Wednesday, October 28, 2026

படம் பார்த்து பா எழுது (நிமிர்ந்த ஆணியும் நெளிந்த ஆணியும்)


அடிக்க அடிக்க...


பழங்கள் நிறை மரமே கல்லடி படும் 

   பாட்டி சொன்னது நினைவில் வரும் 


அழகுச் சிலையாக கல்லும் அடி படும் 

   அதன் பின்னரே அது வழிபடப் படும் 


குழைய மிதித்த மண்ணே ஆகுமாம் கடம்

   கொடுத்து வைக்க விக்கு விநாயக்ராமிடம் 


நுழைய அடி வாங்கும் உறுதியான ஆணி

   நூலாய் வளைந்தாலது வெறும் சாணி.


__. குத்தனூர் சேஷுதாஸ் 28/10/2026


==================


ஆணியைப் பிடுங்கணுமா?!

*********

ஆணிகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்!

எழுத்தாணி உள்ளுணர்வை

வெளிப்படுத்தும்.

இரும்பாணி பிரிந்த இரண்டை ஒன்று சேர்க்கும்.

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி"

என்பார் ஈரடிக்கவி.

உயர் மாற்றுத்தங்கம் ஆணிப்பொன்னாம்

( ஆணி- உயரிய)

மேடைப்பேச்சாளர் அடித்துப்பேசுவது

ஆணித்தரமாக!

வளையாத முதுகெலும்பு கொண்ட ஆணி தலையில் அடி வாங்கினாலும் நேரே நிற்கும்.

கூழை( அடிமை) ஆணிகள் வளைந்தே வாழும்; பிடுங்கணுமா?வேண்டவே வேண்டாம்!

காலண்டர் மாட்டக்கூட உதவாது

காலில் உள்ள ஆணி!

கீழடியிலும் கண்டெடுக்கப்பட்டதாம்

இரும்பாணி!

ஆணியின்றி அமையாது உலகு!


- இ.ச.மோகன்

========================

*நிமிர்ந்த ஆணியும் நெளிந்த ஆணியும்*


நிமிர்ந்த ஆணி நெஞ்சுறுதி கொண்டது;


நிலத்தினில் மரத்தினை நிலைபெறச் செய்தது! 


நேர்பட அடிபெற்று நிமிர்ந்தே நின்றது;


நெடுமரப் பிணைப்பில் நெறியுடன் வென்றது!


குனிந்த ஆணியும் குன்றிய தன்று;


கொடுந்துயர் தாங்கிக் குறைந்ததுமன்று!


அடிமேல் அடிபட்டு அங்கம் வளைந்தும்;


அரும்பணி ஆற்றும் ஆற்றலை இழந்ததில்லை!


நிமிர்ந்ததன் மாண்பு நிலைத்திடும் தொண்டு!


நெளிந்ததன் மாண்பு நெருப்பினில் மீண்டு! 


ஒன்றது நேர்மை; மற்றொன்று பொறுமை;


இரண்டிலும் மிளிர்வது இரும்பின் பெருமை!


மண்ணினில் புதைந்தும் மறைவதில்லை;


மறுபிறப் பெறாமல் முடிவதும் இல்லை!


வெந்தழல் தழுவி வலிமைபெற்று,


வீறுடன் எழுந்து மீண்டுமோர் தொண்டு!


நிமிர்ந்த ஆணியே நெஞ்சத்தின் நேர்மை! 


நெளிந்த ஆணியே நெஞ்சுறு பொறுமை!


நிமிர்வினைப் போற்றுவோம்;


நெளிவினைப் போற்றுவோம்;


நிகழ்ந்த துன்பத்தை வென்றிடும் ஆற்றலைப் போற்றுவோம்!


நிமிர்ந்ததால் பெருமை!


நெளிந்ததால் பொறுமை!


புதைந்ததால் புதுமை!


மீண்டெழல் அருமை!


உருவினைக் கொண்டு உயர்வினை அளவிடார்;


உறுதியைக் கொண்டே உயர்வினைப் போற்றுவார்!


நிமிர்ந்தும் நெளிந்தும் நற்பணி புரியும்


இரும்பின் ஆணியே, இரண்டறப் போற்றுவோம்!

- திருஞானசம்பந்தம்

================

வாழ்வின் ஞானம்


வளைந்த ஆணிகள்

நிமிர்ந்து நின்ற ஆணியைப்

பார்த்துப் பேசத் தொடங்கின...

எள்ளி நகையாடத் தொடங்கின...

"நேராய் நிற்பதால்

நீ சட்டத்திற்குள் செல்வாய்!

எங்களைப் பார்!

வளைந்து கொடுத்ததால்

மேலே நிற்கிறோம்!

நீயும் வளைந்து கொடுக்கக் கற்றுக்கொள்!"


நிமிர்ந்து நின்ற ஆணிக்குக்

குழப்பம் வந்தது...

எது சரி?

எது தவறு?

அப்போது,

ஓங்கி அடிக்க வந்த சுத்தியல்

உண்மையை உரைத்தது...

"எதுவுமே தவறில்லை!

நிமிர்ந்து நின்ற நீ,

இந்த மரச்சட்டத்தைக்

காலத்துக்கும் காக்கப் போகிறாய்!

வளைந்து கொடுத்ததால்

தப்பித்துவிட்டோம் என்று

இறுமாப்புக் கொள்ளும் இவர்கள்,

சிறிது காலத்தில்

பிடுங்கி எறியப்படுவார்கள்!

அப்போது,

இவர்கள் தேவையற்றவர்கள்

ஆகிவிடுவார்கள்!"

சுத்தியல் சொன்ன உண்மையில்

நிமிர்ந்த ஆணி தெளிவு பெற்றது.


பணிவு எப்போதும் தேவையில்லை;

தேவையான இடத்தில் இருந்தால் போதும்!

வளைந்து கொடுப்பது மட்டுமே

எப்போதும் பணிவாகாது!


எங்கே வளைவது, 

எங்கே நிமிர்வது 

என்பதை உணர்வதில்தான்

 வாழ்க்கையின் ஞானம்

 இருக்கிறது. 

- லதா கணேசன்

===============

வளைவது சில நேரங்களில்

வாழ்வின் நுண்ணறிவாகும்,

விலைபோவது கொள்கையென்றால்

வெற்றிகூடத் தோல்வியாகும்!


*தலை குனிவது தவறில்லை*

*தர்மம் காக்கும் நேரத்தில்!*

*தலை நிமிர்வதே* *பெருமையாகும்*

*தன்மானம் காக்கும் போராட்டத்தில்!*


- தியாகராஜன்


==============

- 


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...