Monday, December 16, 2024

பாரதியும் கண்ணதாசனும்* சிறப்புரை

 *°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*

*மகாகவி பாரதி பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி*

*பாரதியும் கண்ணதாசனும்* சிறப்புரை

°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*°*


    நமது தமிழ்ச்சங்க செயல்பாட்டில் மேலும் ஒரு மைல்கல். தமிழன்னையின் மகுடத்தில் நாம் பதித்த இன்னுமொரு வைரக்கல். துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த இயக்குநர் திரு.பத்ரி அவர்களால் மகா கவி பாரதிக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் செலுத்தப் பட்ட சிறப்பான புகழஞ்சலி.


15-12-24 மாலை ஆறரை மணிக்கு திருவாளர்கள். இ.ச.மோகன், மருத்துவர் செல்வன், இல்லத்தரசிகள் பவானி, சுல்தானா, பானுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தனர்.


முதலில், அனைவரும் தமிழ்ப்பண்ணை சேர்ந்திசைத்தனர்.


சிறுமி ரோஷ்ணா வரவேற்புரை வழங்கினார். பிறகு தலைவர் ஸ்ரீவி அவர்கள் தனது தலைமை உரையில் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த திரு பத்ரி மீண்டும் நம் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராய் வந்த பின்னணி, பாரதியின் பிறந்த தின சிறப்பு நிகழ்வில் *பாரதியும்  கண்ணதாசனும்* எனும் சிறப்புரை ஆற்ற உள்ள திருவாளர் பத்ரியின் மேடைப் பேச்சு குறித்தும் இரு பெரும் கவிஞர்கள் குறித்தும் பெருமையுடன் கூறி திரு. பத்ரி அவர்களை உரையாற்ற அழைத்தார்.


அடுத்த 90 நிமிடங்கள் திரு. பத்ரி அவர்களின் சீரிய சிறப்புரையில் அவை மகுடி கேட்ட நாகம் போல மயங்கிக் கிடந்தது. பாரதியின் பாடல் வரிகளோடு கண்ணதாசனின் பாடல் வரிகளை

மிக அற்புதமாக ஒப்பிட்டு, கம்பரின் தாக்கம் பாரதியிடமும், இருவரின் தாக்கமும் கண்ணதாசனிடமும் இருக்கிறதென பல்வேறு எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியதும் ஆண்டாள், ஷெல்லி ஆகியோர் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டு அதனை 143-வது பாரதியின் பிறந்த தினத்தோடு இணைத்து பேசியதும் கேட்பாரின் கருத்தைக் கவர்ந்தது. மிக அருமையான அந்த உரைக்கு உரம் சேர்க்கும் விதமாக பத்ரி அவர்கள் குறிப்பிட்ட சில பாடல் வரிகளை மேடைப்பாடகரும் நமது நிதிச் செயலருமான திரு. சாய்ராம் ஐயாவும், பூர்வாவின் பி.பி.எஸ். திரு. பாலகிருஷ்ணன் ஐயாவும் பாடியது கேட்பார் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நமது நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சி முத்தாய்ப்பாக இருந்தது எனில் அது மிகையில்லை.  பாரதி கூறிய *தெளிவுற அறிந்திடுதல் ... தெளிவு தர மொழிந்திடுதல்* எனும் கூற்றுக்கிணங்க திரு. பத்ரியின் உரை அமைந்திருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. தம் வாழ்வின் மிகச் சிறந்த 90 நிமிடங்களை உரை கேட்டோர் அனைவரும் பெற்றனர் என்பதில் இரண்டாம் கருத்து எவருக்கும் இருந்திட இயலாது. இந்நிகழ்ச்சியைத் தவற விட்டோர் தமது வாழ்வின் முக்கிய தருணம் ஒன்றை இழந்தவர்கள் என அறுதியிட்டுக் கூறிட முடியும். மிகச் சிறப்பான உரை ஆற்றி அனைவரையும் மகிழ்வின் உச்சம் எடுத்துச் சென்ற திரு. பத்ரி அவர்களுக்கு நம் உளம்நிறை நன்றிகள். தவறாது இந்த சிறப்புரையை நமது யூட்யூப் சானலில் கண்டு கேட்டு மகிழத் தவறாதீர்கள்!


அவரைத் தொடர்ந்து அவரது உரை தந்த ஊக்கத்தினால் தமக்குப் பிடித்த பாரதி மற்றும் கண்ணதாசன் பாடல் வரிகளைப் பற்றி மூத்த உறுப்பினர்கள் ஆர். பிச்சைமணி மற்றும் இ.ச. மோகன் ஆகியோரும், நமது சங்கத்தின் வருங்கால நட்சத்திரங்கள் சிறார்கள் கௌசலேஷ் மற்றும் சாதனாஸ்ரீ ஆகியோர் உரையாற்றினர். 


நமது சிறப்புமிகு சிறப்பு விருந்தினருக்கு திரு. ஆர். பிச்சைமணி ஐயா மூலம் நம் தலைவரின் புதிய ஆத்திசூடிக் கதைகளின் இரண்டு பாகங்களும் அன்பளிப்பாக வழங்கப் பட்டது.


இந்நிகழ்வில் திரு. பத்ரி அவர்களுடன் வந்திருந்த திருவாளர்கள்.சுரேஷ் பாலா (சுபா), எழுத்தாளர்/கதாசிரியர், ரமேஷ் வைத்யா (தினமலர் உதவி ஆசிரியர்) கிருஷ்ணன் (பேச்சாளர்) ஆகியோரும் நம் பகுதியில் உள்ள விவேகானந்தா பயிலகம் உரிமையாளர் திரு. ஜவஹர் அவர்களும் வந்திருந்து சிறப்பித்தனர். அவர்களுக்கு நமது நெஞ்சுநிறை நன்றிகள்.


நிறைவாக நமது உதவித் தலைவர் திரு. கோ. தியாகராஜன் அவர்கள் நன்றியுரை நவில, தேசியப் பண் இசைத்தலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.


நன்றி.


*ஸ்ரீவி*

தலைவர்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...