கொள்ளை போகின்றன
வானூர்தியில் இந்நாள் எங்கும் போகிறோம்
வடக்குப் பட்டு போகவும் வாகனம் ஏறுவோம்
ஆன்லைனில் எதையதையோ வாங்கிக் குவிக்கிறோம்
அடுத்த நாளே அதைத் திருப்பி விடுவோம்
தேன் எனினும் என்ன சுவை (flavour) உடன் கேட்கிறோம்
தென்றல் வீச, நிலவு காய்ந்தும் திரையில் தொலைகிறோம்
தான் பேசும் தாய்மொழியைத் தலையில் தட்டினோம்
தஸ்ஸு, புஸ்ஸு ஒன்றைத் தலை மேல் வைத்தோம்
மீன்களைத் தொட்டியிலிட்டு அழகு பார்க்கிறோம்
மீண்ட தாயை ஈன்று நமை வேண்டாம் என்கிறோம்
நான், எனது என்றே நாளும் நினைக்கிறோம்
நம்மவர், உறவுகளை நாடாமல் போனோம்
ஏன் எனும் வினாக்கள் கூகுளிடம் கேட்போம்
எதிரே அறிந்தவரிடம் ஏனோ யோசிக்கிறோம்
கூன் விழ, விழி பாழாக கைபேசி உண்டாம்
கொள்ளை எலாம் போகுமுன் விழித்தல் நன்றாம்.
__ குத்தனூர் சேஸுதாஸ்
No comments:
Post a Comment