பாரதி பிறந்தநாள் விழா _ கருத்து
மார் தட்டும் பெருமை தமிழால் நமக்காம்
மண்ணில் இனிமை இது போல் எதிலாம்?
ஊரறியும் பாரதி, கண்ணதாசன் தமிழ்க் கடல்கள்
உப்பாம், முத்தாம் அவர் தம் கவிதைகள்
பாராட்டியும், ஒப்பிட்டும் திரு. பத்ரியின் உரையாம்
பக்கங்கள் பலவாம் திகட்டவே இல்லையாம்
கார் முகிலாய் அவரோ ஓயாமல் கொட்டினார்
கவிதை பாடி இருவர் மின்னலாய் வெட்டினர்
ஏரித் தென்றலாய் உரையாற்றும் சங்கத் தலைவர்
ஏனோ நத்தையாய்ச் சுருக்கிக் கொண்டார்
சீராகச் செயலரும் தொகுத்து வழங்கினார்
சிறாரும் தம் பங்காய்ச் சிறக்க முழங்கினர்
கேரட் அல்வா விரைவில் தீர்ந்ததன் காரணம்
கேட்டார் மறப்பாரோ நம்மில் யாரேனும்?
வாரி வாரி வழங்க விழா இனிதே முடிந்தது
வட்டத் தட்டில் போண்டா, சட்னியும் இருந்தது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
------------
கவிதைகளைக் கொட்டி
சுதந்திர முரசு கொட்டிய தமிழ் முரசுக்கும்
தமிழ்க் கோப்பையில்
குடியிருந்து
மயில் தோகை போல்
கவிதைகளால் வருடி
நம்மை மயக்கிய
கவியரசுக்கும்
திரு.பத்ரி அவர்கள்
சேர்த்தாரே பெருமை!
என்னே இவரது திறமை!
இரு கவிகளும் தன்னவர்கள் என்ற உரிமை!
இவரிடம் கருத்துக்கும்
கற்பனைக்கும் இல்லை வறுமை!
இவரின் நீண்ட பேச்சில் இல்லை வெறுமை!
கேட்கத் தேவையில்லை பொறுமை!
சொல்லியதெல்லாம் மிக அருமை!
இயக்குநரை இயக்கிய
ஷெல்லிதாசனையும்
கண்ணதாசனையும்
கம்பனையும் துணைக்கழைத்து
தயக்கம் அறவே இன்றி
வியக்கும் வண்ணம்
வியந்து விரிவுரை ஆற்றிய இவர்
பாரதிகண்ணதாசனோ!
தமிழ்த்தேனுக்கு மேலும் சுவைக்கூட்டிய
இசைத்தேன்!
கேட்டு இரசித்து
மலைத்தேன்!
திறம்பட தலைமையுரை!
நயம்பட நன்றியுரை!
அனுபவமிக்க பெரியோரோடு
புலிக்குட்டிகளின் வாசகர் உரை!
இசைக்கருவி வாசித்து
தமிழ்த்தொண்டாற்றிய
இசை உரை!
ஒருங்கிணைத்த செயலர் முறை!
தன்னார்வாளர்களின் தொண்டில் இல்லை குறை!
எல்லாம் நிறை!
வளரட்டும் நம் தமிழ்ச்சங்கப் பிறை!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment