மழை தரும் நினைவில்...
நின்று நிதானமாய் மழையது பொழியுது
நீளுரை கேட்ட மரங்கள் தூங்கி வழியுது
சென்று விடுவோம் எனப் பறவைகள் பேசுது
சிறகடித்து காகங்கள் கிளைகளில் தாவுது
கன்றும் வால் தூக்கித் தாயுடன் திரும்புது
காற்று காணவில்லை கவி வாங்கப் போனது
ஒன்றும் வேண்டாம் வறுத்த வேர்க்கடலை போதும்
உறவாம் மைத்துனர் வர உருண்ட போண்டா பொரியும்
மென்று தின்ன வாய் மெதுவடை கேட்குது
மேகங்கள் ஒட்டுக் கேட்டு இங்கேயே சுற்றுது
அன்று பிள்ளைப் பருவ நினைவுகள் நுழையுது
அந்த வாழ்வது அறுந்து போகா இழையது
தென்னை வரப்புகளில் நடந்து பள்ளி போனது
தெப்பமாக நனைந்த படி வீடு திரும்பி வந்தது
அன்னை பதைபதைத்து தலை துவட்டி விட்டது
அக்கால நினைவு வர தேன் மேலே கொட்டுது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment