சுதந்திர பாரதம் என்ற
இலட்சியத்தோடு இலட்சங்களில்
ஒருவனாய்
இலக்கியம் செய்தாய்!
உரிமை காக்க
உரக்கச் சொன்னாய்!
சிதையா நெஞ்சுடன்
சிந்திக்க வைத்தாய்!
அச்சம் தந்தோரை
மிச்சம் வைக்காமல்
துச்சமாய்த் துரத்தத்
துணிவு தந்தாய்!
கவிதைளையும் சிந்துகளையும்
சிறப்பாய்ச் சிதறி
களிக்கச் செய்தாய்!
நிலைகெட்ட மானுடரை
நினைத்து கவலையுற்று
எம்மையும் களங்கச் செய்தாய்!
துன்பம் நேர்ந்தால்
யாழ் மீட்டி இன்பம்
சேர்த்துக்கொள் என்று
உபாயமும் தந்தாய்!
ஆடச் சொன்னாய்!
பள்ளு பாடச் சொன்னாய்!
கும்மியடித்துக் கொண்டாடச்
சொன்னாய்!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாய்
கனவு காணச் சொன்னாய்!
எண்ணங்களுக்கு சக்தி
உண்டாமே!..
அறிந்தே சொன்னாய்!
அன்றே சொன்னாய்!
விண் போற்றினாய்!
பெண் போற்றினாய்!
மண் போற்றினாய்!
மழலைப் போற்றினாய்! இறைக்கழலைப் போற்றினாய்!
துஷ்டர்களைத் தூற்றினாய்!
எங்கோ என்றோ பிறந்த நீ..
எங்கோ என்றோ உயிர்த் துறந்த நீ..
மீண்டும் மீண்டும் மிக அருகில் பிறக்கிறாய்!
உன்னை வாசிக்கும் போதெல்லாம்!
உன்னை வாசிப்போரின்
வழியே சுவாசிக்கிறாய்!
- சாய்கழல் சங்கீதா
------------------
தமிழ் வானில்...
எட்டயபுரம் இந்நாள் குட்டி ஞாயிறு உதித்தது
எவரோ நமை ஆள்வதா, ஏனென வெகுண்டது
சிட்டாய்ச் சிறகடிக்க விடுதலை வான் தேடியது
சிறுவனாயது கிடைக்கு முனே பாடி ஆடியது
கட்டிய மனைவியின் கரங்கோத்துத் திரிந்தது
கண்களைச் சூரியரோ? சந்திரரோ? வியந்தது
பட்டினி ஒருவர் எனினும் பாரை எரிக்க முனிந்தது
பாரில் நம் பாரதமே சிறந்ததென சிலாகித்தது
எட்டுத் திசை மொழிகளில் தமிழே இனிதென்றது
ஏக வசனத்தில் அக் காலனையும் காய்த்தது
பட்டியில் பாவையர் தாம் கிடப்பதை வெறுத்தது
பட்டங்களோடு அவரைச் சட்டம் செயச் சொன்னது
கட்டுக் கட்டாய்த் தமிழ்க் கவிதைகள் ஈந்தது
கரு மீசை முறுக்கினால் கண் முன்னே நிற்பது
வட்ட நிலவாய்த் தமிழ் வானில் என்றும் உலவும்
வாழும் நம் மகாகவி பாரதியின் பெயரும்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
------------------------------------
மகா கவி பாரதி நினைவு தினம்
--------
தமிழ்த்தாய் பெற்றெடுத்த
காவியத்தலைவன்.
வலவனிலா வானூர்தி
( drone) உதவியின்றி
பல்நோக்கு கொண்ட
படைப்பாளி.
காக்கைச்சிறகின்
நிறத்திலே இறைவனைக்கண்டு
இயற்கையிலே ஆன்மிகம் படைத்த
இரசவாதி.
,
பாலம், நீர்வழி இணைப்புகள், பண்டமாற்றுகள், தொலைத்தொடர்புகள
எனப்பல துறைகளிலும்
தொலை நோக்கு வழி
காட்டிய கவிப்பொறியாளர்!
ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை என்று
கும்மி அடித்த சமத்துவன்!
ஓயுதலும் தலை சாயுதலும் இன்றி
என்றும் அவர்தம்
நினவை நெஞ்சில்
இருத்தி நற்றமிழ்
நம் நாவில் என்றும்
நிலைக்க அவர் தாள்
பணிவோம்.🙏🙏
சமூக அவலங்களைக்
கொன்றொழிக்கும்
கொற்றவை ஆவேசம்
கொண்ட கவிக்காளி!
--மோகன்
No comments:
Post a Comment