அந்தாளு அப்படித்தான் சொல்லுவாரு.. ஒங்களுக்கு புத்தி எங்கே போச்சு.."
பாதிக்கு மேல் கத்திரிக்காய் தேறவில்லை. உடனே அவளே கடைக்கு வேகவேகமாக கிளம்பினாள். கால்மணி நேரத்தில் திரும்பி வந்தாள்
"நம்ம டே ஒன் சூப்பர் மார்க்கெட்ல கலிஃபோர்னியா கத்திரிக்கான்னு கொட்டி வச்சிருக்கான். இருநூத்தம்பது ரூபாதானா.. கால்சியம், விட்டமின், ப்ரோடீன் எல்லாம் இருக்காம். டி20 வேர்ல்ட் கப் ஜெயிக்குறதுக்கு முன்னாடி இந்தியன் டீம் இந்தக் கத்திரிக்கா சூப்தான் சாப்பிட்டாங்களாம். அஸ்வின் யூட்யூப்ல சொன்னாராம்மா.. "-சுலோ
வேலுவுக்கு இந்தக் கத்திரிக்காயும் தான் வாங்கி வந்ததைப் போலத்தான் தெரிந்தது. அது எப்போ நமக்குத் தெரியாம அஸ்வின் யூட்யூப்ல சொன்னாரு என நினைத்தாலும் அதைத் தொடராமல் அப்படியே விட்டு விட்டான். அவள் நறுக்கத் துவங்கினாள். இவன் சிந்தனை வயப் பட்டான். கத்திரிக்காய் கம்போடியாவில் இருந்து வருகிறதா.. இல்லை கலிஃபோர்னியாவில் இருந்து வருகிறதா.. அதை முதலில் தெரிந்து கொள்ள ஆவல் மேலிட்டது. சட்டென அவனது அலுவலக நண்பன் அன்புநாதன் தாவரவியல் நிபுணன் என்பதால் அவனைக் கேட்கலாம் எனத் தோன்றியது.
உடனே ஃபோன் செய்தான்.
அவனோ, (Solanum melongena) சொலானம் மெலோஞ்சினா, சொலானேசியே (Solanaceae) என்ற குடும்பம், இக்குடும்பத்தில் தக்காளி, உருளை எல்லாம் வரும், ஆங்கிலத்தில் இது எக் ப்ளான்ட் (egg plant) என அவனுக்குத் தெரிந்த எல்லா விஷயத்தையும் சொன்னானே தவிர கம்போடியா, கலிஃபோர்னியா பற்றி ஏதும் கூறவே இல்லை.
"அன்பு நான் கேட்டதுக்கு பதிலே சொல்லல. நீ பாட்டுக்கு ஏதேதோ சொல்ற"
"ப்ரோ... கத்திரிக்காய் பத்தி டீடைல்டா சொல்லணாம்னு பாத்தேன்.. அது எங்கேந்து இம்போர்ட் ஆகுதுன்னு எல்லாம் தெரியாது.. சாரி." -என்றான்.
கடுப்போடு ஃபோனைக் கட் செய்து விட்டு சமையலறைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றவன் கண்ணில் எதேச்சையாக சுலோ கழித்து ஒதுக்கி வைத்திருந்த வீணான கத்திரிக்காய் குப்பலைப் பார்த்தான். முக்கால்வாசி வீணாகிப் போயிருந்தது. சிவந்து போயிருந்த முகத்தோடு சுலோ
"என்ன வேவு பாக்குறீங்க.. இவ வாங்கிட்டு வந்த கத்திரி நல்லா இருக்குதான்னு பாக்க நோட்டம் விடத்தானே வந்தீங்க. அயோக்கியப் பசங்க.. இம்போர்டட் வெரைட்டினு நல்லா ஏமாத்துறாங்க"
வேறு வழியில்லாமல் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து பொங்கல் வடை சாப்பிட்டார்கள். வேலுவிற்கு சனி, ஞாயிறு இரண்டு நாளும் கத்திரிக்காய், கம்போடியா, கலிஃபோர்னியா என்பதே மனதில் சுழன்று கொண்டிருந்து.
திங்கள் கிழமை காலை எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டு உணவருந்தி அலுவலகம் கிளம்பினான். பல்ஸர் வண்டியில் சுலோவை அவள் ஆஃபிஸில் இறக்கி விட்டு தனது அலுவலகம் சென்றான். பதினோரு மணிக்கு சி.ஈ.ஓ. உடன் கான்ஃபரன்ஸ் கால் இருந்தது. அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். அவன் கேபினுக்கு வந்த அன்புநாதன்
"என்ன ப்ரோ.. கத்திரிக்கா எங்கேந்து வந்ததுன்னு தெரிஞ்சுதா.. ஒரு முக்கிய விஷயம் சொல்ல விட்டுட்டேன்.. ஹைப்ரிட் வெரைட்டி நிறைய வருது. அது எப்படின்னா.."-எனத் துவங்கியதும் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு கான்பரன்ஸ் அறையை நோக்கி விரைந்தான். மீண்டும் மனதை கத்திரிக்காய் ஆக்கிரமித்தது. தான் தயாரித்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம் அவனுக்கு மறந்து போயின. மனசெல்லாம் கத்திரிக்காயே வியாபித்தது.
கூட்டத்தில் சி.இ.ஓ. ஒரு பெரிய லெக்சர் கொடுத்து விட்டு,
"இந்தப் புதிய ப்ராஜக்டுக்கு ப்ரான்ஞ் ஆஃபிஸ் எங்கே வரப் போகுது தெரியுமா" -எனகேட்டார்
"கத்திரிக்காய்..." -வேலு
"மிஸ்டர் கந்த்வேல்.. வாட்.."- சி.ஈ.ஓ.
"நோ சார்.. சாரி.. " எனத் தடுமாறி... "கம்போடியா.."- என்றான்
"வாவ்... ப்ரில்லியன்ட்.. இன்னிக்குக் காலைலேதான் இந்த முடிவு எடுத்தோம். எப்படி இவ்ளோ கரெக்டா கண்டு பிடிச்சீங்க.." -சி.ஈ.ஓ.
"ஹி... ஹிஈஈ.. ரெண்டு நாளா அதான் சார் யோசனயா இருந்துச்சு.." -வேலு. அவன் சொன்னது கத்திரிக்காயைப் பற்றி.
"சூப்பர். வீக் எண்ட்லே கூட ஆஃபிஸ் ப்ராஜக்ட் பத்தி யோசிச்சுட்டே இருந்தீங்களா.. வாட் எ டெடிகேசன்... சரி .. இந்த ப்ராஜக்ட்டோட ஹெட் க்வார்டர்ஸ் எங்கே இருக்கப் போகுதுன்னு தெரியுமா... சொல்ல முடியுமா..." -சி.ஈ.ஓ.
கத்திரிக்காயின் பிடியில் இருந்த வேலு,
"கலிஃபோர்னியா.."-என்றான்.
"வொண்டர்ஃபுல்.. அமேசிங்... அன்பிலீவபிள்.. எப்படி இது சாத்தியம்.. இவ்வளவு திறமை சாலியான உங்களேயே இந்தப் ப்ராஜக்டோட ஏசியன் இன்-சார்ஜ்-ஆ போட்றேன். ஒங்க திறமையைக் காட்டி இந்தப் ப்ராஜக்ட சக்ஸஸ்ஃபுல்லா
ஆக்குங்க.. ஆல் தி பெஸ்ட்.. இப்பவே உங்க ஆஃபிஸூக்கு மெயில் அனுப்புறோம்.. " -சி.ஈ.ஓ.
அலுவலகமே ஸ்தம்பித்தது. ஏசியன் இன் சார்ஜ் என்பது மிகப் பெரிய பதவி. பல சீனியர்ஸ் இருக்கையில் எப்படி வேலுவிற்கு இது கிடைத்தது. ப்ராஜக்ட் பற்றி எப்படித் துல்லிய தகவல்கள் அவனுக்குத் தெரிய வந்தது என குழப்பத்தில் மூழ்கினர். இச்செய்தி வேலுவிற்கு சந்தோஷத்தை ஒரு புறம் தந்தாலும், கத்திரிக்காய் குழப்பம் நீங்கவேயில்லை. மீட்டிங் முடிந்து வெளியே வந்த கையோடு சுலோவுக்கு ஃபோன் செய்து நடந்ததை அப்படியே கூறினான்.
"சுலோ.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.. என் குழப்பமே நல்லத செஞ்சுருக்கு' - வேலு
"என்னவோங்க.. நம்ம நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும்" - சுலோ
திட்டும் போது உங்களுக்கு எதுவுமே தெரியாது என்று சொல்பவள் இப்போது 'நம்ம நல்ல மனசு' ன்னு சொல்றா பாரு.. என மனதிற்குள் நினைத்தபடி,
"அது சரி.. கத்திரிக்காய் வந்தது கம்போடியாவா இல்ல கலிஃபோர்னியாவா?" -எனக் கேட்டான்.
"அது காட்டாங் குளத்தூராகவே இருக்கட்டுங்க.. நமக்கு நல்லதுதானே.. ஒங்க ப்ராஜக்ட்ல நாமளும் அங்க போக வாய்ப்பு வந்தா.. (பார்ரா... ஆசைய...) அங்கேயே போய் விசாருச்சுப்போம் (இவளும் வருவாளாமே... நம்மள நிம்மதியாவே விட மாட்டாளா)"
"யா... டார்லிங்.. சூப்பர் ஐடியா.. அப்படியே செஞ்சுடுவோம்..
கந்த வேலு அண்ணாச்சி செய்தது போல சூப்பர் மார்க்கெட் செய்தது போல பில்ட் அப் செய்தே ப்ராடக்ட்ஸ் விற்பனையில் தனியிடம் பெற்று மேலும் மேலும் உயர்ந்து அந்தக் கம்பெனியில் பிரதான நபராக ஆகிப் போனான். உலகத்தின் பல நாடுகளுக்குப் போய் வருகிறான். ஆனால் அவனுக்கு இன்று வரை அவனது குழப்பம் தீரவில்லை. உங்களில் யாருக்காவது விடை தெரிந்தால் கூறுங்கள் கம்போடியாவா?
கலிஃபோர்னியாவா?
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*